அக்டோபர் 13, 1935-ம் ஆண்டு நாஜிக் மாவட்டத்தின் இயோலாவில் இந்து மதத்தை முழுவதுமாகத் துறப்பது என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தீர்மானத்தை பாபாசாகிப் அம்பேத்கர் பிரகடனப்படுத்தினார். இத்தகைய முடிவு பல்வேறுவிதமான எதிர் விளைவுகளைத் தூண்டியது.
இதனால் சமயப் பற்றுடைய, மரபுவழி பிறழாத இந்துக்கள் அசைவற்றுப் போனார்கள். நாஜிக்கு அருகாமையில் உள்ள காலாராம் (Kalaram) கோவில் நுழைவு சத்தியாகிரகப் போராட்டத்தின்போது கடைசி ஐந்து வருடங்களாக (தலித்கள்) அவமானப்படுத்தப் பட்டனர். அப்போது இந்துக்கள் மகிழ்ச்சி யடைந்திருந்தனர்.
அரசியல் ரீதியாகச் சிந்திக்கும் இந்துக்கள் இந்த முடிவைக் கடுமையாக எதிர்த்தபோதிலும், இந்தத் தீர்மானம் அவர்களை அச்சுறுத்துவதாகவே இருந்தது. சிலர் அம்பேத்கருக்குக் கொலை மிரட்டல் விடுத்தனர். அவரைச் சார்ந்திருந்த மக்களே குழம்பியிருந்தனர், சிலர் மிகவும் வெளிப்படையாக இந்த முடிவை எதிர்த்தனர். ஒரு சில சிறுபான்மையான சமூகங்களின் மத நிறுவனங்கள் மிகுந்த ஆர்வத்துடன் அவர்களைத் தங்களின் பக்கம் ஈர்ப்பதற்கு ஆர்வம் காட்டின.
இந்தப் பிரகடனத்தைத் தொடர்ந்து, ஒரு செயல்திட்டத்தை உருவாக்கும் பொருட்டு 1936-ஆம் ஆண்டு மே மாதம் 30-ஆம் தேதியிலிருந்து ஜீன் மாதம் 1-ஆம் தேதி வரை, மும்பை இலாகா மஹார் பரிஷத் (மும்பை மாகாண மஹார் மாநாடு - Mumbai Ilakha Mahar Praishad) என்ற தலைப்பின் கீழ் ஒரு மாநாடு ஒருங்கிணைக்கப்பட்டது. மஹார் துறவறம் மாநாடு மற்றும் மும்பை மாகாணத்திலிருக்கும் மடங்களின் மாநாடு என்னும் பெயர் கொண்ட மற்ற இரண்டு மாநாடுகளுடன் பகிர்ந்து நடத்தப்பட்டது.
அந்த மாநாட்டில் உணர்வு மிகுந்த ஒரு விரிவான உரையாற்றினார் அம்பேத்கர், அது “முக்தி கோன் பாத்தே?” (முக்தி பெறுவதற்கான பாதை எது?) என்ற தலைப்பின் கீழ் வெளியிடப்பட்டது.
அதில், தலித்துகள் தங்கள் மதத்தை மாற்றிக் கொள்வதற்கான அவசியத்தை முழு முனைப்புடன் விளக்க முயன்றார். “ஜாதி ஒழிப்பு“ ( Annihilation of Caste) என்னும் அவரது புகழ்பெற்ற புத்தகத்தில் அப்போது தான் இந்த விளக்கத்தை எழுதியிருந்தார். “ஜாதி ஒழிப்பு” புத்தகத்தில் அம்பேத்கரின் முடிவுரையானது,தர்மசாஸ்திரங்களை (ஸ்மிருதிகள் மற்றும் புராணங்கள்) மூலாதாரமாகக் கொண்டிருக்கும் இந்தச் சாதிகள் இந்து மதத்தின் மிக முக்கியமான விதியாகும், இந்த தர்மசாஸ்திரங்களை அழித்தொழிக்கும் வரை சாதிகளை ஒழிக்க முடியாது என்றார்.
விதிகளையுடைய மதம் மற்றும் கொள்கை களையுடைய மதம் என்று அவர் இந்து மத நுால்களை இரண்டு வகைப்படுத்தினார். அதில் இரண்டாவதாக உள்ளது (கொள்கை மதம்) வேதங்களிலும் உபநிடதங்களிலும் கூறப்பட்டதாகும். அம்பேத்கரின் கருத்துரைப்படி இது இந்து மத நடைமுறையில் அவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதேயாகும்.
அவரின் மதிப்பீட்டின்படி இந்துக்கள் தர்மசாஸ்திரங்களை முழுவதுமாக அழிப்பதற்கு எப்பொழுதும் தயாராகப் போவ தில்லை என்றும், அதனால் அம்பேத்கர் தானே இந்து மதத்தைவிட்டு வெளியேறு வதற்கு முடிவுசெய்தார். இவ்வாறாக, தீண்டத்தகாதவர்கள் இந்து மதத்தினுள் மரியாதையாக நடத்தப்படுவார்கள் என்ற நம்பிக்கைக்கு இடமேயில்லை என்று அம்பேத்கர் வாதிட்டார். அவர்கள் தங்களின் சாதிய அடிமைத்தனத்திலிருந்து வெளியேறுவதற்கு ஒரே வழி இந்து மதத்தைவிட்டு வெளியேறுவது தான்.
“முக்தி கோன் பாத்தே?” உரையில் மதம் மாறுவதற்கான இரண்டு முக்கியத்துவங் களை அம்பேத்கர் அடிக்கோடிட்டார் - புறநிலை (இருத்தலியல்) மற்றும் அகநிலை (ஆன்ம இயல்). புறநிலை முக்கியத்துவத்தை விளக்கும் பொருட்டு தலித்துகளின் படுமோசமான துன்பங்களை அம்பேத்கர் மிக முக்கியமானதாக சுட்டிக் காட்டினார். தலித்துகள், சாதி இந்துக்களால் உள்வாங்கப்பட்ட சாதிய விதிகளைச் சிறிது மீறும்போது மிகக் கடுமையான வன்கொடுமைகளால் துன்புறுகின்றனர் .அவருடைய இந்தக் கருத்தை அவர் பின்வருமாறு விவரிக்கிறார்:
“இது இரண்டு தனிமனிதர்களுக்கிடையேயான அல்லது இரண்டு குழுக்களுக்கு இடையேயான மோதல் அல்ல; இது இரண்டு வர்க்கங்களுக்கிடையேயான மோதல். இது ஒரு மனிதனின் மீதான ஆதிக்கத்தைப் பற்றிய கேள்வியோ அல்லது அநீதிகளைப்பற்றியோ அல்ல; ஒரு வர்க்கம் மற்றொரு வர்க்கத்தின் மீது தொடர்ந்து செலுத்தும் ஆதிக்கத்தைப் பற்றிய கேள்வியிது. இது ஒரு வர்க்கத்தால் மற்றொன்றின் மீது குவிக்கப்பட்ட அநீதிகளைப்பற்றிய கேள்வி.
“மேலே குறிப்பிடப்பட்ட மோதலின் உதாரணங்கள் ஒரு கருத்தை மட்டும் நிரூபணமாக்குகிறது, அது எப்பொழுதெல்லாம் நீங்கள் மேல்தட்டு வகுப்பினரை அணுகி சமத்துவத்தை வலியுறுத்துகிறீர்களோ அப்போதுதான் இந்த மோதல் தொடங்குகிறது. அவர்களுக்கு கோபத்தை விளைவிப்பது ஒரே ஒரு காரணம்தான் அதுவும் சமத்துவத்தை கோரும் உங்கள் குணமே, அதுவே அவர்களின் மதிப்பை காயப்படுத்துகிறது.”
அதன் பின்னர் அம்பேத்கர் தன் கருத்தின் இறுதியில், “தீண்டத்தகுந்தவர்களுக்கும் தீண்டத்தகாதவர்களுக்கும் இடையேயான மோதல் என்பது இயற்கையிலேயே நிரந்தரமானவை மற்றும் அது கடைசிவரையில் நீடித்துக் கொண்டிருக்கும். காரணம், அவர்களைப் பொறுத்தவரை உன்னைத் தாழ்ந்த நிலையில் நியமித்ததில் மதத்திற்கு பொறுப்பு உண்டு, அது தான் சனாதனம். (அதற்கு முதலும் இல்லை முடிவும் இல்லை). அதனினுள் எந்தவித மாற்றமும் இல்லை.”
புறநிலைப் பார்வையின் பிரச்சினையைப் பார்த்தோமேயானால், தலித்துகளிடம் வலிமை யில்லாமல் போனதே இந்தத் தொடர் மோதல்களுக்கான அடிப்படைக் காரணம் என்று அவர் உணர்ந்திருந்தார். மனிதர்களிடம் இருக்க வேண்டும் என்று எதிர்பார்கப்படுகின்ற மூன்று ஆற்றல்கள் அதாவது எண்ணிக்கையில் வலிமை, பொருளாதார பலம் மற்றும் மன ஆற்றல் ஆகிய மூன்றையும் தலித்துகள் கொண்டிருக்கவில்லை.
அவர்கள் சிறுபான்மையினராக இருந்ததினால் அவர்கள் வலிமையான எண்ணிக்கையைக் கொண்டிருக்கவில்லை, எண்ணிலடங்கா சாதிகளாகப் பிளவுபடுத்தப்பட்டு கிராமங்கள் முழுவதிலும் பரவியிருந்தனர். அவர்களிடம் பொருளாதார வலிமையும் இல்லை, காரணம் அவர்களிடம் நிலமோ அல்லது தொழிலோ அல்லது தரமான வேலையையோ கொண்டிருக்கவில்லை. சாதி இந்துக்களால் அவர்கள் பல நூற்றாண்டுகளாக அவமானத்திற்கும் அவமதிப்பிற்கும் உள்ளாக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு வந்த காரணத்தினால் அவர்களிடம் மனவலிமையும் இல்லாமல் போனது. அவர்கள் தங்களின் வலிமையைச் சார்ந்தே இருந்திருந்தாலும், அவர்கள் அனுபவிக்கும் இந்த மோசமான நிலைமையில் இருந்து தப்பிச்செல்வதை அவர்களால் எதிர்பார்த்திருக்க முடியாது.
தலித்துகளைப் போலவே சிறுபான்மையினராக இருக்கும் இஸ்லாமியர்களோடு அவர்களை (தலித்) அம்பேத்கர் ஒப்பிடுகிறார். மேலும் அவர் கூறும் போது, தலித்துகளைக் கையாள்வதைப் போன்று இந்துக்களால் இஸ்லாமியர்களை நடத்துவதற்குத் தைரியம் இல்லை என்கிறார். காரணம், அவர்களுக்கு நன்றாகவே தெரியும், ஒரு இஸ்லாமியரின் பின்னால் இந்தியாவின் ஒட்டுமொத்த இஸ்லாமிய சமுதாயமே இருக்கிறதென்று. எங்காவது ஒரு இஸ்லாமியர் ஒரு இந்துவால் பாதிப்புக்குள்ளானால் அந்த இஸ்லாமியருக்கு ஆதரவாக காஷ்மிரிலிருந்து கன்னியாகுமரி வரையுள்ள இஸ்லாமிய சமுதாயம் நிற்கும்.
ஆனால், இந்துக்கள் எப்பொழுதும் தலித்துகள் மீதான வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடுவதற்கும் தொடர் வன்கொடுமைகளை நடத்துவதற்கும் ஒருபோதும் தயங்கியதில்லை. காரணம், அவர்களுக்கு நன்றாகத் தெரியும் தலித்துகளுக்கு யாரும் ஆதரவு தரமாட்டார்கள் என்று. மேலும், தலித்துகளையும் அவர்களை ஒடுக்குபவர்களையும் இங்கே இந்துக்களாகத்தான் பார்க்கின்றனர். இதில் மற்றவர்கள் தலையிடுவார்கள் என்பதில் நம்பிக்கையில்லை. ஆதலால் வெளியிலிருந்து தங்களுக்கு ஆதரவாக வலிமை சேர்ப்பவர்கள் பற்றி தலித்துகள் சிந்திக்க வேண்டும். அந்த வலிமையானது மற்ற மத சமுதாயத்தோடு இணையும்போதும் அந்த மதத்திற்கு மாறும்போதும் மட்டுமே இது சாத்தியம் என்கிறார்.
தலித்துகளின் இருத்தலியல் (புறநிலை) தேவைக்கு மதம் மாற்றம் அவசியம் என்று அம்பேத்கர் தன்னுடைய மதமாற்ற அறிவிப்பை நியாயப் படுத்துகிறார். அதைத் தொடர்ந்து, அவர்கள் மாறப் போகும் மதமானது அந்த நாட்டில் ஒரு குறிப்பிட்ட மக்கள் தொகையை கொண்டிருக்க வேண்டும். அதற்காக அவர் முன்மொழிந்த மூன்று மதங்கள் இஸ்லாம், கிறிஸ்தவம் மற்றும் சீக்கிய சமயம். 1928-ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்தே அம்பேத்கர் இஸ்லாமைப் பற்றி பேசி வருகிறார். இந்த உரைக் கலந்தாய்விலும் இஸ்லாம் மதமே அம்பேத்கரின் தேர்வாக இருந்தது.
மதம் மாறுதலில் அகநிலையின் முக்கியத்துவ மானது, ஒரு தனிமனிதனின் மீதான மதிப்பை அதிகரிக்கச் செய்கிறது. ஆனால், இந்து மதத்தில் தனிமனிதத்துவத்திற்கு இடமேயில்லை, அது யாருக்கும் அகநிலை ஆற்றலை வழங்கமுடியாது.
அம்பேத்கர் கூற்றின்படி, ஒரு மதத்தின் உண்மையான நோக்கமானது தனிமனிதனின் அகநிலை வளர்ச்சிக்கு வழிவகுக்க வேண்டும். “ஒரு தனிமனிதனின் பிறப்பானது அந்தச் சமுகத்தின் சேவைக்கானது அல்ல, மாறாக அது அவர்களின் சொந்த விடுதலைக்கானதாக இருக்க வேண்டும்.” தனிமனிதனை முதன்மைப்படுத்தாத மதத்தை ஏற்றுக்கொள்வதில்லை என்று அம்பேத்கர் கூறுகிறார். தனிமனித வளர்ச்சிக்கு அவசியமானதாக இந்த மூன்று விஷயங்களையும் பார்த்தார். சகோதரத்துவம், சமத்துவம் மற்றும் சுதந்திரம் இதில் எதையுமே இந்து மதம் கொண்டிருக்கவில்லை என்பதையும் அவர் உணர்ந்திருந்தார்.
அம்பேத்கர் தனது தனிப்பட்ட முறையில், ஒரு மதத்தின் புறநிலை (இருத்தலியல்) பண்புகளை விட அகநிலை (ஆன்ம இயல்) பண்புகளையே அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக மதிப்பிட்டார். எனினும், அவர் தலித்துகளின் நலனுக்காக ஒரு மதத்தின் புறநிலை பயன்பாட்டை வலியுறுத்தியிருக்கலாம். இந்து ஒடுக்குமுறைகளை எதிர்க்க இன்றியமையாத வலிமையை அவர்களுக்கு இந்த தற்கால மதச் சமுதாயங்கள் தருமானால் அந்த மதத்திற்கு மாறுவது தான் அவரின் நோக்கம் என்பது விளங்குகிறது.
1935-ஆம்ஆண்டு இயோலாவில் பிரகடனப்படுத்தியிருந்தாலும், 1928-ஆம் ஆண்டு முதலே தன்னுடைய பத்திரிக்கையான ‘பகிஷ்கிரிட் பாரத்’ தில் (Bahishkrit Bharat) சாதிய அடிமைத்தனத்திலிருந்து வெளியேறுவதன் பொருட்டு மதமாற்றம் அவசியம் என்று பல்வேறு விதத்தில் தலித்துகளிடம் பேசினார். வேறு மதத்திற்கு மாறாதவரை தீண்டத்தகாதவர்கள் சாதிய அடிமைத்தனத்திலிருந்து வெளியேற முடியாது என்னும் கருத்து முடிவுக்கு அம்பேத்கர் வந்துவிட்டார் என்பதை அவரின் பத்திரிக்கையான ‘பகிஷ்கிரிட் பாரத்’-தில் தெளிவான ஆதாரங் களுடன் பார்க்க முடியும்.
மதமாற்றக் கருத்துகளைத் தாண்டி, தலித்துகள் மதமாறுவதற்கான ஏற்ற மதத்தினைப் பற்றி ஆழ்ந்து சிந்தித்தார். ஒரு அளவைக் கடந்து அம்பேத்கர், பெளத்தத்தையும் ஆரியசமாஜையும் மறுத்து விடுவதென்று முடிவெடுத்த அவர், குறிப்பிட்டு முன்மொழிந்த மதம் கிறிஸ்தவம்அல்லது இஸ்லாம்.
“பெளத்தத்திற்கோ அல்லது ஆரிய சமாஜிற்கோ மாறுவதன் மூலம், தங்களைத் தாங்களே மேல் வருணத்தைச் (Upper Varna) சேர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் மக்களின் இந்தப் பாரபட்சமான எண்ணங்களின் மீது இந்த மதமாற்றம் எந்தவித குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தப் போவதில்லை, ஆதலால் இந்தப்பாதையை ஏற்றுக் கொள்வதில் அவ்வளவு செயலறிவு இருப்பதாகத் தெரியவில்லை. வெற்றிகரமாக நேருக்கு நேர் இந்து மதப் பாரபட்சங்களை நாம் எதிர்க்க வேண்டுமெனில், சில புரட்சிகரமான சமுதாயங்களின் ஆதரவைப் பெறும் பொருட்டு ஒன்று நாம் கிறிஸ்தவத்திற்கோ அல்லது இஸ்லாமிற்கோ மதம் மாற வேண்டும். அதன்பின்னர் தான் தலித்துகளின் மீதான தீண்டத்தகாத இழிநிலை முழுவதுமாக துடைத்தெறியப்படும்.” என்றார்.
இரண்டு வருடத்திற்கு உள்ளாகவே அவர், கிறிஸ்தவத்தை நீக்கிவிட்டு முழுமையாக இஸ்லாமிய மதத்தில் இறங்கினார். 1929-மார்ச் மாதம் 15-ஆம் தேதியன்று வெளிவந்த ‘பகிஷ்கிரிட் பாரத்’ தின் தலையங்கத்தில்,
“இந்து மதத்திற்கு ஒரு அறிவிப்பு” என்ற துணிச்சலான தலைப்பின் கீழ் தீண்டத்தகாதவர் களுக்கு, “நீ மதம் மாறப் போகிறாய் என்றால், முகமதியனாக மாறிவிடு” என்று அம்பேத்கர் அறிவுறுத் தினார். பெளத்தத்திற்கோ அல்லது ஆரிய சமாஜிற்கோ மாறுவது பயனற்றது என்பதைப் பகுத்தாய்ந்த அவர் கிறிஸ்தவத்தையும் நீக்கிவிட்டார், காரணம் “இந்தியாவில் கிறிஸ்தவமும் கூட சாதிகளில் இருந்து தப்பிக்க முடியவில்லை” என்றார்.
கிறிஸ்தவத்திற்கு தலித்துகள் மதம் மாறுவதன் மூலம் அவர்களின் சமூகப் படிநிலைகளில் எந்த விதமான மாற்றங்களும் ஏற்படப்போவதில்லை என்பதை அவர் கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டும். அவர்கள் மீண்டும் இந்துக்களுக்கு அதே தீண்டத்தகாதவர்களாகத் தான் இருப்பார்கள், இந்துக்களுக்கு மட்டுமல்ல கிறிஸ்தவத்திலும் உள்ள உயர்ந்த சாதிகளுக்கும் அவர்கள் தீண்டத் தகாதவர்கள்தான். இஸ்லாம் சமுதாய மக்கள் மட்டுமே தலித்துகளின் பின்னால் முழு ஆதரவுடன் நிற்பார்கள் என்பதையும் விளக்கிக் கூறினார். இந்து மதத்திலிருந்து மட்டும் வெளியேறப் போவதாகச் சொல்லிக் கொண்டிருந்த அம்பேத்கர் வேறு எந்த மதத்தையும் தழுவுவதைப் பற்றி குறிப்பிடவில்லை. ஆனால், 1936 ஆம் ஆண்டு வரை அவர் இஸ்லாத்தை தான் அறிவுப்பூர்வமாக தேர்வு செய்தார் என்பது இங்கே ஆதாரப்பூர்வமானது.
இது கண்டிப்பாக இந்துக்களை ஒரு குறிப்பிட்ட அழுத்தத்திற்கு உள்ளாக்கி அவர்களைச் சீர்திருத்தத்திற்கு இட்டுச்செல்லும் சூழ்ச்சியேயாகும். இதைத்தான் அவர் மஹார் மாநாட்டில் எதிர்பார்த்திருந்தார். ஆனால், தலித்துகளுடைய உரிமையை சட்டப்படி நடைமுறைப்படுத்தும் செயலுக்கு அவர்கள் நடந்து கொண்ட விதமானது அம்பேத்கரை முழுவதுமாக ஏமாற்றமடையச் செய்தது.
டிசம்பர் மாதத்தில் ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட சத்தியா கிரகத்திலும் இதை அவர்கள் (இந்துக்கள்) தந்திரமாகக் கைகழுவினார்கள். மஹார் மாநாட்டை முடித்த உடனேயே அவர் மத மாற்றத்தைப் பற்றிப் பேசத்தொடங்கினார். மார்லே - மிண்டோ சீர்திருத்தத்தின் போதிருந்தே (Morley Minto Reforms – Indian Councils Act, 1909) அரசியல் அதிகாரங்களை சாதி - மத அடிப்படையில் பகிர்ந்தளிக்க வேண்டும் என்று முறைப்படுத்தப் பட்டது மற்றும் இந்துக்களில் இருந்து தலித்து களுக்கும், ஆதிவாசிகளுக்கும் தனி அதிகாரப் பகிர்வு வேண்டும் என்பதை முஸ்லீம் லீக் மறை முகமாகப் பேசத்தொடங்கியது.
இதுதான் இந்துக்களை அடிபணியவைப்பதற்கு ஒரே வழியென்று கருதிய அம்பேத்கர் இந்து சமயத்திலிருந்து வெளியேறிவிடப் போவதாக அச்சுறுத்தினார். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இயோலா பிரகடனத்திற்கு முன்னர்வரை தலித்துகளை இந்துகள் முழுவது மாகப் புறக்கணித்தனர்.
எனினும், 1956-ஆம் ஆண்டு அம்பேத்கர் தேர்வு செய்த மதமானது, புறநிலை (இருத்தலியல்) முக்கியத் துவத்திற்கு முற்றிலும் எதிரானதாக இருக்கிறது.
இத்தகைய மாற்றம் அவருடைய ஆன்ம-இயலின் (அகநிலை) முக்கியத்துவமானது ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் இருத்தலியலின் (புறநிலை) முக்கியத்துவத்தை மூழ்கடித்து விட்டதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியது. அம்பேத்கர், தான் மாற வேண்டிய மதமாக பெளத்தத்தைத் தேர்வு செய்தார். அது ஏறக்குறைய அழிந்து கொண்டிருந்த மலைப்பிரதேச மாநிலங்களிலும் (மேற்கு வங்காளம், அசாம், சீக்கிம், மிசோரம், மற்றும் திரிபுரா) இமாலயப் பள்ளத்தாக்கின் உயரமான இடங்களிலும் (ஜம்மு-காஷ்மிரில் லடாக் மாவட்டத்திலும், இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்திரப் பிரதேசத்தின் வடக்குப் பகுதிகளில்) மட்டும் ஒரு சிறிய எண்ணிக்கையிலான மக்களால் பாரம்பரியமாகப் பின்பற்றப் பட்டும் பாதுகாக்கப்பட்டும் வந்த மதமாக இருந்தது.
அம்பேத்கர் வரையறுத்ததைப் போல் இந்த நிகழ்வு தலித்துகளின் இருத்தலியல் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தகுதியுடையவை யல்ல. அதே சமயம், அம்பேத்கர் இந்த முடிவைத் தேர்வு செய்ததற்கான உறுதியான காரணம் இருக்கிறது. அவர் இதற்கு முன்னால் இருபது ஆண்டுகளாக இதைப் பற்றி ஆய்வு செய்து வந்திருக்கிறார். பெளத்தத்தின் மீதான அம்பேத்கரின் ஈர்ப்பு மக்களுக்குத் தெரிந்ததே.
இந்த நிகழ்வானது அவருடைய முந்தைய வருடங்களில், அவருடைய மெட்ரிக்குலேசன் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றதை நினைவுகூறும் பொருட்டு அவருக்கு பரிசளிக்கப்பட்ட புத்தகத்தின் மூலம் புத்தரின் வாழ்க்கை வரலாறு அம்பேத்கருக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அந்தப் புத்தகமானது, அதே பாராட்டுவிழாவில் தலைமை தாங்கிய கெலுஸ்கர் குருஜி(Keluskar Guruji) என்பவரால் எழுதப்பட்டது. அவர் அந்தக் காலகட்டத்தில் ஒரு பெயர்பெற்ற சமூக ஆர்வலர். அன்றிலிருந்து பெளத்தமதத்தின் தாக்கமானது அம்பேத்கரின் மனதில் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தது.
“முக்தி கோன் பாத்தே” உரையிலேயே அம்பேத்கர் இஸ்லாமை உயர்த்திப் பேசுவதைப் போல் தோற்றமளித்ததன் மூலம் அவருடைய தேர்வாக இஸ்லாம் மதம் உள்ளது என்ற உணர்வைத் தந்தது. ஆனால், அவர் தன் உரையை முடிக்கும் போது புத்தரின் கடைசி வாழ்நாள் “அப்போ தீபோ பவா” (உனக்கு நீயே ஒளியாய் இரு) என்பதைப் பற்றி ஒரு மிகச் சிறந்த சமயச் சொற்பொழிவாற்றினார்.
அவர் பெளத்தத்தைத் தேர்வு செய்தது ஒரு ஆச்சரியத்திற்குரியதே அல்ல. அவரின் அடிப்படைக் கோட்பாடுகளைக் கடந்து மதமாற்றமானது தலித்துகளின் புறநிலைப் பயன் பாட்டின் தேவையைப் பூர்த்தி செய்யவேண்டும்.
தமிழாக்கம்: பேராசிரியர் கிரண்குமார்
நன்றி: Scroll.in