சமஸ்கிருதம் மற்றும் இந்தித் திணிப்புகளை எதிர்த்து தமிழ்நாட்டில் 1926 ஆம் ஆண்டிலிருந்தே சுயமரியாதை இயக்கம் போராடி வந்துள்ளது. தமிழ்நாட்டு வரலாற்றில் இந்தி, சமஸ்கிருதம் இரண்டுக்கும் எதிராக முதன்முதலாகக் குரல் கொடுத்தவர் தோழர் பெரியார்.

“நமது நாட்டின் ஷேமத்திற்காக என்று எந்தக் காரியம் ஆரம்பிக்கப் பட்டாலும், அவற்றை நம் நாட்டுப் பிராமணர்கள் கைப்பற்றிக் கொண்டு அதனால் தாங்கள் பிழைக்கும்படியாகவும், நமக்கு பெரிய ஆபத்து விளையும்படியாகவே செய்து விடுகிறார்கள்....அதுபோலவே நமது தமிழ்நாட்டில் ஹிந்தி பிரசாரமும் பெரும்பாலும் பிராமணர்களுக்கே அனுகூலத்திற்காக செய்யப்பட்டு இருக்கிறது.” என்று 1926 லேயே தனது குடி அரசில் எழுதினார்.(தோழர் பெரியார், குடி அரசு - கட்டுரை - 07.03.1926)

அதன்பிறகு 1931 ஆம் ஆண்டில் தஞ்சை மாவட்டம் நன்னிலத்தில்நடந்த மாநாட்டில்,

“பழைய புராணக் கதைகளைச் சொல்லுவதைத் தவிர வேறு அறிவு வளர்ச்சிக்கும் மற்ற பொது விஷயங்களுக்கும் உதவாத சமஸ்கிருதம், ஹிந்தி முதலிய பாஷைகளைத் தேசீயத்தின் பேரால் அரசியல் காரணங்களுக்காக வென்று படிக்கச் செய்வதானது பார்ப்பனீயத்திற்கு மறைமுகமாக ஆக்கம் தேடுவதாகுமென்று இம்மகாநாடு கருதுவதோடு, தற்கால விஞ்ஞான அறிவை நமது மக்களிடம் பரப்பவும், நவீனத்தொழில் முறைகளை நமது நாட்டில் ஏற்படுத்தவும், மற்ற தேசங்களில் எழும்பியிருக்கும் சீர்திருத்த முற்போக்கு உணர்ச்சிகளை நமது மக்களிடம் தோற்றுவிக்கவும், உலக பாஷையாக வழங்கிவரும் இங்கிலீஷ் பாஷையையே நமது வாலிபர்கள் கற்க வேண்டுமென்று இம்மகாநாடு தீர்மானிக்கிறது” என்று தீர்மானம் நிறைவேற்றனார். ( தோழர் பெரியார், குடி அரசு - தலையங்கம் - 14.06.1931)

பார்ப்பனர்களுக்கும், பார்ப்பனீயத்துக்கும் நன்மை செய்யவே இந்தி, சமஸ்கிருதங்கள் திணிக்கப்படுகின்றன. இந்த மொழிகளுக்குப் பின்னால் பார்ப்பனப் பண்பாடு திணிக்கப்படும் என்பதற்காகவே இந்த மொழிகளைப் பெரியார் எதிர்த்துள்ளார். அவர் சிந்தித்தது போலவே தற்போது சமஸ்கிருதத் திணிப்பிற்கு அடுத்த கட்டமாக, பார்ப்பன - வேதப் பண்பாட்டுத் திணிப்பும் தொடங்கிவிட்டது.

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம், சமஸ்கிருதத் திணிப்பைத் தொடர்ந்து நாடு முழுவதும் வேதக்கல்விமுறையைப் புகுத்தியுள்ளது. சி.பி.எஸ்.இ கல்விமுறைக்கு இணையானதாக பார்ப்பன வேதக் கல்விமுறையைத் திணிக்கத் தொடங்கியுள்ளது. இது வேதக்கல்விமுறை ( Ved Vidya - Vedic education board) எனப்படும். இதற்கென மனிதவள மேம்பாட்டுத்துறையின் சார்பிலேயே, தனியாக ஒரு தன்னாட்சிக் கல்வி நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. அதன்பெயர் மகரிஷி சண்டிபாணி ராஷ்ட்ரிய வேத வித்யா ப்ரதிஸ்தான்( MSRVVP).

இந்த MSRVVP என்ற நிறுவனம் மத்தியப் பிரதேச மாநிலம் ஊஜ்ஜயினியில் 1987 முதல் ஒரு தனியார் கல்வி நிறுவனம் போல இயங்கி வந்தது. இதுவரை இந்தியா முழுவதும் 450 பாரம்பரிய வேதக்கல்வி நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்கி, வேதக்கல்வியைப் பரப்பி வந்தது. மோடி அரசு உருவான பிறகு மத்திய அரசால் தொடங்கப்பட்ட ஒருதன்னாட்சி பெற்ற நிறுவனமாகவே இயங்குகிறது. தேவி ப்ரசாத் திரிபாதி என்ற பார்ப்பனர் இதன் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். வேதக்கல்வி முறையின் பாடத்திட்டங்கள், தேர்வுகளை இந்த நிறுவனம் நிர்வகிக்கும்.

சான்று: Ritika Chopra | New Delhi | Indian Express: May 23, 2016

இனி இந்நிறுவனம் இந்தியா முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் வேதங்களையும் ஒரு பாடமாக மாற்ற வழிவகை செய்யும். வேதப்பண்பாட்டைப் படிக்கவும், பரப்பவும் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் துறைகளை உருவாக்கும். பார்ப்பனப் பண்பாடான, வேதப்பண்பாட்டு மாநாடுகள், கருத்தரங்குகளை நடத்தும். பார்ப்பனப் பண்பாட்டைக் கட்டாயப்படுத்தும் இதழ்களையும், நூல்களையும் உருவாக்கும். கி.மு 1000 ஆவது ஆண்டுக்கு நம்மை பின்னோக்கி இழுத்துச் செல்லும்.

ஒரு குழந்தை பிறந்தவுடன் அதற்கு என்ன பெயரிட வேண்டும்? அக்குழந்தை எங்கு வாழவேண்டும்? அக்குழந்தை படிக்க வேண்டுமா? வேண்டாமா? என்ன உண்ண வேண்டும்? என்ன உடை உடுத்த வேண்டும்? என்ன தொழில் செய்ய வேண்டும்? எப்போது திருமணம் செய்ய வேண்டும்? எப்படிக் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும்? அந்தக் குழந்தையை எப்படி வளர்க்க வேண்டும்? இறந்த பிறகும் என்ன செய்ய வேண்டும்? என அனைத்தையும் நிர்ணயிப்பவை இந்த வேதங்களும் சாஸ்திரங்களும் தான்.

புத்தர், அசோகர் காலங்களுக்குப் பிறகு இந்தப் பார்ப்பனப் பண்பாட்டுக்கு எதிராக மிகப்பெரும் பண்பாட்டுப் புரட்சியைத் தொடங்கி, தன் காலத்திலேயே பார்ப்பனப் பண்பாடுகளுக்கு மரண அடி கொடுத்தவர் பெரியார். நமது வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் நாம் நடத்தும் விழாக்கள், இல்ல விழாக்கள், ஊர் விழாக்கள், பழக்க வழக்கங்கள் என அனைத்திலுமே பார்ப்பனப் பண்பாட்டுக்கு எதிரான திராவிடர் பண்பாட்டை உருவாக்கி, பரப்பியவர் பெரியார்.

பெரியார் காலத்தில் தமிழ்நாட்டில் பெரும்பான்மை மக்களின் பண்பாடாக இருந்த திராவிடர் வாழ்வியல் பண்பாடு, பழக்க வழக்கங்கள் - கடந்த பல ஆண்டுகளில், பெரியார் இயக்கத் தோழர்களின் பண்பாடாகக் குறுகிப்போய்விட்டது. பல பெரியார் இயக்கத் தோழர்களே அவற்றைக் கடைபிடிப்பதில்லை என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்.

இந்தச்சூழலில் தமிழ்நாட்டில் இந்தி, சமஸ்கிருத எதிர்ப்பு அலைகள் மீண்டும் உருவாகின்றன. அவை வெறும் இந்தி, சமஸ்கிருத மொழித் திணிப்புகளுக்கான எதிர்ப்புகள் என்ற அளவில் சுருங்கி விடாமல், பார்ப்பன - இந்து - வேதப் பண்பாட்டுப் படையெடுப்புகளுக்கு எதிரான திராவிடர் பண்பாட்டை மீண்டும் நடைமுறைப்படுத்தும் நோக்கில் வீறுகொண்டு எழவேண்டும்.

‘சொல்லுக்கு முன் செயல்’ என்பது போல இந்தி, சமஸ்கிருதத் திணிப்பு எதிர்ப்பாளர்கள் முதலில் திராவிடர் பண்பாட்டைத் தமது வாழ்வில் நடைமுறைப்படுத்தத் தொடங்க வேண்டும். திராவிடர் வாழ்வியலை விளக்கும் வகையில் திராவிடர் பண்பாட்டுக் கண்காட்சிகள் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நடைபெறவேண்டும். திராவிடர் இயக்கங்களின் தோழர்களும், பொறுப்பாளர்களும் பண்பாட்டுத் தளத்தில் தங்களது கடந்த காலச்செயல்பாடுகளையும் - செய்யப் போகும் சாதனைகளையும் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

திராவிடர் பண்பாடு குறித்த விவாதங்களை நடத்த வேண்டும். பண்பாட்டு, பழக்கவழக்கக் கையேடுகள் வெளியிடப்பட வேண்டும். மொழித்திணிப்புகளுக்கு எதிராக மட்டுமே இயங்குவதும் எதிர்வினையாற்றுவதும் நிரந்தரத் தீர்வாகாது. வேதப் பண்பாட்டு எதிர்ப்பு வரலாற்றை மக்களுக்குப் பயிற்றுவிப்போம். வேதங்களுக்கு எதிரான திராவிடர் பண்பாட்டை வாழ்வியலாக்குவோம். 

Pin It