சமபந்தி விருந்து வேண்டாம்; சம்மந்தி விருந்துக்குத் தயாரா?

இனி நீங்கெல்லாம் எப்படிக் கட்சி நடத்தப் போறீங்களோ. உங்க பொழப்புல மண்ணுதான் என்றபடி வாட்ஸ் - அப்பில் வந்தார் தம்பி கார்த்தி. என்னாச்சு தம்பி நீங்கெல்லாம் திருந்திட்டீங்களா? என்றவனிடம் அதுக்கெல்லாம் சான்ஸே இல்லை, உங்க வேலையை பா.ச.க தமிழ் மாநிலத்தலைவர் தமிழிசை அக்கா செய்ய ஆரம்பிச்சுட்டாங்களே இனி நீங்க எப்படி பொழப்ப ஓட்டுவீங்க என்றான்.…

அதாவது, அமித்ஷா சொல்லிட்டாருன்னு அந்தக்கா இனி வருசத்துல 365 நாளும் தலித் வீடுகளில் தான் சாப்பிடுவேன் அப்படின்னு சொல்லிட்டு, சாப்பிட ஆரம்பிச்சுட்டாங்க, இனி உங்க பருப்பு வேகாது. அப்படின்னு தம்பி சொல்லி முடிக்கலை, எந்நேரம் பார்த்தாலும் போனை நோண்டிட்டு பருப்பு வெந்துடுச்சு வந்து சாப்பிட்டு விட்டு போடா என அம்மா சத்தம்.

உணவு முடித்து தெம்பா வந்து உட்காந்தா, மீண்டும் தம்பி கார்த்தி பதில் என்னாச்சு என்றபடி ம்….. ஏதோ அந்தம்மா அய்யரம்மா மாதிரியில்ல பேசறாங்க, பார்த்தாலே தீட்டு சொல்லப்பட்டவங்க, தொட்டால் தீட்டு அப்படின்னு சொல்லப்பட்டவங்க வீட்டில் சாப்பிடுவதில் என்ன ஆச்சரியம் என்றேன். தெரியுமே எச்.ராஜா, இல.கணேசன், கே.டி.ராகவன் இவங்க போய் சாப்பிடனுமுண்ணு சொல்ல வர்றீங்களா? என்றான் தம்பி கார்த்தி…. இதைத்தான் நீங்க எப்பவும் சொல்றீங்க….

இந்த சமபந்தி விருந்து காலமெல்லாம் மலையேறியாச்சு, அதனால் சம்மந்தி விருந்து போடச் சொல்றோம். எச்.ராஜா, இல.கணேசன், கே.டி.ராகவன் போன்ற பாசக தலைவர்கள் எல்லாம் சேரியில் சம்மந்தி விருந்து சாப்பிடச் சொல்றோம். அப்புறம் தமிழிசை அக்காவுக்கு ஒரு கோரிக்கை கொங்கு மண்டலம் பக்கம் ஒரு பழமொழி இருக்கு அதை பாலோ பண்ணச்சொல்றோம்…. அப்படி என்ன பழமொழி அது….. சம்மந்தம் செய்யாமல் கை நனைக்காதே….

கிளப்புல மப்புல திரியுற பொம்பள

‘கிளப்புல மப்புல திரியுற பொம்பள’ என்ற சங்கத் தமிழ்ப் பாடலை இயற்றி இசையமைத்த ஆம்பள மற்றும் ‘ஆம்பள’ படத்தின் இசையமைப்பாளர் ஹிப்-ஹாப் தமிழா, தன் மீசையை முறுக்கி விட்டுக் காட்டுல கழனியில திரியுற ஜல்லிகட்டு காளைகளைப் பற்றி ஒரு பாட்டுடெழுத, பொறுக்காதே இந்த பீட்டாவுக்கு கண்டனம் தெரிவிக்க, இவரும் திருப்பி மீசையை முறுக்க… மறுபடியும் முதலில் இருந்தா….. கண்ணைக் கட்டி வர….

இதுல சில பேரு மீசையை முறுக்கி விட்டு வீரத்தின் அடையாளமெனத் திரிய, நீங்க மீசையை முறுக்குங்க அல்லது முறுக்காமல் போங்க, காளையை அடக்குங்க அடக்காமல் போங்க. தமிழர் அடையாளம் தமிழர் அடையாளம் அப்படின்னு ஜல்லிகட்டை புதிதாய் தூக்கி செங்குத்தா நிறுத்த வந்தவரிடம் நம் சந்தேகமெல்லாம் தமிழா அப்படிங்கறது நீங்க வாசிச்சு வாங்கின பட்டம் அந்த ஹிப்-ஹாப் அப்படிங்கறது தொல்காப்பியத்திலா, கலித்தொகையிலா, புறநானூறிலா எதில் வருதுன்னு சொல்லுங்க ஆதி.

அடுத்த எலக்சனில் மோடித்தள்ளுபடி

ஊர் பக்கம் 30 தறிவச்சு ஓட்டுற மாமன் பாசக வில் முக்கிய புள்ளி, 2014 க்கு முன்னாடி அடிக்கடி சொல்லுவாரு, நீ வேணுமன்னா பாரு மாப்ள 2014 மே மாசம் நாங்க ஆட்சிக்கு வர்றோம் அப்புறம் நீயெல்லாம் ஆடித்தள்ளுபடியில் ஆடி காரே வாங்கலாம் அந்தளவுக்கு பொருளாதாரத்தை உயர்த்தி விடுவோம் என்பார்….

போன வாரம் ஒப்பனக்கார வீதியில அக்காவோட நடந்து வந்துட்டு இருந்தாரு. என்ன மாமா இந்தப்பக்கம் என்றதுக்கு ஆடித்தள்ளுபடி போட்டாச்சுல்ல எனறார். அட ஆடி கார் ஷோரூம் அவநாசி ரோட்டு பக்கமுல்ல இருக்கு எனச் சொல்லி முடிக்கல, அக்காவை முன்னாடி போகச்சொல்லிட்டு மெதுவாகச் சொன்னார். மோடி வந்தா ஆடித் தள்ளுபடியில் ஆடி கார் வாங்கலாமுன்னு சொன்னது என்னவோ உண்மைதான் மாப்ள. ஆனா இன்னிக்கு தறி ஓடுற ஓட்டத்துல ஆடித்தள்ளுபடியில அண்டர்வேர் தான் வாங்க முடியும் போல என்றார்.…

ஒரு யோசனை சொன்னாக் கேட்டுக்குங்க ஆடித்தள்ளுபடி முடிஞ்சதும் அடுத்த எலக்சனில் மோடித்தள்ளுபடி செய்து பாருங்க என்றபடி நடையைக் கட்டினேன்….

ஆன்மீகக்கல்வி

பெண்களுக்கெதிரான குற்றங்கள் குறைய ஆன்மீகக் கல்வி அவசியமுன்னு மத்திய மனித வள மேம்பாட்டுக் குழுத் தலைமை ஆலோசகர் இராமகோபாலன் அய்யர் சுலபமாச் சொல்லிட்டுப் போயிட்டாரு. அப்படி ஒரு ஆன்மீகக் கல்வி முறையை ஏற்படுத்தினால் அதில் என்னென்ன பாடங்கள் இருக்குமென யோசிச்சுப் பார்த்தா...

தசரத மகாராஜாவுக்கு 60,000 மனைவிகள் இருந்தது, ஆத்து மேட்டுல குளிக்கிற பெண்களிடம் சேலை திருடிய கிருஷ்ணனின் கதை, முனிவன் மனைவியிடம் வந்த இந்திரன் கதை, பார்வதியிடம் சிவன் காலை தூக்கி நடனம் ஆடிய கதை, இதையெல்லம் தாண்டி கலியுகத்தில் சங்கராச்சாரியார், தேவநாதன் போன்றோர் கதை என அப்படி இப்படி வைத்தாலும் போதும். நிச்சயமாக பெண்களுக்கெதிரான குற்றங்கள் வெளியில் குறைய நிறைய வாய்ப்புண்டு.

தமிழகத்தில் திராவிட கட்சிகள் இருக்கும் வரை இந்த மாதிரியான புனிதப் பாடத்திட்டங்களைக் கொண்டுவர முடியாது. அதனால் மத்திய அரசு இதைக் கருத்தில் கொண்டு மத்திய அரசுப் பாடத் திட்டத்தில் நிறைவேற்றினால் நல்லது எனச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அது முடியாதே…. ஸ்ம்ருதி இராணியை மனித வள மேம்பாட்டு துறையில் இருந்து தூக்கிட்டாங்களே என்றபடி வந்து நின்றார் கலைக் குழு நாரயணமூர்த்தி.

வர வர உங்களுக்குக் கண் தெரியமாட்டிங்குது. உங்களுக்கு இராமகோபாலன் அய்யர் சொன்னது ஆன்மிகக் கல்வி அல்ல ஆன்மீகக் கலவி அதை தப்பா புரிஞ்சுட்டு...……

இதே மாதிரி தப்பாவே புரிஞ்சுக்கிட்ட விசயம் இன்னென்னு இருக்கு… அன்னிக்கு வானொலியில் சேகர் நாடகம் ஓடிட்டு இருந்துச்சு மலர் மாமாவும் நானும் கேட்டுட்டு இருந்தோம். நாடகத்தில்….. ஒரு வசனம்...

இனிமேல் நீ என்னை அப்பா அப்படின்னு கூப்பிடாதே- அப்பா

சரிடா, இராமசாமி - மகன் –

கேட்டீங்களா? மாப்ள சேகரு அய்யாவை வாடா போடா அப்படின்னு கூப்பிடற மாதிரி வசனம் எழுதி இருக்கிறார். இந்தப் பார்ப்பானுக புத்தியைப் பாருங்க என்றார். அட போங்க மாமா. எப்பப் பார்த்தாலும் சேகர் மாமாவைத் தப்பாவே பேசறது உங்களுக்கு வேலையாப் போச்சு, அவரு அப்பா பேரு சோ.இராமசாமி அதை தான் அவா அப்படி சொல்றாள் நொக்கு இப்ப புரியுதா?

அது சரி போன வாரம் சரவண பவனில் தோசை ஆர்டர் செய்யனுமுன்னா கூட இந்தி தெரிந்து இருக்கணும் அப்படின்னு சொல்றாளே என்றார் மலர் மாமா. அட இதுல என்ன தப்பு சேகர் நடைமுறையைத் தான் சொல்லி இருக்காரு. ஓ... நீங்களும் அவாளுக்கு சப்போர்ட்டா? ஆமா உண்மையை யார் சொன்னாலும் கேட்டுத்தான் ஆக¹ம்….

சேகர் என்ன சொல்ல வர்றார்ன்னா இந்தி படிச்சவங்கெல்லாம் ஓட்டலில் சர்வர் வேலைக்கு தான் வர முடியும். இதைப் போய் தப்பா நெனச்சுட்டு…..

மாதொருபாகனும் செயற்கைக் கருத்தரிப்பும்

இன்னிக்கு எங்க மருத்துவமனையில என தினமும் ஏதாவது ஒரு கதையை சொல்வது என் துணைவியின் வழக்கம். அன்று சொன்ன கதை. ஒரு பெண்னுக்கு செயற்கைக் கருத்தரிப்பு செய்தார்களாம். அதாவது குழந்தை இல்லாத தம்பதிகள் பரிசோதனைக்கு வந்தால் அதில் ஆணுக்கு விந்தணுவில் உயிர் அணுக்கள் குறைவாக இருந்து பெண்ணிடம் குறை இல்லாமல் இருந்தால் பெண்ணின் கரு முட்டையை வெளியே எடுத்து அதில் ஏற்கனவே பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும் யாரோ ஒரு முகம் தெரியாத ஆணின் குறைபாடில்லாத விந்தணு ஊசி மூலம் கரு முட்டையில் செலுத்தி கரு உருவாக்கி மீண்டும் பெண்ணின் கருப்பையில் வைத்து விடுவார்கள்.

இதை மட்டுமே செய்யும் செயற்கை கருத்தரிப்பு மையங்கள் ஏராளமாக தமிழகத்தில் உள்ளன. என்ற செய்தியை பேசிக்கொண்டிருக்கும் போதே இன்னிக்கு அறிவியல் வளர்ச்சியில் இவை நடைமுறை சாத்தியமாகி இருக்கிறது. ஆனால் இச்செய்திகளை 75 ஆண்டுகளுக்கு முன்பே பேசியிருக்கிறார் பெரியார். அவர் மருத்துவரும் அல்ல, விஞ்ஞானியும் அல்ல. இவை அனைத்தும் அவர் பெண்கள் மீது இருந்த அக்கறையில் சொல்லியிருக்கிறார் எனச் சிலாகித்துக் கொண்டிருக்கும் போதே வீடு வந்தடைந்தோம்…

தொலைக்காட்சியில் அப்போது அச்செய்தி ஓடியது பொருத்தமாகவே இருந்தது. பெருமாள் முருகனின் மாதெருபாகன் நாவல் மீதான தடை நீக்கம் என்ற செய்தி அது.… குழந்தை இல்லாத ஒரு பெண் குழந்தைப் பேறுக்காக வேறு ஆணை நாடுகிறாள். அது அங்குள்ள கோவில் தேர்த் திருவிழா இருட்டில் வழக்கமாக நடப்பது என்பதாக அக்கால நடைமுறையை, தான் சேகரித்த ஆதாரங்களோடு அதே பகுதில் பிறந்து வளர்ந்த இன்னும் சொன்னால் அதே சமூகத்தைச் சேர்ந்த நாவலாசிரியர் பதிவு செய்தார்.

நாவல் வெளியாகி பல வருடங்கள் கழித்து சில அரசியல் காரணங்களுக்காக அந்நாவலின் சில பக்கங்கள் கொளுத்தபட்டது அதன் பின் நடைபெற்ற நிகழ்வுகள் எல்லாம் அனைவருக்கும் தெரிந்ததே… இன்று அறிவியல் வளர்ச்சியால் நடைபெறும் செயற்கைக் கருத்தரிப்பு ஏறக்குறைய அன்று நடைபெற்ற அந்நிகழ்வுக்கு ஒப்பானதே.…என்ன அன்று கரு முட்டையை வெளியே எடுத்து ஊசி போடுவது சாத்தியமில்லை . அதனால் நேரடியாக உடலுறவு வைத்தார்கள். அதுவும் இருட்டில் ஆடவன் யார், என்ன ஜாதி என்று கூட தெரியாமல் அது போலவே இன்றும் விந்தணு கொடுத்த ஆண் யார் என்ன ஜாதி என தெரிவதில்லை.

மாதொருபாகன் நாவல் தங்களைக் கேவலப்படுத்துவதாகச் சொல்லிக் கொள்ளும் குறிப்பிட்ட கொங்கு வேளாளர் சமுதாயப் பெண்கள் யாரும் செயற்கைக்கருத்தரிப்பு மையத்தை நோக்கிச் சென்றதில்லையா? ஏன் கொங்கு மண்டலத்தில் செயற்கைக் கருத்தரிப்பு மையங்கள் எதுவும் இல்லையா? செயற்கைக்கருத்தரிப்பு மூலம் பிறந்த குழந்தைகள் குறிப்பிட்ட அந்த ஜாதி அடையாளத்தோடு வாழ்வதில்லையா?

ஆண், பெண் சேர்க்கை என்பதே இல்லாமல் குழந்தை பெற்றுக் கொள்வது என்பது சாத்தியமான இக்காலத்தில் கூட மானுட வரலாற்றின் நீட்சியில் எப்போதோ நடைபெற்ற செயல் எங்கள் கேவலப் படுத்துகிறது எனச் சொல்லும் கொங்கு வேளாளக் கவுண்டர் சமூகத்தினர் ஏன் செயற்கைக் கருத்தரிப்பு மையங்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழவில்லை?…கற்பு எனற பெயரில் இந்துமதம் மூளையில் ஏற்றி வைத்திருக்கும் விலங்கை உடைத்தெறியும்வரை எதுவும் சாத்தியமில்லை.

மாதெருபாகன் நாவலில் சொல்லப்பட்டதுபோல அந்தப் பகுதியில் நடைபெற்றது போன்ற சம்பவங்கள் கொங்கு வேளாளக் கவுண்டர் சமூகத்தில் மட்டுமல்ல. எல்லாச் சமூகத்திலும் உண்டு… இந்தியா முழுவதுமே அனைத்து ஜாதிகளுமே கலப்பினங்களே. ஜாதி பிறப்பில் இல்லை மூளையிலேயே உள்ளது….

எழுதி முடிக்கும் முன் அடடே என்றேன்.…என்னாச்சு என்றார் என் துணைவி. கடைசியில் என்னையும் சிரியசாக எழுத வைத்து விட்டர்களே..

Pin It