periyar 234இன்று இந்திய மக்களில் பெரும்பான்மையோருடைய உணர்ச்சிகளை காங்கிரஸ் ‘தேசீயக் கிளர்ச்சி’யும் வட்ட மேஜை மகாநாட்டு “சீர்திருத்த” முயற்சியுமே கவர்ந்து கொண்டிருக்கிறது. கிளர்ச்சியில் சிறை சென்றும் அடிபட்டும் செல்வமிழந்தும் கஷ்டப்படும் மக்கள் பலர் இருக்கிறார்கள் என்பதில் ஆக்ஷபணையில்லை.

சீர்திருத்தம் அளிக்கும் முயற்சியில் சர்க்கார் பெரும் துகைகளைச் செலவு செய்து பெரும் எதிர்ப்புகளைச் சமாளித்து கமிட்டி விசாரணைகள் நடத்துவதும், வ. மே. மகா நாடுகள் கூட்டி யோசிப்பதுமான காரியங்கள் நடைபெற்று வருவதும் யாவரும் அறிந்ததாகும். என்றாலும் இவ்விரண்டினுடைய முடிவு என்ன என்பதும் அதனால் நாட்டுக்கு நன்மை என்ன என்பதும் அநேகமாக ஏற்கனவே நம்மால் முடிவு செய்யப்பட்டு விட்ட விஷயங்கள் தானே யொழிய வேறில்லை.

அதாவது கிளர்ச்சியினால் அநேகர்கள் தேச பக்தர்களாகவும், தியாகிகளாகவும் ஆகலாம். முயற்சியினால் பலருக்கு பெரிய பெரிய பட்டமும், பதவியும், உத்தியோகங்களும் கிடைக்கலாம். இதைத் தவிர நாம் எதிர் பார்க்கும் காரியம் கிடைக்குமென்று நம்புவதற்கில்லை.

சைமன் கமிட்டியார் தெரிவித்தபடியும் சர்க்கரவர்த்தியார் தெரிவித்தபடியும் இந்தியாவில், “அனாதி” காலம் தொட்டு இருந்து வரும் மேல் ஜாதி, கீழ் ஜாதி வித்தியாசக் கொடுமையும் ஆண் - பெண் உயர்வு தாழ்வு வித்தியாசக் கொடுமையும், பணக்காரன் - ஏழை வித்தியாசக் கொடுமையும், மிராசுதாரன் - உழுகின்ற குடியானவன் வித்தியாசக் கொடுமையும், பொதுவில் மதக்கொடுமையும் ஆகியவைகளை நன்றாய்க் கவனித்து அஸ்திவாரத்தில் இருந்தே பரித்துக் களைந்து எறியும்படியான கிளர்ச்சியும் முயற்சியுந்தான் உண்மையில் ஏதாவது பயனளிக்கக்கூடியதாகுமே தவிர வேறல்ல.

இவ்விதக் கிளர்ச்சிக்கும் முயற்சிக்கும் மக்களை முந்த விடாமல் செய்வதற்காகவே தான் இன்றைய ‘கிளர்ச்சியும்’ ‘முயற்சியும்’ நடை பெறுகின்றன.

ஆகவே இவையிரண்டும் இந்தியாவின் உண்மையான விடுதலைக்கும், சுதந்திரத்திற்கும் விரோதமானதென்றே சொல்லுவோம். ஆனாலும் சீர்திருத்தம் அளிக்க முயற்சிக்கின்ற கூட்டத்தாராவது மேல்கண்ட கொடுமைகளை ஒப்புக் கொண்டதோடு அவற்றிற்கு ஏதாவது பரிகாரம் செய்ய வேண்டுமென்பதாக வாயாலாவது சொல்லுகின்றார்கள்.

ஆனால் கிளர்ச்சிக்காரர்களோ அந்தப் பக்கமே திரும்பிப் பார்க்கவில்லை. எல்லாம் பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்கிறார்கள். ஆனால் சீர்திருத்தமளிக்க முயற்சிக்கின்றவர்கள் உண்மையாகப் பேசுகின்றார்களா அல்லது பொய்யாக வேஷத்திற்கு நொண்டிச்சாக்குக்காக பேசுகின்றார்களா என்பது வேறு விஷயமானாலும் அதுவும் அவசரத்தில் முடிவு செய்யக் கூடிய காரியமல்ல வென்றே சொல்லுவோம்.

ஏனெனில் எல்லா வகை பிரதிநிதிகளையும், அழைத்திருக்கின்றார்கள், எல்லா விஷயங்களையும் வெளிப்படையாய் எடுத்துச் சொல்லியிருக்கின்றார்கள்.

இனி அவர்கள் அதற்கு விதாயம் செய்தாலும் செய்யா விட்டாலும் கொடுமைப்படுத்தப்படும் மக்கள் அந்த வார்த்தையைப் பிடித்துக் கொண்டே கிளர்ச்சி செய்யவாவது முயற்சி செய்யவாவது ஒரு சந்தர்ப்பத்தை உண்டாக்கி விட்டார்கள்.

எந்த விதத்திலோ ஒரு சீர்திருத்தம் வெளியாகி அமுலில் ஆரம்பிக்கப்பட்ட 10 வருஷத்திற்குள் மேல் கண்ட அதாவது கொடுமைப்படுத்தப்பட்டவர்களின் கிளர்ச்சி பலப்பட்டு அதற்காக வகை சொல்லித் தீரவேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கும் ஆதிக்கக்காரருக்கும் வந்து தீருமென்றே கருதுகின்றோம்.

அன்றியும் திரு. காந்தியவர்களும் தனது கிளர்ச்சியை ஆரம்பித்ததற்குக் காரணங்கள் சொல்லும்போது அவைகளில் ஒன்றாகக் குறிப்பிட்ட விஷயம் யாவருக்கும் ஞாபகம் ஓர் பக்கமிருக்கும். என்னவென்றால் “இந்தக் கிளர்ச்சி ஆரம்பிக்காதிருந்திருந்தால் இந்தியாவில் போல்சுவிசம் அதாவது சமதர்மக் கொள்கை ஆரம்பமாகிவிடும்” என்று பயந்து கொண்டு இக்கிளர்ச்சி சட்ட மறுப்பு இயக்கம் ஆரம்பித்ததாகச் சொல்லி இருக்கிறார்.

இதன் தத்துவார்த்தம் என்னவென்றால் திரு. ஜவார்லால் நேரு அவர்கள் பூரண சுயேச்சை கொள்கைக்காரர் என்றும் அவர் சமீபத்தில் ருஷியா முதலிய இடங்களுக்குப் போய் வந்தவர் என்றும் அவருடைய உணர்ச்சி அதில் இழுக்கப் பட்டிருக்கின்றதென்றும்தான்.

அதாவது திரு. காந்தியார் அதை தடுக்காதிருந்தால் காங்கிரசே அந்த வழியில் திரும்பி கடைசியாக சமதர்மக் கிளர்ச்சி புறப்பட்டுவிடும் என்றும் பயந்ததாக காட்டப்பட்டதாகும்.

ஆகவே திரு. காந்தியவர்கள் சொல்லுவதை அப்படியே ஏற்றுக் கொண்டாலும் போல்ஸ்விசத்தை - சமதர்மக் கொள்கையை தடுப்பதற்காக இந்த தேசியக் கிளர்ச்சி ஆரம்பிக்கப்பட்டதென்பது விளங்கும். சமதர்மக் கிளர்ச்சி வந்து விட்டால் திரு. காந்தியாருக்கு முழுகிப் போவதென்ன என்பது நமக்கு புலப்படவில்லை. என்றாலும் அதைப்பற்றி நாம் இப்போது விவரிக்காமல் விட்டு விட்டு நமது மற்றைய அபிப்பிராயத்திற்கு போவோம்.

இன்றைய இந்தியாவின் வரிக் கொடுமைக்கு முக்கிய காரணங்கள் இரண்டாகும். ஒன்று வரி விதிப்பதில் அனுசரிக்கும் முறை. இரண்டு, இந்திய அரசியல் உத்தியோகங்களுக்கு ஏற்படுத்தியிருக்கும் சம்பளக் கொள்ளை. இந்த இரண்டும் சீர்திருத்தப்பட்டாலொழிய நாட்டின் வரிநிலை என்றுமே சீர்படப் போவதில்லை என்பதே நமது அபிப்பிராயமாகும்.

அதாவது பூமிகளுக்கு வரி (தீர்வை) விதிப்பதில் இன்கம்டாக்ஸ் என்றும் வருமான வரி விஷயத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் முறையே இதிலும் அனுசரிப்பதாய் இருந்தால் வரிக் கொடுமை அநேகமாய் நீங்கிவிடும் என்றே சொல்லுவோம். எப்படி எனில் இத்தனை ஏக்கர் பூமி உடையவனுக்கு இன்ன விகிதம் வரி என்பதாக கணக்கு போட்டு வரிவிதிக்க வேண்டும்.

அதாவது 5 ஏக்கர் நஞ்சைக்கும் (தண்ணீர் பாயும் பூமிக்கும்) 25 ஏக்கர் புஞ்சை அதா வது மழையை எதிர்பார்த்து விளையும் பூமிக்கும் குறைவாக உடையவர் களுக்கு இப்போது இருக்கும் வரி தீர்வை விகிதத்தில் பகுதியாக்கி 500 ஏக்கர்காரருக்கு மேல்பட்டவர்களிடமிருந்து இப்போதிருப்பதில் இரட்டிப்புப் பாகம் வரி உயரும்படியாக படிப்படியாக உயர்ந்ததான ஒரு திட்டம் ஏற்பாடு செய்தால் அல்லது இந்தக் கொள்கையை அனுசரித்து சற்றேறக் குறைய திட்டம் ஏற்பாடு செய்தால் கண்டிப்பாக வரி கஷ்டம் நீங்குவதோடு பூமிகள் ஒரே பக்கத்தில் போய் சேர்ந்து விடாமல் இருப்பதற்கும் வரிமுறை கொடுமையில்லாமல் பயன்படுவதற்கும் அனுகூலமாயிருக்கும்.

அப்படிக்கில்லாமல் ஒரு ஏக்கர் காரனுக்கும் 5000, 100000 ஏக்கர் காரனுக்கும் ஒரே வரி விகிதம் இருப்பதால் பூமி எல்லாம் ஒரே பக்கம் போய்ச் சேரவும் மற்றும் அநேக கெடுதிகள் ஏற்படவும் அனுகூலமாயிருக்கின்றது.

நிற்க இரண்டாவது விஷயமான சர்க்கார் நடவடிக்கை சம்பள விஷயத்தில் இப்போது இருக்கும் திட்டம் ஒரு பெரும் பகல் கொள்ளை என்றே சொல்லக் கூடியதாயிருப்பதால் எப்போதுமே வரி போராமலேயே இருந்து வருகின்றது. அன்றியும் சம்பளம் போரவில்லை என்கின்ற கூக்குரலும் சதா இருந்து வருகின்றது.

இதன் பயனாய் போராத அதாவது குறைந்த சம்பளக்காரரால் கையாளப்படும் பிச்சைக்காசு, லஞ்சம், ஒழுக்க ஈனம், நியாயம் தவறுதல் ஆகிய காரியங்கள் செல்வாக்குப் பெற்று இவை பெரிய சம்பளமுள்ள பெரிய உத்தியோகங்களிலும் தாராளமாய் தாண்டவமாடுவது சகஜமாகி வந்துவிட்டது.

ஆதலால் இனியாவது லஞ்சம் நியாயம் தவறுதல் ஆகிய காரியங்கள் பொது ஜனங்களால் வெறுக்கப்பட்டு உத்தி யோகங்கள் பரிசுத்தமும் நேர்மையும் அடையவேண்டுமானால் கண்டிப்பாய் சம்பளமுறை மாற்ற வேண்டியது மற்றொரு விஷயத்திலும் அவசியமாகும்.

அதாவது 20, அல்லது 25 (இடத்தை அநுசரித்து) ரூபாய்க்கு குறைவில்லாமல் 1000, 1250 ரூபாய்க்கு மேல்படாமல் இருக்கும்படியாகவே திட்டம் ஏற்படுத்தவேண்டும். உத்தியோகங்களின் எண்ணிக்கையும் இப்போது உள்ளதில் பகுதிக்குக் கொண்டு வந்து விட வேண்டும்.

மக்களுக்கு நாணயமும், ஒழுக்கமும் ஏற்படுத்துவதற்குத் தனி ஒற்றர் ஊ.ஐ.னு இலாகா வைத்து சீர்படுத்த ஏற்பாடு செய்து இதில் சற்றும் தாட்சண்யமற்ற நடுநிலைமை கையாளும் பட்சம் 10 வருஷத்தில் மக்கள் சீரடைந்து உத்தியோகங்களின் சீர்கேடும் நாணயத் தவறுதலும் லஞ்சமும் ஒழிந்து விடக்கூடும்.

இன்றைய தினம் நமது நாட்டில் அரசியலிலாவது அரசாங்க உத்தி யோகங்களிலாவது, ஸ்தல ஸ்தாபன சுயாக்ஷி நிர்வாகத்திலாவது பொது வாழ்க்கையில் ஒருவருக்கொருவர் நடந்து கொள்ளும் குடித்தனப் பாங்கான வாழ்க்கையிலாவது, நாணயமும் ஒழுக்கமும் சிறிது காண்பது கூட மிகக் கஷ்டமாகவே இருந்து வருகிறது. ஆகவே இந்த விஷயம் மற்றெல்லா விஷயங்களைவிட முக்கியமாய்க் கவனிக்கப்படவேண்டியதாகும்.

இப்போது சில உத்தியோகங்களுக்குப் பெரிய பெரிய சம்பளங்கள் கொடுக்கப்படுவதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன. அவையாவன.

ஒன்று. வெள்ளைக்காரர் தங்களுக்கு இந்தச் சம்பளம் ஏற்படுத்திக் கொண்டிருந்ததால் அந்த உத்தியோகங்கள் இந்தியர்க்கு வந்த காரணமாய் அந்த சம்பளமும் அப்படியே இந்தியர்களுக்குத் திருப்பப்பட்டதால் என்பதும்,
இரண்டு.

பெரிய உத்தியோகங்களுக்கு, அதாவது, பொருப்பும், அதிகாரமுமுள்ள உத்தியோகங்களுக்கு அதிக சம்பளம் கொடுக்காவிட்டால் அலட்சியமும், நடுநிலைத் தவறுதலும் ஏற்பட்டுவிடும் என்பதோடு நாணயத் தவறுதலாக நடக்க வேண்டிய ஆசை உண்டாக்கப்பட்டு விடும் என்பதுமாகும். இவற்றை நாம் ஒப்புக் கொள்ள முடியாது.

ஐரோப்பியருடைய சம்பளத்தை குறைக்க நாம் ஏற்பாடு செய்ய வேண்டுமேயொழிய அந்தச் சம்பளம் நமக்கு வரவேண்டுமென்பது ஐரோப்பியர்களின் சம்பளத்தை நாமே ஆதரிப்பதாகும் என்பதோடு இதை பண ஆசையால் தேசத்தின் பெயரால் கொள்ளை அடிக்கும் அயோக்கியத்தனம் என்றும் சொல்ல வேண்டியதாகும்.

இந்த அயோக்கியத்தனத்தை இந்திய பொது மக்களுக்குள் புகுத்தியது தேசீய இயக்கமும், தேசீய கிளர்ச்சியும், அவைகளிரண்டும் சேர்ந்ததால் பிறந்த குழந்தையாகிய அரசியல் சீர்திருத்தமும் தான் என்று தைரியமாய்ச் சொல்லுவோம்.

“இரண்டாவதான அதாவது அதிகச் சம்பளம் கொடுக்காவிட்டால் நடு நிலைமை தவருவார்கள், பொருப்பை உணரமாட்டார்கள், லஞ்சம் வாங்குவார்கள்” என்பது. இதுவும் போதிய காரணமாகாதென்றே சொல்லுவோம்.

உத்தியோகஸ்தர்கள் நாணையமாய் பொருப்புடன் நடுநிலையில் நடந்து கொள்ளுவது என்பது அரசியல் அமைப்பில் இருக்கின்றதே ஒழிய சம்பளம் அள்ளிக் கொடுப்பதில் இல்லை என்பதை நன்றாய் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லுவோம்.

உதாரணமாக 5533 - 5 - 4 சம்பளம் ஏற்படுத்தப்பட்டிருக்கும் மந்திரிகள் முக்கியமான காரியங்களில் நடுநிலையிலும் தங்கள் மனதில் நியாயம் என்று தோன்றிய வழியிலும் தேசத்திற்கும் மக்களுக்கும் நன்மையான காரியம் என்பதிலும் சிறிதும் நாணையமாய் நடந்து கொள்ள முடியாமல் எப்படியாவது உத்தியோகத்தை சம்பாதிக்கவும் அதை குரங்கு பிடியாய் பிடித்துக் கொண்டிருக்கவும் தான் நடந்து கொள்ளும்படி அரசியல் அமைப்பு ஏற்பட்டிருக்கின்றதே ஒழிய வேறில்லை. இப்படியான குணம் ஏற்பட்டதற்கு அதிகச் சம்பளமே காரணம் என்று கூட சொல்லுவோம்.

அதுபோலவே மற்ற உத்தியோகங்களிலும் மேல் கண்ட குணங்களோடு லஞ்சம் என்பதும் சேர்ந்து கடையில் பீடி, சிகரட்டு விலைக்கு வாங்குவது போல் நியாயம் விலைக்கு வாங்கத்தக்க அவ்வளவு சாதாரண நிலையில் இருந்து வருகின்றது.

இவ்வளவும் போறாமல் இன்றைய அரசியல் கிளர்ச்சியும் சீர்திருத்தமளிக்கும் முயற்சியும் இந்த தன்மையை மேலும் விர்த்தி செய்ய அனுகூலமாயிருப்பதைத் தவிர இவைகளில் ஒரு சிறியதை யாவது குறைப்பதற்கு வழியில்லை.

தேசீயக் கிளர்ச்சியில் வரும் பூரண சுயேச்சையானாலும், சீர்திருத்த மளிக்க முயற்சி செய்யும் சர்க்காரால் வரும் முழு சீர்திருத்தமானாலும் இரண்டும் உயர்ந்த ஜாதிக்காரன், பணக்காரன், படித்தவன் ஆகிய மூவருக்கும் மாத்திரம் அனுகூலமும், முற்போக்குக்கான சுதந்திரமும் சீர்திருத்தமுமாய் இருக்குமே தவிர 100க்கு 90 மக்களாய் இருக்கின்ற குடியானவனுக் கும் கூலிக்காரனுக்கும் தாழ்த்தப்பட்டவனுக்கும் வேண்டிய மார்க்கம் அதில் ஒன்று மிருக்காது என்றும் சொல்லுவோம்.

மற்றபடி கல்வி, நீதி முரை, அரசியல் தத்துவம் முதலியவைகளைப் பற்றி மற்றொரு சமயம் எழுதுவோம்.

(குடி அரசு - தலையங்கம் - 23.11.1930)