செயற்கைக்கோள் தரவுகளின் உதவியுடன் ஆய்வாளர்கள் டெல்லியில் 100 சதுர கிலோமீட்டர் பரப்பில் இடங்கள் பூமிக்கடியில் புதையும் ஆபத்து உள்ளதைக் கண்டுபிடித்துள்ளனர். மிதமிஞ்சிய நிலத்தடி நீரின் சுரண்டல் நகரத்தின் சில பகுதிகளை நிலத்திற்கடியில் அமிழ்த்தும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் பெரும்பகுதி டெல்லி சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ள பிரதேசத்திற்கு வெறும் 800 மீட்டர் தொலைவில் மட்டுமே உள்ளது. 

நீரைச் சுரண்டினால் நிலம் தாழ்ந்து போகும்

நிலம் தாழ்ந்து போவது என்பது அதிக முக்கியத்துவம் தரப்படாத ஒரு புவியியல் நிகழ்வாகவே உலகம் முழுவதும் இன்றும் கருதப்படுகிறது. இது உலகளவில் பல நாடுகளிலும் காணப்படுகிறது. பூமியில் இருந்து தாதுக்கள், எண்ணை, வாயு மற்றும் நீரை மிதமிஞ்சிய அளவில் சுரண்டும்போது மண்ணிற்குள் ஏற்படும் மாற்றங்களால் இவ்வாறு நிகழ்கிறது. மண் வளமிழந்து சுருங்குதல், நிலநடுக்கம், மண்ணில் உள்ள படிமங்கள் மிகக் குறைவாக இருப்பது போன்ற இயற்கைக் காரணங்களாலும் இது நிகழலாம்.

உறிஞ்சி எடுக்கும் நீரால் உலகம் தாழ்ந்து போகிறது

உலகில் 80% இடங்களிலும் நீர் அளவிற்கு அதிகமாக பூமியில் இருந்து சுரண்டி எடுக்கப்படுவதால் நிலம் தாழ்ந்து மண்ணில் புதைகிறது என்று அமெரிக்க புவியியல் ஆய்வுக் கழகம் (U S Geological Survey) கூறுகிறது. மண்ணில் நீர் சேகரிக்கப்பட்டிருக்கும் பகுதிகளில் (aquiters) நீர்த்துளிகளுக்கு இடையில் இருக்கும் களிமண் துகள்கள் நெகிழ்ச்சி அடைகின்றன. மெல்ல மெல்ல இது நிலம் தாழ்ந்து போகக் காரணமாகிறது.new delhiவிண்ணில் இருந்து ஆய்வு

பாம்பே இந்தியத் தொழில்நுட்பக் கழக விஞ்ஞானிகள் ஜெர்மனியின் புவி அறிவியல் ஆய்வு மையம், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்காவின் தெற்கு மெத்தடிஸ்ட் பல்கலைக்கழக ஆய்வாளர்களுடன் இணைந்து நடத்திய ஆய்வுகளில் டெல்லி சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் இருக்கும் பகுதி பூமிக்கடியில் வேகமாகப் புதைந்து கொண்டிருக்கிறது என்று தெரிய வந்துள்ளது.

ஆண்டிற்கு ஆண்டு புதையும் டெல்லி

2014-16 காலத்தில் இது ஆண்டிற்கு 11 செமீ என்ற அளவில் இருந்தது. அடுத்த இரண்டாண்டுகளில் இது 50% அதிகரித்தது. இது ஆண்டிற்கு 17 செமீட்டராக உயர்ந்தது. 2018-19 ஆண்டில் இந்நிலை அதிக மாற்றம் இல்லாமல் தொடர்ந்தது. இந்தப் பேராபத்தை எதிர்கொள்ளும் பகுதிகள் அணைத்திலும் டெல்லி விமான நிலையத்திற்கு அருகில் இருக்கும் காப்பஷிரா (Kapashera) என்ற இடமே மிக ஆபத்தான நிலையில் உள்ளது என்று ஆய்வுகள் கூறுகின்றன.

விமான நிலைய நிலப் பாதுகாப்பு

விமான நிலையம் அமைந்துள்ள நிலப்பகுதியில் பூமிக்கு அடியில் ஏற்படும் இடையூறுகளால் அங்கு உள்ள நிலப் பகுதியில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ வாய்ப்பு உள்ளது. இதனால் விமான நிலையத்திற்கு வலுவான தரைப்பகுதி அமைய வேண்டியது அவசியம் என்று இ டி எஸ் ஆர் சி (ETSRC) எதிர்கால உட்கட்டமைப்பு மற்றும் சூழல் மாற்றங்களைத் தாக்குப் பிடிக்கும் வகையில் அமைந்த, மாறிவரும் உலகிற்கான கட்டிடக்கலை ஆய்வு மையத்தின் முனைவர் பட்ட விஞ்ஞானியும், ஆய்வுக்குழுவினரில் ஒருவருமான டாக்டர் ஷகான் கார்க் (Dr Shagun Garg) கூறுகிறார்.

கோலாலம்பூர் எடுத்துக்காட்டு

கோலாலம்பூர் விமான நிலையம் இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இங்கு டாக்சிகள் செல்லும் வழிகள் நிலத்திற்கடியில் புதைந்துள்ளன. மண் படிதல் ஒரு இடத்தில் தாழ்ந்து மற்றொரு இடத்தில் அதிகமானதால் நீர் தேங்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. இதனால் டெல்லி விமான நிலையம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் இருக்கும் சாலைகளின் நிலையை இடைவிடாமல் கண்காணிப்பது அவசியம் என்று ஆய்வுக்குழு பரிந்துரைக்கிறது.

மற்றுமொரு ஆபத்து

டெல்லி விமான நிலையத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் மட்டுமே அமைந்திருக்கும் மஹிபால்பூர் (Mahipalpur) என்ற இடத்தில் 2014-16 காலத்தில் ஆண்டிற்கு 15 செமீ என்ற அளவில் பூமி புதையுண்டது. இது 2016-18 காலத்தில் ஆண்டிற்கு 30 செ.மீட்டராக உயர்ந்தது. இதே அளவு ஆண்டிற்கு 50 செ.மீட்டர் என்ற அளவில் 2018-19 காலத்தில் அதிகரித்தது.

நீரின் தேவை

பெருகும் மக்கட்தொகை, நகரமயமாக்கல் மற்றும் விரிவாக்கம் ஆகியவை நீர்த்தேவையை அதிகரிக்கச் செய்கிறது. இது நீர்த் தட்டுப்பாட்டை ஏற்படுத்துகிறது. தேவைக்கும் பற்றாக்குறைக்கும் இடையில் ஒரு நாளைக்கு 750 மில்லியன் லிட்டர் என்ற அளவில் மிகப்பெரிய இடைவெளி நிலவுகிறது. பெரும்பாலான மக்களுக்கு பாதுகாப்பான குழாய் நீர் வசதி இல்லை. இதனால் இவர்கள் தங்கள் அன்றாட நீர்த்தேவைக்கு நிலத்தடி நீரையே நம்பி வாழ்கின்றனர்.

கட்டுப்பாடுகள் இல்லாத நகரமயமாக்கம்

சில இடங்களில் நிலத்தடி நீர் மட்டம் தரையில் இருந்து 120 மீட்டர் ஆழத்தில் தாழ்ந்து போயுள்ளது. இந்நிலை டெல்லியின் கட்டுப்பாடற்ற நகர விரிவாக்கத்தால் மேலும் சிக்கலடைகிறது. இதனால் நகரின் நீர் இருப்பு உள்ள இடங்கள் நீர் சேமிக்கும் ஆற்றலை இழக்கின்றன. இது தவிர கான்க்ரீட் மற்றும் பிற உட்கட்டமைப்புகள் நகரம் முழுவதையும் ஆக்கிரமித்துள்ளன. மழைநீர் நிலத்திற்கடியில் இறங்க முடியாமல் போகிறது.

மழைநீர் அறுவடை

மழை நீர் அறுவடை இதற்கு சிறந்த தீர்வாக அமையும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். டெல்லி ஜூலை முதல் செப்டம்பர் வரை சராசரியாக ஆண்டிற்கு 611 மிமீ மழை பெறுகிறது. இதை சேமிப்பதால் தேவைக்கும் பற்றாக்குறைக்கும் இடையில் இருக்கும் இடைவெளியை குறைக்க முடியும். தாழ்ந்து கொண்டிருக்கும் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த முடியும். நிலத்தடி நீரின் மட்டம் உயர்வதால் நிலம் தாழ்ந்து புதையும் ஆபத்து குறையும்.

நிலத்தடி நீருக்குக் கட்டணம்

இந்திய நீர்வள மையம் (Central Water authority) 2018 டிசம்பரில் நிலத்தடி நீரை வீட்டு மற்றும் தொழிற்சாலைப் பயன்பாடுகளுக்காக பூமியில் இருந்து பெற கட்டணம் விதித்தது. இது நீர்மட்டம் தாழ்ந்து மோசமாக இருக்கும், மோசமான மற்றும் சுமாராக நீர் வளமுள்ள இடம் என்று இடத்திற்கேற்றவாறு வசூலிக்கப்படுகிறது. என்றாலும் இதில் இருந்து சொந்த வீடு மற்றும் நிலத்தடி நீரை அதிகம் பயன்படுத்தும் விவசாய நோக்கங்களில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

நிரந்தரத் தீர்விற்கு முக்கியத்துவம்

ஆட்சியாளர்கள் பிரச்சனை வந்த பின் சமாளிப்பதற்கே அதிக முக்கியத்துவம் தருகின்றனர். நிலம் தாழ்ந்து அதனால் ஏற்படப் போகும் அபாயம் உள்ளபோது இதற்கு உரிய முக்கியத்துவத்தை அளிப்பதில்லை. வீடும், வீதிகளும், இடங்களும், நகரமும் நிலத்திற்கடியில் புதைவது மெதுவாக நிகழ்கிறது என்றாலும் உலகம் முழுவதும் இது பில்லியன் கணக்கான டாலர் இழப்புகளை ஏற்படுத்துகிறது.

உட்கட்டமைப்பு, தெருக்கள், கட்டிடங்கள், பாதாள சாக்கடை போன்ற பூமிக்கடியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வசதிகளை நாசமடையச் செய்கிறது. மழைக் காலத்தில் நீர் தேங்குதல், வெள்ளப்பெருக்கு போன்ற பேரிடர்களையும் உருவாக்குகிறது. பூமிக்கடியில் நீர் சேமிக்கப்பட்டுள்ள இடங்கள் குறித்த விரிவான புவி நீரியல் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும்.

மத்திய நீர்வள வாரியம், இந்திய புவி நிலவியல் கழகம், நகர்ப்புற அமைச்சரகம் ஆகியவை இணைந்து இதற்கு நிரந்தரத் தீர்வு காண விரிவான ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும். மண்ணிற்கடியில் தாழும் இடங்கள் குறித்த புரிதல் அவசியம். பாதிப்பு அதிகமுள்ள இடங்களில் இருக்கும் கட்டிடங்களின் உறுதித் தன்மை பரிசோதிக்கப்பட வேண்டும். நிலத்தடி நீர் சுரண்டலிற்கு எதிரான சட்டங்கள் கண்டிப்புடன் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

பாதிப்பு அதிகமுள்ள இடங்கலில் உடனடியாக மழைநீர் அறுவடைக்கான பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஆய்வுக்குழு பரிந்துரை செய்துள்ளது. நத்தை வேகத்தில் நிகழ்ந்தாலும் நாட்டின் தலைநகரிற்கு ஏற்பட்டுள்ள இப்பிரச்சனையை உடனடியாக கவனிக்காவிட்டால் நாளை டெல்லி என்றொரு நகரை பூமிக்கடியில் இருந்து அகழ்வாய்வு செய்தே கண்டுபிடிக்க வேண்டும்.

- சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It