2010 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான இடஒதுக்கீடு குறித்த விவாதம் நடைபெற்றது, இன்றைய குடிஅரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்த் அன்று பா.ஜ.க சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். பெண்களுக்கான இட ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கு சிறப்பு உள் ஒதுக்கீடு என்ற கோரிக்கையை அன்றைய பா.ஜ.க உறுப்பினர் கோபிநாத் முண்டே வலியுறுத்திக் கொண்டிருந்தார்.

அப்போது குறுக்கிட்டு எதிர்ப்பு தெரிவித்தவர்தான் நமது முதல் குடிமகன் இராம்நாத் கோவிந்த். அதன் பிறகு, அய்.என்.எஸ். செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளிக்கும் போது,

“நாங்கள் இடஒதுக்கீடே தேவையில்லை என்கிறோம். பெண்களுக்கான இட ஒதுக்கீடு, அதில் உள் ஒதுக்கீடு என்ற கோரிக்கையை முற்றிலுமாக நிராகரிக்கின்றோம். இவர்களது கோரிக்கைகளை ஏற்கமுடியாது” - (24 ஜூன் 2017 விடுதலை)

என்று கூறினார். அதே குடிஅரசுத் தலைவர் கடந்த மார்ச் மாதம் 18 ஆம் தேதி ஒடிசா மாநிலம் பூரி மாவட்டத்தில் உள்ள ஜகன்னாதர் கோவிலுக்குத் துணைவியார் சவீதாவுடன் சென்றார். கோவில் கருவறை அருகே குடிஅரசுத் தலைவரும், அவரது துணைவியாரும் அங்கிருந்த பார்ப்பனர்களால் தடுத்துநிறுத்தப்பட்டனர். இந்தியாவின் முதல் குடிமகனாகவே இருந்தாலும், பார்ப்பனக் குடிமகனாக அவர் பிறக்கவில்லை என்பது முதல் காரணம். அடுத்து, ஒரு பெண் இனத்தைச் சேர்ந்த சவீதா அவர்கள் கோவிலுக்குள் நுழையக்கூடாது என்பது அடுத்த காரணம்.

இந்து மதத்தின் சாஸ்திர, சடங்குகளும், சம்பிரதாயங்களும், பண்பாடுகளும் பெண்களை இழிபிறவிகளாகவே வைத்துள்ளன. அதன் அடிப்படையில் பெண்கள் கருவறைக்குள் நுழைய முடியாது. அதே அடிப்படையில் தான் பாராளுமன்றங்களுக்குள்ளும் நுழைய முடியாது என்ற நிலை உருவானது. 2010 இல் இந்த சமுதாயச் சட்டங்களுக்கு ஆதரவாக, அரசியல் அவைகளின் சட்டங்களை எதிர்த்தார் குடியரசுத்தலைவர். எந்தச் சமுதாயச் சட்டங்களுக்கு ஆதரவாக நின்றாரோ, அதே இந்துச்சட்டங்கள் இன்று அவரைக் கோவிலுக்கு வெளியில் நிறுத்திவிட்டன.

பூரி கோவில் பார்ப்பனர்களின் முரட்டுத்தனமான நடவடிக்கை குறித்து பூரி மாவட்ட ஆட்சியருக்குக் குடியரசுத் தலைவர் மாளிகை கடந்த 19.03.2018 அன்று ஒரு புகார் கடிதத்தை அனுப்பியது. மூன்று மாதங்கள் கழித்து, இப்போதுதான் மாவட்ட நிர்வாகம் இந்தத் தீண்டாமை வன்கொடுமை குறித்து நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. மூன்று மாதங்கள் கழித்து கடந்த 08.06.2018 இல் தான் உச்சநீதிமன்றமும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்த நாட்டின் முப்படைகளின் தலைவரும், நாட்டின் தலைமகனுமான இராம்நாத் கோவிந்த் அவர்களுக்கே இந்த நிலை என்றால், கிராமங்களில் எந்தவிதமான அதிகாரங்களுமின்றி, இடைநிலை ஜாதிகளின் அராஜகம், பார்ப்பனப் பண்பாடுகளின் ஆதிக்கம் ஆகியவற்றால் தினந்தோறும் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு வரும் பட்டியலின மக்களின் நிலையை எண்ணிப் பாருங்கள்.

தீண்டாமை வன்கொடுமைகளுக்கு எதிரான சட்டங்கள் ஏற்கனவே முழுமையான அளவில் பயன்படுத்தப் படுவதில்லை. வன்கொடுமை வழக்குகளைப் பதிவு செய்யவே இயலாத நிலை நீண்டகாலமாக உள்ளது. இப்போது வந்துள்ள புதிய திருத்தங்கள் தீண்டாமை வன்கொடுமைத் தடுப்புச் சட்டங்களை முற்றிலும் நீர்த்துப்போகச் செய்யப்பட்டுவிட்டன.

தற்காலிக மற்றும் தற்காப்புத் தீர்வுகளுக்கு, தீண்டாமை வன்கொடுமைத் தடுப்புச்சட்டங்களை நீர்த்துப்போகச் செய்துள்ள திருத்தங்களை நீக்கி, முழுமையாக்கி, ஒன்பதாவது அட்டவணையில் இணைக்க வேண்டும். தாக்குதல் தீர்வுகளாக, இந்து மதத்தை விட்டு வெளியேறவும், அந்த மதம் உருவாக்கியுள்ள பார்ப்பனப் பண்பாடுகளை அழிக்கவும் போராடுவோம்.

Pin It