பார்ப்பனிய மனுசாஸ்திரக் கலாச்சாரமும், பாலியல் கல்வி எதிர்ப்பும்

இந்தியப் பார்ப்பனச் சமுதாயக் கட்டமைப்பும் அவர்களின் அடிவருடி களான அரசர்களும் மனுசாஸ்திரத்தை மிக அழுத்தமான சட்டமாக இயற்றி பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை வாழ்வியலில் நடைமுறைப்படுத்தினார்கள். இந்தியாவில் மனுதர்மச் சமுதாயக் கட்டமைப்பில் இன்று மேல்தட்டு மக்கள் தொடங்கி மிகவும் அடித்தட்டு மக்கள் வரை பாலின வேறுபாட்டையும் அதைத் தொடர்ந்து பால்சார்ந்த வன்முறைகளையும் தலைமுறை தலைமுறையாய் கற்றுக் கொடுக்கின்றனர்.

இதன் விளைவாகத்தான் பாலியல் கல்வி பெண்களுக்கு மட்டும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது, ஆண்களுக்கென்று ஒரு அறம் உள்ளதைப் பார்ப்பனியத்தை எதிரொலிக்கும் இந்தியக் குடும்பங்களின் குழந்தை வளர்ப்பிலிருந்து நாம் காணமுடியும். மாதவிடாய் அடைந்த ஒரு பெண்ணை தீட்டாகக் கருதும் இந்தச் சமூகம், ஒரு பெண்ணைப் பருவமெய்துமுன்னரே மணம் முடித்துவைக்க வேண்டுமென்று கூறுவதையும், ஒரு பெண் பருவமெய்தியபின் அவள் குடும்பத்திற்கு மிக முக்கியமான பிரச்சினையாக மாறிவிடுகிறாள் என்பதையும் பார்க்கமுடிகிறது.

co ed kidsஉதாரணமாக, இன்றும் கூட குழந்தைத் திருமணத்தையும், வயது ஏற்றத்தாழ்வு டனும் திருமணங்கள் நடைபெறுவதையும் காணலாம். மேலும் பெரும்பான்மையான பெண்கள் கற்புடையவர்கள் அல்லர் என்பதையும் கற்பரசிகளுக்கு மறுமணம் விதிக்கப்படவில்லை என்று பல அறநுால்கள் கூறியுள்ளதாக சொல்லும் மனுவை இன்றும் இந்த பார்பன அடிமைச் சமூகத்தில் நம்மால் உணரமுடியும். திருலோக சீதாராம் மொழிப்பெயர்த்த ‘மனுதர்ம சாஸ்திர’த்தில் ஐந்தாவது அத்தியாயமான ‘மாந்தர்க்கு உரியவை’ மற்றும் ஒன்பதாம் அத்தியாயம் ‘ஆண் - பெண்களின் அறம்’ என்னும் பிரிவில் பெண்களுக்கான இலக்கணம் கொடுக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து சில

  1. எந்தப் பருவத்தினளாயினும், தனது இல்லத்திலே கூட எந்தப் பெண்ணும் தன்னிச்சைப்படி எச்செயலும் இயற்றலாகாது.
  2. இளமையில் தகப்பன், பருவத்தில் கணவன், விதவையான பின் மக்கள் இவர்கள் காவலிலன்றிப் பெண்கள் தம்மிச்சையாக இயங்க லாகாது.
  3. மலடியான மனைவியை எட்டாண்டுகளின் மேலும், தக்காமல் அடிக்கடி பிள்ளையிறக்கும் வயிற்றினளைப் பத்தாண்டுகளின் மேலும், பெண் குழந்தையையே பெறுபவளைப் பதினோராண்டுகளின் மேலும், பொல்லாங்கு சொல்கிற பெண்னை உடனேயேயும் நீக்கிவிட்டு, வேறு மணம் செய்துகொள்க.

பாலின ஏற்றுத்தாழ்வையே தன் கலாச்சாரமாக கொண்டிருக்கும் நாடுகளுள் ஆரியப் பார்ப்பன இந்தியா முதலிடத்தையே பெறும். இந்தியாவில் மனுதர்மக் கலாச்சாரம் உடைந்து விடுமோ என்ற அச்சத்தில்தான் பாலியல் கல்வி ஒதுக்கப்படுகிறது. அதாவது பாலியல் கல்வி என்பது திருமணத்துடன் மட்டுமே தொடர்புப்படுத்திக் காட்டப்படுகிறது,

பாலியல் கல்வியென்பது வெறும் உடலுறவைப் பற்றி விளக்கும் ஒரு பாடம் அல்ல. மாறாக இந்தியாவில் அதைப் பள்ளி மற்றும் கல்லுாரிகளில் பகுத்தறிவுப் பாடமாகவும், ஆண்- பெண் உடலியல் சார்ந்த கல்வியாகவும், சமூக உளவியலைப் புரிந்து கொள்வதற்கும், பண்பாடு- கலாச்சாரத் தளங்களில் ஆண்-பெண் ஒடுக்கு முறைகளை சுட்டிக்காட்டி சமூகத்தில் பெண்களுக் கெதிரான மனுதர்மச் சட்டங் களைக் களைவதற்கும் பயன்படும்.

பாலியல் கல்வியைக் கல்லுாரி மற்றும் பள்ளிகளில் கற்றுக்கொடுப்பதன் மூலம் பாலியல் சார்ந்த குற்றங்களும், மாணவ-மாணவிகளின் ‘ஒழுக்க’ நடவடிக்கைகளில் மாற்றம் ஏறுபடுவதாக சில கலாச்சார காப்பாளர்கள் கூறிவருகின்றனர். இவை யனைத்தும் ஆதராமற்ற தகவல்கள்.

இந்தியாவில் உலக சுகாதார மையம் நடத்திய ஆய்வில், “பாலியல் கல்வியானது இளம்வயதினரின் பாலியல் உணர்வைத் ஊக்குவிப்பது இல்லை” என்றும், அதே சமயத்தில் அவர்கள் கற்ற பாலியல் கல்வியானது அவர்களின் பாலியல் செயல் பாடுகளைத் தாமதப்படுத்தி அவர்களைப் பாது காப்பான உறவுமுறைக்கு உட்படுத்துகிறது என்றும் தெரிவித்தனர். United Nations Educational Scientific and Cultural Organization (UNESCO உலக நாடுகள் கல்வி-விஞ்ஞான பண்பாட்டுக் கழகம் வெளியிட்டுள்ள விரிவான பாலியல் கல்விக் கொள்கையை (Comprehensive Sexuality Education) இந்தியாவின் பல மாநிலங்கள் அதிகாரப்பூர்வமாக தடை செய்தன. ஆனால், யுனெஸ்கோவின் அறிவுத்தலோ, “பாலியல் கல்வியை அடிப்படையாகக் கொண்ட பாடத் திட்டத்தைப் பயிற்றுவிப்பதன் மூலம் சமுதாயத்தில் பாலினச்சமத்துவத்தை எட்ட முடியும்” என்கிறது.

அந்த அடிப்படையில் பாலியல் கல்வி வகுப்பைப் பற்றிப் பல மாணவர்கள் பகிர்ந்து கொண்டனர். அதில் ஒரு மாணவன் கூறியது, “இதுவரை எங்களுக்கு பாலியல் கல்வி என்று சொல்லி எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வும், கருத்தடைக் கருவிகளை எப்படிப் பயன்படுத்துவது என்பவை குறித்தே பாடம் எடுத்தார்கள், அதிலும் மாணவிகளுக்குத்தான் அந்த வகுப்புகள் நடக்கும். மாணவர்களை வெளியேறச் செய்துவிடுவார்கள். ஆனால் எங்களுக்குத் தெரிந்து உறவுமுறைகள், பாலினச் சமத்துவம், பாலியல் நடவடிக்கைகள், தொடுதல், உடலியல் மாற்றங்கள் பற்றி யாரும் பேசியதே இல்லை” என்றார்.

ஒரு மாணவி கூறிய பதில் “முதலில் இதைப்பற்றி பேசும்போதே எங்களில் சிலர் சங்கட்டமான சூழ்நிலையில் இருப்பது போன்று உணர்கின்றனர். மேலும், வயது வந்த ஆண்கள்-பெண்கள் அவர்களாகவும் பாலியல் கல்வியைக் கற்றுக்கொள்வது இல்லை, வேறுயாரிடமும் கேட்க முடியாத சூழ்நிலை. அப்படியே கேட்டாலும் கேட்டவர்களை வேறுவிதமாக மக்கள் எண்ணுகிறார்கள். காரணம் நம்முடைய கலாச்சார அமைப்பு” என்று பதிலளித்தார்.

வெவ்வேறு வயதுவரம்பைச் சேர்ந்த 300 மாணவ-மாணவிகளிடம் நடத்திய கலந்தாய்வில் 40 மாணவர்களைத் தவிர மற்ற மாணவ- மாணவிகள் பாலியல் கல்வி கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று கூறினார்கள். அந்த நாற்பது மாணவ-மாணவிகளுள் சிலருக்குப் பாலியல் கல்வி பற்றிய ஒரு சிறு அறிமுகம் கூட இல்லாமல் இருந்தது. அதிலும் குறிப்பாக பெருவாரியான மாணவிகள் கூறியது, “பாலியல் கல்வி என்ற உடனேயே அது பெண்களுக்கு மட்டும்தான் என்ற முறையை மாற்றியமைத்து அதை முதலில் பெற்றோருக்குக் கற்பிக்க வேண்டும்” என்று அழுத்தமாகக் கூறினர். மூன்றில் இரண்டு பெண்களுக்கு மாதவிடாய் தொடங்குவதற்கு முன்னும் அதன் பின்னும் அவர்களுக்குள் என்ன மாற்றங்கள் நடக்கிறது என்பது தெரியவில்லை. இவை போன்ற தரவுகளை யுனெஸ்கோ முன்வைக்கிறது.

தங்கள் குழந்தைகளின் உடல்சார்ந்த சந்தேகங்களை பெரும்பான்மையான பெற்றோர்கள் எப்பொழுதுமே கேட்டறிந்ததில்லை, அவர்களுக்குப் பாலியல் பற்றிய ஒரு புரிதலை ஏற்படுத்துவதும் இல்லை. காரணம், மாற்றம் விரும்பாத பார்பனியக் கண்ணோட்டப் பழமை வாதிகள், பாலியல் கல்வி இந்தியக் கலாச்சாரத்திற்கு எதிரானது என்ற எதிர்மறையான கருத்துக்களைப் பரப்பிக்கொண்டிருப்பதுதான். வெறும் பழமைவாதக் கலாச்சாரம், ‘ஒழுக்கம்’ மற்றும் இதர நெறிமுறைகளைக் கொண்டு பாலியல் கல்வியை நிராகரிப்பதன் விளைவு, பாலியல் ஒரு வக்கிரப் புணர்ச்சியாக மட்டுமே எண்ணப்பட்டு கற்பழிப்பு-கலாச்சாரமாக உருவெடுத்து நிற்கிறது. இந்துத்துவத்தைப் பாடப் புத்தகமாகக் கொண்டிருக்கும் ஒரு நாட்டில் விரிவான பாலியல் கல்வியை, கல்வித் திட்டமாக்குவதை எப்படி எதிர்பார்க்க முடியும்?

பெண்ணியமும் பாலியல் கல்வியும்

உலகம் முழுவதிலும் பெண்களுக்கு எதிரான மனோபவத்தைப் பற்றி பேசும் போது உலகப் பெண்களுக்கு ஆதரவாக அனைத்துப் பெண்ணியவாதிகளும் முன்னிற்கின்றனர். ஆனால் இந்தியாவில் பெண்ணியவாதிகளை அடையாளம் காண்பது மிக அரிது. அதற்கு இரண்டு காரணங்கள் கூறலாம்,

ஒன்று, இந்தியாவில் சாதி-மதம் சார்ந்த பெண்ணியவாதிகள் அதிகம். இரண்டாவதாக, மனு தர்மத்தை எதிர்த்துப் போராடாத பெண்ணிய வாதிகளை பெண்ணியவாதிகள் என்று சொல்வதை விட, பார்ப்பன இந்துப் பெண்ணியவாதிகள் என்றே குறிப்பிடலாம். அதனால்தான் (இந்தியாவில்) பெண்ணியம் என்ற பெயரில் இது வரை பெற்றுத் தந்த சுதந்திரம் பற்றி தந்தை பெரியார் அன்றே அழுத்தமாகக் கூறினார்,

“தற்காலம் பெண்கள் விடுதலைக்காகப் பெண்களால் முயற்சிக்கப்படும் இயக்கங்களும் யாதொரு பலனையும் கொடுக்காமல் போவதல்லாமல், மேலும் மேலும் அவை பெண்களின் அடிமைத்தனத்திற்கே கட்டு பாடுகளைப் பலப்படுத்திக் கொண்டே போகும் என்பது நமது அபிப்பிராயம்.”

பாலியல் தொழிலையும், போர்னோ கிராப்பியையும் பெண்களுக்கான சுதந்திரம் என்று கூறிவரும் பெண்ணியவாதிகளுள் எவரும் இதுவரை விரிவான பாலியல் கல்விக் கொள்கையை சட்டப் பூர்வமாகப் பாடத்திட்டங்களில் வைக்கவேண்டும் என முன்வரவில்லை, ஏன் குரல் கூட எழுப்பவில்லை.

உதாரணமாக, சென்னையில் ஒரு சிறுமி 17 பேர் கொண்ட கும்பலால் கூட்டு வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டாள் என்ற செய்தியைக் கேட்ட பெற்றோர்களும், பெண் பிள்ளையைப் பெற்றோரும் ஒரே பதற்றம் என்றார்கள். தொலைக்காட்சி களிலும் செய்திகளிலும் கூட இச்சம்பவம் மிகப் பெரிய பேசும் பொருளானது. இதே போல் தான் ஹாசினி என்னும் சிறுமி பாலியல் வன்கொடுமையால் எரிக்கப்பட்ட சம்பவத்தைக் கேட்டவர்களும் கூறினார்கள். இதில் பதற்றப்படுவதற்கு ஒன்று மில்லை,

பதற்றமில்லாமல் யோசித்துப் பார்த்தால் பாலின சமத்துவத்தைக் கற்றுக்கொடுப்ப தற்குப் பதில், ஒவ்வொரு கோவில்களிலும், கோவில் திருவிழாக்களிலும் ஆடல் பாடல் மற்றும் கரகாட்டம் என்ற பெயரிலும் அரைகுறை ஆடையுடனும், ஆபாச நடனங்களின் மூலமும் இளம் பெண்களை ஊர் அரங்கில் (சிறுவர்களும் அடங்குவர்) காட்சிப்படுத்திக் கொண்டிருப்பதை எதிர்க்காத பெற்றோர் சமுதாயம் பாலியல் குற்றங்களைக் கண்டு பதற்றப்படுவது முரணாக இருக்கிறது.

மறுபக்கம், இந்திய ஒன்றியச் சமூகத்தின் தனித் தகுதியான ‘சாதி’ அதற்கு அடிப்படையான ‘மதம்’ இரண்டையும் நடைமுறைப்படுத்தும் ‘கலாச்சாரம் மற்றும் பண்பாடு’ என அனைத்து வழிகளிலும் ‘ஆண்மை’யை நிலைநிறுத்திக் கொண்டிருக்கும் நாம் இதைப் பற்றியெல்லாம் வருத்தப்படுகிறோம் என்பதே ஒருவித ஆச்சரியம்தான். ஆணாதிக்கம் வறையறுத்த பிற்போக்குத்தனமான பெண் பண்புகளான ‘அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு’ அதாவது மனுவகுத்த நீதியின் கீழ்தான் பாடதிட்டங்களும் அதில் திருத்தங்களும் நடை பெறுகின்றன.

உலகப் பெண்கள் தினத்தன்று தமிழக அரசு பள்ளிகளில் பெண் களுக்கான போட்டிகள் நடத்தப் பட்டன, அவற்றுள் கோலமிடுதல், சமையல், உரலில் அரசியிடித்தல், பாண்டி விளையாடுதல், மற்றும் பல்லாங்குளி போன்ற ‘பெண்மையை’ நிலைநாட்டும் போட்டிகளே நடத்தப் பட்டன. இத்தகைய காலகட்டதில் நம்மிடம் பாலியல் கல்வி மற்றும் பாலின சமத்துவம் பற்றிய முழு விழிப்புணர்வு இல்லாமல், மதம், கலாச்சாரம் என்று சொல்லி பாலின சமத்துவத்தை ஏற்க மறுத்து விட்டு இன்றுதான் அதன் அவசியத்தை உணர்ந்திருக்கிறோம்.

மேலும் எல்லாவகையான குற்றங்களுக்கும் உளவியல் ரீதியாகக் காரணங்கள் கூறுவது என்பதே மறைமுகமாக அத்தகைய குற்றங்களை ஆதரிப்பது என்பதாகத்தான் அர்த்தம். இதையெதிர்க்கத் துணியாத பெண்ணியமும் பார்ப்பனிய ஆணாதிக்கத்தின் எதிரொலிப்பேயன்றி வேறெதுவும் இல்லை.

ஃபோர்னோகிராஃபியும், பாலியல் கல்வியின் அவசியமும்

அடிப்படையில் கூர்மையான சித்தாந்தம் இல்லாத ஆண்கள் மற்றும் பெண்களின் இயங்கு முறையை தீர்மானிப்பதே அவர்களை அடிமைப் படுத்தியிருக்கும் இந்த ஆபாசப் படங்களே. குறிப்பாக, சினிமாக்களைக் காட்டிலும் ஃபோர்னோகிராஃபி படங்கள் “ஆண்மையை” வன்முறையும் வக்கிரமும் நிறைந்ததாக மாற்றுகின்றன. அவை பெண்கள் மற்றும் சிறுவயதினர் மீதான பார்வையை மிக எளிதாக திசைத் திருப்பிவிடுகின்றன. பாலியல் கல்வியை நிராகரித்துக் கொண்டிருக்கும் இதே வேளையில் தான், தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவாக ஏதோ ஒரு வழியில் ஆபாசப் படங்களை பார்க்கும் மாணவ-மாணவிகள்தான் இன்றைய சூழ்நிலையில் அதிகமாகப் பாலியல் குற்றங்களில் ஈடுவோராக இருக்கின்றனர்.

ஃபோர்னோகிராஃபி அல்லது ஆபாசப்படம் இந்தியாவிற்குள் நுழையும் முன்னரே அதை நாம் காட்சிப்படுத்திக் கொண்டிருந்தோம் என்பது தான் இங்கே நிதர்சனமான உண்மை. இன்று நாம் வாழும் இந்தச் சமுதாயத்தில் குழந்தைகள் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாக்கப்படுவது ஒரு தினசரி நிகழ்வாகவும், பெண்கள் ஆண்களின் சந்தோசத்திற்காக மட்டும் என்ற மனுதர்ம நம்பிக்கையை மீண்டும் மீண்டும் நடைமுறைப் படுத்துகிறோம். நம்மிடமே ஒரு கேள்வி கேட்டுக் கொள்வோம், ஏன் இன்று நடக்கும் பாலியல் வன்முறைக்கும் கூட்டு வன்புணர்வுக்கும் ஒரு விதத்தில் நாம் காரணமாக இருக்கக் கூடாது?

வாசிப்பாளரிடம் உடனே ஒரு பதற்றமான அல்லது கோபமான கேள்வி எழும், அதெப்படி இதுக்கு நான் காரணமாக இருக்க முடியும்? ஆம்... நாம் தான் காரணம். அமைதியாக ‘அதையெல்லாம்’ ஆதரித்து அதற்கான உற்பத்தித் தேவையை அதிகரிக்கச் செய்தது நாம்தான்.

இன்னும் ஒரு கேள்வியையும் நீங்கள் எழுப்பலாம் ஒரு தனிப்பட்ட மனிதர் அவருடைய கணிணியிலோ, அல்லது ஸ்மார்ட்போனிலோ ஆபாசப் படம் பார்பதற்கும் வெளியுலகில் நடக்கும் கறுபழிப்பு மற்றும் கூட்டு வன்புணர்வுகளுக்கு என்ன சம்பந்தம்? தன்னை ஒரு ஆண் கட்டாயப்படுத்தி, அடித்து துன்புறுத்தி வல்லுறவுக்கு உள்ளாக்குவதை ஒரு பெண் சந்தோசமாக ஏற்றுக் கொள்வாரா? நால்வர் சேர்ந்து ஒரு பெண்ணை புணரும்போது வரும் வலியை அந்தப் பெண் ஆசையோடு ஏற்றுக் கொள்வாரா என்பது தான் இங்கே கேள்வி? இல்லை என்று பதில் வந்தால் இன்னும் தொடருங்கள்.

சில நுாற்றுாண்டுகளாக போர்னோகிராப்பி ஒழிப்பை எதிர்த்து வாதாடுபவர்கள் கூறுவது, “ஃபோர்னோகிராஃபி அல்லது ஆபாசப் படம் இருப்பதால்தான் நாட்டில் கற்பழிப்பு குறைந்துள்ள தாகவும், அது தனிமனித இச்சைகளைத் தீர்பதற்கு பெரிதும் உதவுகிறது” என்றும் மனிதர்களை சுயகட்டுப்பாட்டோடு வைத்திருக்கிறது என்றும் அழுத்தமாக கூறுகிறார்கள்.

உதாரணமாக, சமீபத்தில் சமூக வளை தளங்களில் வெளியான காட்சி, ஒரு முப்பது வயது மதிக்கத்தக்க பெண்ணை ஐந்து இளைஞர்கள் (20-25 வயதிருக்கும்) பாலியல் வன்முறைக்குள்ளாக்கும் காட்சி. அந்தப் பெண் கதறி அழும்போது கூட அந்த இளைஞர்கள் மத்தியில் ஒரு சந்தோசம். நம்மைச் சுற்றி தினம் நடக்கும் பாலியல் கொடுமைகளையும் கூட்டு வன்புணர்வுகளையும் சாதாரண நிகழ்வு களாக எண்ணிக் கடந்துவிடுகிறோம். அதன் விளைவு இப்போதைய காலகட்டத்தில் பாலியல் வல்லுறவு என்பது இந்தியக் கலாச்சாரத்தோடு ஒன்றிய ஒரு நிகழ்வாக்கப் பட்டுள்ளது. Fight the New Drug என்னும் ஆபாசப் படங்களை எதிர்க்கும் ஒருங்கிணைப்பு, ஒரு தரவை வெளியிட்டது.

அதாவது, சில வருடங்களுக்கு முன்னர் வந்த ஆபாசப் படங்களை ஆராய்ந்ததில் (309 காட்சிகள்) எண்பத்து எட்டு சதவிகிதம் அந்த திரைப்படத்தில் உடல் சார்ந்த பாலியல் வன்முறைக் காட்சிகள் படமாக்கப்பட்டிருந்தும், மேலும் நாற்பத்து ஒன்பது சதவிகிதம் அந்தத் திரைப்படத்தில் மிகவும் இழிவான வார்த்தைகளால் அந்தப் பெண் திட்டப் படுவதாகவும் அந்த தரவு தெரிவிக்கின்றது. டாஸ் மாக்கைப் போன்று இதுவும் ஒரு வகை போதைதான் என்றும் அதிகமாக போர்னோ கிராப்பியில் நேரம் செலவிடுபவர்களின் பெண்ணின் மீதான பார்வை மிகவும் வக்கிரமாக மாறிவருவதை தங்கள் ஆய்வின் மூலம் அம்பலப்படுத்தினார்கள்.

இணையத்தில் ஒரு குறிபிட்ட ஆபாசப்படத் தளத்தைப் பார்ப்பதில் இந்தியாவிற்கு நான்காவது இடம் என்ற தகவலை அந்தத் தளமே பதிவிட்டுள்ளது. அதிலும் இணைய சேவை மிகக் குறைவான விலையில் கிடைப்பதால், 75 சதவிகிதம் ஆபாச புகைப்படங்களும் திரைப்படங்களும் பதிவிறக்கம் செய்வதும், பதிவேற்றம் செய்வதும் அதிகரித்திருப்பதாக தகவல். மேலும் ஒரு ஆய்வு கூறுகிறது, ஆபாசப் படங்கள் எடுத்துக் கொண்டிருந்த காலம் முடிந்து, இன்று அன்றாடம் நடக்கும் அந்தரங்க விஷயங்களை மறைமுகமாகப் படம் பிடித்து அதை விற்பனை செய்வது அதிகரித்து வருவதாக அந்த ஆய்வுத் தரவுகள் அழுத்தமாகக் கூறகின்றன.

மறைந்திருந்து படம் எடுக்கப்பட்ட இலட்சக்கணக்கான தினசரி அந்தரங்கக் காட்சிகள் இணையத்தில் உலவுவதே இதற்கு சாட்சி. இன்னும் கூர்ந்து கவனித்தால், பெண்களை அடித்துத் துன்புறுத்தி வல்லுறவுக்கு உள்ளாக்கி அதைப் படமாகப் பதிவு செய்வதும் மிக அதிகமாகி வருகிறது. மேலும், வக்கிரமான, வன்முறை கலந்து ஒரு பெண் கூட்டு வன்புணர்வுக்கோ அல்லது வல்லுறவுக்கோ உள்ளாக்கப்படும் போது அந்தப் பெண் அதை மிகச் சந்தோசமாக ஏற்றுக் கொள்கிறாள் என்ற பிம்பத்தை அது ஆண்களுக்கு ஏற்படுத்துகிறது.

இந்தப் பிம்பம் தினசரி வாழ்க்கையில் எதிரொலிக்கும் போதுதான் கற்பழிப்புகளும் இதர பாலியல் குற்றங்களும் மிகச் சாதாரணமாக நடைபெறுகின்றன. பாலியல் கல்வியை எதிர்பதற்கு இந்து மதக் கலாச்சாரம் என்ற பிற்போக்குத்தனமான ஒன்றைத் தவிர வேறெதுவும் இல்லை. அதே நேரத்தில், பாலியல் கல்வியைக் கட்டாயமாக்குவதற்கு ஏராளமான, அழுத்தமான காரணங்கள் உள்ளன. பாலின சமத்துவத்தை நிலைநாட்டுவதற்காக அழிய வேண்டியது பெண்மை மட்டுமல்ல, அழிக்கப்பட வேண்டியது இந்த ஆண்மையும் தான்.

Pin It