கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

bhramins 350தமிழக அரசின் இந்து அறநிலையத் துறையால் முதன்முறையாகப் பார்ப்பனர் அல்லாத ஒருவர் கோயில் அர்ச்சகராக அமர்த்தப்பட்டுள்ளார். பிற்படுத் தப்பட்ட வகுப்பான முக்குலத்தோர் சாதியில் கட்டடத் தொழிலாளியின் மகனாகப் பிறந்த மாரிசாமி என்பவர் மதுரை தல்லாக்குளம் அய்யப்பன் கோயில் பூசாரியாக மாதம் ரூ.2800 அடிப்படை ஊதியத்தில் பணியில் அண்மையில் அமர்த்தப்பட்டுள்ளார். 2007-2008 ஆம் ஆண்டில் அறநிலையத் துறையால் ஆறு பெரிய கோயில்களில் ஆகம முறைகளில் அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்பட்ட 206 பேரில் மாரிசாமிக்கு மட்டுமே இப் போது அர்ச்சகர் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.

கடவுள் அனைவருக்கும் பொதுவானவர் என்று கூறப்படுவதால், உரிய பயிற்சி பெற்ற எந்தச் சாதி யினருக்கும் கருவறையில் கடவுளுக்கு அர்ச்சனை செய்யும் உரிமை இருத்தல் வேண்டும் என்று பெரியாரின் சுயமரியாதை இயக்கம் நெடுஞ்காலமாகக் கோரி வந்தது. அம்பேத்கர் தலைமையில் 1927இல் நடந்த மகத் போராட்ட மாநாட்டில் அனைத்துச் சாதியி னரும் அர்ச்சகராகும் வகையில் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

1970 சனவரி 26 குடியரசு நாளில் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகிட சட்டம் செய்ய வேண்டும் என்று போராட்டம் நடத்தப் போவதாகப் பெரியார் அறிவித்தார். அப்போது முதலமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதி அளித்த வாக்குறுதியை ஏற்று, பெரியார் அப்போராட்டத்தைஒத்தி வைத்தார். 1970 திசம்பர் 2 அன்று தமிழகச் சட்டமன்றத்தில் இதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டது. அச்சட்டத்தில் அர்ச்சகர் வாரிசு உரிமை ஒழிக்கப்படுவதாகவும், உரிய பயிற்சி பெற்ற அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்றும் கூறப்பட்டிருந்தது. இச்சட்டத்தை எதிர்த்துப் பார்ப்பனர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். உச்சநீதிமன்றம் அர்ச்சகர் வாரிசு உரிமை ஒழிப்பை ஏற்றது; ஆனால் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆவதற்கான சட்டப் பிரிவு செல்லாது என்று கூறியது.

கேரளத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பான ஈழவ சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் 1993இல் அர்ச்சகராக நியமிக்கப்பட்டதை எதிர்த்து ஆதித்யன் என்கிற நம்பூ திரிப் பார்ப்பான் தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றத் தின் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு 2002இல் வழங்கிய தீர்ப்பில், அர்ச்சகர்களாக நியமிக்கப்படு வோர் குறிப்பிட்ட ஒரு சாதியைச் சார்ந்தவராக இருக்க வேண்டும் என்று வற்புறுத்துவது முதன்மையான கூறாக இருக்க முடியாது என்று கூறியது.

இத்தீர்ப்பை ஆதாரமாகக் கொண்டு கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது 23.5.2006 இல் இந்துக்களில் உரிய பயிற்சியும், தகுதியும் உள்ள அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகர் ஆக்கலாம் என்று சட்டமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டது. இதன் அடிப்படையில் 206 பேருக்கு அர்ச்சகர் பயிற்சி அளிக் கப்பட்டது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதி மன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், என்.வி. இரமணா ஆகியோர் 2015 திசம்பரில் ஒரு நயவஞ்சகமான தீர்ப்பை வழங்கினர். அத்தீர்ப்பில் ஆகமப் பயிற்சி பெற்ற 206 பேரை அர்ச்சகராகப் பணியில் அமர்த்தக் கூடாது என்று கூறவில்லை. ஆனால், ஆகம முறைப்படி அர்ச்சகரை அமர்த்துவதில் சாதியோ, பிறப்போ பார்க்கக்கூடாது என்று கூறிவிட்டு, ஒரு குறிப்பிட்ட கோயிலின் ஆகம விதிப்படி எந்தப் பிரிவினர் - கோத்தி ரத்தைச் சேர்ந்தவர்கள் (Denominations) காலங் காலமாக அர்ச்சகர்களாக இருந்து வருகின்றனரோ அவர்களே அர்ச்சகர்களாக நியமிக்கப்பட வேண்டும் என்று பார்ப்பனர்களுக்கு ஆதரவாக வஞ்சகமான தீர்ப்பை வழங்கியது.

கேரள அறநிலையத் துறை 2015 திசம்பரில் வழங்கப்பட்ட - குழப்பமான - வஞ்சகமான தீர்ப்பைப் பொருட்படுத்தாமல் 6.10.2017 அன்று 62 பேருக்கு அர்ச்சகர் பணி நியமன ஆணை வழங்கியது. இதில் பார்ப்பனர் 26 பேர், பிற்படுத்தப்பட்டவர் 30 பேர், தாழ்த்தப்பட்டவர் 6 பேர் ஆவர். மேலும் கேரள அரசில் இடஒதுக்கீட்டில் பின்பற்றப்படும் உட்சாதிகளுக்கு ஏற்ப இந்தப் பணியிடங்கள் பிரித்தளிக்கப்பட்டுள்ளன.

எனவே தமிழ்நாட்டிலும் ஆகமப் பயிற்சி பெற்றவர் களில் மீதியுள்ள 205 பேர்களுக்கும் அறநிலையத் துறையின்கீழ் உள்ள கோயில்களில் அர்ச்சகர் பணி ஆணை வழங்கப்பட வேண்டும். பார்ப்பனரின் முற்றுரி மையாக உள்ள அர்ச்சகர் பணியைச் சனநாயகப்படுத் தாமல், சனநாயகத்தைப் பற்றிப் பேசுவது வெறும் பித்தலாட்டமே ஆகும்.