கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

ஒரே ஆயுதம் அது வெட்டுவதற்கும் பயன்படுகிறது, ஒட்டுவதற்கும் பயன்படுகிறது என்றால் அது சனாதன தத்துவம் தான். இந்த ஆயுதத்தின் மூலம் இந்து மக்களை சாதிரீதியாக வெட்டி துண்டாடுவதற்கும், அதே மக்களை நாம் எல்லோரும் இந்துக்கள் என்று ஒரணியில் சேர்க்கவும் முடிகிறது, இந்தப் பேராயுதத்தைக் கொண்டு, இந்துராஷ்ட்ரா எனும் இந்துத்துவ தேசத்தை கட்டமைப்பதற்காக இந்துத்துவ சக்திகள் முயற்சிக்கின்றனர்.

தலித் மக்கள், சிறுபான்மை மக்கள், சாதி இந்துக்கள் - இந்த சமூகங்களுக்கிடையே உள்முரண்களை உருவாக்கி, நிரந்தரமாகப் பிரித்து வைத்திருப்பதன் மூலம் தங்களது அரசியல் நகர்வுகளை திறம்பட செயல்படுத்தி வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக தலித், இசுலாமிய சமூகங்களைத் தொடர்ந்து பதட்டத்திலேயே வைத்திருப்பது, அதிகார மையத்தை இந்த இரண்டு சமூகமும் அணுகவே முடியாத அளவிற்கு அவர்களை பொது வெளியிலிருந்து துரத்தி அடிப்பது போன்ற சூழ்ச்சிகள் மூலமாக பார்ப்பனியத் தலைமையை அதிகாரத்தின் உச்சியில் நிலைத்திருக்க செய்கின்றனர்.

Ambedkar with his wife Savita Ambedkar during Dhammaஒடுக்கப்பட்ட தலித் மக்கள், இந்து மதத்திலிருந்து வெளியேறி மதம் மாறினால், ஆட்சி அதிகாரம் தங்கள் கைகளை விட்டுச் சென்றுவிடும் என்று பேராதிக்க சக்திகள் அச்சப்படுகின்றனர்.

இந்துப் பெரும்பான்மை என்ற கட்டமைப்பை வலுப்படுத்துவதன் மூலம் அதன் சாதியப் படி நிலைகள் தகர்ந்து விடாமல் பாதுகாக்கப்படுகிறது. அதற்காகவே மதச் சிறுபான்மை மக்கள் மீது தொடர் அழுத்தம் கொடுக்கப்பட்டு அவர்கள் மீண்டும் தாய் மதம் திரும்ப வேண்டும் என்ற கற்பிதங்களை, கர்வாப்சி போன்ற இயக்கங்கள் முழுமூச்சுடன் செயல்படுத்தி வருகின்றனர்.

அண்ணல் அம்பேத்கர் அவர்கள் இந்துத்துவ எதிர்ப்பை, தனது வாழ்நாள் அரசியலாகக் கொண்டிருந்தார், சாதிய தீண்டாமையை உயிர்ப்புடன் வைத்திருக்கும் இந்து மதத்திலிருந்து ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரும் வெளியேற வேண்டும் என்பதை ஓர் இயக்கமாகவே செயல்படுத்தி வந்தார். ஆனால், அண்ணல் அம்பேத்கரின் கொள்கைகளை அழிப்பதற்கு இந்துத்துவ சக்திகள், தலித் அமைப்புகளையே தங்களின் முகமூடிகளாக அணிந்து கொள்கின்றனர்.

அம்பேத்கர் அவர்கள் எந்த மக்களின் சமூக விடுதலைக்காக தன் வாழ்நாள் முழுவதும் போராடினாரோ, அதே தலித் மக்களை என்றென்றும் மீளவே முடியாத அடிமைத்தனத்தில் அடைத்து வைப்பதற்கு சில தலித் தலைவர்கள் முயற்சி செய்கின்றனர். தலித் மக்களின் சமூக விடுதலையை இந்துத்துவ கும்பல்களிடம் அடகு வைத்து விட்டு, தங்களது அதிகார இச்சைகளை தணித்துக் கொள்கின்றனர்.

ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியல் விடுதலைக்காக அர்ப்பணித்த அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், ஜோதிராவ் பூலே அவர்களின் கருத்தியலுடன் முரண்பட்டு அவர்கள் எதிர் நிலையில் நிற்கும் போக்கு அபாயகரமானது.

“மதமாற்றம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எந்த தீர்வையும் தந்துவிடாது, அதனால் இந்துமதத்தில் இருந்து கொண்டே சமூக மாற்றத்திற்குப் போராடலாம்" என்ற ஒரு கருத்தியல் தெரிந்தோ, தெரியாமலோ சிலரால் பரப்புரை செய்யப்பட்டு வருகிறது, அதற்கு சில தலித் அமைப்புகளும், இயக்கங்களுமே பலியாகி விடுகின்றன.

தேசிய அளவில் சமூக நீதிக் கோட்பாடுகளை தங்களது அரசியல் கொள்கைகளாக தூக்கிப் பிடித்திருந்த பல தலித் கட்சிகளும் இன்று இந்துத்துவா பாஜகவின் குரல்களாக மாறியிருக்கின்றனர்.

தமிழகத்தில் சமூக நீதிப் போராட்டங்களால் களம் கண்டவர் என அறியப்பட்ட மருத்துவர் கிருஷ்ணசாமி அவர்களின் அரசியல் நிலைப்பாடு, பாஜக முழு பலத்துடன் ஆட்சிக்கு வந்தவுடன் முழுமையாக மாறிவிட்டது. அவர் பாஜகவின் தமிழகத் தலைவர்களில் ஒருவரைப் போலவே மாறிவிட்டார்.

சமீபத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் மீனாட்சிபுரம் மதமாற்றத்தை முன் வைத்து சமர்ப்பித்த முனைவர் பட்டத்திற்கான ஆய்வை எதிர்த்து அறிக்கை விட்டுள்ளார். அதில் இந்து மதத்திலிருந்து வெளியேறி இசுலாத்தை ஏற்றுக் கொண்ட மீனாட்சிபுரம் மக்கள் பொருளாதார, சமூக நிலையில் எந்த முன்னேற்றமும் அடையவில்லை. மேலும் பலர் தங்களது தாய் மதத்திற்கே திரும்பிவிட்டனர் எனக் குறிப்பிடுகிறார். மேலும் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பூலே போன்றவர்கள் வழியுறுத்திய சனாதன எதிர்ப்பு, சமூக நீதி, இடஒதுக்கீடுகளுக்கு ஆதரவு போன்ற கருத்தியலில் அவர்களுடன் தான் முரண்படுவதாகக் கூறுகிறார்.
ஒடுக்கப்பட்ட மக்களுக்களின் சமூக முன்னேற்றத்திற்கான வழியாக ”இன அடையாளம், அங்கீகாரம், அதிகாரம்” என்ற மாற்றுக் கருத்தியலை முன் வைக்கிறார், மேலும் முகலாயர்கள் இந்திய மக்களை கட்டாய மதமாற்றத்திற்கு உட்படுத்தினார்கள் என்கிறார் (இதுவரை ஆர்.எஸ்.எஸ் பரிவாரங்கள் மட்டுமே சொல்லி வந்த "முசுலீம் கட்டாய மதமாற்றம்” என்பதை மருத்துவர் கிருஷ்ணசாமி அவர்களும் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்.)

இட ஒதுக்கீடு தங்களது சமூக மக்களுக்குத் தேவையில்லை, மாறாக தங்களது சாதியை, பட்டியல்
சாதியிலிருந்து நீக்கிவிட்டால் உயர்ந்த சாதியின் மரியாதை கிடைக்கும் என்கிறார். பெயரை மட்டும் மாற்றி விட்டால் சமூக நீதி கிடைக்கும் என்கிறார். இந்து மதத்தின் சாதியக் கட்டமைப்புகள் மாற்றப்படாமல், இந்து சனாதனத்தை எதிர்க்காமல், இந்து மதத்திலேயே இருந்து கொண்டு தங்களது அடையாளத்தை தேடுவதாகச் சொல்கிறார்,

அப்படியாக பட்டியல் இனத்திலிருந்து பெயர் நீக்கப்படுவதாலும், இடஒதுக்கீடுகளை மறுப்பதாலும், சனாதனக் கோட்பாட்டு இந்து மதம் இவர்களின் புதிய அடையாளத்தை எப்படி ஏற்றுக் கொள்ளும்?, மேலும் சனாதன சாதியக் கட்டமைப்பில் அவர்களின் புதிய நிலை எந்தப் படி நிலையில் உள்ளது என்பதையும் இந்து ஆன்மீகத் தலைமை தான் விளக்கம் தரவேண்டும். இந்து சாதிய அமைப்பு என்பதை பிரம்மனின் உடலில் எங்கு பிறந்தவர்கள் என்ற முறையில் தீர்மானிக்கப்படுகிறது. அப்படி என்றால், புதிய பெயர் சூட்டலுக்குப் பின்னால் பிரம்மனின் உடலில் எந்தப் பகுதியில் புதிய பிறப்பு எடுப்பதாக கருதப்படும்?

இந்த பெயர் மாற்றத்திற்குப் பிறகு, பார்ப்பனர்கள் இன்று நாட்டில் அனுபவிக்கும் அத்தனை சமூக, பொருளாதார அதிகாரங்களையும் தேவேந்திரர்கள் இன மக்களும் அனுபவிக்கத் தொடங்கிவிட்டார்கள் என்றால், நாமும் மருத்துவர் கிருஷ்ணசாமியின் கூற்றை ஆதரிக்கலாம். இடஒதுக்கீட்டு உரிமை, நூற்றாண்டு காலப் போராட்டத்தின் விளைவாகக் கிடைத்தது. அதை ஒடுக்கப்பட்ட மக்களிடம் இருந்து பறிக்க நினைப்பது இந்துத்துவாவின் நீண்ட நாள் கனவு. மருத்துவர் கிருஷ்ணசாமி தனது சொந்த மக்களை வஞ்சிக்க நினைப்பது பெரும் அதிர்ச்சியாக உள்ளது.
மருத்துவர் கிருஷ்ணசாமி அவர்கள் இந்துத்துவ சனாதனத்தின் வேர்களில் தனது இனத்தின் அடையாளத்தைத் தேடி, இந்துத்துவா சக்திகளிடம் அங்கீகாரத்தைப் பெற விரும்புகிறார். அதன் மூலம் தனக்கு அதிகாரம் கிடைக்கும் என நம்புகிறார்.

மருத்துவர் கிருஷ்ணசாமியின் அடையாள மீட்டெடுப்பிற்குப் பிறகு அம்பேத்கரும், புலேயும் எதிரிகளானர்கள், குருமூர்த்தியும், அமித்ஷாவும் நண்பர்களாகிவிட்டனர்.

காலம் இப்படியாகத்தான் சிலரை அம்பலப்படுத்தி கரை ஒதுக்குகிறது, உண்மையான மக்கள் போராளிகளை வரலாற்று நினைவுகளில் போற்றிப் புகழ்கிறது. அதனால் தான் அம்பேத்கரும், ஜோதிராவ் புலேயும், தந்தை பெரியாரும் வரலாறுகளில் நிலைத்து நிற்கின்றனர். அவர்களின் வழியில், அம்பேத்கரிய கொள்கைகளையும், பெரியாரியக் கொள்கைகளையும், பொதுவுடைமை, தமிழ்த் தேசியம் என்ற கொள்கைகளுடன் சுமார் முப்பது ஆண்டுகாலம் ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்காகப் போராடி வருகிறார், தொல்.திருமாவளவன்.

"சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை" என்ற உறுதியான முழக்கத்துடன் இந்துத்துவா சக்திகளின் பிடியில் சிக்காத கருத்தியலாளராக இந்துத்துவா சனாதனக் கொள்கைகளை எதிர்த்து எந்த சமரசமும் இல்லாமல் போராடி வருகிறார்.

தொடர் அரசியல் பணிச்சுமைகளுக்கு இடையேயும் திருமாவளவன் அவர்கள் ஆய்வு மேற்கொண்டு, முனைவர் பட்டம் பெறுகிறார். அவர் வேறெந்த தலைப்புகளையும் தேர்ந்தெடுக்காமல் "மீனாட்சிபுர மதமாற்றத்தை" தனது ஆய்வின் தலைப்பாகத் தேர்ந்தெடுத்ததும் கூட, சமூக விடுதலைக்கான தீர்வை நோக்கிய அண்ணல் அம்பேத்கரின் அரசியல் பயணத்தின் ஒரு பகுதியாகத்தான் பார்க்கப்படுகிறது.
எந்த கருத்தையும் தனது கருத்தாக சொல்வதற்கு முன் அதைப் பகுத்தறிவுக் கண்ணோட்டத்தோடு ஆராய்ச்சி செய்து, அறிவியல் ஆய்வுகளோடு ஒப்பிட்டுப் பார்த்த பின்பு தான் தனது நிலைப்பாட்டை அறிவிக்கிறார் திருமாவளவன்.

1981ல் தலித் மக்கள் பெருமளவில் இசுலாத்திற்கு மதம் மாறிய சம்பவம், தேசத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அப்படியொரு மதமாற்றம் நடந்துவிடக் கூடாது, எப்படியேனும் தடுத்தே ஆக வேண்டும் என்ற முடிவோடு அரசியல் கட்சிகளும், அமைச்சர்களும் மீனாட்சிபுரத்தை முற்றுகையிட்டுப் பார்த்தனர். ஆனாலும் அத்தனை நெருக்கடிகளையும் கடந்து அந்த மக்கள் தங்களது முடிவில் உறுதியாக நின்று மதம் மாறினர். பிறகும் கூட மீண்டும் இந்து மதத்தில் அவர்களை இணைத்திடுவதற்கு பெரும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டது. தலித்துகள் மதம் மாறியே ஆகவேண்டும் என்று வழியுறுத்திய அண்ணல் அம்பேத்கரின் தீர்வு சரியானது தானா, அந்த மக்கள் மதம் மாறுவதற்கான காரணங்கள், அழுத்தங்கள் என்னவாக இருந்தது; இந்து மதத்திலிருந்து வெளியேறி தலைமுறை கடந்து இசுலாமியர்களாக வாழும் அவர்களுடன் மற்ற சாதி இந்துக்கள் எப்படி சமூக உறவு கொண்டுள்ளனர்; இசுலாமியர்களாக மாறிய அவர்கள் சமூக, பொருளாதார வாழ்வில் முன்னேற்றம் அடைந்துள்ளார்களா? என்ற பெரும் கேள்விகளுடன் திருமாவளவன் அவர்கள் தனது ஆய்வினை கிரிமினாலஜி துறையின் அணுகுமுறையுடன் முனைவர் பட்டத்திற்காக ஆய்வு செய்துள்ளார். மதம் மாறிய ஒவ்வொரு குடும்பத்தினரையும் சந்தித்து, அவர்களது வாழ்வியல் தகவல்களைத் திரட்டி, அறிவியல்பூர்வமான தரவுகளுடன், புள்ளிவிபரங்களுடன் கூடிய ஆய்வறிக்கையை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் சமர்ப்பித்துள்ளார். பல்கலைக்கழக வாய்மொழித் தேர்வில் அவர் கொடுத்த விளக்க உரை அந்த ஆய்வின் தரத்தைக் காட்டுகிறது.

ஆதிக்க சாதியினராலும், காவல்துறையின் சாதியப் பாகுபாட்டினாலும் மீனாட்சிபுரம் தலித் மக்கள் மிகவும் கடுமையாக ஒடுக்கப்பட்டனர். இந்து மதத்தில் இருக்கும் வரை சாதி, தீண்டாமை இழிவு நீங்காது என்பதை அம்பேத்கர் மற்றும் பெரியாரின் கருத்துக்களை உள்வாங்கிய சில தலித் இளைஞர்கள் உணர்ந்தனர், அவர்களின் முயற்சியால் அந்த கிராமத்தில் உள்ள தலித் மக்கள் இசுலாம் மதத்திற்கு மதம் மாறிவிடுகின்றனர். மதம் மாற விரும்பிய அவர்கள் ஏன் அண்ணல் அம்பேத்கர் ஏற்றுக்கொண்ட புத்த மதத்திற்கு மாறாமல் இசுலாத்தைத் தேர்ந்தெடுத்தார்கள்?

புத்த மதம் மற்ற நாடுகளில் உள்ளது போல இந்திய சூழலில் வாழ்வியல் மதமாக இல்லை, அதற்கென மிக உறுதியான மதக் கட்டமைப்புகள் இல்லை. புத்த மதத்தை எளிதாக பார்ப்பனியம் கபளிகரம் செய்துவிடும் என்று அண்ணல் அம்பேத்கர் அச்சப்பட்டது போல, புத்த மதம் இன்று இந்துமதத்தின் ஒரு பகுதியாகவே பார்க்கப்படுகிறது. புத்தர் இன்று இந்துக் கடவுளான விஷ்ணுவின் அவதாரமாக மாற்றப்பட்டுள்ளார்.புத்த மதத்தின் அத்தனை புரட்சிகரமான தத்துவங்களும், வாழ்வியல் கொள்கைகளும் மழுங்கடிக்கபட்டு வழக்கொழிந்து போன மதமாகிவிட்டது.

கிருத்துவத்தின் வேதங்கள் சமத்துவத்தையும், சமாதானத்தையும் வலியுறுத்தினாலும், அந்த மதமும் இந்திய சாதி அமைப்புகளின் தாக்கத்தால், சாதி அடையாளங்களுடன் காணப்படுகிறது.

thirumavalavan 615சகோதரத்துவம், சமத்துவம், சமாதானம் என்ற மானிட விடுதலைக்கான கோட்பாடுகளை, நடைமுறையில் எந்த மாற்றமும் இல்லாமல் வாழ்வியலோடு கடைபிடிப்பதற்கு இசுலாம் ஒன்றே தீர்வாக இருக்க முடியும் என்ற நம்பிக்கையில் அவர்கள் இசுலாத்திற்கு மதம் மாறியுள்ளனர். இந்த ஆய்வின் முடிவு அண்ணல் அம்பேத்கர் அவர்கள் வலியுறுத்திய தலித் மக்களின் மதமாற்றம் மட்டும் தான் உண்மையான சமூக விடுதலையைத் தரும் என்ற கருத்தை உறுதி செய்கிறது. மேலும் மதம் மாறிய மீனாட்சிபுரம் மக்கள், அவர்களின் இலக்கான சமூக விடுதலையை அடைந்து தேசத்திற்கே முன்னுதாரண‌மாக உள்ளனர் என்பதை இந்த ஆய்வு அறிவுப்பூர்வமாக நிருபித்துக் காட்டியுள்ளது.

ஆனால் மருத்துவர் கிருஷ்ணசாமி அவர்கள், திருமாவளவனின் முனைவர் பட்டத்திற்கான அந்த ஆய்வின் முடிவுகளை எதிர்க்கிறார். ஏனென்றால் அவர் தலித் மக்களின் மதமாற்றத்தை எதிர்க்கிறார். மதமாற்றத்தினால் எந்த மாற்றமும் அடையப் போவது இல்லை, கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றமே சமூக விடுதலையைத் தரும் என்பது அவரின் நிலைப்பாடு. மேலோட்டமாகப் பார்க்கும் போது இந்த நிலை சரியாகத் தோன்றினாலும், அம்பேத்கரின் பார்வையில் மருத்துவர். கிருஷ்ணசாமியின் நிலை முற்றிலும் தலித் சமூக மக்களுக்கு எதிரானதாகவே இருக்கிறது.

மதம் என்ற அடையாளத்தின் அவசியம், அது சமூகம், ஆன்மீகம் என்ற தளத்தில் எப்படி செயல்படுகிறது, தனிமனிதனுக்கு தேவையான சமத்துவம், தனிமனித சுதந்திரம் மற்றும் பரிவு என்ற மானிட உரிமைகளை எப்படி வழங்குகிறது என்ற அடிப்படையில் அறிவுப்பூர்வமான ஆய்வுக்கு உட்படுத்தி, ஒடுக்கப்பட்ட மக்களை இந்து மதத்திலிருந்து வெளியேறி இசுலாத்திலோ, கிருத்துவத்திலோ, புத்த மதத்திலோ இணைத்துக் கொள்ள வேண்டும் என கடைசித் தீர்வாக வலியுறுத்துகிறார் அண்ணல் அம்பேத்கர் அவர்கள்.

ஏறத்தாழ‌ 1935களிலிருந்து 1956 வரையிலான காலகட்டத்தில் தலித் மக்களின் மதமாற்றத்திற்கான அவசியத்தை வலியுறுத்தி மத மாற்ற அரசியல் இயக்கத்தை நாடு முழுவதும் மேற்கொண்டார்.
பல மாநாடுகளை நடத்தி தனது கருத்துக்களை தேசிய அளவில் விவாதமாக்கினார். தனது மத மாற்று பரப்புரையை ஒடுக்கப்பட்ட மக்களிடம் எடுத்துச் சென்றார். பிறகு தான் அறிவித்ததைப் போலவே சுமார் பத்து இலட்சம் பேருடன் இந்து மதத்திலிருந்து வெளியேறி புத்த மதத்தில் இணைத்துக் கொண்டார்.

அண்ணல் அம்பேத்கர் அவர்கள் தீவிரமாக தலித் மக்களின் மத மாற்றத்தை வலியுறுத்தி பிரச்சாரங்கள் மேற்கொண்டிருந்த போது, எந்த அளவிற்கு இந்துத்துவா தலைவர்கள் நெருக்கடி கொடுத்தார்களோ, அந்த அளவிற்கு சில தலித் தலைவர்களே அம்பேத்கர் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நெருக்கடி கொடுத்துள்ளனர்.

மதம் மாறவே கூடாது, மாறாக இந்து மதத்தில் இருந்து கொண்டே சாதிய தீண்டாமைகளுக்கு எதிராக எல்லா தீர்வுகளையும் காண முடியும் என சில இந்து மத சீர்திருத்தவாதிகள் வாதிட்டனர். மிகுந்த போராட்டத்திற்குப் பிறகும் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் தனது மதமாற்றம் என்ற கருத்தியலில் மிகவும் பிடிவாதமாக இருந்தார், அதனால் கலக்கமடைந்த இந்துத் தலைவர்கள், சரி நீங்கள் அப்படியே மதம் மாறியே ஆக வேண்டும் என்றால் நீங்கள் சீக்கிய மதத்திற்கு மாறுங்கள் என அவர்களாகவே ஒரு தேர்வையும் அம்பேத்கருக்கு வழங்கினார்கள், ஆனால் தனது கருத்தில் மிகவும் பிடிப்புடன் இருந்ததோடு மட்டுமல்ல, அவருடன் வாதிட்ட மிதவாத இந்துத்துவவாதிகளையும், தலித் சமூக தலைவர்களையும், இன்னும் காந்தி போன்ற இந்து மதப்பற்றாளர்களையும் மிகக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் அண்ணல் அம்பேத்கர்.

”மதமாற்றம் என்பது ஒரு வகை தப்பி ஓடுதல் (escapism ) என்கிறார்கள், இப்பொழுது இந்து மதத்தை சீரமைக்க பல இந்து மத சீர்திருத்தவாதிகள் கிளம்பியிருக்கிறார்கள், அவர்களின் தயவால் இந்து மதத்திலிருக்கும் தீண்டாமையையும், சாதிபாகுபாட்டையும் ஒழித்துவிடலாம்; அதற்குள் அவசரப்பட்டு மதம் மாறுவது சரியல்ல என்று சிலர் அறிவிக்கிறார்கள், தனிப்பட்ட முறையில் அவர்களைப் பற்றிய சிந்தனை எனக்கு குமட்டலைத் தான் ஏற்படுத்துகிறது. அவர்களைப் பற்றிய முன் அனுபவம் எனக்கு உண்டு. அந்த அரைகுறை அறிவாளிகளைப் பற்றி நினைத்தாலே எனக்கு வெறுப்புதான் வருகிறது. இந்த மதத்தில் இருந்து கொண்டே சாதியை ஒழித்துவிடலாம் என்பது நஞ்சை அமிழ்தமாக்கி விட முடியும் என்பது போன்றதாகும்"என்கிறார் அண்ணல் அம்பேத்கர் அவர்கள்.

குறைந்தபட்ச சுயமரியாதையும், கண்ணியமும் உள்ள எவரும் இந்து மதத்தில் இருக்க வேண்டும் என நினைக்க மாட்டார்கள், அடிமைத்தனத்தை விரும்பி ஏற்றுக் கொள்ளுபவர்கள் மட்டுமே இந்த மதத்தில் இருப்பார்கள் என்கிறார்.

MC.ராஜா போன்ற தலித் தலைவர்கள் அம்பேத்கரின் மதமாற்ற இயக்கத்தை வெறுத்தார்கள் .இன்றைய காலகட்டத்தில் மருத்துவர்.கிருஷ்ணசாமி அவர்கள் இந்து மதத்தைத் தாங்கிப் பிடிப்பதற்கு என்னென்ன காரணங்களைச் சொல்கிறார்களோ அத்தனையும் அன்றைக்கு அம்பேத்கரை எதிர்ப்பதற்கு முன்வைத்தார்கள்.

மதம் மாறினால் தீண்டத்தகாதோர் சிறுபான்மையாகிவிடுவர், தனித்துவிடப்படுவர், மதம் மாறினால் பொருளாதாரம், வேலை வாய்ப்பு, இட ஒதுக்கீடு எல்லாம் பறிபோய்விடும், மதம் மாறிப் போகும் புதிய மதத்திலும் சாதிப் பாகுபாடுகள் இருக்கத்தானே செய்கிறது என்பது போன்ற மதமாற்றத்திற்கு எதிரான சிந்தனையுடையவர்களாக சில தலித் தலைவர்கள் இருந்துள்ளனர். ஆனால் தன் அறிவார்ந்த கருத்தாளுமையினால் அத்தனை தர்க்கங்களையும் நிலை குலையச் செய்தவர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள்.

”தீண்டதகாதவர்களுக்கு, பொருளாதார சுதந்திரம் முதலில் வேண்டுமா அல்லது சமூக விடுதலை வேண்டுமா எனக் கேட்டால் முதலில் சமூக விடுதலை தான் வேண்டும் என்பேன்" என்றார் அம்பேத்கர் அவர்கள். அந்தளவிற்கு தலித்துகளின் மதமாற்றக் கொள்கையில் உறுதியாக இருந்தார்.
என்னதான் கல்வியிலும், பொருளாதாரத்திலும் ஒடுக்கப்பட்ட மக்கள் முன்னேறினாலும் அவர்களை சாதிய அடையாளத்துடன் பார்க்கும் அவலங்கள் தொடர்கதையாகத்தான் உள்ளன‌. பேர், புகழ், வசதிவாய்ப்பு என உச்சத்தில் இருந்தாலும் அவர்கள் மீது நவீனத் தீண்டாமை ஏவப்பட்டுக் கொண்டு தான் உள்ளது.

எனது நண்பர் ஒருவர் மருத்துவர், மருத்துவத்தை சேவையாக மக்களுக்கு வழங்கி வருகிறார், ஒரு முக்கிய கட்சியில் அரசியல் பொறுப்பில் உள்ளார். அவருடன் ஒரு நாள் பயணத்தில் இருந்த போது ஒரு சம்பவத்தைச் சொன்னார். "என்ன தான் நான் இந்த ஊரில் புகழ்பெற்ற மருத்துவராக இருந்தாலும், ஒரு கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்தாலும், என்னை முன்னால் விட்டு பின்னால் என் காதுபட ”இந்தா போறான் பாரு …என்று என் சாதிப் பெயரை இழிவாக சொல்லுவான்.. சொல்றவனப் பார்த்தா அடுத்த வேளை கஞ்சிக்கு இல்லாதவனா இருப்பான், அப்படியே அவமானத்தில் நெஞ்சு வெடிப்பது போல இருக்கும், என்ன செய்வது காதில் விழாதவன் போல கடந்து போவேன்" என்றார். அவர் மருத்துவர் என்றாலும், ஓர் அரசியல் கட்சியில் முக்கியப் பொறுப்பில் இருந்தாலும், சாதி இந்துக்களுக்கு அவர் ஒரு இழிவான சாதிக்காரர், அவ்வளவு தான்.

எத்தனை பெரிய உயர்பதவிகள் வகித்தாலும், அவர் நீதிபதியாக இருந்தாலும், ஆட்சியாளராக இருந்தாலும், ஆளுநராக இருந்தாலும் கூட அவர் சாதிய அடையாளத்தைக் குறித்து அவர் மீது தீண்டாமைத் தாக்குதல் நடத்தப்படுகிறது. சாதியின் பெயரை மாற்றிவிட்டாலோ அல்லது சாதிச் சான்றிதழில் எதையும் குறிப்பிடாமல் விட்டுவிட்டாலோ சாதிய தீண்டாமை இல்லாமல் போய்விடுகிறதா?

எங்கள் தொகுதியில் காங்கிரஸ் பிரமுகர், பல முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்... அவரை எல்லோரும் ”பாராமுகம் பாரமலை” என கேலி செய்து பேசுவார்கள். அவரின் பெயர் பாரமலை தானே.. அது ஏன் அவரை பாராமுகம் என்கிறார்கள் என விசாரித்தால், அவர் தொகுதியில் தனது கட்சிக்காரர்களின் எந்த ஒரு நல்லது கெட்டதிலும் கலந்து கொள்ளமாட்டார், தொகுதிப் பக்கமே வருவதில்லை அதனால் அவரை பாராமுகம் பாரமலை என்று சொல்வதாகக் கூறினார்கள். இதைப் பற்றி அவரிடம் நெருங்கிப் பழகிய சிலரிடம் விசாரித்த போது, அவர்கள் கூறிய செய்திகள் அதிர்ச்சியாய் இருந்தது. பாரமலை அவர்கள் தலித் சமூகத்தைச் சார்ந்தவர், சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும், அவர் தலித் என்பதால் கட்சிக்காரர்கள் நடத்தும் எந்த விழாக்களுக்கும் அவரை அழைப்பது இல்லை, விழா அழைப்பிதழ்களில் அவரின் பெயர் போடுவது இல்லை. இன்னும் சிலர் கட்சித் தலைமைக்குப் பயந்து அவரின் பெயரை அழைப்பிதழில் போட்டுவிட்டு அவரை அழைக்காமல் விட்டுவிடுவார்கள். அப்படி ஒரு நிகழ்ச்சி நடக்க இருப்பதே பாரமலை அவர்களுக்குத் தெரியாமலே போய்விடும். அவரை வேண்டும் என்றே திட்டமிட்டு தவிர்த்துவிட்டு ”பாருங்கள் அவர் வெளியில் எந்த விழாக்களிலும் கலந்து கொள்வது இல்லை, அவர் தொகுதிப் பக்கமே வருவதில்லை" என்று அவர் மீது அவதூறுகளைப் பரப்புவார்களாம்.

திரு.பாரமலை அவர்கள் மிகச்சிறந்த பண்பாளர், நல்ல ஆங்கிலப் புலமை உள்ளவர், மிகச் சிறந்த நிர்வாகத் திறமையுள்ளவர். ஆனாலும் அவர் ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பினர் என்ற காரணத்திற்காக அவரை சொந்த கட்சிக்காரர்களே ஒதுக்கி வைத்தனர். சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும் சாதி இந்துக்களின் பார்வையில் அவர் ஒரு இழிவான சாதியாளராகத்தான் பார்க்கப்பட்டார். அதிகாரம் கைகளில் இருந்தாலும், உயர்ந்த கல்வி கற்றிருந்தாலும் தீண்டாமையின் கொடுமை சாகும் வரை தொடர்ந்து வந்து கொண்டு தான் இருக்கும். தீண்டாமை ஒழிவதற்கு சாதியை ஒழிக்க வேண்டும், சாதிய இழிவுக்குள் இருந்து கொண்டே சமூக விடுதலையை அடையவே முடியாது.

தீண்டத்தகாதவர்களுக்கு சட்டம் வழங்கும் உரிமைகளைக் காட்டிலும் சமூகவிடுதலையே தேவை. அந்த சமூக விடுதலை உங்களுக்குக் கிடைக்காத வரை சட்டம் வழங்கும் எந்த உரிமைகளும் உங்களுக்கு எந்தப் பயனும் தராது என்கிறார் அண்ணல் அம்பேத்கர்.

அண்ணல் அம்பேத்கர் அவர்கள், தலித் மக்கள் இந்துக்கள் அல்ல, அவர்கள் இந்நாட்டின் தொல்குடி மக்கள், உழைக்கும் மக்களை வருணாசிரமக் கொள்கைகளால் அடிமையாக்கிய சனாதன இந்து மதத்தை விட்டு வெளியேறுவதில் தான் உண்மையான சமூக விடுதலை கிடைக்கும் என்று போராடினார்.

ஆனால் தலித் மக்களின் அடையாளங்களை இந்து மதத்திற்குள் இருந்து கொண்டு தேடுவதாக சொல்வது, அம்மக்களை வாழ்நாள் முழுதும் சாதிய தீண்டாமை எனும் இழிவுக்குள் அடக்கிவைக்கும் இந்துத்துத்துவத்தின் சூழ்ச்சியாகவே பார்க்கப்பட வேண்டும்.

"எப்படி நாட்டிற்கு சுதந்திரம் முக்கியமோ அதே போல் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சமூகவிடுதலை முக்கியம்” என்கிறார் அம்பேத்கர்.

சனாதனக் கொள்கைகளுக்கு எதிராக தொல்.திருமாவளவன் முன் எடுக்கும் தொடர் போராட்டங்கள் என்பது அண்ணல் அம்பேத்கரும், ஜோதிராவ் பூலேயும், தந்தை பெரியாரும் விட்டுச் சென்ற புரட்சிகரமான பணிகள்.

”சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம்” என்ற இலக்கை நோக்கிய சமூக விடுதலைப் போராட்டங்களுக்கு, நாம் அம்பேத்கரின் கொள்கைகளைப் பின்பற்றுவதா இல்லை அம்பேத்கரின் முகமூடி அணிந்தவர்களைப் பின்பற்றுவதா என்பதை மக்கள் முடிவுசெய்து கொள்ளட்டும்..

மால்கம் இராசகம்பீரத்தான்