இந்தியத்துணைக் கண்டம் ஜாதியால் கட்டமைக்கப் பட்டது. எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்குத் தனக் கான அடிமைத்தனத்தைத் தானே விரும்பி ஏற்கும் வண்ணம் பார்ப்பனியச் சிந்தாந்தம் ஒடுக்கப்பட்ட மக்களின் மூளைக்குள் கண்ணி வெடிகளாக புதைந்து கிடக்கின்றது. இன்றளவும் அது சமூகத்தின் அடித்தட்டில் உள்ள மக்களிடையே வேறுபாட்டை ஏற்படுத்தி தங்களின் பொது எதிரியை அடையாளம் கான விடாமல் சகோதரச் சண்டைகளில் பாதுகாப்பாக வலம் வருகின்றது. இந்தியத் துணைக் கண்டத்தின் உழைக்கும் மக்களின் அடிமைத் தன்மைக்குக் காரணமான ஜாதியையும் அதைக் காப்பாற்றும் பார்ப்பனிய சித்தாந்தத் தையும் அடையாளம் கண்டு சமூக விடுதலைக்கான சரியான பாதையைக் காட்டியவர்கள் ஒரு சில தலைவர்களே. புத்தர், புலே, பெரியார் எனத் தொடரும் வரிசையில் மிகவும் முக்கியமான தலைவராகவும் இந்திய மக்களின் அடிமைத்தனத் திற்கான ஜாதியையும் அதைக் காப்பாற்றும் இந்துமதத்தையும் அலசி ஆராய்ந்து எதிரியை மிகத் துல்லியமாக அடையாளம் கண்டு மக்களுக்குச் சொன்னவர் தோழர் அம்பேத்கர்.

jayachandran book on ambedkarதோழர் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை தனஞ்செய்கீர் உள்பட பல வரலாற்று அறிஞர்கள் எழுதி உள்ளனர். அவற்றையெல்லாம் உள்வாங்கி எளிய முறையில் சாதாரண வாசகர்களும் புரிந்து கொள்ளும் வகையில் “மக்கள் தலைவர் அம்பேத்கர் எழுச்சியும் கிளர்ச்சியும்” என்று தலைப்பிட்டு தமிழ்நாட்டு வாசகர்களுக்கு அளித்துள்ளார் நூலாசிரியர் தோழர் க.ஜெயச்சந்திரன் அவர்கள். 249 பக்கங்கள் கொண்ட இந்நூலில் தோழர் அம்பேத்கரின் பிறப்பு முதல் இறப்பு வரை அவர் வாழ்வில் நடந்த சம்பவங்கள், அவர் பட்ட அவமானங்கள், அவருடைய போராட்டங்கள், வகித்த பதவிகள், வாங்கிய பட்டங்கள் என அனைத்தையும் பதிவு செய்கிறார். தோழர் அம்பேத்கரின் நூல்களை நாம் வாசிப்பதற்கு ஒரு உந்து சக்தியாக ஒரு வழிகாட்டியாக இந்த நூல் உள்ளது. மிக நேர்த்தியான வடிவமைப்புடன் காவ்யா பதிப்பகத்தாரால் வெளியிடப் பட்டுள்ளது.

நீ ஒரு இந்து அல்ல

இன்றைக்குப் பட்டியலின மக்களை இந்துக்கள் என்ற அடையாளத்திற்குள் கொண்டு வந்து தங்களுக்கான அடிமை களாகவும், அடியாட்களாகவும் பயன்படுத்த நீயும் இந்துதான் என்ற முழக்கங்கள் வைக்கப்படுகின்றன. அதற்குப் பல ‘பட்டியல் சமூகத் தலைவர்கள்’ என்று சொல்லிக் கொள்ளுபவர்களும் விலை போகின்றனர். ஆனால் தோழர் அம்பேத்கர் வாழ்க்கையில் நடந்த ஒரு சோகமான நிகழ்வை நூலாசிரியர் பதிவு செய்கிறார். 1917இல் படிப்பை முடித்துக்கொண்டு இந்தியாவிற்கு வந்த தோழர் அம்பேத்கர் அவர்களுக்கு அன்றைய பரோடா சமஸ்தானத்தில் வேலை கொடுக்கப்பட்டது. அப்போது அவர் அனுபவித்த வேதனைகளை நூலாசிரியர் விரிவாகப் பதிவு செய்கிறார்.

மன்னரின் ஆதரவோடு வேலைக்கு வரும் ஒருவருக்கு அலுவலக உதவியாளர் உள்பட யாரும் எந்த ஆதரவும் தரவில்லை குடிக்கத் தண்ணீர் கூட வைக்கவில்லை. தங்குவதற்கு இடம் இல்லை. தன்னைப் ‘பார்சி’ இனத்தவர் எனக் கூறித் தங்குகிறார். இந்நூலின் 51 ஆம் பக்கத்தில்,

பணி முடிந்து விடுதிக்குச் சென்ற அம்பேத்கரைக் குண்டாந் தடிகளுடன் ஒரு பார்சி கும்பல் வரவேற்கிறது. “யார் நீ? நான் ஒரு இந்து. இல்லை நீ ஒரு தாழ்த்தப்பட்டவன், தீண்டத் தகாதவன், பொய் சொல்லி சாதியை மறைத்து விடுதியில் தங்கியிருந்து விடுதியைத் தீட்டாக்கி விட்டாய், அதன் புனிதம் கெடுத்து விட்டாய், உடனே விடுதியில் இருந்து வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டனர்”

இன்றைக்கு இஸ்லாமிய மக்களுக்கு எதிராக நம்மை அடியாள் வேலை பார்க்கச் செய்வதற்கும், அவர்களுடைய இந்துக் கட்டமைப்பு தகர்ந்து விடாமல் பாதுகாக்க நம்மை ‘இந்து’ என்று அழைக்கும் இந்த பார்ப்பன பனியாக்கள், அன்று நமது தலைவர் நான் ஒரு இந்து என்று சொல்லியபோதுகூட ஏற்றுக் கொள்ளாமல் வெளியேறச் சொன்னவர்கள் என்பதை நம் மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்.

ஆங்கிலேய ஆதரவு

இந்திய சுதந்திரப் போராட்டக் காலத்தில் ஆங்கிலேயர்களை ஆதரித்தனர் என்று அன்றைக்கு அரசியலில் இருந்த காங்கிரஸ், கம்யுனிஸ்ட் பார்ப்பனர்களால் விமர்சிக்கப்பட்டவர்கள் அம்பேத்கரும், பெரியாரும் ஆவார்கள். ஏன் அவர்கள் இந்த விமர்சனத்தைக் தாங்கிக் கொண்டு ஆதரித்தனர்? தன் நாட்டின் சொந்த மக்களைச் சூத்திரர்கள் என்றும் பஞ்சமர்கள் என்றும் இழிவு செய்து கண்ணில் படக்கூடாது, தெருவில் நடக்கக்கூடாது, குளத்தில் நீர் பருகக்கூடாது, பள்ளியில் படிக்கக்கூடாது என இழிவு செய்தவர்களுக்கு மத்தியில் தன்னைச் சகோதரனாகப் பார்த்து கை கொடுப்பதும், சக மனிதனுக்கு உரிய மரியாதையோடு நடத்துவதும் உலகத்தை அறிந்து கொள்ளக் கூடிய கல்வியைக் கொடுப்பதும் என நமக்கு நண்பர்களாக விளங்கிய ஆங்கிலேயர்களை எப்படி நாம் எதிரியாகப் பார்க்க முடியும்? இந்நூலின் 93ம் பக்கத்தில்

“சைமன் கமிசன் முன் 18 தாழ்த்தப்பட்டோர் அமைப்புகள் சாட்சியம் அளித்தது. இவற்றில் 16 அமைப்புகள் தாழ்த்தப்பட்டோருக்குத் தனி வாக்காளர் தொகுதிகள் உருவாக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. அம்பேத்கரின் தலைமையில் இயங்கி வந்த “பகிஷ்கிரித் ஹித்தகாரினி சபா”வும் தங்களுடைய கோரிக்கைகைளை மனுவாக அளித்தது.

தொழிலாளர்களின் தோழர் அம்பேத்கர்

இன்றைக்கு இந்துச் சமூகத்தின் பொதுப் புத்தியில் தோழர் அம்பேத்கர் அவர்களை ஒரு பட்டியல் சமூகத் தலைவராகத்தான் பார்க்கும் நிலை உள்ளது. இங்குள்ள ஊடகங்களும் அரசும் அப்படித்தான் மக்களைப் பயிற்றுவித்துள்ளது. தோழர் அம்பேத்கரை நேசிப்பதாகச் சொல்லப்படும் இயக்கங்களும், தலைவர்களுமே அவரை ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கான தலைவர் என்ற சிமிழுக்குள் அடைக்க முற்படுகின்றனர். உண்மையில் அவர் யாருக்காகப் பாடுபட்டார்? அவரின் உழைப்பில் பயன் அடைந்தது பட்டியல் இன மக்கள் மட்டுமா? என்றால் அது மிகத் தவறான எடுத்துக்காட்டு ஆகும். ஏனெனில் தலைவர் அம்பேத்கர் அவர்களால் பெண்கள், தொழிலாளர்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள் என அனைவரும் பயன் பெற்றுள்ளனர். அதில் குறிப்பாகத் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தபோது தோழர் அம்பேத்கர் என்ன என்ன திட்டங்கள் செயல் படுத்தினார் என்பதையும், அதனால்தான் இன்றளவும் நாம் பல்வேறு உரிமைகளை அனுபவிக்கின்றோம் என்பதையும் நூலாசிரியர் ஆதாரத்துடன் விளக்குகிறார்.

இந்துவாகச் சாகமாட்டேன்

தோழர் அம்பேத்கர் அவர்கள் இந்துமதத்தினைச் சீர்திருத்தி ஒரு சமத்துவ சமூகம் அமைத்து விடலாம் என்று பல்வேறு காலங்கள் முயன்றும் பல போராட்டங்களை நடத்தியும் முடியாத கட்டத்தில் அவர் 1935 அக்டோபர் 13 இயோலாவில் நடந்த ஒரு மாநாட்டில் சுயமரியாதையுடன் நடத்தும் ஒரு மதத்திற்கு தாழ்த்தப்பட்ட மக்களோடு நான் மதம் மாறுவேன் என்று அறிவித்தார். அந்த அறிவிப்பால் பார்ப்பனியம் ஆடிப் போய்விட்டது. அனைவரும் அம்பேத்கரின் முடிவைக் கண்டித்து எழுதினார்கள். இந்தியாவில் அவருக்கு ஆதரவாக ஒரே ஒரு குரல் தமிழ்நாட்டில் இருந்து கேட்டது. அது தோழர் பெரியாரின் குரல்தான். பெரியார் அம்பேத்கரின் மதமாற்றத்தை ஆதரித்தது மட்டும் அல்லாமல் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் அதுதான் தீர்வு என்று கூறினார்.

அம்பேத்கர் அவர்கள் மதம் மாற தேர்ந்தெடுத்த மதம் பவுத்தம். ஏன் பவுத்தத்தைத் தேர்ந்தெடுத்தார் என்பதை நூலாசிரியர் இந்நூலின் 218-ம் பக்கத்தில் அம்பேத்கர் மதம் மாற்றம் பற்றி பி.பி.சி செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியை பதிவு செய்கிறார். “பகுத்தறிவோடு அன்பையும், சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் போதிக்கிறது பெளத்தம். வேறு எந்த மதத்திலும் இது போன்ற கொள்கைகள் இல்லை. பெளத்தம் என்பது சமூக உயர்வுக்கான தத்துவம்” என்கிறார்.

எனவே பகுத்தறிவோடு சமத்துவத்தைப் போதிக்கும் ஒரு தத்துவமாகப் பார்த்து பெளத்தத்தைத் தேர்ந்தெடுத்தார். ஆனால் அம்பேத்கர் வழி வந்தவர்களாகச் சொல்லிக் கொள்ளும் நாம் இன்று அவரின் தத்துவத்திற்கு எதிராகக் கோயில் குடமுழுக்கில் கலந்து கொள்வது, அம்பேத்கரின் தத்துவத்திற்கு எதிராகப் பார்ப்பனரை வைத்துத் திருமணம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றோம்.

அம்பேத்கர் மதம் மாறும் போது அவர் ஏற்றுக் கொண்ட 22 உறுதிமொழிகள் எதையும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில்லை. இந்து மதப் பண்டிகைகளுக்கு ஒரு பெளத்த விளக்கம் அளிப்பதும், புத்தர் படத்திற்கு அகல் விளக்கு பொருத்துவதும் தான் இன்றுள்ள பல பெளத்தர்களின் வேலையாக இருக்கிறது. எனவே நமது தலைவர் அம்பேத்கர் சமத்துவத்திற்கான தத்துவமாக அறிமுகம் செய்த பார்ப்பனியத்திற்கு எதிரான பெளத்தப் பண்பாட்டை நாம் மக்களிடம் சேர்த்து அவரின் கொள்கைகளை வெற்றியடைய, ஜாதியற்ற சமூகம் படைக்கப் பாடுபடுவோம். நூலாசிரியரின் இந்த அரிய முயற்சி பாராட்டுக்குரியது ஆகும்.

காவ்யா பதிப்பகம், 16, இரண்டாம் குறுக்குத் தெரு, டிரஸ்ட் புரம், கோடம்பாக்கம், சென்னை-6000024 - தொடர்புக்கு 044-23726882 விலை - 250

Pin It