கடந்த காலங்களில் புலால் உண்ணாமைக்கான தொரு இயக்கம் நம்மிடையே இருந்தது. அதன் பிறகு தான் அந்த கருத்தாக்கம் தீண்டப்படும் சாதியினரின் சிந்தனையில் மின்னலைப்போல் உதித்தது. உயிரோடு இருக்கும் எருமையின் பாலை அவர்கள் மட்டுமே குடிக்க வேண்டும்; செத்துப்போன அதே மாட்டின் பிணத்தை நாம் தூக்கிச் சுமக்க வேண்டும். என்ன ஒரு விந்தை இது நாம் அவர்களைக் கேட்க வேண்டும். மரித்துப் போன உங்கள் தாயின் பிணத்தை மட்டும் ஏன் நாங்கள் சுமக்க அனுமதி மறுக்கிறீர்கள்? செத்த மாட்டை நம்மிடம் தருவதுபோல் அவர்கள் தாயின் பிணத்தையும் நம்மிடம் தானே தரவேண்டும். சிலர் எப்போதோ ‘கேசரி’ இதழில் எழுதியிருந்தார்கள். ‘சில கிராமங்களில் ஒவ்வொரு ஆண்டும் 50 விலங்குகள் வரை செத்துப் போகின்றன. அவற்றின் இறைச்சி தோல், கொம்பு, எலும்பு, கால் பாதம், வால் இவற்றையெல்லாம் விற்பதால் 500 ரூபாய் வரை கிடைக்கும். தின்னக்கூடாது என்று இறைச்சியை ஒதுக்கி விட்டாலும் மற்றவைகளால் கிடைக்கக்கூடிய வருமானம் என்பது அந்த மக்களுக்கு கிடைக்காமலே போய்விடும்” என்பதான ஒரு பரப்புரை ‘கேசரி’யின் மூலம் செய்யப்பட்டது. உண்மையைச் சொல்ல வேண்டுமெனில், அப்படிப்பட்ட பரப்புரைகளுக்கெல்லாம் விளக்கம் சொல்லிக் கொண்டிருக்க வேண்டிய அவசியமே இல்லை. ஆனாலும் நம்முடைய மக்கள் அவைகளுக்குத் தக்க பதிலடி கொடுக்காமல் நம்முடைய தலைவர் என்னதான் செய்து கொண்டு இருக்கிறார் என்று கேட்கிறார்கள்.
ஒரு முறை நான் சங்கமனேரில் நடந்த கூட்ட மொன்றிக்குச் சென்றிருந்தேன். இரவு உணவின்போது ‘கேசரி’யிலிருந்து வந்திருந்த செய்தியாளர் ஒருவர் துண்டுச் சீட்டு ஒன்றினை அனுப்பிக் கேட்டிருந்தார்: “செத்த மிருகங்களைச் சுமக்கக் கூடாது என்று உங்கள் மக்களுக்கு நீங்கள் அறிவுறுத்துகிறீர்கள். அவர்களுடைய வீட்டுப் பெண்கள் உடுத்திக் கொள்ள சேலை, ரவிக்கை இல்லை, வேளைக்குச் சாப்பிட உணவில்லை. இவ்வாறு அவர்களுடைய நிலை மிகவும் பரிதாபகரமானதாக இருக்கும்போது செத்த விலங்குகளின் தோல், பாதம், இறைச்சி இவற்றின் மூலம் அவர்களுக்குக் கிடைக்கக்கூடிய 500 ரூபாய் வருமானத்தை விட்டுவிடச் சொல்கிறீர்களே, அது உங்கள் மக்களுக்குப் பெரிய இழப்பில்லையா?”
நான் கேட்டேன், “உங்கள் கேள்விக்கான பதிலை எந்த இடத்தில் சொல்லட்டும்? இங்கே இந்த நடைபாதையிலேயே சொல்லட்டுமா? அல்லது ஒரு கூட்டத்தில் சொல்லட்டுமா? மக்கள் கூட்டத்தின் முன்னின்று விடை சொல்வதுதான் சரியாக இருக்கும்.” நான் அந்த செய்தியாளரைப் பார்த்து, “இது மட்டும் தானா அல்லது இன்னும் வேறு ஏதாவது கேட்க வேண்டுமா...” என்றேன். அவர் சொன்னார், “அவ்வளவுதான், இதற்கு மட்டும் விடை சொன்னால் போதும்.” நான் கேட்டேன், “உங்களுக்கு எத்தனை குழந்தைகள்? உங்கள் வீட்டில் எத்தனை பேர் உள்ளனர்?” அவர், “எனக்கு 5 குழந்தைகள், என்னுடைய சகோதரருக்கு அய்ந்திலிருந்து ஏழு குழந்தைகள் வரை இருக்கிறார்கள்” என்றார். நான் சொன்னேன், “அதாவது, உங்கள் குடும்பம் மிகப் பெரியது. பின் ஏன் நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் கிராமத்திலிருக்கும் செத்த விலங்குகளை எல்லாம் சுமந்து அந்த 500 ரூபாயை நீங்களே சம்பாதிக்கக் கூடாது? இந்த வாய்ப்பை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தவிர, ஆண்டுக்கு மேலும் 500 ரூபாய் கிடைப்பதற்கானதொரு ஏற்பாட்டை நானே உங்களுக்குச் செய்து தருகிறேன். என் மக்களுக்கு என்ன ஆகும் என்பதையோ, அவர்களுக்கு உணவு, உடை கிடைக்கும் கிடைக்காது என்பதையோ நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் இந்த வாய்ப்பை நழுவ விடாதீர்கள். நீங்கள் ஏன் இதைச் செய்யக் கூடாது? நாங்கள் செய்தால் அது எங்களுக்கு வருமானம் என்றால் உங்களுக்கும் அது வருமானம்தானே? பிறகு என்ன தயக்கம், தூக்குங்கள் செத்த விலங்குகளை.”
நேற்று ஒரு பார்ப்பன சிறுவன் என்னிடம் வந்து கேட்டான், “உங்களுக்குத்தான் சட்டமன்றங்களிலும் நாடாளுமன்றங்களிலும் இடஒதுக்கீடு செய்யப்பட் டிருக்கிறதே, அவற்றை (மதம் மாறி) ஏன் இழக்கிறீர்கள்?” நான் சொன்னேன், “நீயே ஏன் ஒரு மகராக மாறி அந்த இடங்களையெல்லாம் நிரப்பக் கூடாது? நாட்டில் ஏற்கனவே பல இடங்களில் வேலை காலியாக இல்லை; வேலை கேட்டு பார்ப்பனர்கள் பலரும் மனு செய்து கொண்டிருக்கிறார்கள். பார்ப்பனர்களாகிய நீங்கள் எல்லோரும் ஏன் மகராக மாறி எங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியிடங்களைப் பெற்றுக் கொள்ளக் கூடாது?”
எங்களுடைய இழப்புக் காக நீங்கள் ஏன் கண்ணீர் வடிக்கிறீர்கள்? என்பது தான் நான் அவர்களிடம் கேட்கும் கேள்வி. சுயமரி யாதைதான் மனித இனத் திற்கு நெருக்கமானதே தவிர, பொருளாதாரம் அல்ல. நல்ல நடத்தையும் ஒழுக்கமும் உள்ள பெண்களுக்குத்தான் தெரியும். ஒழுக்கமற்று இருப்பதன் அனுகூலங்கள், ஆதாயங்கள் பற்றி. நம்முடைய பம்பாயில் பாலியல் தொழிலாளர்களுக் கென்று ஓரிடம் இருக்கிறது. அந்தப் பெண்கள் காலை 8 மணிக்கு எழுந்து அருகிலிருக்கும் உணவு விடுதியில் தங்களுக்கு தேவையான உணவைக் கொண்டுவரச் சொல்வார்கள் (டாக்டர் அம்பேத்கர் குரலை மாற்றிப் பேசுகிறார்) “ஓ சுலை மான்... ஒரு தட்டு நிறைய கொத்துக் கறியும் ரொட்டியும் எனக்கு கொண்டு வா...” அவற்றோடு டீ, கேக் முதலியவற்றையும் சேர்த்து சுலைமான் கொண்டு வந்து கொடுப்பார். ஆனால், என்னுடைய ஏழை சகோதரி களுக்கோ மிளகாயும் உப்பும் தூவப்பட்ட வெறும் ரொட்டிகூட கிடைப்பதில்லை. ஆனாலும் அவர்கள் ஒழுக்கத்தைவிட்டுக் கொடுக்காமல் மாண்போடும் மரியாதையோடும் வாழ்கிறார்கள். எங்களுடைய போராட்டமும் மாண்புக்காகவும் சுயமரியாதைக் காகவும்தான். இந்த மாந்தரினம் முழுவதையும் ஒரு முழுமையை நோக்கி இட்டுச் செல்லப் போகிறோம். அதற்காக எத்தகைய இழப்பையும் ஏற்கத் தயங்க மாட்டோம். இதோ இங்கே இருக்கிறார்களே செய்தியாளர்கள் (அவர்களைச் சுட்டுகிறார்) அவர்கள் கடந்த 40 ஆண்டுகளாக மீண்டும் மீண்டும் என்னை கோபமூட்டிக் கெண்டே இருக்கிறார்கள். இன்று வரை அவர்கள் என்னை எவ்வளவு அவதூறு செய்திருக் கிறார்கள்! இப்போதா வது அவர்கள் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும என்று நான் கேட்டுக் கொள்கிறேன். சிறுபிள்ளைத் தனத்தை கைவிட்டு அறிவார்ந்து நடந்து கொள்ளும்படி அவர்களை கேட்டுக் கொள்கிறேன்.
குறிப்பு: ‘கேசரி’ என்பது திலகர் தொடங்கிய இதழ். அம்பேத்கர் - புத்த மார்க்கத்தில் இணைந்த அடுத்த நாள் (15.10.1956) அன்று ஆற்றிய உரை. ‘தலித் முரசு’ வெளியீடான, ‘நான் இந்துவாக சாக மாட்டேன்’ நூலிலிருந்து.