நூற்றாண்டுகளுக்கு முன்பு மனிதர்களின் வாழ்வை உலுக்கிப்போட்ட பஞ்சம் அது. நூற்றாண்டுகள் கடந்த பின்னரும் அதைப்பற்றி இன்னும்கூட பெரியவர்கள் பேசுகிறார்கள். மழை சுத்தமாக நின்றுபோனது. பயிர் பச்சை எதுவும் விளையவில்லை. ஆடு மாடுகளுக்கு புல் கூட கிடைக்கவில்லை.பிறகு மனிதர்கள் என்ன செய்வார்கள்? எங்கேயாவது தண்ணீர் இருக்காதா, விவசாயம் நடக்காதா, வயிற்றுக்குச் சோறு கிடைக்காதா என்று ஊரைவிட்டுக் கிளம்பினார்கள். ஒரு ஊர், இரண்டு ஊர் அல்ல. தேசமே அலைமோதியது. ஆந்திராவிலிருந்து தமிழகம் நோக்கி லட்சக்கணக்கான மக்கள் அனைத்தையும் இழந்து வாழ்வுதேடி கால்நடையாகவே வந்தார்கள்...
இப்படியாக தாது வருடப் பஞ்சத்தைப் பற்றி சொல்வதுண்டு. வரலாற்றில் மிகக் கொடூரமானதாகப் பதிவாகியுள்ள இந்த பஞ்சத்தைப்போல, ஒட்டுமொத்த உலகமே இதைவிடக் கொடிய ஒரு பஞ்சத்தில் அடிபட்டால் என்ன ஆகும்? இந்தக் கேள்விதான் இன்றைக்கு இந்தப்புவியைக் காக்க விரும்பும் அனைத்து உள்ளங்களிலும் எதிரொலித்துக்கொண்டிருக்கிறது. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், உலகெங்கிலும் உள்ள இடதுசாரிகள், அனைத்து வளர்முக நாடுகளின் அப்பாவி ஏழை மக்கள் அனைவரது உள்ளங்களிலும் இந்தக் கேள்வி கனன்று கொண்டிருக்கிறது.
இதற்கு விடைகாணத்தான், டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் மிகப்பிரம்மாண்டமான மாநாடு நடந்தது. ஐக்கிய நாடுகள் சபை நடத்திய இந்த மாநாட்டிற்குப் பெயர் பருவநிலை மாற்றம் தொடர்பான உச்சிமாநாடு என்பதாகும். டிசம்பர் 8ம் தேதி துவங்கி 19ம் தேதி வரை நடைபெற்ற இந்த மாநாட்டில் உலகம் முழுவதும் உள்ள 192 நாடுகளின் சுற்றுச்சூழல் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பசுமை ஆர்வலர்கள் பங்கேற்றார்கள். மாநாட்டின் கடைசி மூன்று நாட்களில் நமது பிரதமர் மன்மோகன் சிங் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றார்கள்.
இந்த மாநாட்டில் பேசப்பட்ட விஷயம் என்ன? அதன் முடிவு தான் என்ன?
தொழில் வளர்ச்சி பெற்று முன்னேறிய நாடுகள் ஒரு புறமும், தொழில் வளர்ச்சி இல்லாதஇப்போதுதான் பொருளாதாரத்தில் முன்னேறிக்கொண்டிருக்கிற வளர்முக நாடுகள் ஒரு புறமுமாக இந்த மாநாட்டில் நேருக்கு நேர் மோதிக்கொண்டன என்பதே உண்மை.
ஏன் இந்த மோதல்?
நாம் வாழும் பூமிப்பந்து தொடர்ந்து வெப்பமடைந்து கொண்டேயிருக்கிறது. சுமார் 2ஆயிரத்து 100 மைல்கள் விட்டம் கொண்ட பூமி உருண்டையின் நடுப்பகுதியில் சூரியனின் மேல் தளத்தில் நிலவும் வெப்பத்தைவிட கடுமையான வெப்பம் நிலவுகிறது என்று அறிவியல் கூறுகிறது. இந்த 2ஆயிரத்து 100 மைல்கள் ஆழத்தில், இதுவரை மனித அறிவுக்கு எட்டியது வெறும் 13 கிலோமீட்டர் ஆழம் அளவிற்கு மட்டுமே. இதைக்கூட சோவியத் ஒன்றியமே கண்டறிந்தது என்பது வரலாறு.
எனினும் பூமியின் மேல்தளத்தில் லட்சக்கணக்கான ஆண்டுகளாக பெய்த மழை குளிர்வித்து குளிர்வித்து வெப்பநிலை, மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற அளவிற்கு இயல்பு நிலைக்கு வந்துள்ளது. விவசாயம் செழித்துள்ளது. பெருவாரியான மக்கள் இன்னும் வறுமையில் வாடிக்கொண்டிருக்கும் நிலை நீடித்தாலும், பூமித்தாயின் மடியில் மனித குலத்தின் வாழ்க்கை ஓரளவிற்கேனும் நடந்துகொண்டிருக்கிறது.
இப்போது பூமியின் வெப்பநிலை அதிகரிக்கிறது. வெப்பநிலை மேலும் மேலும் அதிகரிக்கும் போது பனிமலைகள் அளவுக்கு அதிகமாக உருகுகின்றன. கடல் நீர்மட்டம் அதிகரிக்கிறது. புவியின் பருவநிலையில் வரலாறு காணாத மாற்றம் ஏற்படுகிறது. பருவம் தவறி மழை பொழிகிறது. மழை பெய்ய வேண்டிய காலத்தில் வறட்சி வாட்டுகிறது. வரலாறு காணாத வெள்ளமும், வரலாறு காணாத வறட்சியும் மனிதர்களை தாக்குகின்றன.
இது நீடித்தால் விவசாயம் பேரழிவைச் சந்திக்கும். ஏற்கனவே மன்மோகன்சிங் அரசைப்போல உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் நாசகர தாராளமயக் கொள்கைகளை அரசுகள் அமல்படுத்தியதன் விளைவாக கடும் தாக்குதலை சந்தித்துள்ள மக்கள், தற்போது உலகப் பொருளாதார நெருக்கடி ஏற்படுத்தியுள்ள கடும் விளைவுகளால் பெருமளவில் வேலையிழப்பையும், கூலி இழப்பையும் சந்தித்துள்ள நிலையில், பருவ நிலை மாற்றத்தால் விவசாயம் சீர்குலைந்தால் உண்ண உணவு கிடைக்காமல், இருக்க இடம் இல்லாமல் அனைத்தும் இழந்து ஓட ஓட விரட்டப்படுவார்கள். கோடிக்கணக்கான ஏழைகள் தங்களது இருப்பிடங்களில் வாழ வழியில்லாமல் கூட்டம் கூட்டமாக வெளியேற வேண்டிய கொடூரம் நிகழும்.
இதில் உச்சகட்ட பாதிப்பை அடையப்போவது இந்தியதேசம் உள்ளிட்ட ஏழை வளர்முக நாடுகளின் மக்கள்தான்.
அதனால்தான் கோபன்ஹேகன் மாநாட்டில் வளர்ச்சியடைந்த நாடுகளோடு, வளர்முக நாடுகள் மோதின.
பூமி வெப்பமடைவதற்கு, அவர்களோடு ஏன் மோத வேண்டும்?
பூமியின் வெப்பநிலை அதிகரிப்பதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், மிக முக்கியக்காரணம் தொழில் வளர்ச்சியடைந்த அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள், தங்களது பெரும் தொழிற்சாலைகள் மூலம் வெளியேற்றுகிற கரியமிலவாயுக் கழிவே ஆகும். கார்பன்டைஆக்ஸைடு எனப்படும் இந்த கரியமிலவாயுக் கழிவு, புவியைச் சுற்றி ஒரு பெரும் புகை மண்டலத்தை ஏற்படுத்தியிருப்பதால், அண்ட வெளியில் புவியின் வெப்பநிலை வெளியேற்றப்பட வாய்ப்பில்லாமல், புவி மேல்பகுதியின் வெப்பம் மேலும் மேலும் அதிகரிக்கிறது.
அப்படியானால், தொழில் வளர்ச்சியடைந்த நாடுகள் வெளியேற்றுகிற கரியமில வாயுக்கழிவின் அளவை பெருமளவில் குறைப்பதைத் தவிர இதற்கு வேறு தீர்வு இல்லை.
ஆனால் அமெரிக்கா உள்ளிட்ட வளர்ச்சியடைந்த நாடுகள் அதை ஏற்க மறுக்கின்றன. எல்லா நாடுகளும் சமமாக இதற்கு பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டுமென்று அராஜகம் செய்கின்றன. இந்தப் பிரச்சனையில் எல்லா நாடுகளும் சமமாக பொறுப்பேற்க முடியாது. ஏனென்றால் உலக மக்கள் தொகையில் வெறும் ஐந்து சதவீதத்திற்கும் குறைவான மக்கள் தொகையையே கொண்டுள்ள அமெரிக்கா மட்டும், உலக நாடுகள் மொத்தத்தில் வெளியேற்றும் கரியமிலவாயுக் கழிவில் 25 சதவீதத்தை வெளியேற்றுகிறது. ஆனால் சீனாவையும் இந்தியாவையும் பார்த்து, நீங்கள் தான் அதிக மக்கள் தொகையை வைத்திருக்கிறீர்கள். எனவே நீங்கள் தான் கரியமிலவாயுக் கழிவு வெளியேற்ற அளவை பெருமளவில் குறைக்க வேண்டும் என்று கூறுகிறது. இந்த நாடுகளை மட்டுமின்றி, எந்த வளர்சியுமே இல்லாத ஆப்பிரிக்க நாடுகளையும் கூட அமெரிக்காவும், இதர ஐரோப்பிய நாடுகளும் பழிசுமத்துகின்றன.
யார் எவ்வளவு கரியமிலவாயுக் கழிவு வெளியேற்ற அளவை குறைத்துக் கொள்வது என்பது குறித்து தீர்மானிப்பதுதான் கோபன்ஹேகன் மாநாட்டின் பிரதான நோக்கம்.
ஆனால் இந்தப் பேச்சையே எடுக்க விடவில்லை அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும். வளர்முக நாடுகளின் தலைவர்கள் தங்களது நிலைபாட்டில் உறுதியாக நின்றார்கள். அமெரிக்காவும் இதர ஐரோப்பிய நாடுகளும் தங்களது கழிவு வெளியேற்றத்தை பெருமளவில் குறைப்பதாக இந்த மாநாட்டில் உறுதி அளித்தே தீரவேண்டும் என்று முழங்கினார்கள். ஆனால் மாநாட்டின் கடைசி நாளில் பங்கேற்ற ஜனாதிபதி ஒபாமா, இந்த பேச்சுக்குள்ளேயே செல்லவில்லை. மாறாக வளர்முக நாடுகளுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து இலவச அறிவுரைகளை வாரி வழங்கினார்.
இங்கும்கூட, நமது மன்மோகன் சிங் அரசு தனது அமெரிக்க பாசத்தை வெளிப்படுத்திக் கொள்ள முயற்சித்தது. சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், அமெரிக்காவுக்கு சாதகமாகவும், வளர்முக நாடுகளின் நலன்களுக்கு விரோதமாகவும் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றும் விதத்தில், முன்கூட்டியே இந்தியா சார்பில் உறுதிமொழிகளை வெளியிட்டார். இந்தியா தானாகவே முன்வந்து, கரியமிலவாயுக் கழிவு வெளியேற்ற அளவை குறைத்துக்கொள்ளும் என்று கூறினார். ஆனால் மாநாட்டிற்கு செல்வதற்கு முன்பாகவே நாடாளுமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் சீத்தாராம் யெச்சூரி போன்ற தலைவர்கள் இதை அம்பலப்படுத்தினார்கள். வளர்முக நாடுகளின் குரலையே இந்தியா ஓங்கி ஒலிக்க வேண்டுமென்று அரசை நிர்பந்தித்தார்கள். அரசும் வேறுவழியின்றி ஏற்றது.
மாநாட்டில் இந்தியாவின் கருத்து பிரதிபலித்தது. ஆனால் இந்தியா உள்பட அனைத்து வளர்முக நாடுகளுக்கும் எதிராக அமெரிக்காவும் அதன் சகாக்களும் பிடிவாதமாக நின்றதால் மாநாடு எந்த முடிவையும் எட்டாமல் தோல்வியடைந்தது. எனினும், மனித குல வரலாற்றில் மிக மிக முக்கியமான பிரச்சனையைப் பற்றி விவாதித்த இந்த மாநாடு முற்றிலும் தோல்வியடைந்துவிட்டது என்ற அவப்பெயரை தவிர்க்கும் பொருட்டு, கடைசி நேரத்தில் பேசிக் நாடுகள் என்றழைக்கப்படும் சீனா, இந்தியா, பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகியவற்றின் தலைவர்கள் அமெரிக்காவோடு பேசினார்கள். இதைத் தொடர்ந்து கோபன்ஹேகன் உடன்பாடு என்ற பெயரில் ஒரு அறிக்கையை வெளியிட்டார்கள். அந்த அறிக்கை புவி வெப்பமடைதலைத் தடுக்க எந்தத் தீர்வையும் முன்வைக்கவில்லை. ஆனால், இந்த பேச்சுவார்த்தை இத்தோடு முடிந்தது என்று இல்லாமல், தொடர்ந்து பேச்சு நடத்தவும், 2012ம் ஆண்டு வாக்கில் கரியமிலவாயுக் கழிவு வெளியேற்றத்தை குறைப்பதற்கான அளவை நிர்ணயிப்பது என்றும் இந்த உடன்பாட்டில் ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆனால் இந்த உடன்பாடு அமெரிக்காவுடனான சமரசமே என்று ஜி77 எனக்கூறப்படுகிற வளர்முக நாடுகளின் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மொத்தத்தில், இப் பூவுலகின் எதிரி அமெரிக்க ஏகாதிபத்தியமே என்பதை அப்பட்டமாக அம்பலப்படுத்தியது கோபன்ஹேகன் மாநாடு.
- எஸ்.பி.இராஜேந்திரன்