‘மொழி வழி மாநிலங்கள் குறித்த சிந்தனை’ எனும் நூலில் புரட்சியாளர் அம்பேத்கர் தந்த எச்சரிக்கையைக் குறிப்பிட வேண்டும். “இந்தி பேசும் பெரும்பான்மையோரை, ஒன்றாக்கிவிட்டு, தென்னாட்டு மக்களை சிதறடித்திருக்கிறது, மாநிலங்களைப் பிரிக்கும் ஆணையம், தென்னாடு, வடநாட்டு ஆதிக்கத்தை எப்படி சகித்துக் கொள்ளும்?” என்று கேட்ட அவர், வடநாட்டுக்கும் தென்னாட்டுக்கும் உள்ள முரண்பாட்டையும் கூர்மையாக படம் பிடித்துக் காட்டினார்.

ambedkar periyar“வடக்கு பிற்போக்கானது; தெற்கு முற்போக்கானது. வடக்கு மூடநம்பிக்கையில் மூழ்கிக் கிடப்பது; தெற்கு பகுத்தறிவு சிந்தனை கொண்டது. தெற்கு முன்னேறிச் செல்வது, வடக்கு பின் தங்கிக் கிடப்பது. தெற்கின் கலாச்சாரம் நவீனமானது; வடக்கின் கலாச்சாரம் பழமையானது. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் 1947 ஆக. 15இல் எப்படி பதவி ஏற்றுக் கொண்டார்? காசியிலிருந்து வந்த பார்ப்பனர்கள் யாகம் நடத்தி நாட்டை ஆளப் போகும் பிரதமரிடம், “ராஜ தண்டத்தை” அளித்து பார்ப்பனர் கையிலிருந்த புனித கங்கை நீரைக் குடித்து தானே பதவியை ஏற்றார்? இறந்த கணவனை எரியூட்டிய நெருப்பில் அண்மைக் காலங்களில் எத்தனைப் பெண்கள் உடன்கட்டை ஏற்றப்பட்டிருக்கிறார்கள்? நமது குடியரசுத் தலைவர் (இராஜேந்திர பிரசாத்) காசிக்குப் போய், பார்ப்பனர்களின் காலைக் கழுவி அந்தத் தண்ணீரை குடிக்கவில்லையா? வடக்கே இன்னும் ‘சதி’ என்னும் உடன்கட்டை ஏறுதல் நடந்து கொண்டுதானே இருக்கிறது?” என்று வடநாட்டுக்காரர்களின் மூடத்தன - பழமை - வைதிகப் போக்கைப் பட்டியலிட்டார். அதே போன்று 1949 நவம். 25 அன்று அரசியல் நிர்ணய சபையில் அரசியல் சட்ட வரைவை முன்மொழிந்து நிகழ்த்திய வரலாற்றுச் சிறப்பு மிக்க உரையில் அவன் முன் வைத்த மற்றொரு கருத்தையும் சுட்டிக்காட்ட வேண்டும்.

“இந்தியர்கள் தங்கள் மத நம்பிக்கைகளுக்கு மேலாக நாட்டை கருதப் போகிறார்களா? அல்லது நாட்டைவிட மத நம்பிக்கைக்கே முக்கியத்துவம் கொடுக்கப் போகிறார்களா? இது எனக்குத் தெரியாது. கட்சிகள் நாட்டை விட தங்கள் மதக் கோட்பாடுகளுக்கே முக்கியத்துவம் கொடுத்தால், நமது சுதந்திரத்துக்கு இரண்டாவது தடையாக ஆபத்து என்பதுடன், என்றென்றைக்குமாக நமது சுதந்திரத்தை இழப்பது என்பது நிச்சயம்.”

அம்பேத்கர் மிகச் சரியாகவே எச்சரித்த வடநாட்டு பிற்போக்குப் பார்ப்பனிய சிந்தனையும் நாட்டைப் பின்னுக்குத் தள்ளி, மதவெறியைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுகிற அதிகார வெறியும் இப்போது கை கோர்த்து கோரத்தாண்டவமாடுகிறது. இந்தச் சூழலில் பெரியார்-அம்பேத்கரிய சிந்தனைகளும் சமூக ஒடுக்குமுறைகளுக்கான ‘வேர்’ - எங்கே பதுங்கி நிற்கிறது என்று அவர்கள் வெளிச்சப்படுத்தி அதற்காக முன்னெடுத்தப் போராட்டங்களின் வரலாறும் - சமூக விடுதலைக்கான ஒளி விளக்குகளாக வழிகாட்டிக் கொண்டிருக்கின்றன. ‘பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு’ வரலாற்றுத் தேவையாக பிறப்பெடுத்திருக்கிறது என்றே கூற வேண்டும். பரந்துபட்ட மக்கள் அணியை உருவாக்கும் நோக்கத்தோடு, பெரியார் கருஞ்சட்டைப் பேரணி என்ற மாபெரும் மக்கள் கூடுகையை பெரியார் நினைவு நாளையொட்டி (2018, டிச. 23) நிகழ்த்திக் காட்டி அடுத்தக் கட்டமாக அம்பேத்கர் நினைவாக நீலச்சட்டைப் பேரணிக்கு தயாராகி வருகிறது. இது காலத்தின் அறைகூவல்!

புராண காலந்தொட்டு இந்த நாட்டில் நடப்பது ஆரிய திராவிடப் போராட்டம்தான் என்று பெரியார் கூறினார் என்றால், அம்பேத்கர் - பவுத்தத்திற்கும் பார்ப்பனியத்துக்குமிடையே நடக்கும் போராட்டம் தான் இந்திய வரலாறு என்றார். பார்ப்பனர்களின் சமூக - அரசியல் ஒடுக்குமுறைகளால் ‘சூத்திரர்’, ‘பஞ்சமர்’ நிலைக்குத் தள்ளப்பட்ட மக்களின் சுயமரியாதைக்காகப் போராடிய பெரியார், பாதிக்கப்பட்ட ஒவ்வொரு சமூகப் பிரிவினருக்கும் நீதி கேட்டு காங்கிரசுக்குள்ளும் காங்கிரசிலிருந்து வெளியேறியும் போராடினார். அவர் பேசிய ‘வகுப்புவாரி உரிமை’யை அம்பேத்கர், ‘சமூக ஜனநாயகம்’ என்ற சொல்லாடல்களுக்கு உட்படுத்தினார். சமூக ஜனநாயகம் இல்லாமல் அரசியல் ஜனநாயகம் ஒருபோதும் வெற்றி பெற முடியாது என்று அறிவித்தார். பார்ப்பனர் - பனியாக்கள் தங்கள் மேலாதிக்கத்தை அரசியல் ரீதியாக உறுதிப்படுத்த காங்கிரசையும் காந்தியையும் கருவிகளாகப் பயன்படுத்தி முன் வைத்த ‘சுயராஜ்ய’ கோரிக்கைகளில் அழுத்தமான மாறுபாடுகள் இரண்டு தலைவர்களுக்கும் இருந்தது. ‘காலனி எதிர்ப்பு’, ‘தேச பக்தி’ என்ற எல்லைக்குள் பார்ப்பனிய-பனியா சக்திகள் சுழன்று கொண்டிருந்த நிலையில் அந்த வலைக்குள் சிக்கி விடாமல் அதிலிருந்து விலகி நின்று, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உண்மையான சமூக விடுதலைக்கு களம் அமைப்பதில் இரண்டு தலைவர்களின் சிந்தனைகளும் ஒரே தடத்தில் பயணித்தன. இந்த ஒருமித்த சிந்தனை, அவர்கள் ஒருவரையொருவர் சந்திக்காத நிலையிலேயே காந்த சக்தியாக அவர்களை பிணைக்க வைத்தது.

1919ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் ஆட்சி இந்திய குடிமக்களுக்கு வாக்குரிமை வழங்குவது குறித்து பரிசீலிக்க நியமித்த சவுத்பரோ குழுவிடம் அம்பேத்கர் அளித்த சாட்சியம் தான் அவரது பொது வாழ்வின் தீவிரமான தொடக்கம். அந்த சாட்சியத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் அவலங்களையும் பறிக்கப்படும் உரிமைகளையும் விளக்கினார். அடுத்து பம்பாய் அருகே ஜல்கவோன் என்ற இடத்தில் நடந்த - தாழ்த்தப்பட்டோர் மாநாட்டில் (29.5.1929) அம்பேத்கர் நிகழ்த்திய உரையை பெரியாரின் ‘குடிஅரசு’, ‘பம்பாயில் சுயமரியாதை முழக்கம்’ எனும் தலைப்பில் வெளியிட்டது (குடிஅரசு 16.6.1929).

‘சமாஜ சமரா சங்’ (சமுதாய சமத்துவ சங்கம்) என்ற பெயரில், அம்பேத்கர் தொடங்கிய அமைப்பு சார்பாக மராட்டியத்திலுள்ள ‘சிட்ட கெய்ன்’ என்ற பகுதியில் நடந்த முதல் மாநாட்டில் அம்பேத்கர் நிகழ்த்திய தலைமை உரையை வெளியிட்ட ‘குடிஅரசு’, ‘முதல் மகாராஷ்டிரா சுயமரியாதை மாநாடு’ என்ற தலைப்பிட்டது. இதே ஆண்டில் தொடக்கத்தில்தான் (1929, பிப். 17, 18) பெரியார் சென்னை மாகாண முதல் சுயமரியாதை மாநாட்டை நடத்தினார். தான் நடத்திய சுயமரியாதை மாநாட்டுக்கு இணையாக அம்பேத்கர் நடத்திய தாழ்த்தப்பட்டோர் மாநாட்டை பெரியார் கருதினார். அம்பேத்கர் நடத்திய அந்த முதல் மாநாட்டுக்கு பெரியார் வாழ்த்துச் செய்தியை அனுப்பியிருக்கிறார். “தென்னிந்திய சுயமரியாதை இயக்கத்தின் பிரபல தலைவர் ஈ.வெ.ராமசாமி அனுப்பிய வாழ்த்துத் தந்தியும் கடிதமும் அங்கு படிக்கப்பட்டன” என்ற செய்திக் குறிப்பு, பெரியார் நடத்திய ஆங்கில இதழான ‘ரிவோல்ட்டில்’ பதிவாகியிருக்கிறது (ரிவோல்ட், 29.9.1929).

அம்பேத்கரின் ஒவ்வொரு செயல் பாட்டையும் பெரியார் உன்னிப்பாகக் கவனித்து வந்திருக்கிறார். புனே நகரில் அம்பேத்கர் நடத்திய ஆலய நுழைவுப் போராட்டம், இலண்டன் வட்ட மேஜை மாநாட்டில் காந்திக்கும் அம்பேத்கருக்கும் இடையே எழுந்த வாதங்கள், காந்தியாரின் பட்டினிப் போராட்டத்தைக் கண்டிக்கும் கட்டுரைகள் என்று ‘குடிஅரசு’ தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வந்தது. அம்பேத்கரும் பெரியாரும் ஒருவரையொருவர் சந்திக்காத நிலையிலேயே அவர்களுக்கிடையே இலட்சியப் பிணைப்பின் வழியாக அறிமுகம் இருந்திருக்கிறது.

1936-37ஆம் ஆண்டுகளில் உ.பி.யில் லாகூரில் ‘ஜாத்பட் தோடக் மண்டல்’ நடத்திய ஜாதி எதிர்ப்பு மாநாட்டில் தலைமையுரை நிகழ்த்த அம்பேத்கர் அழைக்கப்பட்டார். மாநாட்டுக்காக அம்பேத்கர் தயாரித்த உரையில் சில பகுதிகளை நீக்க வேண்டும் என்று மாநாட்டு பொறுப் பாளர்கள் முன் வைத்த நிபந்தனையை அம்பேத்கர் ஏற்க மறுத்தார். “இந்து மதத்தை முற்றாக ஒழிப்பது பற்றிக் கூறுவதும், இந்துக்களின் ‘புனித’ நூல்களின் அறத்தன்மையை சந்தேகிப்பதும் இந்து சமூகத்திலிருந்து வெளியேறும் உங்கள் எண்ணத்தை வெளிப்படுத்துவதுமான பகுதிகளை நீக்க வேண்டும்” என்பதே மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் அம்பேத்கருக்கு விதித்த நிபந்தனை. அந்த ஆங்கில உரையை பெரியாரின் ‘குடிஅரசு’ தமிழில் மொழி பெயர்த்து ஓராண்டு காலம் தொடர் கட்டுரையாக வெளியிட்டது.

தகவல் தொடர்புகள் இப்போது போல் அக்காலத்தில் இல்லை. அந்த நிலையில் அம்பேத்கர் குறித்து தமிழ்ச் சமூகத்துக்கு அறிமுகம் செய்த பெருமை பெரியார் இயக்கத்துக்கு உண்டு. அம்பேத்கரை உரையாற்ற அழைத்திருந்த ‘ஜாத் பட்தோடக் மண்டல்’ அமைப்பில் 1920ஆம் ஆண்டுகளில் துணைத் தலைவராக இருந்தவர் பெரியார். அப்போதும் பெரியாரை நாத்திகர், இந்து விரோதி, பார்ப்பன எதிர்ப்பாளர் என்று தென்னாட்டுப் பார்ப்பனர்கள் கூறிய புகாரின் அடிப்படையில் பெரியார் துணைத் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அதே அமைப்புதான் 1936இல் அம்பேத்கரை ஜாதி எதிர்ப்பு மாநாட்டுக்கு தலைமை ஏற்க அழைத்து, அவரது உரையை மாற்றியமைக்க வற்புறுத்தி அம்பேத்கர் மறுத்த நிலையில் மாநாட்டையே நிறுத்தியது. குடிஅரசில் வெளியிட்ட அம்பேத்கர் உரையை ‘ஜாதியை ஒழிக்கும் வழி’ என்ற தலைப்பில் 4 அணா விலையில் நூலாக வெளியிட்டார் பெரியார்.

அம்பேத்கரின் உரை குறித்து காந்தியும் தனது ‘அரிஜன்’ நாளேட்டில் விமர்சித்து எழுதினார். அம்பேத்கர் எழுப்பிய வாதங்களுக்கு எந்த பதிலும் கூறாத காந்தி, “ஒரு மதத்தை அதன் மோசமான உதாரணங்களைக் கொண்டு மதிப்பிடக் கூடாது. அது உருவாக்கிய மிகச் சிறந்த உதாரணங்களைக் கொண்டே மதிப்பிட வேண்டும்” என்பதே காந்தியாரின் பதிலாக இருந்தது. வர்ணாஸ்ரம அமைப்பை நியாயப் படுத்திய காந்தி, “மற்ற எந்த வருணத்தையும்விட தங்கள் வருணமே உயர்ந்த அந்தஸ்து கொண்ட வர்ணம் என்று எந்த வர்ணத்தாரும் உரிமை கொண்டாடுதல் கூடாது” என்றார். ‘பிராமணர்’ பற்றிய புரிதல் இன்மையால் காந்தி கொண்டிருந்த இந்த தவறான பார்வையை பெரியாரே நேருக்கு நேராக காந்தியிடம் பெங்களூரில் நடந்த விவாதத்தில் எடுத்துக் காட்டியதோடு நீங்கள் இந்து மதத்தை சீர்திருத்தம் செய்ய முயன்றால் பார்ப்பனர்கள் உங்களை விட்டு வைக்க மாட்டார்கள் என்று எச்சரித்தார். அதுதான் நடந்தது. பார்ப்பனியமே காந்தியின் உயிரை ‘கோட்சே’ உருவத்தில் பறித்தது.

லாகூர் மாநாட்டுக்காக அம்பேத்கர் தயாரித்த உரை. சாதி அமைப்பின் இயங்கியலை மிகத் துல்லியமாக படம் பிடித்த ஆழமான சமூக ஆவணம். உதாரணத்துக்கு சிலவற்றைக் கோடிட்டுக் காட்டலாம்.

  • தங்கள் சமூக அந்தஸ்தைச் செயல்படுத்தும் வல்லமை பெற்றவர்களும், தங்களைவிடத் தாழ்ந்த நிலையில் இருந்தவர்கள் மீது அந்த அமைப்பைத் திணிக்கும் அதிகாரம் பெற்றவர்களுமான வக்கிர மனம் படைத்த இந்துக்களின் ஆணவத்தையும் சுயநலத்தை யுமே சாதி அமைப்பு அடிப்படையாகக் கொண்டுள்ளது என்று ஜாதி அமைப்பை படம் பிடிக்கிறார்.
  • இந்து என்ற பெயர் எப்படி வந்தது என்பதை ஆராய்கிறார். “சுதேசிகளிட மிருந்து தன்னை இனம் பிரித்துக் காட்ட முகம்மதியர்களால் ‘இந்து’ என்ற பெயர் தரப்பட்டது. முகமதியரின் படை யெடுப்புக்கு முந்தைய எந்த சமஸ்கிருதத் திலும் இந்து என்ற சொல்லே காணப்பட வில்லை. இந்துக்களுக்கு தாங்கள் பொது வானதொரு சமூகம் என்ற சிந்தனையே இல்லாத காரணத்தால், தங்களுக்கு பொதுவான பெயர் தேவை என்பதை அவர்கள் உணர்ந்திருக்கவில்லை” என்கிறார்.

“இந்துக்கள் என்ற பெயர் ஏன் இல்லை என்பதற்கு சங்பரிவார்களின் தத்துவத் தந்தை கோல்வாக்கர் முன் வைக்கும் காரணத்தை அம்பேத்கரின் இந்த வாதம் அழுத்தமாக மறுக்கிறது. “நாம் அனாதிகள்; தொடக்கமே இல்லாதவர்கள்; நாம் தான் இந்த மண்ணின் மைந்தர்கள் என்ற காரணத்தால் நமக்கென்று தனிப் பெயர் சூட்டிக் கொள்ளவில்லை; நம்மைத் தவிர மற்றவர்கள் மிலேச்சர்கள்” என்பதே கோல்வாக்கர் வாதம். பொதுவான சமூகமாக ‘இந்து’ மதம் உருவாகாத காரணத்தால் தான் அவர்கள் பொதுப் பெயர் சூட்டிக் கொள்ள தேவை இல்லாத நிலை என்பது அம்பேத்கர் தரும் மறுப்பு.

  • இந்துக்களிடையே ஆயிரம் வேற்றுமைகள் இருந்தாலும் பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள், சிந்தனைகள் ஆகியவற்றில் இந்துக்களிடையே ஒற்றுமை நிலவுகிறது என்றும், இந்த ஒற்றமையே இந்துக்களின் வாழ்க்கையை அடையாளம் காட்டுவதாக இருக்கிறது என்றும் ‘இந்து’க்கள் தரப்பில் முன் வைக்கப்படும் வாதத்தை தகர்த்து எறிகிறார் அம்பேத்கர். பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள், சிந்தனைகளிடையே ஒற்றுமை இருப்பதாலேயே ஒரே சமூகமாகி விட முடியாது. மனிதர்கள் கலந்து உறவாடுவதே ஒரு சமூகத்திற்கான அடிப்படைக் காரணி. இந்துக்கள் கொண்டாடும் விழாக்கள் ஒரே மாதிரியாக இருந்தும், ஒவ்வொரு ஜாதியும் அதை ஏன் தனித்தனியாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது? என்ற கேள்வியை எழுப்பும் அம்பேத்கர், சமூகவியலாளர்கள் கூறும் குழு உணர்வு இந்துக்களிடம் இல்லாததால்தான், இந்துக்கள் ஒரு சமூகமாகவோ தேசமாகவோ உருவாக முடியவில்லை என்கிறார். பொதுவான பிரச்சினைகளை பரிமாறிக் கொள்வதே ஒரு சமூகத்துக்கான அடையாளம். ஒரே நம்பிக்கை, பழக்க வழக்கங்கள் இருந்தால் மட்டும் சமூகமாகி விட முடியாது என்கிறார், அம்பேத்கர்.
  • முகமதியர்களும் கிறித்தவர்களும் மிரட்டி கட்டாயப்படுத்தி இந்துக்களை மதமாற்றம் செய்தார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு அம்பேத்கர் முன் வைக்கும் எதிர் கேள்வி மிகவும் வலிமையானது. மோட்சம் போக வேண்டுமானால் அதற்கு எதைச் செய்ய வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோமோ, அதையே மற்றவர்களும் செய்ய வேண்டும் என்று பார்ப்பனர்கள் கூறுவது மிரட்டல் அல்லவா? தான் கற்ற கல்வியை மற்றவர்கள் பெற்று விடக் கூடாது என்று மறைத்தது யார்? அறிவையும் பாரம்பர்ய பெருமை களையும் தனது வளர்ச்சிக்கு மட்டுமே உரியதாக்கி, மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள மறுத்தார்களே அதற்குப் பெயர் என்ன? இதைவிடக் குரூரத்தையா, முகமதி யர்களும், கிறித்தவர்களும் செய்தார்கள் என்று அம்பேத்கர் கேட்கிறார்.
  • இராமராஜ்யம் என்பது நால்வர்ண அமைப்பை அடிப்படையாகக் கொண்ட ஒரு இராஜ்யம் என்று கூறும் அம்பேத்கர், ராமன் சம்பூகனை ஏன் கொன்றான் என்பதையும் கீழ்க்கண்டவாறு விளக்கு கிறார். “சம்புகன் தன் வர்ணமாகிய சூத்திர வர்ணத்தைவிட்டு பிராமணனாக மாற விரும்புகிறான். எனவே சம்பூகனைக் கொல்வது ராமன் என்ற அந்த அரசனின் கடமையாகிறது. ராமன் சம்பூகனைக் கொன்றதற்கான காரணம் இதுதான். ஆக நால்வர்ண அமைப்பைக் கட்டிக் காக்க அவர்களுக்கு குற்றவியல் அதிகாரமும் தேவை என்பதையும் இக்கதை காட்டுகிறது” என்று சுட்டிக் காட்டுகிறார்.
  • இந்து, கிறித்தவ மதங்களில் மட்டும் ஜாதி இல்லையா? என்ற கேள்விக்கு அம்பேத்கர் அறிவார்ந்த விடையளிக்கிறார்: “ஒரு முகமதியனையோ, சீக்கியனையோ நீ யார் என்று கேளுங்கள். தனக்கு ஒரு ஜாதி இருந்த போதிலும்அவன் ஜாதியை சொல்லாமல், முகமதியன், சீக்கியன் என்றே பதில் கூறுவான். நீங்களும் அந்த பதிலில் திருப்தி அடைந்து விடுவீர்கள். நீ சன்னியா, ஷேக்கா, சையதா, சாதிக்கா, பிஞ்சாரியா என்றெல்லாம் கேட்கப் போவது இல்லை. நான் ஒரு சீக்கியன் என்று கூறியதும் நீ ஜாட்டா, ரோதாவா, மாம்பியா, ராம்தாசியா என்றெல்லாம் கேட்பதும் இல்லை. ஆனால், நான் ஒரு இந்து என்று எவராவது சொன்னால், நீங்கள் அந்த பதிலால் திருப்தியடைந்து விடுவதில்லை. அவருடைய ஜாதி என்னவென்று விவரமாகத் தெரிந்து கொள்வது அவசியம் என்று உணருகிறீர்கள். ஒரு ‘இந்து’வை பொறுத்தமட்டில் அவனுடைய ஜாதி என்ன என்பதைத் தெரிந்து கொள்ளாமல், அவன் எத்தகைய ஒரு மனிதன் என்பதை உங்களால் உறுதியாகத் தெரிந்து கொள்ள முடியாது என்கிற அளவுக்கு ஜாதி முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.
  • “ஜாதி என்பது இந்துக்கள் ஒருவரோடு ஒருவர் கலந்து விடாமல் தடுக்கிற ஒரு செங்கல் சுவரோ, முள்வேலியோ அல்ல. அப்படி இருந்தால் அதைத் தகர்த்து விடலாம்” என்று கூறும் அம்பேத்கர், “ஜாதி என்பது ஒரு கண்ணோட்டம்; ஒரு மனநிலை; ஜாதியைத் தகர்ப்பது என்றால், இந்துக்களின் மனநிலையில் ஒரு மாறுதல் உண்டாக்க வேண்டும்” என்கிறார். ஜாதியை அழித்தொழிக்கும் உண்மையான வழிமுறை எது என்ற கேள்விக்கு அம்பேத்கர் தரும் பதில் மிகவும் முக்கியமானது. “ஜாதிகளின் மதமான இந்து மதத்தை மக்களுக்குக் கற்றுத் தந்திருக்கிற சாஸ்திரங்களே உங்களின் பயங்கர எதிரி....... சாஸ்திரங்கள் புனிதமானவை என்ற நம்பிக்கையை அழித் தொழிப்பதோடு, புத்தரும் குருநானக்கும் செய்ததுபோல் சாஸ்திரங்களின் அதிகாரத்தை மறுக்க வேண்டும் என்று, அம்பேத்கர் அழுத்தமாகக் குறிப்பிடுகிறார். இன்னும் ஒரு படி மேலே சென்று, “ஜாதியை விட்டொழித்து விடும்படி மக்களைக் கேட்டுக் கொள்வது, மக்களின் மத நம்பிக்கைகளுக்கு முற்றிலும் மாறுபட்டு நடந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்வதே ஆகும்” என்று, இந்து மத எதிர்ப்பே ஜாதி எதிர்ப்புக்கான அடித்தளம் என்று அறுதியிட்டு பறைசாற்றுகிறார்.
  • “அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும்” என்ற உரிமைக்காக பெரியார் வாழ்நாள் இறுதி வரை போராடினார். இதில் ஜாதி ஒழிப்புக்கான ‘உயிர்நாடி’ இருக்கிறது என்பதை, ஆழமாக பரிசீலிக் காமல், அர்ச்சகர் ஆகி என்ன பயன்? என்ற மேம்போக்கான கேள்வியை எழுப்புகிறவர் களும் உண்டு. இதற்கு அம்பேத்கரே லாகூர் உரையில் பதில் அளிப்பது போல் பேசியிருக்கிறார்: “புரோகிதத் தொழில் எல்லோருக்கும் பொதுவான ஒன்று என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும். இந்த நடவடிக்கை, பார்ப்பனியத்தை ஒழிக்கவும், பார்ப்பனியத்தின் மறு வடிவமான ஜாதியை ஒழிக்கவும் துணை புரியும். இந்து மதத்தை நாசப்படுத்துகிற கொடிய நஞ்சு பார்ப்பனியமே” என்பதே அம்பேத்கர் தந்த பதிலாகும்.

................

1929ஆம் ஆண்டிலிருந்தே பெரியார்-அம்பேத்கர் கொள்கை உறவு தொடங்கி விட்டாலும் 10 ஆண்டுகள் கழித்து 1940இல் தான் அவர்களுக்கிடையிலான முதல் சந்திப்பு நடந்தது. இது இரண்டாம் உலகப் போர் தொடங்கிய காலம். அதைப் பயன்படுத்தி பிரிட்டிஷாரிட மிருந்து முழு அரசியல் அதிகாரத்தையும் தங்கள் வசமாக்க காங்கிரசார் முயற்சித்த நேரத்தில் பம்பாயில் பெரியார்-அம்பேத்கர்-ஜின்னா மூவரும் சந்தித்து காங்கிரசார் சூழ்ச்சியையும் பிரிட்டிஷாரையும் விமர்சித்து கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அதன் தமிழாக்கம் ‘குடிஅரசு’ ஏட்டில் வெளியிடப்பட்டது (29.1.1940). 1940, ஜனவரி 8ஆம் தேதி மும்பை ‘தாராவி’ பகுதியில் தமிழர் அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்த பொதுக் கூட்டத்துக்கு அம்பேத்கர் தலைமை தாங்கினார். அதில் பெரியார் உரையாற்றினார்.

1927இல் அம்பேத்கர், ‘மகத்’ பொதுக் குளத்தில் ‘தீண்டப்படாத’ மக்களைத் திரட்டி தண்ணீர் எடுக்கும் போராட்டத்தை நடத்தியபோது, 1925இல் பெரியார் வைக்கத்தில் நடத்திய சத்தியாகிரகம் தான் மகத் போராட்டத்துக்கு உந்து சக்தியாக விளங்கியது என்று, அவரால் நடத்தப்பட்ட “ஊமையர்களின் குரல்” பத்திரிகையின் தலையங்கத்தில் பதிவு செய்ததாக அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதிய தனஞ்செய்கீர் குறிப்பிடுகிறார். வைசிராயின் (பிரிட்டிஷ் நிர்வாக அதிகாரி) நிர்வாகக் குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, சென்னைக்கு வருகை தந்த அம்பேத்கர், பெரியாரை சந்தித்தார். பெரியார் கேட்கும் திராவிட நாட்டில் மகாராஷ்டிரத்தையும் வேறு சில மாகாணங்களை யும் சேர்த்துக் கொள்ளும்படி அம்பேத்கர் கூறியதாக ‘குடிஅரசு’ தலையங்கம் குறிப்பிடுகிறது (குடிஅரசு 30.4.1944). பெரியார் கேட்ட திராவிட நாட்டுக்கு அடிப்படை அடையாளமற்ற சமூகப் பார்வை என்ற புரிதல் அம்பேத்கருக்கு இருந்தது என்பதை இது உணர்த்துகிறது.

வேலூர் நகராட்சி மன்றத்தில் 28.10.1956 அன்று அம்பேத்கர் படத்தைத் திறந்த வைத்து பெரியார் நிகழ்த்திய உரையில் (‘விடுதலை’ 7.12.1956) அம்பேத்கர் பற்றிய சில முக்கிய நிகழ்வுகளை பதிவு செய்தார். “நாம் இராமாயணத்தைப் பற்றி வாயால் பேசிக் கொண்டிருக்கும்போதே, அதாவது 1932லேயே அவர் இராமாயணத்தைக் கொளுத்தினார். அந்த மாநாட்டுக்கு சிவராஜ்தான் தலைமை தாங்கினார். அவர் ஒரு தடவை சென்னைக்கு வந்திருந்தபோது (1944) கீதையைப் பற்றிப் பேசும்போது, ஒரு பைத்தியக்காரனின் உளறல் என்றே பேசினார். அப்போது சி.பி. இராமசாமி அய்யர் போன்றவர்கள் இதென்ன அக்ரமம்; வெறும் அம்பேத்கர் பேசியிருந்தால்கூடக் கவலையில்லை. ஒரு கவுன்சில் மெம்பராக (வைஸ்ராய் கவுன்சில்) இருக்கிற அம்பேத்கர், அதுவும் சென்னையில் வந்து கீதை பைத்தியக்காரனின் உளறல் என்று பேசுவது என்றால் அக்ரமம் என்றெல்லாம் கூச்சல் போட்டார்கள்.

நான் 1930இல் ஈரோட்டில் நடந்த சீர்திருத்த மாநாட்டுக்கு அம்பேத்கரை அழைத்தேன். அந்த மாநாட்டுக்கு ஆர்.கே. சண்முகம் செட்டியார் வரவேற்புரை அளித்தார். என்ன காரணத்தாலோ அம்பேத்கர் வரவில்லை. ..... நாங்கள் உலக புத்தர் மாநாட்டுக்குச் சென்றபோது அவரை பர்மாவில் சந்தித்தேன். புத்தர் மாநாட்டில் நான் பேசுவதாக ‘ப்ரோகிராமில்’ (நிகழ்ச்சி நிரல்) போட்டிருந்தார்கள். ஆனால் எனக்குச் சொல்லவில்லை. நான் போனேன். பிறகு என்னமோ வேறொருவரை பேசச் சொல்லி விட்டார்கள். அப்போது அம்பேத்கர் என்னிடம், “இன்றைக்கு கையெழுத்துப் போடு புத்த மதத்தில் சேர்ந்து விடுவோம் என்றார்” என்ற கருத்துகளைப் பதிவு செய்தார், பெரியார்.

அம்பேத்கரிடமிருந்து பெரியார் மாறுபட்ட புள்ளிகளும் உண்டு. அரசியல் வரைவுக் குழுவில் பிற்படுத்தப்பட்டோர் பிரதிநிதித்துவம் இல்லாதது; பூனா ஒப்பந்தத்தை அம்பேத்கர் ஏற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டது; காஷ்மீர் பிரச்சினையில் அம்பேத்கரின் கருத்து போன்றவற்றில் மாறுபாடுகள் இருந்தது. சுதந்திர இந்தியாவின் சட்ட அமைச்சராக அம்பேத்கர் இருந்தபோதுதான் அரசியல் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தங்களில் முதன்மையான திருத்தமாக பிற்படுத்தப்பட்டோர் என்பதற்கு சமூகக் கல்வி ரீதியாக பிற்படுத்தப் பட்டோர் என்ற வரையறை உருவாக்கப்பட்டது.

‘பொருளாதாரத்தை’ ஒரு அளவுகோலாக சேர்க்க வேண்டும் என்ற கருத்தை அம்பேத்கரும் நேருவும் ஏற்கவில்லை. பிற்படுத்தப்பட்டோர் என்பவர் களுக்கான பட்டியலைத் தயாரிப்பதற்கு அவர்களுக்கான மக்கள் தொகை விவரங்கள் அரசிடம் இல்லாத நிலையில் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் ஒன்றை உருவாக்க அரசியல் சட்டத்தில் 340ஆவது பிரிவை உருவாக்கியவர் புரட்சியாளர் அம்பேத்கர்.

அதனால்தான் மண்டல் ஆணையமே நியமிக்க முடிந்தது. பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய அரசு பதவிகளில் 27 சதவீத இடஒதுக்கீடு வந்ததற்கு வழி திறந்து விட்டதே அம்பேத்கர் தான். இந்து சீர்திருத்த மசோதா ஒன்றை உருவாக்கி, இந்துப் பெண்கள் சொத்துரிமை, குழந்தைகள் தத்தெடுக்கும் உரிமைகளை உருவாக்க நினைத்த அம்பேத்கரின் முயற்சி காங்கிரசில் இருந்த வைதிகப் பார்ப்பனர்களாலும் சங்பரிவாரங் களாலும் முறியடிக்கப்பட்ட நிலையில் அம்பேத்கர் சட்ட அமைச்சர் பதவியைத் தூக்கி எறிந்தார். தனது பதவி விலகலுக்கு அவர் எடுத்து வைத்த காரணங்களில் ‘பிற்படுத்தப்பட்டோர் ஆணைய’த்தை உருவாக்காமல் நேரு அரசு காலம் தாழ்த்திக் கொண்டிருக்கிறது என்பதும் ஒன்றாகும். அம்பேத்கர் தலித் மக்களுக்கான தலைவர் என்ற கருத்து உண்மைக்கு மாறானது என்பதற்கு இவை சான்றுகள்.

1947ஆம் ஆண்டு ஜூலையில் மாயவரத்தில் (இன்றைய மயிலாடுதுறை) நடந்த தாழ்த்தப்பட்டோர் மாநாட்டில் பெரியார் இப்படி பேசினார்.

“தோழர்களே, உங்களுக்கு உற்ற தலைவர் அம்பேத்கர் என்றும், அவரால்தான் பஞ்சமர்கள், கடையர்கள், இழிபிறப்புக் கொடுமைகள் நீங்கும் என்றும் நம்பினேன். அதனாலே உங்களுக்குத் தலைவராக ஏற்றுக் கொள்ளும்படி பிரச்சாரம் செய்தேன். நானும் தலைவர் என ஏற்றுக் கொண்டேன்” என்றார். ஆம்! பெரியாரால் தலைவராக ஏற்றுக் கொள்ளப்பட்டவர் புரட்சி யாளர் அம்பேத்கர். நீதிக் கட்சியை பெரியார் திராவிடர் கழகமாக பெயர் மாற்றி சமுதாய இயக்கம் என்ற பண்பு மாற்றத்தை பெரியார் உருவாக்கியபோது, (1944இல்) அதை விரும்பாத ஒரு சில நீதிக்கட்சித் தலைவர்கள் அப்போது அம்பேத்கரை பேச அழைத்தபோது, ‘பெரியார் தான் உங்களுக்கான தலைவர்’ என்று அவர் களிடையே இடித்துரைத்தவர் அம்பேத்கர். இரு பெரும் ஆளுமைகளும் தலைமைப் பாத்திரத்தை விட சமூக விடுதலைக்கான தத்துவப் பார்வைக்கே முன்னுரிமை தந்தார்கள் என்பதையே இந்த சம்பவங்கள் உணர்த்தி நிற்கின்றன.

கட்டுரைக்கு ஆதாரங்கள் :

‘குடிஅரசு’, ‘ரிவோல்ட்’, ஆய்வறிஞர் எஸ்.வி. ராஜதுரை கட்டுரை,அம்பேத்கரின் ‘சாதியை ஒழிக்க வழி’,‘புரட்சிப் பெரியார் முழக்கம்’.

அம்பேத்கர் நீலச்சட்டைப் பேரணி மலருக்கு எழுதிய கட்டுரை

Pin It