கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

“எங்கள் வேலை எங்களுக்கு” என்று, சலவைத் தொழிலாளர்களே போராடுகிறார்கள். ‘காலா’வின் முதல் காட்சியே இதுதான். முதல் காட்சியிலேயே ‘இளைஞர்களே உங்களுக்குத் தெரியுமா?’ என்ற சிறிய நூலில் படித்த வரலாறு நினைவுக்கு வந்தது.

1952 ஆம் ஆண்டு திருவான்மியூரில் நடந்த சலவைத் தொழிலாளர் மாநாட்டில், அன்றைய முதலமைச்சர் இராஜகோபாலாச்சாரியார் பார்ப்பனத் திமிரோடு, “அவரவர் குலத்தொழிலைத் தான் ஒவ்வொருவரும் செய்ய வேண்டும்” என்று பகிரங்க மாகப் பேசினார், என்ற வரலாறுதான் அது.

எந்த சலவைத் தொழிலாளர்களிடம் பார்ப்பன இராஜாஜி , இழிவைத் திணித்தாரோ, அதே சலவைத் தொழிலாளர்கள் அந்த இழிவையே தமது உரிமையாகவும், அதற்காகப் போராடுவதாகவும் காட்சிப் படுத்தியவர் தோழர் இரஞ்சித் என்பதுதான் வருத்தமாக இருக்கிறது.

அய்யப்பன் கோவில் கருப்புச்சட்டையா?

குலக்கல்வித்திட்டம் என்ற இழிவை எதிர்த்து, தி.க, தி.மு.க இரண்டு அமைப்புகளின் தோழர்கள் ஆயிரக்கணக்கானோர் கொடும் சிறைத்தண்டனை களைப் பெற்றனர். பலர் துப்பாக்கிச்சூட்டில் வீரமரணம் அடைந்தார்கள். நூற்றுக்கணக்கான தோழர்கள் படுகாயமடைந்தார்கள். சட்டசபை முற்றுகை, முதலமைச்சர் இல்ல முற்றுகை, தமிழ்நாடு முழுவதும் முழு அடைப்பு, துப்பாக்கிச்சூடுகள், அக்ரஹார எரிப்பு அறிவிப்புகள் எனத் தொடர்ச்சி யாக இரண்டு ஆண்டுகள் போராடினர்.

கடுமையான இழப்புகளைச் சந்தித்து, நாம் கடந்து வந்த இழிநிலையை ஒரு உரிமையாகக் காட்டுவதோடு காட்சி முடியவில்லை. அந்தப் போராட்டத்தை ஒரு தொண்டு நிறுவனம் மற்றும் பொதுவுடைமை ஆதரவுத் தோழர் போன்ற ஒருவர் முன்னெடுப்பார். அது தவறு என்று சொல்லி, கதாநாயகர் போராட்டக் களத்துக்கு வருவார். கருப்புச் சட்டை வேறு போட்டிருக்கிறார்.

“அடுத்தவனின் அழுக்குத் துணியை நாம் துவைப்பது என்பது நமது சுயமரியாதைக்கு இழுக்கானது. இந்தத் தொழிலை விட்டு வெளியே றுங்கள். மானத்துடன் வாழ வழி தேடுங்கள்” என்று அறைகூவல் விடுப்பார் என்று எதிர்பார்த்தால்.... அவர் அய்யப்பன் கோவில் கருப்புச்சட்டை போலப் பேசிவிட்டுப் போய் விடுகிறார்.

இந்த நேரத்தில், கம்யூனிஸ்ட் பார்ப்பனர் களின் துரோக வரலாறு ஒன்றையும் நினைவுபடுத்த வேண்டும். 1952 ஆம் ஆண்டு குலக்கல்வித் திட்டம் அமுல்படுத்தப்பட்டபோது, அப்போது இருந்த எதிர்க்கட்சிகள் (கம்யூனிஸ்ட் கட்சியும், மற்ற கட்சிகளும் இணைந்து) இராஜாஜி மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவந்தனர். அந்தத் தீர்மானம் ஒரே ஒரு வாக்கில் தோல்வி அடைந்தது. இராஜாஜி வென்றார்.

பின்னர் குலக்கல்வித் திட்டம் பல உயிர்களைக் காவுவாங்கிய பிறகே ஒழிக்கப்பட்டது. அன்று குலக்கல்வித் திட்டத்தையும், இராஜாஜியையும் காப்பாற்றியவர் இந்தியாவின் மிக முக்கிய கம்யூனிஸ்ட் தலைவரான பி.இராமமூர்த்தி ஆவார். நம்பிக்கையில்லாத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு வந்த நாளில், அவர் சட்டமன்றத்துக்கு வரவில்லை. அவரது ஒரு ஓட்டினால் இராஜாஜி பிழைத்தார். வாக்கெடுப்பில் வென்றாலும், பெரியாரின் போராட்டங்களுக்குப் பயந்து பதவிவிலகி ஓடினார் இராஜாஜி. அன்று விரட்டப்பட்ட குலத்தொழில் திணிப்பு முயற்சிதான் காலாவில் ஓர் உரிமையாகக் காட்டப்படுகிறது.

நிலம் - அதிகாரம்

படத்தின் தலைப்புக் காட்சியிலேயே, “நிலம் அதிகாரமாக மாறியது.” என்கின்றனர். அதாவது, நிலம் வைத்திருப்பவனிடம் தான் அதிகாரம் இருக்கிறது என்று கூறுகின்றனர். உலக அளவில் இது உண்மையாக இருக்கலாம். ஆனால் இந்தியாவில், அதிகாரம் உள்ளவனிடம் தான் நிலமும் இருக்கிறது. (நிலம் மட்டுமல்ல; நிலமும் இருக்கிறது.) என்பதே உண்மை.

12 இலட்சம் ஏக்கர் நிலம் வைத்திருந்த பட்டியலின மக்களிடம் அதிகாரம் வராமல் போனது ஏன்? அதிகாரம் வராமல் போனது இருக்கட்டும். நிலத்தை தம் உடமையாக வைத்திருக்க வாவது முடியாமல் போனது ஏன்?

சிவகங்கை மாவட்டம் கச்சநத்தத்தில் 20 ஏக்கர் நிலத்துக்கும் அதிகமாக வைத்திருந்த பள்ளர்கள் தான் நிலமே இல்லாத அகமுடையார்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்கள். கச்சநத்தம் பள்ளர்கள் மட்டுமல்ல; தென் மாவட்டங் களில் ஏராளமான ஊர்களில் பள்ளர் சமுதாயத் தினர் நில உடமையாளர்களாக உள்ளனர். அதனால், அவர்களிடம் அதிகாரம் வந்துவிட்டதா? ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் வைத்திருக்கும் இடைநிலை ஜாதிகளின் கையிலாவது ‘அதிகாரம்’ இருக்கிறதா?

காவிரி நீர் உரிமைக்காகப் போராடுவது யார்? பெரும்பாலும் பிற்படுத்தப்பட்ட சமுதாய நில உடமையாளர்கள் தான் இரண்டு மாநிலங்களிலும் போராடிக்கொண்டிருக்கிறார்கள். இரண்டு மாநில நில உடமையாளர்களுக்குமே நீதி கிடைக்காமல் ஒருவரோடு ஒருவர் மோதிக் கொண்டிருப்பது ஏன்? எந்த மாநில நில உடைமையாளருக்காவது இந்திய அரசில் அதிகாரம் இருந்திருந்தால், ஏதோ ஒரு மாநில நிலப்பிரபுவுக்கு காவிரி உரிமை கிடைத் திருக்கும். ஆனால், நிலமே இல்லாத பார்ப்பன அதிகார வர்க்கமும், அவர்களது அடிமைகளும் தான் இந்த நிலப்பிரபுக்களின் அதிகார எல்லையை வரையறை செய்து கொண்டிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டின் எட்டு வழிச்சாலை போலவே இந்தியா முழுவதும், சாலை விரிவாக்கம், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், வளர்ச்சித் திட்டங் கள் என்ற பெயரில் இந்த நிலப்பிரபுக்களின் நிலங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. “நிலமே அதிகாரம்” என்றால், இந்த நிலஉடமையாளர்கள் நடுத்தெருவில் நிற்பது ஏன்? நூற்றுக்கணக்கான விவசாயிகள் விஷம் குடித்துச் சாவது ஏன்?

இந்தியாவில் பல்வேறு வளர்ச்சித் திட்டங் களுக்காகப் பல இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட வீடுகள், அலுவலகங்கள், வணிகநிறுவனங்கள் அகற்றப்பட்டிருக்கின்றன. என்றாவது, எங்காவது, பார்ப்பனர் அர்ச்சகராக உள்ள ஒரே ஒரு இந்துக் கோவில் இடிக்கப்பட்டிருக்கிறதா?

பிற்படுத்தப்பட்ட இடைநிலைஜாதியினரின் - பல இலட்சம் வருமானம் தரக்கூடிய பல ஏக்கர் நிலங்கள் அரசாங்கங்களின் பல திட்டங்களுக்காகப் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. எத்தனை பார்ப்பனர்களின் நிலங்கள் பறிமுதல் செய்யப் பட்டன?

தமிழ்நாட்டில் பொப்பிலி அரசர் என்ற முதலமைச்சர் இருந்தார். அவர் ஒரு ஜமீன்தார். அவரது ஆட்சிக்காலத்திலேயே பெரியாரின் போராட்டங்களால் ஜமீன் ஒழிப்புச் சட்டங்கள் நிறைவேறியுள்ளன. ஜமீன்களின் நிலங்களைக் கையகப்படுத்தும் பல சட்டங்கள் வந்துள்ளன. ஆனால்,  இனாம்தார் என்பவர்களின் நிலங்களைக் கைப்பற்ற முடிந்ததா? ‘இனாம்தார்’ என்ற சொல்லையே நாம் கேள்விப் பட்டிருக்க மாட்டோம். பார்ப்பனர்களுக்கு இனாமாகக் கொடுக்கப்பட்ட நிலங்கள் இனாம்தார் நிலங்கள் ஆகும். ஜமீன் நிலங்களைப் பறிமுதல் செய்த ஆட்சி களால், இனாம்களின் நிலங்களை நெருங்கக்கூட முடியவில்லை.

அதேபோல, பார்ப்பனர்களின் சங்கர மடங்கள் மற்றும் தஞ்சை, திருவாரூர் பகுதிகளில் உள்ள சைவ ஆதீன மடங்களுக்குச் சொந்தமான நிலங்களை அரசு கையகப்படுத்த வேண்டும். மடங்களின் நிலங்களை அரசுடமையாக்க வேண்டும் என்று நீதிக்கட்சி காலத்திலிருந்து தோழர் அண்ணா காலம் வரை பெரியார் போராடினார். இன்றுவரை பார்ப்பன மற்றும் ஆதின மடங்களின் நிலங்களில் ஒரு அடியைக்கூட கையகப்படுத்த முடியவில்லை.

நிலக்கொள்ளையில் உலகவங்கிப் பார்ப்பனர்கள்

நிலம் கையகப்படுத்தும் சட்டத்திருத்தத் திற்குப் பின்னால் மட்டுமல்ல; இந்தியாவில் தற்போது நடைபெற்றுவரும் அனைத்துப் பொருளாதார சீர்திருத்தங்களுக்கும் பின்னணியில் இந்தியாவின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியம், ரிசர்வ் வங்கியின் முன்னாள் தலைவர் ரகுராம் ராஜன், இந்நாள் தலைவர் உர்ஜித் படேல் ஆகியோர் ஆவர். ரகுராம் ராஜன் கடந்த காங்கிரசு ஆட்சிக்காலத்தில் தலைமைப் பொருளாதார ஆலோசகராகப் பணியாற்றினார். படேலைத் தவிர இருவரும் பார்ப்பனர்கள். இவர்கள் மூவருமே உலக வங்கியில் பணியாற்றியவர்கள். ரகுராம் ராஜனுக்கு முன்பு 2012 ஜூலைவரை இந்தியாவின் முதன்மைப் பொருளாதார ஆலோசகராகப் பணியாற்றியவர் கெளசிக் பாசு. அவரும் பார்ப்பனர்தான்.  

இந்த வகை நிலக்கொள்ளைக்கும், நிலக் குவியலுக்கு எதிராக நிலப்பகிர்வைப் பேசும் கம்யூனிஸ்ட்டுகள் ஆண்ட மேற்கு வங்கத்தில் 2006 ஆம் ஆண்டு சிங்கூர் என்ற பகுதியில் 1000 ஏக்கர் நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, டாடா கம்பெனிக்குப் பரிமாறப்பட்டன. 2007 ஆம் ஆண்டு மார்ச் 14 இல், நந்திகிராம் என்ற பகுதியில் 28,000 ஏக்கர் நிலங்கள் நிலப்பிரபுக்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு...... பன்னாட்டுக் கம்பெனி களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதை எதிர்த்து நிலத்தின் அதிகாரத்தை நிலைநிறுத்த முயன்ற ஆயிரக்கணக்கான நில உடமையாளர்களில் 14 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். 300 க்கு ம் மேற்பட்டோர் குண்டுக் காயங்களைப் பெற்றனர்.

‘நிலம் தான் அதிகாரம்’ என்றுகூறி சுமார் 28 இலட்சம் ஏழை, எளிய மக்களுக்கு நிலத்தைப் பகிர்ந்தளித்து, அவர்களை அதிகாரம்(?) பெற்றவர் களாக மாற்றிய பொதுவுடைமைவாதி களின் அரசே - அவர்களது அதிகாரத்தைப் பறிக்கவும் செய்தது. அங்கே நிலத்தை ஏழைகளுக்குப் பகிர்ந்தளித்த தோழர் ஜோதிபாசு அவர்களும், பறிமுதல் செய்த தோழர் புத்ததேவ் பட்டாச்சார்யா அவர்களும் இந்திய அதிகார வர்க்கமான பார்ப்பன இனத்தைச் சேர்ந்தவர்கள்தான். கம்யூனிஸ்ட் ஆட்சியில் பறி முதல் செய்யப்பட்ட நிலங்கள் மீண்டும் 2016 இல் மக்களுக்குத் திரும்ப ஒப்படைக்கப்பட்டன. அப்படி ஒப்படைத்தவர் திர்ணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரான பார்ப்பனரான மம்தா பானர்ஜி ஆவார்.

இந்தியாவில் ‘சமூக அதிகாரம்’ என்பது பார்ப்பனர்களிடம் உள்ளது. இந்தியாவின் அதிகார வர்க்கம் என்பவர்கள் பார்ப்பனர்களே. இங்கு ஆளும் வர்க்கம் மாறலாம். காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பா.ஜ.க, கூட்டணிகளின் ஆட்சி என எவை வேண்டு மானாலும் இந்தியாவை ஆளலாம். ஆனால், அந்தந்த ஆட்சிகளின் ‘அதிகாரம்’ பார்ப்பனர் களிடம் மட்டுமே உள்ளன. பன்னாட்டு நிறுவனங் களோ, பனியாக்களோ, கம்யூனிஸ்ட்டுகளோ, நிலம் உள்ளவர்களோ - இல்லாதவர்களோ, யாராக இருந்தாலும் அவர்களுக்குக் கட்டுப்பட்டே இயங்க முடியும். இங்கு நிலம் அதிகாரம் அல்ல; பூணுாலே அதிகாரம்.

மேலே சொன்ன விவசாய நிலங்களுக்கும், அந்த விவசாய நிலங்களை வைத்திருப்பவர் களிடமும் தான் அதிகாரம் இருக்கிறது என்று யாராவது உறுதி செய்தால், அதை வரவேற்று, அப்படிப்பட்ட நில உரிமை தாழ்த்தப்பட்டவர் களுக்கு அவசியம் வேண்டும் என்பதில் நமக்கு எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை.  

நிலம் எங்கள் உரிமை

“நிலம் எங்கள் உரிமை” என்று ஒரு முழக்கம் காலாவில் முக்கியமாக முழங்கப்படுகிறது. ஆதிக்க ஜாதிகள் என்று கூறப்படுபவர்களின் நிலங்களே அவர்களுக்கு அதிகாரங்களைக் கொடுக்கவில்லை எனும் போது, இந்து சமுதாயத்தில் அவர்களுக்கும் அடுத்து அழுத்தி வைக்கப்பட்டிருக்கும் பட்டியலின மக்களின் நிலங்களுக்கு என்ன அதிகாரம் வந்துவிடப் போகிறது?

சரி, அதிகாரம்கூட வேண்டாம். “நிலம் உனக்கு அதிகாரம்; எனக்கு வாழ்க்கை” என்கிறார் காலா. அதன்படி, வாழ்வாதாரத்திற்காகவாவது இந்த முழக்கம் பயன்படும் என்று பார்த்தாலும், ‘காலா’ வில் கேட்கப்படும் நிலம் எது?

பார்ப்பனர்களாலும், பார்ப்பன அடிமைகளான நமது சேர, சோழ. பாண்டியர்களாலும் பறிக்கப்பட்ட பிரம்மதேயங்கள் - சதுர்வேதி மங்கலங்கள்- பட்டவிருத்திகள் - இறையிலி நிலங்கள் - இனாம்தார் நிலங்களா? இந்து உயர்ஜாதியினரான ஜமீன்தார்களால் கைப்பற்றப்பட்ட நிலங்களா? ஆங்கிலேய அரசும், நீதிக்கட்சி அரசும் பட்டியலின மக்களுக்கு வழங்கிய ஏறத்தாழ 12 இலட்சம் ஏக்கர் நிலங்கள் ஆதிக்க ஜாதிகளாலும், பிற்படுத்தப்பட்ட இடைநிலை ஜாதிகளாலும் அராஜகமாகவும், ஏமாற்றியும் கைப்பற்றப் பட்டுள்ளன. அந்தப் பஞ்சமி நிலங்களை மீட்கக்கூறுகிறாரா காலா? என்றால், காலா காட்டும் நிலம் ‘சேரி’ வாழ்விடமாக இருக்கிறது.

இந்தியப் பகுதியில், ஜமீன்கள் தோன்றிய போதும், பிரிட்டிஷ் அரசு ரயத்வாரி முறையைக் கொண்டுவந்த போதும், நில உரிமை  யார் யாருக்குக் கிடைத்தது என்பதைப் பார்த்தால், இந்து மதத்தின் ஜாதிப் படிநிலையின் அடிப்படையிலேயே நில உரிமை கிடைத்துள்ளது. இந்தியா என்ற நாடு தோன்றுவதற்கு முன்பும் பின்பும், இந்தியாவில் அரசியல் என்பது தோன்றுவதற்கு முன்பும் பின்பும், இந்து மதம் கூறியுள்ள ஜாதி அடுக்கின்படிதான் நிலமும், மற்ற அனைத்து அரசியல், பொருளாதார உரிமைகளும், வாய்ப்புகளும் கிடைத்துள்ளன.

பார்ப்பனர்கள் தான் இங்கு சமூக அதிகாரம் பெற்றவர்கள். அந்தச் சமூக அதிகாரத்தை அவர்கள் பெற்றதற்கும் அதைத் தக்கவைத்துக்கொள்வதற்கும் அடிப்படைக் காரணம் இந்துமதம். அந்த இந்து மதத்தை இன்றுவரை காப்பாற்றுபவை, வேதங் களும், சாஸ்திரங்களும் அவை உருவாக்கிய வாழ்வியல் முறைகளுமே ஆகும். அந்த ஜாதிய வாழ்வியல் முறையில் முதன்மையான இடம் வகிப்பது ‘ஊர் - சேரி’ எனப் பிரிக்கப்பட்டுள்ள இரட்டை வாழ்விடம்.

ஊர் - சேரிப் பிரிவினையின் இழிவுகுறித்து, 2017 ஆம் ஆண்டு, நீட் மருத்துவ தேர்வால் வீரமரணமடைந்த டாக்டர் அனிதா அவர்களின் வீரவணக்க விழாவில் விளக்கமாகப் பேசியுள்ளார் தோழர் இரஞ்சித். எனவே, அதைப் படக்குழுவினருக்கு விளக்க வேண்டியதில்லை. ஆனால், தோழர் இரஞ்சித்திற்கு ஆதரவு என்ற பெயரில் தோன்றியுள்ள சில சில புதிய கருப்பு, சிவப்பு, நீலத் தோழர்களுக்காகப் பெரியார், அம்பேத்கரின் கருத்துக்களைக் கூற வேண்டி யுள்ளது.

கிராம அமைப்பு தகர்க்கப்பட வேண்டும்

தோழர் அம்பேத்கர் 1942 இல் ஊர் -சேரி என்ற பிரிவினைக்கு எதிராகவும், நில உரிமைகளுக் காகவும் “கிராம அமைப்பே தகர்க்கப்பட வேண்டும்” என்றார்.

“பல்லாயிரம் ஆண்டுகளாக இந்தத் தீண்டத்தகாதோர் ஏன் இந்துக்களின் அடிமைகளாய், பண்ணை யாட்களாய் இருக்கிறார்கள். இந்தியா முழுவதுமாக ஏழு லட்சம் இந்து கிராமங்களில் பரவியிருக்கிறீர்கள். ஓவ்வொரு இந்து கிராமத்தோடும் ஒட்டியதாய் தீண்டத்தகாதோர் வாழும் சிறு குடியிருப்பு இருக்கிறது. தீண்டத்தகாதோரின் குடியிருப்பில் பொருளாதாரத் திற்கான எந்த வாய்ப்பும் இல்லை. முன்னேற்றத்திற்கான எவ்வித வழிவகையும் இல்லை. அனேகமாக நிலமற்ற மக்களின் குடியிருப்பாகத்தான் அது இருக்கும்.

தங்களது வாழ்வாதாரத்திற்கு இந்து கிராமத்தைச் சார்ந்திருக்கும் வகையற்ற மக்கள் இனத்தை முழுமை யாகக் கொண்டது. அது இரந்துண்டு வாழ்கிறது. அல்லது, அற்பக் கூலிக்குத் தனது உழைப்பைக் கொடுத்து வாழ்கிறது. இந்தப் பின்னணியில், பல நூற்றாண்டுகளாய் தீண்டத்தகாத மக்கள் ஏன் இழிந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் நன்கு புரிந்து கொள்ளலாம்.

இப்போதிருக்கிற நிலையிலேயே கிராம அமைப்பு முறை தொடர்ந்திருக்கு மானால், தீண்டத்தகாதோர் தங்களது சமூக, பொருளாதார விடுதலையை எப்போதுமே அடைய மாட்டார்கள். அவர்கள் தங்களது சமூக, பொருளாதாரச் சார்புநிலை காரணமாக வளர்த்துக் கொண்ட தாழ்வு மனப்பான்மையிலிருந்து அவர்கள் விடுபடவே மாட்டார்கள். ஆகவே, இந்த கிராம அமைப்பு முறை தகர்க்கப்பட வேண்டும்.

கிராம அமைப்பு முறை மூலம் இந்துக்களின் ஆதிக்கப்பிடியில் சிக்குண்டிருக்கும் தீண்டத்தகா தோர் உண்மையிலேயே அந்த அடிமைச் சங்கிலியறுத்து விடுதலை பெற விரும்பினால், இதுதான் அவர்களுக்கான ஒரே வழி. தீண்டத் தகாதோருக்கு மட்டுமேயான புதிய, தனி கிராமங்களை அரசு செலவில் மத்திய அரசே உருவாக்கித் தருவதற்கான வழிவகைகள் அரசியல் சட்டத்தில் செய்யப்பட வேண்டும். - தோழர் அம்பேத்கர், நாக்பூரில் நடந்த அகில இந்திய தாழ்த்தப்பட்டோர் மாநாடு ஜூலை, 18, 19 - 1942 - தொகுதி 37.

தோழர் அம்பேத்கரின் கூற்றுக்குச் சற்று மாறுபட்ட வரிகளில், தோழர் பெரியார் பேசுகிறார். 1925 ஆம் ஆண்டிலிருந்தே, தாழ்த்தப்பட்டவர் களுக்குத் தனி வசிப்பிடம், தனிக்கிணறு, தனிக் கோவில் என சமுதாயத்தில் நிலவும் அனைத்துப் பிரிவினைகளையும் எதிர்க்கிறார். அனைத்து சமுதாய மக்களும் கலந்து வாழவேண்டும் என்கிறார்.

தி.மு.க ஆட்சியின் போது 1972 ஜூன் 23ம் நாள் நொய்யலில் நடைபெற்ற அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் தோழர் பெரியார் கலந்து கொண்டு பேசியது,

“இன்றைக்கு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதாகக் கூறிக்கொண்டு, அரசாங்கம் தாழ்த்தப் பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டிக் தருகின்றேன் என்று கூறி ஊருக்கு வெளியே, ஒதுக்குப் புறத்தில் வீடுகள் கட்டிக் கொடுக்கின்றார்கள். முன்பு ஊருக்கு வெளியே சேரியில் குடி இருக்கின்ற தற்கும் இதற்கும் என்ன வித்தியாசம். தாழ்த்தப்பட்ட மக்களைப் புதிய சேரியில் தனியாகக் குடி ஏற்றுவதாகத்தானே ஆகின்றது. அரசாங்கம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வீட்டு வசதி செய்து கொடுக்க வேண்டும், மற்ற மக்களோடு கலந்து வாழச் செய்ய வேண்டும்.”

அம்பேத்கர், இந்துக்களின் மனம் மாறும் என்று நம்பிக்கொண்டு காத்திருக்க வேண்டிய தில்லை. ஏற்கனவே ‘ஊர்’ என்ற அமைப்பில் இருந்து தனித்துத்தான் விடப்பட்டுள்ளோம். இன்னும் கொஞ்சம் தூரத்தை அதிகப்படுத்தினால், சுய மரியாதையோடு வாழமுடியும் என்பதால் தனி தலித்கிராமங்களைக் கோரினார். பெரியார் அனை வரும் கலந்து வாழ்ந்தால் நீண்டகாலத்திற்குப் பிறகாவது ஒரே மக்களாக வாய்ப்புண்டு எனக் கருதினார். இரு தலைவர்களுமே தாழ்த்தப் பட்டவர்களின் ‘மானத்தோடு கூடிய” வாழ்வைப் பற்றியே சிந்தித்துள்ளனர். அம்பேத்கர், “கிராம அமைப்பு தகர்க்கப்பட வேண்டும்” என்றார். பெரியார், “கிராமங்கள் ஒழிய வேண்டும்” என்றார். இரண்டு பேருமே சேரியை விட்டு வெளியேற வேண்டும் என்பதில் உறுதியாக நிற்கின்றனர்.

பெரியார் நினைவு சமத்துவபுரங்கள்

கிராமங்களில் இருக்கும் சேரிகளுக்கும், பெருநகரங்களில் இருக்கும் சேரிகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இரண்டு இடங்களிலும், ஒரே இழிவுதான், அடிமைப்பணிகள் தான். இருவகைச் சேரிகளில் இருந்தும் நாம் வெளியேறினால், நமக்கு எந்த நட்டமும் இல்லை. கிராம - நகரங்களில் வாழும் பார்ப்பன - இடைநிலை ஜாதிகளுக்குத்தான், அடிமைப்பணிகளுக்கு ஆட்கள் இல்லை என்ற சிக்கல் வரும்.

சேரிகளைக் காலி செய்தால், வாழ்வாதாரங் களுக்கு என்ன செய்வோம்? என்ற கேள்வி எழும். அம்பேத்கரும், பெரியாரும் வயிற்றுப்பிழைப்புக்கு வழி சொல்பவர்கள் அல்ல. மானமும், அறிவும் இணைந்த சுயமரியாதை வாழ்வுக்கு வழிகாட்டு பவர்கள். அதனால் தான், கிராமங்களில் கிடைத்த அடிமைப்பணிகளால் பிழைக்கும் பிழைப்பே வேண்டாம். விட்டு வெளியேறுங்கள். கிராமங்களே அழியட்டும் என்றார்கள்.

கிராமங்களை விட்டு வெளியேறி நகரங் களுக்கு வந்தாலும் அங்கும் சேரிப் பிழைப்புதான் என்றால், அதையும் மறுக்க வேண்டும். அனைவரும் கலந்து வாழும் வகையில் அரசே புதிய குடியிருப்புக்களைக் கட்டித்தர வேண்டும் என்றார் பெரியார். பெரியாரும், அம்பேத்கரும் சேரிகளைப் பற்றிப் பேசியவைகளை அப்படிவே இணைத்துப் பாருங்கள். அப்படி இணைத்துப் பார்த்து உருவானதுதான் கலைஞரின் ஆட்சியில் தோன்றிய ‘பெரியார் நினைவு சமத்துவபுரங்கள்’.

காலா அப்படித்தான் பேசியிருக்க வேண்டும். தாராவி அழியட்டும். அதற்குப் பதிலாக, ‘மட்டுங்கா’ பகுதியில் எங்களுக்கு நிலம் வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருக்க வேண்டும். மட்டுங்காவில் அனைத்து சமுதாய மக்களும் கலந்து வாழ்வோம் என்பதை முழக்கமாக வைத்திருக்க வேண்டும்.  

சென்னை கண்ணகி நகரில் குடிசைகளை அப்புறப்படுத்தினால், மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் அருகே இடம் ஒதுக்கக் கோர வேண்டும். இது நடக்குமா? என்று கேட்கலாம். எதுவுமே நடக்காது எனும்போது, கேட்பதையாவது சரியாகக் கேட்கவேண்டும். சேரி நிலங்கள், அது கிராமமோ - நகரமோ எங்கிருந்தாலும் நமக்கு இழிவு தான்.  உரிமை அல்ல.

அடுக்குமாடிக் குடியிருப்புக்கள்

படத்தின் சில இடங்களில் சேரிக்கு மாற்றாகக் கூறப்படும் அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு எதிரான வசனங்கள் உள்ளன. தலித்துகளுக்காகவே கட்டப்படும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் வசதிக் குறைவாக உள்ளன என்பது உண்மைதான். ஆனால் அந்தக் கலாச்சாரமே தவறு என்ற ரீதியில் பேசுவது சரியல்ல. தமிழ்நாட்டிலோ, மும்பையிலோ உள்ள அனைத்து ஜாதியினரும் வசிக்கும் தனியார் அடுக்குமாடிக் குடியிருப்புக்கள் நன்றாக - வசதி யாகத்தான் உள்ளன. அதனால் தான் பார்ப்பனர் அனைவரும் பெரும்பாலும் அவற்றில் வாழ் கின்றனர். சென்னை புறநகர் சிறுசேரியில் அடுக்கு மாடி குடியிருப்பு வீடுகள் தொடர்பான விளம்பரம் ஒன்று ‘இந்து’ நாளேட்டில் (ஏப்.7, 2012) வெளி வந்துள்ளது.

அதில் “பிராமணர்களுக்கு மட்டும்” என்று பெரிய எழுத்தில் குறிப்பும் வெளியாகியுள்ளது. பார்ப்பான் நம்மை ஒதுக்கினாலும், அவை வேண்டாம் என்று நாம் ஒதுங்கினாலும் இலாபம் பார்ப்பானுக்குத் தான். மேலும் சேரியிலிருந்து வெளியேற வேண்டும் என்பது இழிவு ஒழிப்பு நடவடிக்கை. அதில் வசதி வாய்ப்புக்களைத் தேடுவது என்பது சுயமரியாதைக்கு எதிரானது. அதைக் காலா வலியுறுத்துவது சாதி ஒழிப்புக்கும் எதிரானது.

மனுசாஸ்திரத்தை ஆதரிக்கும் கருஞ்சட்டைகள்

ஊர் - சேரிப் பிரிவினைகளுக்கு எதிராக, பெரியார் திராவிடர் கழகம் கடந்த 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 முதல் 29 வரை ஜாதீய வாழ்வியல் எதிர்ப்புப் பயணத்தை நடத்தியது. அப்பயணத்தின் நோக்கம் இரட்டைவாழ்விட எதிர்ப்பு என்பதாகும். அப் பயணத்தில் முடிவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1) தமிழ்ப் பேரரசர்கள் காலத்திலிருந்து இன்றுவரை நிலைத்து இருக்கும் “ஊர் - சேரி” என்ற இரட்டை வாழ்விடங்களை - வாழ்விடத் தீண்டாமையை ஒழிக்கும் வகையிலும், “தாழ்த்தப் பட்ட சமுதாய மக்களுக்குத் தனியாக சேரி என்று இருப்பதைத் தடைசெய்யவேண்டும்”, “இனி கட்டப் போகும் தாழ்த்தப்பட்டோர் குடியிருப்புக்கள் ஊருக்கு உள்ளேயே கிடைக்கும் இடங்களில் அடுக்குமாடிக் குடியிருப்புகளாகக் கட்ட வேண்டும்” என்று 1947 ஆம் ஆண்டிலிருந்தே முழங்கிய பெரியாரின் இலட்சி யத்தைச் செயல்வடிவமாக்கும் வகையிலும், தமிழ்நாடு அரசு இனி கட்டப்போகும் புதிய தலித் குடியிருப்புக் களை ஊருக்கு உள்ளேயே பிற்படுத்தப்பட்டோர் வசிக்கும் தெருக்களிலேயே கிடைக்கும் சிறு சிறு இடங்களில் அடுக்கு மாடிக் குடியிருப்புக்களாகக் கட்டித் தரவேண்டும்.     

2) தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களில் ரியல் எஸ்டேட் தொழிலில், லே அவுட் அனுமதிக்காக ஊராட்சி அலுவலகங்களை அணுகும்போது அந்த வீட்டுமனைத் தொகுப்புகளில் தலித் மக்களுக்கு வீட்டுமனை விற்பனை செய்யக்கூடாது என்று ஊராட்சித் தலைவர்கள் வாய்மொழியாக உத்தரவிடு கின்றனர். பிற்படுத்தப்பட்ட மக்களும் அப்படிப் புதிதாக உருவாகும் வீட்டு மனைத் தொகுப்புகளில் தலித் மக்களுக்கு இடம் விற்பனை செய்யக் கூடாது என மிரட்டியும் வருகின்றனர். இதனால் தலித் மக்கள் பொருளாதாரத்தில்  உயர்ந்தாலும் சேரித் தீண்டாமை யிலிருந்து விடுபட்டு ஊரைத் தாண்டி வீட்டுமனை வாங்கக்கூட இயலாத நிலை உள்ளது.

எனவே புதிதாக உருவாக்கப்படும் வீட்டுமனைத் தொகுப்புகளில் தலித்துகளுக்கு கட்டாயம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். அவை  மொத்தமாக ஒரே பகுதிக்குள் ஒதுக்குப் புறமாக இல்லாமல், கலந்து இருக்க வேண்டும். தலித் மக்கள் இடம் வாங்கிய பிறகு மறு விற்பனை செய்தாலும் மீண்டும் ஒரு தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவருக்குத் தான் அந்த வீட்டு மனையை விற்பனைசெய்ய வேண்டும் என்ற வகையில் அரசு சட்டமியற்ற வேண்டும்.

மேற்கண்டவைதான் முதல் இரண்டு தீர்மானங்கள். இவற்றை நிறைவேற்றா விட்டால் இந்தப் பிரிவினைகளுக்கு அடிப்படையாக உள்ள மனுசாஸ்திரத்தை எரிப்பது என அறிவிக்கப்பட்டது. 2013 ஏப்ரல் 14 ஆம் நாள் திராவிடர் விடுதலைக்கழகம் மனுசாஸ்திரத்தை எரித்தது. அதற்கு முக்கியக் காரணம் ஊர் - சேரிப் பிரிவினை எதிர்ப்பு தான்.

இச்செய்தியை இங்கு குறிப்பிடுவது ஏனென்றால், காலா படத்தைப் பார்த்துவிட்டு, “சேரியில் வாழ்வது தவறல்ல,” “சேரி தான் நமது உரிமை என்று கூறுவதில் தவறல்ல”, “சேரியை விட்டு வெளியேறி விட்டால் ஜாதி ஒழிந்துவிடுமா?” “சேரியிலேயே வாழ்ந்து கொண்டு புரட்சி நடத்த முடியாதா” “பண்பாட்டு மாற்றத்தை ஏற்படுத்தனும், அப்பதான் ஜாதி ஒழியும்” “மதமாற்றம் நடக்க வேண்டும் அன்று தான் ஜாதி ஒழியும்” என்பது போன்ற விவாதங்களை - அப்பயணத்தின் வெற்றிக்கு உழைத்த தோழர்களே நடத்துகிறார்கள்.

பண்பாட்டு மாற்றம் என்பதன் முதல்படியே சேரி மற்றும் கிராம வாழ்வுகளில் இருந்து வெளியேறுவதுதான்.  மதமாற்றம் என்பதுகூட சேரி - கிராம வாழ்விலிருந்து வெளியேறினால் மட்டும் முழுமையான வெற்றி பெறும். பண்பாட்டு மாற்றமோ - மதமாற்றமோ நிகழும் வரை சேரியில் கிடந்து சாவுங்கள் என்று, சமுதாய அக்கறை உள்ளவர்கள் எவரும் பேசமாட்டார்கள். ‘சேரி’ என்பதை மட்டும் இழிநிலை என்று கூறவில்லை. பிற்படுத்தப்பட்டோர் மட்டும் வாழும் ‘ஊர்’ என்பதும், “சொந்த ஊர்” என்பதும் அதைவிட இழிவு என்கிறேன்.

இந்த இருவகை வாழ்விட இழிவுகளில் இருந்து சாதி ஒழிப்பாளர்கள் என்று தங்களைக் கருதிக் கொண்டிருக்கும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரும், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினரும் அவசியம் வெளியேற வேண்டும். கிராமங்களில் அசையாச் சொத்துக்களை வைத்திருந்தால்கூட, அவற்றைப் பரம்பரைச் சொத்து, பாட்டன் சொத்து என்பது போன்ற தயவு தாட்சண்யங்கள் எவையும் இன்றி, விற்பனை செய்துவிட்டு, தங்கள் ஜாதியினர் வாழாத பிற பகுதியில் சொத்துக்களை வாங்கிக் கொண்டு மானத்துடன் வாழ முயற்சி செய்ய வேண்டும். விற்பனை செய்யவே இயலாத நிலை உள்ளவர்கள், அந்த நிலங்களில் தாழ்த்தப்பட்டவர் களும், பிற்படுத்தப்பட்டவர்களும் கலந்து வாழ வழிசெய்ய வேண்டும்.

ஏற்கனவே, இந்த ஊர் - சேரி என்ற இரண்டு இழிவுகளிலிருந்தும் பல கருஞ்சட்டைத் தோழர்கள் வெளியேறி விட்டனர். இன்னும் ஏராளமான தோழர்கள் போராடியும் வருகிறார்கள். அவர்கள் வெளியேறுவதற்கு ஏராளமான சமுதாயத் தடைகள் உள்ளன. அந்தச் சமுதாயத் தடைகளை வெல்வதற்கு காலா வழிகாட்டி இருக்க வேண்டும். அதற்குப் பதிலாக -  அவர்களின் போராட்டத்தைத் தேவை யற்றதாக்கி விடுகிறது காலா. ‘ஊர் - சேரி’ இழிவுகளுக்கு எதிராகப் போராடியவர்களை அதே இழிவுகளுக்கு ஆதரவாகப் பேச வைத்துவிட்டது.

கபாலியைத் தொடர்ந்து, காலாவிலும் குலதெய்வப் பெருமைகள் பேசப்படுகின்றன.  குலத் தொழில் எனும் இழிவு, குலதெய்வம் எனும் இழிவு, இரட்டை வாழ்விடம் எனும் இழிவு இவை அனைத்தையும் நமது உரிமை என்ற பெயரில் நியாயப்படுத்துவது பார்ப்பானுக்கும் - இந்துப் பார்ப்பனியத்துக்கும் தான் வலிமை சேர்க்குமே ஒழிய, சாதி ஒழிப்புக்கோ, தீண்டாமை ஒழிப்புக்கோ சிறிதும் பயன்படாது. பெரியார், அம்பேத்கர் போன்ற தலைவர்களின் படங்களைக் காட்டி, அவர்களின் பாடங்களை அழிக்கிறது ‘காலா’.

முற்றிலும் வணிக ரீதியான திரைப்படம் என்ற தன்மையைக் காலா பெற்றிருந்தால், உறுதியாக நாமும் காலாவை பலமாக வரவேற்றிருப்போம். காலாவில் காட்டப்படும் நமக்கான அடை யாளங்கள் - பேசப்படும் வசனங்களின் அளவை விட, மிக மிகக் குறைவாகத் தீண்டாமை ஒழிப்புப் பற்றிப் பேசிய பல படங்களை நாம் பலமாக வரவேற்று இருக்கிறோம்.

ஆனால், “காலா திரைப்படத்தைப் பார்க்கா விட்டாலோ, எதிராக விமர்ச்சித்து விட்டாலோ, படத்தை நான் பார்த்துவிட்டேன் என்று முகநூலி லாவது அறிவிக்காவிட்டாலோ அவர்களெல்லாம் ‘ஜாதிஒழிப்பாளர்’ என்ற ‘ஜாதி’யிலிருந்து விலக்கப் பட்டவர்கள்” என்று ஒரு புதிய சட்டமே வந்து விட்டதோ என்று நினைக்குமளவுக்கு இப்படம் ஜாதி ஒழிப்புப்புரட்சிப் படமாக பரப்புரை நடத்தப் பட்டது. அதனால் தான், ‘ஜாதி ஒழிப்பாளர்’ என்ற திரளிலிருந்தும் விலகி - பெரியார், அம்பேத்கர் கருத்துக்கள் அடிப்படையில் - காலாவோடு முரண்பட வேண்டிய நிலை உருவானது.