rural schoolஒரு நாட்டின் சமூக, பொருளாதார, அரசியல் கலை, இலக்கியம், பண்பாட்டு நடவடிக்கைகளைப் புரிந்துகொள்ளவும், அறிவியல் மனப்பான்மை பெறவும், ஜன நாயக்கடமைகளை ஆற்றவும் ஒரு குடிமகனை ஆற்றல் மிகுந்தவனாக்குவது கல்வி. கல்வியின் இத்தகைய முக்கியத்துவத்தை உணர்ந்துதான், ‘கறகை நன்றே! கற்கை நன்றே!! பிச்சைபுகினும் கற்கை நன்றே!’ என ஒளவையாரும், ‘உற்றுழி உதவியும், உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே’ என ஆரியப்படை கடந்த பாண்டியன் நெடுஞ்செழியனும் தமிழ் இலக்கிய அறிஞர்களும் வலியுறுத்தினார்கள். பிறப்பில் உயர்வுதாழ்வு இல்லை இந்த உலகில் பிறந்த அனைவரும் சமமானவர்கள் என்பதை ’பிறப்பொக்கும் எல்லாவியிர்க்கும், சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்’ என்றார் வள்ளுவர். இதுதான் தமிழ்மரபு.

ஆனால், கி.மு. 1500களில் கைபர், போலன் கணவாய் வழியாக இந்தியாவுக்குள் வந்தேறிகளான பார்ப்பணர்களின் ஆரியமரபோ, பிறப்பிலேயே ஏற்றத்தாழ்வு உண்டு என்கிறது. பிரம்மாவின் தலையில் பிறந்தவர்கள் பார்ப்பனர்கள், தோளில் பிறந்தவர்கள் சத்திரியர்கள், தொடையில் பிறந்தவர்கள் வைசியர்கள், பாதத்தில் பிறந்தவர்கள் சூத்திரர்கள் என்றும் அதை இறைவனே படைத்தான் என்று கற்பித்தது. இந்தப் பழமைவாதத்தை, வர்ணாசிரமக் கோட்பாட்டை பாதுகாக்கும் அரணாக கீதை இருந்தது. குப்பைக் கூடைக்குள் கிடந்த கீதையை1200 ஆண்டுகளுக்குமுன் சங்கராச்சாரியார் தூசு தட்டி எடுத்து ‘இதுதான் இந்து தர்மம்’ என பிரச்சாரம் செய்தார். கீதையை இயற்றியதாக கூறப்படும் கண்ணன் கூறுகிறான்:

‘சாதுர்வர்ணம் மயா ஸ்ருஸ்டம குண-கர்ம விபாசக:
தஸ்ய கர்த்தாரமபி மாம் வித்தயகர்த்தார- மவ்யயம்’ (அத்-4 சுலோகம் 13)

நான்கு வர்ணங்கள் என்னால் உருவாக்கப்பட்டவை: அவர்களுக்குரிய கருமங்களை அவரவர் மீறாமல் செய்யவேண்டும்:அதை மாற்றிச் செயல்பட வைக்க அந்த வர்ணதர்மத்தை தோற்றுவித்தவான என்னால்கூட முடியாது’

சூத்திரனுக்கு கல்விகற்கும் உரிமையோ அல்லது கேட்கும் உரிமையோ இல்லை என்று வரையறுத்தார்கள். அதையும் மீறி கீழ்ச்சாதியை சாந்த ஒருவன் கல்வியறிவு பெற்றுவிட்டால், ‘எழுதப்படிக்கத் தெரிந்த சூத்திரனின் நாக்கை அறுக்கவேண்டும்’ என்றும், வேதத்தை கேட்ட சூத்திரனின் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றவேண்டும்; என்றும் ஏழை,எளியவர்களின் கல்வி உரிமையை மறுத்தது ஆரிய மரபு.

ஆனால், தமிழ் மரபோ, அனைவருக்கும் கல்வி உரிமை உண்டு என்று கூறி, ’யாதானும் நாடாமாஅல், ஊராமாஅல் என்னொருவன் சாந்துணையும் கல்லாதவாறு?’ எனக்கேட்கிறது. ‘வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும், கீழ்ப்பாலொருவன் கற்பின் மேற்பாலொருவனும் அவன்கண்படுமே’ (புற நானூறு 242) என்று ஆரியப்படைகடந்த பாண்டியன் நெடுஞ்செழியனாக அறைகூவல் விடுக்கிறது. மக்களை பிறப்பிலிருந்தே பிளவுபடுத்தும் ஆரியவர்ணாசிரம தருமத்துக்கும், மக்களை ஒற்றுமைப்படுத்தி சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் உயர்த்திப்பிடிக்கும் தமிழ்மரபின் மானுடநேயத்துக்கும் இடையேயான போராட்டம் காலம்காலமாக கல்விபுலத்தின் நீடித்து நிலவிவருகிறது. இந்தப்பின்னணியில்தான் 2019 மே 30 அன்று மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை 484 பக்கங்கள் கொண்ட ”‘தேசிய கல்விக்கொள்கை வரைவு’” ஒன்றை மக்களின் கருத்துக்களை கேட்டறிவதற்காக இந்தி, ஆங்கிலம் என இருமொழிகளில் மட்டுமே.ஜூன் 2019க்குள் தங்கள் கருத்துக்களை தெரிவித்திடவேண்டும் என்ற அறிவிப்போடு வெளியிட் டுள்ளது அரசியல்சாசனம் அங்கீகரித்துள்ள அனைத்துமொழிகளிலும் இந்த வரைவு மொழிபெயர்த்து வெளியிடப்படவேண்டும்: கால அவகாசத்தை நீட்டிக்கவேண்டும்’ என்ற குரல்கள் நாடெங்கும் எழுந்தபின் ஜூலை 2019 என காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தேசிய கல்விக்கொள்கைக்கான வரைவு அறிக்கைக்குள் புகுமுன் இதன் பின்னணியை, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தோற்றம், நோக்கம், அதன்செயல்முறை ஆகியவற்றை அறிந்துகொள்வது மிகவும் முக்கியமானது

ஆர்.எஸ்.எஸ். உருவான வரலாறு

1828ல் பிரம்மசமாஜம்- தோற்றுவிக்கப்பட்டது. அது மனுதர்மத்தை உயர்த்திப் பிடித்து நால்வகை வர்ணக்கோட்பாட்டை வலியுறுத்தியது.

1870முதல் மகாத்மாபூலே, அம்பேத்கர் ஆகியோர் –இந்தியமக்களில் பெரும்பான்மையோரை கீழ்ச்சாதி என அறிவித்து அவர்கள் சமூகத்தில் உயர்ந்துவிடாமல் தடுத்த பிரம்மசமாஜத்தின் கொடுமைகளை எதிர்த்து மகாராஷ்ட்ராவில் இயக்கங்களை நடத்தினார்.

1870ல் பூலே ’சத்யஷோதக் சமாஜ்’ துவக்கினார்:-தலித்மக்கள் பார்ப்பனி யத்துக்கு எதிராக சவால்கள் விடுத்தார்கள்.தலித் மக்களின் சவால்களை எதிர்கொள்ளவும், மனுதர்மத்தை, வர்ணாசிரமதர்மத்தை பாதுக்காக்கவும்

1875ல் சுவாமி தயானந்த சரஸ்வதியால் ‘ஆரியசமாஜம்’ தோற்றுவிக்கப்பட்டது

1920ல் சிரத்தானந்த் தலைமையில் ஆரிய சமாஜம் ’சுத்தி இயக்கம்’ துவக்கியது. முஸ்லீம்கள்.கிரிஸ்தவர்களை இந்துக்களாக மதம்மாற்ற முயற்சி செய்தது.

1922ல் பாய்பரமானந்தர், வினாயக் தாமோதர் சாவர்க்கர்- இந்துமகாசபையை துவக்கினார்கள். இந்துக்களே இந்தியர் என்ற தீவிரவாதத்தை முன்னெடுத் தார்கள். இந்திய முஸ்ல்ம்களையும், கிறிஸ்தவர்களையும் தனிமைப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டார்கள்..

1920களில்,அம்பேத்கர் தலைமையில் பார்ப்பனகளுக்கு எதிராக தலித்மக்களின் ஸ்தாபனரீதியாக போராட்டங்கள் வெடித்தன. சூத்திரர்களின் எழுச்சியை– எதிர்கொள்ள உயர்சாதியினரால் உருவாக்கப்பட்டதே ஆர்.எஸ்.எஸ்.

1925ல் நாக்பூரில் 5 டாக்டர்கள் கேசவ பாலிராம் ஹெட்கோவர், பி.எஸ்.மூஞ்சே, தோல்கர், சாவர்க்கர், எல்.வி. பரஞ்பே ஆர்.எஸ்.எஸ்.ஸை உருவாக்கினார்கள். – திட்டமிடல், கிளை அமைப்புக்களை நிறுவுதல், வேலைப்பங்கீடு – என அபார வளர்ச்சி பெறவைத்தார்கள். –கிளை அமைப்புக் களுக்கும், தனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என நம்பவைத்து, நாடகமாடி பார்ப்பன இளைஞர்களுக்கு மதவெறியூட்டும் எல்லா விஷமமான வேலைகளையும் செய்துவந்தார்கள்.

1926ல் ’ஷாகா’க்களை அமைத்து, 3வயது குழந்தைகள் முதல்-16 வயது வரை பார்ப்பன இளைஞர்களை சேர்த்து மதவெறியூட்டி, இராணுவப் பயிற்சிகளையும்.அளித்தார்கள். எதற்கு? தேசத்தை பாதுகாக்கவாம்! 13 இலட்சம் இராணுவம் இந்திய அரசிடம்.இருக்கும்போது இவர்களின் இராணுவப்பயிற்சி எதற்காக? 1926முதல் சாகாக்கள் துவங்கி இராணுவப்பயிற்சி அளிக்கப்பட்டாலும், சுதந்திரப்போராட்டத்தில் இவர்கள் பங்கு என்ன? 1942 வெள்ளியனே, வெளியேறு; போராட்டத்தை சாவர்க்கரின் ஆணைப்படி காட்டிக்கொடுத்தார்கள் பிரிட்டிஷாருக்கு விசுவாசமாக இருப்போம் என்று சாவ்ர்க்கர் மன்னிப்புக் கடிதம் எழுதிக்கொடுத்து சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் காட்டிக் கொடுத்தார். அப்படியானால் இவர்களின் இராணுவப்பயிற்சி எதற்காக? இந்திய நாட்டில் சிறுபான்மையினராக உள்ள கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லீம்களுக்கும் எதிராக கலவரங்களை நடத்திட, அவர்களை அச்சுறுத்திட.. இந்திய இளைஞர்களை மூளைச்சலவைசெய்து மதவெறியை ஊட்டிட. குழந்தை.களுக்கு இவர்கள் நிறுவிய ஷாகாக்களில் அ உளவியல்ரீதியான விளையாட்டுப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

நரேந்திரமோடி தலைமையில் பாஜக அரசு 2014ல் ஆட்சிக்கு வந்தபோதே புதிய கல்விக்கொள்கைக்கான முன்முயற்சியில் வேகமாக இறங்கியது. நாடுமுழுவதிலும் கருத்துக்கேட்புக்கூட்டங்களை இரகசியமாக நடத்தியது. இவற்றில் கருத்துக்களைக் கூறுவதற்கு அடிப்படையான ஓர் அறிக்கையை தயாரிக்க டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியம் என்பவரை நியமித்தது. ஆனால் அவர் அறிக்கைகொடுத்தபிறகும் அரசு அதைவெளியிடவில்லை. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த டி.எஸ்.ஆர் .சுப்பிரமணியமே அதை வெளியிட்டார். ‘இது அதிகாரபூர்வமான புதிய கல்விக்கொள்கைக்கானஅறிக்கை அல்ல’ என்றோ,’ இதன்மீது விவாதம் தேவை இல்லை ‘என்றோ அரசு கூறவே இல்லை. இதற்கிடையில் “புதிய கல்விக்கொள்கைக்கான சில உள்ளீடுகள்” என்ற சிறிய ஆவணத்தை மனிதவள அமைச்சகம் வெளியிட்டது. இதை தயாரித்தவர் யார்?என்ற எந்தவிவரமும் அந்த ஆவணத்தில் இல்லை.

இந்த நிலையில்தான் இஸ்ரோ விஞ்ஞானியான கஸ்தூரிரங்கன் தலைமையில் ஒருகுழு ‘புதிய கல்விக்கொள்கை வரைவு’ தயாரிக்க நியமிக்கப்பட்டது. ஒரு புதிய கல்விக்கொள்கை முன்வைக்கப்படும் போது முந்தைய கல்விக்குழுக்கள் பரிந்துரைத்த கருத்துக்கள், அவற்றின் அமலாக்கம், அவற்றின் பலம், பலவீனம், கல்வியின் இன்றைய நிலைக்கு காரணங்கள் அவற்றை எவ்வாறு களைவது என்பனபோன்றவை அறிக்கையின் முன்பகுதியாக இருக்கவேண்டும். ஆனால், கஸ்தூரிரங்கன்குழு வரைவுஅறிக்கையில் இது இடம் பெறவில்லை. அதைப்பரிசீலிப்பது மிகவும் அவசியம்.

”சமூக அமைப்பில் கல்வி என்பது பொருளாதார அமைப்பு என்ற அடித்தளத்தின்மீது நிறுவப்படும் அதிகார மேல்கட்டமைப்பின் ஒருகூறு’ என்கிறது 1847ன் கம்யூனிஸ்ட் கட்சிஅறிக்கை. “சாதாரணமக்களி டமிருந்து, உழைப்பாளி மக்களிடமிருந்து கல்வியை எவ்வளவுக் கெவ்வளவு விலக்கி வைக்கலாம் என்று திட்டமிடுவதே நிலப்பிரபுத்துவ அமைப்பின் கல்விக்கொள்கை” என்றார் லெனின். ”மக்களின் கண்களுக்குப் புலப்படாத, அதிகாரவர்க்கத்தின் சாட்டை- அடிமைச் சங்கிலிதான் கல்வி என்னும் அதிகாரம். இதன்மூலம் போதனை களையும் கட்டளைகளையும் ‘கல்வி’என்னும் இனிப்புத்தடவி வழங்கு வார்கள்’ என்கிறார் இடதுசாரி கல்வியாளர் அண்டோனியோ கிராம்ஸி. எல்லா கல்விக்குழுக்களுமே அதிகாரத்தில் இருப்பவர்களால் ஏதோ ஒரு நோக்கத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டவைதான்.

ஆங்கில ஆட்சியில் 1835ல் கொண்டுவரப்பட்ட மெக்காலே கல்விக் கொள்கையின் நோக்கம் ‘’நிறத்தால் இந்தியனாகவும், சிந்தனையாலும், செயல்பாட்டாலும் ஆங்கிலேயனாகவும். இருக்கக்கூடிய ஆங்கிலேயர் ஆட்சிக்கான எடுபிடிகளை இந்தியாவிலேயே உருவாக்குவதுதான். 1853ல் சார்லஸ் வுட்ஸ் கல்விக்குழு மெக்காலே கல்வியை மேற்பார்வைசெய்ய கல்வித்துறையை உருவாக்கி அதில் கல்வி அதிகாரிகளை நியமித்தது. 1883ன் ஹண்டர் கமிஷன் கிறிஸ்தவ மத திணிப்பு, பள்ளிக்கல்வியை இந்தியசுத்திரத்துக்கு எதிரான ஆயுதமாக்கல் காலனிய அடிமைபிரஜைகளை உருவாக்குதல் முத்லானவற்றை நோக்கமாக கொண்டிருந்தது. ஆனால் அதன் உடன் நிகழ்வாக இதுவரை கல்விமறுக்கப்பட்டவர்கள் கல்விபெற்றார்கள்: உலகத்தைப் பற்றிய அறிவைப்பெற்ற படித்த இந்தியர்கள் ‘இந்திய நாடு விடுதலை பெரவேண்டும்’ என்ற உணர்வையும் பெற்றார்கள். 1947ல் இந்தியா சுதந்திடம் பெற்றது.

சுதந்திர இந்தியாவில் இந்த நிலைமையை மாற்றிட, ‘கோத்தாரி கல்வுக்குழு’வை நேரு நியமித்தார். நேருமறைவுக்குப்பின் 1968ல் வெளிவந்த ‘கோத்தாரிகல்விக்குழு’ இந்தியசுதந்திரப்போராட்ட உணர்வு களை தக்கவைப்பதைதனது நோக்கமாகக் கொண்டிருந்தது. பல்வேறு மொழிகள், மதங்கள், கலாச்சாரங்கள், பண்பாடுகள் கொண்டசுதந்திர இந்தியாவில் வேற்றுமையில் ஒற்றுமை, மதசார்பின்மை, ஜனநாயகம், சமத்துவம் ஆகியவற்றை, இந்திய அரசியல் சாசனத்தை மதிக்கும் குடிமக்களை உருவாக்குவதை கோத்தாரி கல்விக்குழு நோக்கமாகக் கொண்டிருந்தது.

1980களில் ராஜிவ்காந்தியால் கொண்டுவரப்பட்ட புதிய கல்விக்கொள்கை, மேற்கத்திய உலகத்தால் முன்மொழியப்பட்ட உலகமயமாக்குதலை இந்திய சந்தைக்குள் நுழையவிடுவதை, பில்கேட்ஸ் போன்ற பெருமுதலாளிகளுக்கு வேலைக்காரர்களை உற்பத்திசெய்வதை நோக்கமாக கொண்டிருந்தது. ஆங்கிலவழி எல்.கே.ஜி. யு.கே.ஜி மம்மி டாடி பள்ளிகள் புற்றீசல்களாக முளைத்தன. தனிமனித மதிப்பீடுகள் பின்னுக்குத்தள்ளப்பட்டன. முரட்டுத்தனமான மதிப்பெண் கல்வியும், தாராளமய, தனியார்மய , சந்தைப் பொருளாதார நவீன அடிமைகளை உருவாக்குவதே ராஜிவ்காந்தி கல்விக்கொள்கை யின் நோக்கம்.

1997ல் வாஜ்பேயி அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்த முரளிமனோகர் ஜோஷி, ராஜிவ் காந்தியின் கல்விக்கொள்கை களோடு கல்வியின்மீது மதவெறித்தாக்குதல்களையும் ஏவினார்: பாடநூல்களில் மதவெறியூட்டப்பட்டது. சோதிடமும், புரோகிதமும் பாடங்களாக உயர்வகுப்புக்களில் கற்பிக்கப்படும் என்று முரளிமனோகர் ஜோஷி அறிவித்தார். அறிவியல்பார்வையற்ற மூடநம்பிக்கைகளை கல்வித்திட்டத்தில் புகுத்துவதற்கு நாடெங்கும் கல்வியாளர்கள், மாணவர்கள், அறிவியல் அறிஞர்களிடையே எழுந்த எதிர்ப்பு முரளிமனோகர் ஜோஷி கூட்டிய கல்வி  அமைச்சர்கள் மாநாட்டிலிருந்து ஏழு மாநில கல்வி அமைச்சர்களை வெளியேற வைத்தது.. ஆனால் இன்றும்கூட தஞ்சை தமிழ்ப்பல்களைக்கழகத்தில் இவை பாடங்களாக தொடர்கின்றன

2004ல் பா.ஜ.க.அரசு தேர்தலில் தோற்றபிறகு,2005ல் ஐக்கியமுற்போக்கு கூட்டணி அரசில்,, யஷ்பால் கல்விக்குழு கல்வியாளர்கள் சமூக ஆர்வலர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என களப்போராளிகளிடம் விவாதித்து ‘குழந்தைகளின் பார்வையில்” கல்வியை மறுசீரமைப்பு செய்தது. தமிழ்நாட்டில் மாநிலக்கல்வித்திட்டம்,மெட்ரிக் கல்வித்திட்டம், ஆங்கிலோஇந்தியக் கல்வித்திட்டம் என பலவிதமாக இருந்த கல்வித்திட்டம் ஒரேபாடத்திட்டமாக சமச்சீர் கல்வித்திட்டமாக்க உதயசந்திரன் தலைமையில் அமைந்தகுழுவால் உருவாக்கப்பட்டு இப்போது நடைமுறைப்படுத்தப்பட்டுவருகிறது.

2014ல் மோடி தலைமையில் அமைந்த பாஜக அரசு பேரா.சுப்பிரமணியம் தலைமையில் ஒருபுதிய கல்விக்கொள்கை வரைவை உருவாக்கியது. கட்டாயக்கல்வி சட்டத்தை கிடப்பில் போட்டது. ஐந்து மற்றும் எட்டாம்வகுப்புக்களில் பொதுத்தேர்வு, மருத்துவக் கல்விக்கு நாடு முழுவதும் நீட் தேர்வு, மனுதர்ம பரம்பரைத்தொழில் முறை ஆகியவற்றைக் கொண்டுவந்தது. அரசியலிலும், சமூக அமைப்பிலும் ஆதிக்கம் செலுத்துவோர் இப்போது இந்துத்வா வெறியர்களாக இருக்கிறார்கள். தங்களது பாசிச கொள்கைகளை நடைமுறைப்படுத்த கல்வியை ஒரு கருவியாக பயன்படுத்த துடிக் கிறார்கள் .அதன் அடிப்படையில் மோடி அரசு 2019ல் இரண்டாம் முறையாக பதவி ஏற்ற இரண்டாம் நாளிலேயே கஸ்தூரிரங்கன் குழுவின் ‘தேசிய கல்விக்கொள்கை வரைவு’ வெளியிடப்பட்டு ஜூன் 2019க்குள் கருத்துக்களை தெரிவிக்குமாறு கோரியுள்ளது. 2017ல் அமைக்கப்பட்ட கஸ்தூரிரங்கன்குழு தனது அறிக்கையை 2018ல் அளித்திருந்தபோதிலும், 2019 தேர்தல் வெற்றிக்காக காத்திருந்த மோடிஅரசு, வெற்றி பெற்றதும் அதை நடைமுறைப்படுத்த முயற்சிக்கிறது ஆனால் இதே மோடி 2001ல் குஜராத் முதல்வராக இருந்து பள்ளிக்கல்விப்பாடங்களுக்கு துணைப்பாடங்களை பரிந்துரை செய்து கட்டாயமாக்கினார். அதன்விளைவாக இன்றைய குஜராத் பள்ளிகளின் நிலைமை மிகப்பரிதாபமாக இருக்கிறது. சென்ற ஆண்டு 12ஆம் வகுப்பில் 63 அரசுப்பள்ளிகளில் ஒருவர்கூட தேர்ச்சிபெற வில்லை! இந்த ஆண்டு 79பள்ளிகளில் தேர்ச்சிவிகிதம் 10%க்கும் குறைவு. பள்ளிகளுக்கு நியமிக்கப்படும் ஆசிரியர்கள் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள். எனவே பள்ளிகளுக்கு வரும் குழந்தைகள் ஆர்.எஸ்.எஸ். சாகாக்களுக்கு அழைத்துச்செல்லப்பட்டு இந்துத்வா நஞ்சூட்டப் படுகிறார்கள்.

இந்த ஷாகாக்களில் குழந்தைகளுக்கு என்ன கற்றுக்கொடுக்கப் படுகிறது என்பதை ‘பாய்ஸ் இன் த பிராஞ்ச்’ என்ற 27 நிமிட குறும்படத்தில் ஆர்.எஸ்,எஸ்ஸின் தலைவர் மோகன்பகவத் கூறுகிறார்: ‘குழந்தைகளுக்கு ‘கஷ்மீர் ஹமாரா ஹை’ என்ற விளையாட்டு கற்பிக்கப்படுகிறது. இந்தவிளையாட்டில் குழந்தைகள்பலர் ஒருவட்டத் தின் மையப்பகுதியில் நின்றுகொள்வார்கள். அந்தவட்டத்துக்குள் இருக்கும் குல்லாய் அணிந்த சிலகுழந்தைகளை குல்லாய் அணியாத மற்ற குழந்தைகள் வட்டத்துக்கு வெளியே தள்ளுவார்கள். இதன்மூலம் குழந்தைகளின் அடிமனத்தில் இந்தவட்டம் இந்துக்களுடையது: அதற்குள் வர முயற்சி செய்யும் குல்லாய் அணிந்தவர்கள் முஸ்லீம்கள். அவர்களை கஷ்மீருக்குள் நுழையவிடக்கூடாது என்ற எண்ணம் ஆழப்பத்திக்கப்பட்டுவிடும்.’ பிஞ்சுமனதில் மதவெறியை வளர்ப்பதுதான் ஷாகாக்களில் கற்றுத்தரப்படும் பாடம். மிகமிக இளம்வயதிலேயே குழந்தைகளை ஷாக்களில் சேர்ப்பது ஏன்? என்ற கேள்விக்கு, குழந்தைகள் தங்கள் பழக்கவழக்கங்கள் உருவாகும் நிலையில் இருப்பவர்கள். குழந்தை நிலையிலிருந்து சிறுவர் நிலைவரை நீட்டிவளைக்கக்கூடிய தகடுபோல் அவர்களது மனம் நம்வசப்படக்கூடிய பருவமது. அந்தப்பருவத்தில் நீங்கள் என்ன கற்றுக்கொடுக்கிறீர்களோ அது அவர்கள் மனங்களில் நீடித்த தாக்கங்களை ஏற்படுத்தும் அதனால்தான் நாங்கள் சிறுவர்களை அவர்களின் குழந்தைப்பருவத்திலிருந்தே ஷாகாக்களில் சேர்த்து விடுகிறோம்’ என்றார் சுதர்சன் இவ்வாறு பயிற்சி அளிக்கப்பட்டவர் களில் மூன்றுபேர் சந்திப் பாதே, புருஷோத்தம், ஸ்ரீபாத் பொரிக்கர். 1992 டிசம்பர் 6ல் அயோத்தியில் பாபர்மசூதியை இடித்ததில் தங்கள் பங்கு பற்றி பெருமையாக பேசுகிறார்கள்:’ நான் பாபர்மசூதியின் கூம்பின் மேல் இருந்தேன். அது ஒருவாழ்நாள் சாதனை’ பொரிக்கர் ’மேலும் கூறுகிறான் . ’நாக்பூர் எதையும் சாதிக்கக்கூடிய பத்துப்பேரை தேர்ந்தெடுத்தது அவர்களில் நானும்ஒருவன் அயோத்தி, காசி, மதுரா ஆகியவற்றை இந்துக்களிடம் ஒப்படைக்கவேண்டும் என்பதை முஸ்லீம்கள் உணரும் நிலை மெல்லமெல்ல உருவாகும். அவர்கள் இந்த நாட்டில் வாழவேண்டும் என்று விரும்பினால் இந்துக்கள் சொலவதை கேட்டேதீரவேண்டும்’

பாதெ என்பவன் “அவர்கள் தாங்களாகவே முன்வந்து ஒப்படைக்கா விட்டால், இந்துக்கள் எந்தெந்தவழிகளில் நடந்துகொள்வார்களோ ,அவற்றையெல்லாம் அவர்கள் சந்தித்தே தீரவேண்டும்’ என்று வெறிக் கூச்சலிட்டான். இதுதான் ஷாகாக்களில் அவர்கள் கற்றுத்தரும் பாடம்! (ஆதாரம்: ஆர்.எஸ்.எஸ்.மூன்றாவது பரிமாணம்-தி கேரவன்’ 2014 மார்ச்இதழில் தினேஷ் நாராயண் கட்டுரை)

இத்தகைய ஒரு அறிவியல்பூர்வமல்லாத ஒரு கல்விமுறையை இந்தியா முழுமைக்கும் கொண்டுசெல்வது ஆர்.எஸ்.எஸ்.ஸுக்கும், பாஜகவுக்கும், மோடி அரசுக்கும் இன்றைய தேவையாக உள்ளது. 21ஆம் நூற்றாண்டில் அறிவியல்சிந்தனைகளோடு பயணிக்கவேண்டிய இந்திய மாணவர்களை பதினெட்டாம் நூற்றாண்டுக்கு பின்கொண்டு செல்லும் ஒரு கல்விக்கொள்கையை உருவாக்க இஸ்ரோ விஞ்ஞானி கஸ்துரிரங்கன் தலைமையில் 11பேர்கொண்டகுழு அமைக்கப்பட்டது. இதில் ஆச்சரியம் என்னவென்றால், கஸ்தூரிரங்கனோ அல்லது இந்தக்குழுவில் உள்ள மற்றவர்களோ கல்விப்புலத்தில் எந்தஒரு அனுபவமும் பெறாதவர்கள்!

கஸ்தூரிரங்கன்இஸ்ரோ விஞ்ஞானி என்பதிலும், அதில் அவர் அனுபவம் உள்ளவர் என்பதிலும் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், கல்விப்புலத்தில் 130கோடி மக்கள்தொகை கொண்ட ஒரு மாபெரும் நாட்டின் கல்விக்கொள்கையை வகுப்பதில் கல்விபற்றிய புரிதல் வேண்டாமா? இந்தக்குழுவினர் ஆர்.எஸ்.எஸ்.ஸின், சங்பரிவாரங் களின் ஷாகா கல்விமுறையை மட்டுமே தெரிந்துகொண்டு ‘தேசிய கல்விக்கொள்கை’யை வகுத்தால் எப்படி இருக்கும் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டாக இந்த வரைவு அமைந்துள்ளது.

கஸ்தூரிரங்கன் குழு இந்த அறிக்கையை தயாரிப்பதற்காக 217 நிபுணர்களை சந்தித்துள்ளதாக வரவு அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. யார் அந்த 217பேர்? கஸ்தூரிரங்கன் வசிக்கும் பெங்களூரு நகரில் மட்டும் 65பேர்! அதவது 30%பேரதேபோல் மும்பையைச் சார்ந்தவர்கள் 45பேர் அதாவது 20%பேர். இவர்கள் நிபுணர்கள்தானா? இது எப்படி அறிவியல்பூர்வமானதாக இருக்கமுடியும்? இந்த மாபெரும் நாட்டில் கல்வித்துறையில் கல்வியியல் நிபுணர்கள் எத்தனைபேர் உள்ளார்கள் என்ற கணக்கும், பட்டியலும் இந்தக்குழுவிடம் இருந்ததா? கஷ்மீர் முதல் கன்யாகுமரிவரை ஏராளமான மாணவர் அமைப்புக் களும், ஆசிரியர் சங்கங்களும் உள்ளபோது இந்தக்குழு சந்தித்த மாணவர் அமைப்பு ஆர்.எஸ்.எஸ்.ஸின் துணை அமைப்பான ஏபிவிபி என்னும்’ அகில்பாரதிய வித்தாயார்த்தி பரிஷத் மட்டும் தானாம். அதேபோல் ஆர்.எஸ்.எஸ்.ஸின் ஆசிரியர் சங்கத்தை சந்தித்துள்ளார்கள் அகில இந்திய அளவில்ஆரம்பக்கல்வி நிலையில் ஏஐபிடிஎஃப், ஐபெட்டொ, பள்ளிக்கல்வி நிலையில் எஸ்டிஎஃப்ஐ, ஏஐஎஸ்டிஎஃப், பல்கலை நிலையில் ஐபெக்டோ மூட்டா, டூட்டா போன்ற முக்கியமான சங்கங்களும், மாணவர் அமைப்புக்களான எஸ்.எஃப்.ஐ, போன்றவை களும் மாநிலஅளவில் செயல்படும் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி போன்ற ஆற்றல்வாய்ந்த அமைப்புக்களும் இந்தக்குழுவினரால் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. ஓர் அறிவியலாளர் தலைமை யிலான குழுவின் இந்த நடவடிக்கை அறிவியல்பூர்வமானதுதானா? இந்தக் கருத்துக்கேட்பு சந்திப்புக்கள் அனைத்துமே கண்துடைப்புக் களாகவே இரகசியக்கூட்டங்களாகவே நடந்துள்ளன.

கஸ்துரிரங்கன் குழுவின் வரைவு அறிக்கையின் உள்ளடக்கத்தைப் பொருத்தவரை 2014ல் மோடி ஆட்சிக்குவந்தவுடன் உருவாக்கப்பட்ட நிதிஆயோக் கல்விதொடர்பான ஆவணம் ஒன்றை தயாரித்தது. இதில் உள்நாட்டு, பன்னாட்டு கர்பரேட் நிறுவனங்களின் நலன்களில் அக்கறையுள்ள உலகவங்கி, உலக வர்த்தக அமைப்பு (WTO/GATs) ஒப்பந்தத்தின்படி இந்திய உயர்கல்வியை பன்னாட்டு முதலாளிகளுக்கு திறந்துவிடுவது முதல் நோக்கம். இந்துத்துத்வா கோரும் மனுதர்மம் உள்ளிட்ட அனைத்தையும் ஏற்கும் காவிக்குடிமக்களை உருவாக்குதல் இரண்டாவது நோக்கம். இனி இவையே நம் இந்திய வருங்காலக் கல்வி. இந்த இரண்டு நோக்கங்களையும் முழுமையாக நிறைவேற்று வதைத்தான் கஸ்தூரிரங்கன் குழுவின் தேசிய கல்விக்கொள்கை வரைவு பரிந்துரைத்துள்ளது.பள்ளிக்கல்வி பற்றிய இதன் பரிந்துரைகள் என்ன?

பரிந்துரை1:.பள்ளிக்கல்வி 4+3+3+5 (பக் 75-அத்தியாயம் பி4 1.1)

குழந்தையின் ஆரம்பக்கல்வி 5ஆண்டுகள்,. மூன்றுவயது முதல் ஏழு வயதுவரை. அதாவது பிரி கேஜி முதல் இரண்டாம் வகுப்புவரை. ஆதாரக்கல்வி. பிறகு மூன்று ஆண்டுகள் தொடக்க நிலைக்கல்வி. பின் 6 முதல் 8வகுப்புவரை மூன்று ஆண்டுகள் நடுநிலைக்கல்வி. எட்டாம்வகுப்போடு பொதுக்கல்வி அமைப்பு முடிந்துவிடுகிறது
.
பரிந்துரை 2. 9 முதல் 12 வகுப்புவரை நான்கு ஆண்டுகள் உயர் நிலைக்கல்வி 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புவரை நான்கு ஆண்டுகளில் எட்டு செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும். (பக். 76. பத்தி 4.1.1)

பரிந்துரை 3. 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளோடு, 3, 5, 8 ஆம் வகுப்புக்களுக்கும் அனைத்து மாணவர்களுக்கும் அகில இந்திய அளவில் பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டு கல்வி- திறன்கள் பரிசோதிக்கப்படவேண்டும் (பக்.107 பத்தி 4.9.4)

பரிந்துரை 4. இலவச கட்டாயக்கல்வி உரிமைசட்டத்தை 12ஆம் வகுப்புவரை நீட்டிப்பது. (பக்.72.பத்தி 3 .13) பள்ளிக்கல்வியில் உதவும் மனம்கொண்ட தனியாரை அனுமதித்தல். (பக்.71.பத்தி. 3.12)

பரிந்துரை 5. கல்வி உரிமைச்சட்டத்திம் மாற்றம் கொண்டுவந்து , மாற்றுக்கல்விக் கூடங்களான இந்தியாவின் புராதன குருகுலம், மதரஸா பாடசாலைகளையும் அங்கீகரித்து கட்டுமானங்கள், கற்றல்வெளிப்பாடுகள் இவற்றைவிட யாவரையும் கல்வியில் ஒருங்கிணைத்தல் என்பதை மனதில்கொண்டு குறைந்தபட்ச தர நிர்ணயம் மூலம் தக்கவைத்தல் வேண்டும். (பக் 71. பத்தி. 3.12.)

பரிந்துரை.6 பள்ளிபாடமுறையின்படியான பயிற்றுவித்தல் இந்தியா முழுவதும் ஒரே பாடத்திட்டத்தின்படி அமையும். (பக்.101. பத்தி 4.8) பாடநூல்கள்தேசியகல்விஆராய்ச்சி நிறுவனம் மூலம் வெளியிடப்படும். மாநிலக்கல்விஆராய்ச்சி நிறுவனங்கள் பாடநூல்களை தயாரிக்கலாம். ஆனால், தேசிய கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் பாடத்திட்டப்படியே அவை இருக்கவேண்டும். (பக்.102 பத்தி. 4.8.2.)

பரிந்துரை 7. தேசிய அளவில் உயர்கல்வி அளிக்கும் கல்விமுறையில் மூன்றுவகை பல்கலைக்கழகங்கள் அமையும். முதல்வகை பல்கலைக்கழகம் ஏராளமான ஆய்வுகளையும், குறைந்தபட்ச கற்பித்தலையும் கொண்டிருக்கும். இரண்டாவதுவகை ஏராளமான கற்பித்தலையும், குறைந்தபட்ச ஆய்வுகளையும் கொண்டிருக்கும். மூன்றாவதுவகை பல்கலைப்பட்டம் மட்டுமே அளிக்கும். பல்கலைக்கழகம் என்னும் சொல்லாக்கம் உள்ளதோ இல்லையோ, பெரும்பாலான கல்லூரிகள் பட்டம் வழங்கும் தன்னிச்சையான நிறுவனங்களாக்கப்படும். (பக். 219.பத்தி 10.13)

பரிந்துரை 8 தேசிய தேர்வுக்குழுமம் ((National Testing Agency NTA) விரி வாக்கப்பட்டு, மேலும் பலப்படுத்தப்படும். அனைத்துவகை கல்லூரிகள், பல்கலைக்கழகங்களின் கல்விக்கும் நுழைவுத்தேர்வுகள் கட்டாயமாக் கப்படும். உயர்கல்வி நிறுவனங்களின் சேர்க்கை அனைத்தும் தேசிய தேர்வுக்குழுமத்தின்கீழ் கொண்டுவ்ரப்படும். இதற்காக கல்வியாளர்கள், உளவியலாளர்கள், தேர்வுவல்லுனர்கள் நியமிக்கப்படுவார்கள். (பக்.109. பத்தி 4,6,9)

பரிந்துரை 9. பாரதப்பிரதமரின் தலைமையில் ஒருங்கிணைந்த ஒற்றை தேசிய கல்விக் கமிஷன் ( ராஸ்ட்ரிய ஷிக்‌ஷா ஆயோக்) நிறுவப்படும். (பக்.391. அத்தியாயம் 23) இந்த அமைப்பு இந்தியாவின் அனைத்துவகை கல்வியின் உயர்நிலை அதிகார அமைப்பாக செயல்படும். சில (தொடர்புடைய) அமைச்சர்கள், அதிகாரிகள், சில (தேர்வுபெற்ற) முதலமைச்சர்கள் இக்குழுவில் இருப்பார்கள். இதுவே இந்தியக்கல்வி குறித்த முடிவுகள் எடுக்கும் அதிகாரம்பெற்ற ஒரே அமைப்பாக இருக்கும். (பக். 393. பத்தி. 23.5)

பரிந்துரை 10 இந்திய புராதனமொழிகளை கற்கவும், பாதுகாக்கவும் கல்வியில் தக்கஇடம் தரப்படவேண்டும். இதற்கான பிரத்யேகத் திட்டங்கள் தீட்டப்பட்டு அவற்றையும் அவற்றின் இலக்கியங்களையும் அடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துச்செல்வதிலும், அம்மொழிகளை பலப்படுத்தி தக்க வைப்பதிலும் தனிகவனம் செலுத்தப்படும். தேசிய அளவில் பாலி, பிராகிருதம், பெர்ஷிய்\மொழி ஆகியவற்றுக்கான கல்விவளர்ச்சி நிறுவனங்கள் தொடங்கப்பட்டு, அதை ஆதரிக்கும் அனைத்துவகை கல்விக்கூடங்களுக்கும் நிதி உதவி உட்பட அனைத்து வசதிகளும் செய்துதரப்படும். (பக். 287 பத்தி. 23.4)

பிராகிருத மொழி என்பது சமஸ்கிருதமே. பாலிமொழியும்கூட சமஸ்கிருதத்தின் ஒரு கிளைமொழியே. இந்த மொழிகளை வளர்ப்பதில் கல்விக்குழு காட்டியிருக்கும் அக்கரையை செம்மொழியான தமிழ்மொழிமீதோ, இதுபொன்ற பிற இந்திய மொழிகள்மீதோ ஏன் காட்டவில்லை? தமிழ் செம்மொழி உயர் ஆய்வுமையத்தை முடக்கியும், தமிழக அகழ்வாராய்ச்சிகளை புறக்கணித்தும் வரும் போக்கை முடிவுக்குக்கொண்டுவந்தாக வேண்டும். மாநிலமொழிகளை கல்வியின் அங்கமாக இணைக்கும் குறைந்தபட்ச செயல்திட்டத்தைக் கூட கல்விக்குழு முன்மொழியவில்லையே, அது ஏன்?

பரிந்துரை 11. தேசிய கல்விக்கொள்கை வரைவு பக்கம் 224ல் கூறுகிறது: Among the emient scholars of Takshasila and Nalanda were the philosopher and economist Chanakya; The Sanskirit Grammaraian, mathematitician, and discoverer of Generative Grammer, Panini, the leader and Stateman Chandra Gupta, Maurya And the mathematician and astronomer Aryabhatta”. வரலாற்று ஆதாரங்கள் ஏராளம் உள்ள நாளந்தாவையும். வரலாற்று ஆதாரங்கள் இல்லாத, வெறும் இலக்கிய ஆதாரம் மட்டுமே உள்ள தக்‌ஷசீலத்தையும் இந்த வரைவு ஒன்றாகப்பார்ப்பது இதன் ஆய்வுத்தன்மையை கேலிக்குரியதாக ஆக்குகிறது. அது மட்டுமல்ல, சாணக்கியனும், பாணினியும், நளந்தாவிலும் , தக்‌ஷசீலத்திலும் படித்தவர்கள் என்பதுபோன்ற மயக்கத்தையும் உருவாக்குகிறது. பௌத்த பிக்குகளால் நிறுவப்பட்டது நாளந்தா என்பதை மறைப்பதும், நாளந்தாவில் படித்து வெளிவந்த அறிஞர்களில் பார்ப்பணிய பின்புலம் உள்ளவர்களும், மனுதர்மத்தை தூக்கிப்பிடிப்பவர்களும் இருந்தார்கள் என்ற கற்பிதத்தை உருவாக்கு வதற்குத்தானே?

குப்தர் காலத்தில் விசாகதத்தனால் எழுதப்பட்ட ‘முத்ரா ராட்சசம்’ என்ற நாடகத்தில் தக்‌ஷசீலம் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நாடகத்தின் கதாநாயகனே சாணக்கியன் தான். ஆனால் தகஷசீலா பல்கலைக்கழகம் துவக்கப்பட்டதற்கோ, அங்கு சாணக்கியன் படித்ததற்கோ வரலாற்று ஆதாரங்கள் எதுவும் இல்லை. ஆனால், நாளந்தா பல்கலைக்கழகத்தில் தர்க்கம், தத்துவம், மருத்துவம் போன்ற பிரிவுகளில் பயிற்சிபெறும் வாய்ப்புக்களும், சீனா, கிரேக்கம்போன்ற நாடுகளிலிருந்து பலர் கற்க வந்ததற்கான சான்றுகள் உள்ளன. கி.பி. ஏழாம் நூற்றாண்டைச்சார்ந்த ஹர்ஷ்வர்த்தன் யுவான்சுவாங்-க்குக்கு எழுதிய கடிதத்தில் அசோகர் காலத்தில் நாளந்தா பல்கலைக்கழகம் இருந்ததாக குறிப்பிட்ட சான்றுகள் உள்ளன.

இந்தப்பின்னணியில் கஸ்தூரிரங்கன் குழுவின் பரிந்துரைகள்மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிய்ன் பொதுச்செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி மத்திய அரசின் மனிதவளமேம்பாட்டுத்துறை அமைச்சர் நிஷாங்க் அவர்களுக்கு அனுப்பியுள்ள உற்று நோக்கல் களில் ‘பள்ளிக்கல்வித்துறை’ தொடர்பான கருத்துக்களை பரிசீலிக்கவேண்டும்.

2 பள்ளிக்கல்வி

1 தே.க.கொ.வரைவு தேசிய கல்வியறிவு இயக்கத்தின்(NLM) தாக்கங் களையும், அதன் குறைபாடுகளையும் மதிப்பீடு செய்யவில்லை. அதன்விளைவாக தேசிய கல்வியறிவு இயக்கம் நடைமுறைப் படுத்தப்பட்டு, சமூகக்குழுக்கள், வர்க்கங்கள் மற்றும் சமுதாயங்கள் முழுவதிலும் கல்வியறிவின் அளவுகள் உயரும் என்ற இலக்குகளின் உண்மைத்தன்மை மற்றும் ஆதாரமான பயணவரைபடத்தோடு இந்த வரைவு பொருந்தவில்லை. இந்தியாவின் தற்போதைய கல்வியறிவு வீதமான 74.24% ஸ்ரீலங்கா உள்ளிட்ட பல வளரும் நாடுகளுக்கும் வெகுதொலைவுக்குப்பின்னால் உள்ளது. எனவே, தே.க.கொ.வரைவு தேசிய கல்வியறிவு இயக்கம் சந்தித்துவரும் சவால்களின்மீது போதுமான கவனம் செலுத்தாதது ஏமாற்றமளிக்கிறது.

2 ஊட்டச்சத்துக்குறைபாடு அதுபெறவேண்டிய தகுதிக்கேற்ப முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. இந்தியா குழந்தைகளிடையே ஊட்டச்சத்துக்குறைபாடு பற்றிய அச்சம்தரும் புள்ளிவிவரங்களைத் தருகிறது.உலக அளவிலான ஊட்டச்சத்துக்குறைபாட்டு புள்ளிவிவரங் களின் பட்டியலில் இந்தியா 46.6 மில்லியன் குழந்தைகளுடன் உச்சத்தில் இருக்கிறது. (உலக ஊட்டச்சத்து அறிக்கை புள்ளிவிவரங்கள் 2018) தே.க.கொ.வரைவு, “85%க்கும் மேற்பட்ட, படிப்படியாக திரண்டுவளரும் மூளைவளர்ச்சி ஆறுவயதுக்கும் முன்பே நடக்கிறது” (பக்கம் 47. அத்தியாயம் 1) என்று விவாதிக்கும்போது, இத்தகைய அவமானம் நிறைந்த உயர்வீதத்திலான ஊட்டச்சத்துக்குறைபாடு பரந்த, பெரும்பான்மையான இந்தியக்குழந்தைகளின் மூளைவளர்ச்சியை தடுக்கும் பாத்திரத்தை வகிக்கிறது என்பதை காணத்தவறுகிறது. மதிய உணவுத்திட்டத்தின் குறைபாடுகள் மீதோ அல்லது அதற்கான நிதி ஒதுக்கீடுகளின் போதாமை மீதோ எந்தவிதமான உற்றுநோக்கல்களும் இதில் இல்லை. உண்மையில் முன்பருவக்குழந்தைப்பராமரிப்பு மற்றும் கல்வி ((Early Childhood Care and Education –ECCE) பற்றிய அத்தியாயம் (Chapter I) ஊட்டச்சத்துக்குறைபாடு என்ற பிரச்சனையை ஒழிக்க போதுமான பொதுஆதாரவளங்களும், முயற்சிகளும் தேவை என்று பொறுப்பேற்றுக்கொள்வதில் இழிவானவகையில் மௌனமாக உள்ளது. தே.க.கொ.வரைவின் இந்தப்பிரிவில் உள்ள கருத்தியலான பகுத்தறிவு களநிலவரங்களோடும், மெய்யான சவால்களோடும் மிகக்குறைந்த தொடர்புகளையே கொண்டிருக்கிறது.

3 ஆரம்ப நிலையில் மும்மொழிக்கொள்கை ஏற்றத்தாழ்வானது, நடைமுறைப்படுத்த முடியாதது, மாணவர்களுக்கு அதிக சுமையை ஏற்றுவது. மொழித்திறன்கள் அறிவாற்றல்திறன்களின் வளர்ச்சிக்கு நடுவில் உள்ளதால், உருவாகும் நிலையில் மும்மொழித்திணிப்பு ஏற்றத்தாழ்வானதும், மாணவர்களுக்கு அதிக சுமையை ஏற்றுவதும் ஆகும். ஒருமூன்றாவதுமொழியை இடைநிலைக்கல்வி நிலையில் அறிமுகப்படுத்துவதில் –அதற்குமுன்னதாக அல்ல_ ஒருசிறப்பு உள்ளது. ஆரம்பக்கற்றலில் அனைத்து அழுத்தங்களுடனும் தாய்மொழிதான் (வாழ்விடத்தின்மொழி) சம்பந்தப்பட்டிருக்கவேண்டும்.

4 தே,க,கொ,வரைவு, அறிவியல்கல்வியில் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் கொள்கைக்குறைபாடுகளை கணக்கில் எடுத்துக்கொள்ளத் தவறி விட்டது. பள்ளிகள் குறைவான ஆசிரியர்கள், அலுவலர்களைக் கொண்டதாகவும், போதுமான நிதியின்றி செயல்படவேண்டியவை களாகவும் ஆக்கப்பட்டுள்ளன.அறிவியல்களில் நோக்கங்களைக் கற்றுக் கொள்வதை நிறைவேற்றுவதில் செய்முறைக்கற்றலும், ஆய்வுக்கூடங் களும் ஒருங்கிணைந்தவை. சிலபள்ளிகள் எல்லா மாணவர்களுக்கும் விருப்பமான செய்முறை நேரங்களைத் தருவதற்கான முறையான ஆய்வுக்கூட உள்கட்டமைப்புக்களை கொண்டுள்ளன. பள்ளி ஆய்வுக் கூடங்கள் இருப்பதை உத்தரவாதப்படுத்தும் திட்டமிட்ட சரிபார்த்தல் முன்னேற்பாடுகள் இல்லை. பல்வேறு இந்தியமொழிகளில் தரமானபாட நூல்களுக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. தே.க.கொ.வரைவு அறிவியல்கல்வி யில் வளர்ந்துவரும் நெருக்கடியை புறக்கணிக்கிறது.

5 தே.க.கொ.வரைவு ஆய்வறிவுசார்ந்த உணர்வுகளின்மீதான எதிர்ப்புணர்வு தாக்குதல்களுக்கு தீர்வுகாணவில்லை. ஆய்வறிவு சார்ந்த உணர்வுகளுக்கு எதிரான இருண்மைவாதமும், எதிர்ப்புணர்வும் கலாச்சாரத்தின் ஒவ்வொரு நிலையிலும் வளர்த்தெடுக்கப்படுகின்றன. பொதுமக்களுக்கான அலுவலகங்களில் உள்ள பிரதிநிதிகள் அறிவியல் பூர்வமற்ற சிந்தனைகளையும்,மதிப்புக்களையும் அடிக்கடி வளர்த்து வருகிறார்கள் என்று கேள்விப்படமுடிகிறது. ஒரு தேசிய கல்விக்கொள்கை,மக்களுக்கும், அறிவியல்சிந்தனைகளுக்கும் மத்தியில் உள்ள இடைவெளியை, அறிவியலை தீவிரமாக ஆதரித்து சுறுசுறுப்பாக செயல்படுவதன்மூலம் தீர்வுகாணவேண்டும் என்று எதிர்பார்க்கப்படு கிறது. அரசுகள் அறிவியல்சிந்தனைகளில் ஒரு விழிப்புணர்வை வளர்க்கவேண்டும் எனவும், மக்கள் ஊடகங்கள் மூலம் அறிவியல் சார்ந்த உணர்வுகளை மக்களுக்குள் ஆழப்பதியவைக்க உதவவேண்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றன. தே.க.கொ.வரைவு அறிவியல் உணர்வுகளின்மீது வளர்ந்துவரும் அச்சுறுத்தல்களைப் புறக்கணிக்கிறது.

6 தே.க.கொ.வரைவு அரசால் நடத்தப்படும் பள்ளிகளின் தோல்வி களுக்கான காரணங்களை விசாரணை செய்யவில்லை. பள்ளிக்கல்வியில் தனியார்துறை ஆதிக்கம் செலுத்தும்போது,அரசு நடத்தும் பள்ளிகள் அவற்றின் தரத்திலும், மாணவர் சேர்க்கையிலும் கடும்வீழ்ச்சி அடந்துள்ளன. கடந்த பத்தாண்டில் அரசுப்பள்ளிகள் எச்சரிக்கையளிக்கும் வீதத்தில் மாணவர்கள் இடைநிற்றல்களையும் காட்டுகின்றன. சில விதிவிலக்குகளைத்தவிர, அரசுப்பள்ளிகள் பொதுமக்களால்விரும்பபடாதவைகளாகவும்,பயன்பாடற்றவைகளாகவும், கல்வி உரிமைச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு வலிவிழந்த கருவியாகவும் ஆகிவருகின்றன. இந்த ஒட்டுமொத்த வீழ்ச்சிக்கான காரணங்கள் தே.க.கொ.வரைவில் முறையாக புலனாய்வு செய்யப்படவில்லை. இந்தத்தோல்விகளைப் பகுப்பாய்வுசெய்து, அரசுப்பள்ளிகளை வலுப்படுத்துவதற்கான உறுதியான வழிகளை கூறுவதற்குப்பதிலாக, இந்த தே.க.கொ.வரைவு பலவகைத்தன்மை யையும்,பொதுமக்கள், தனியார் பங்காண்மையை முன்வைக்கிறது.

7 ‘பள்ளிகளின் வீணழிவுத்தடுப்பு’ சமுதாயத்தில் அடிநிலைவகுப்பி னர் உள்ளூரில் கல்வி பெறுதலைஅச்சுறுத்துகிறது. எந்தப்பள்ளிகளில் 50க்கும் குறைவான மாணவர்கள் உள்ளார்களோ, அந்தப்பள்ளிகளை ‘பள்ளி வளாகங்களோடு இணைத்தல்’(அத்தியாயம் 7 தே,க,கொவரைவு) என்றபரிந்துரைஏற்கத்தக்கதல்ல. அத்தகைய நகர்வு தொலைதூரத்திலும் பழங்குடிப்பகுதிகளிலும் ஒடுங்கியுள்ள சமுதாயத்தின் அடிநிலை மாணவர்கள் உள்ளூர்ப்பகுதிகளில் கல்விபெறுவதை குறிப்பாக இத்தகைய இணைப்புக்கள் பாதிக்கவைக்கும். பள்ளிவளாகத்தின் ஆரக்கோடு 3 கி.மீ என்பது பயணம் செய்வதற்கான வழிமுறைகள் இல்லாத மாணவர்கள் தேடிச்சென்று சேர்வதற்கு மிகவும் பரந்தவை ஆகும். இத்தகைய பரிந்துரைகள் அவசர அவசரமாக ஏற்றுக் கொள்ளப்படுமானால், அது அதிகமான மாணவர் இடைநிற்றலுக்கு வழிவகுக்கும், மேலும் கல்வி உரிமைச்சட்டத்தை அரித்துவீழ்த்திவிடும். இன்னும் ஒருபடிமேலாக இது உடற்குறைபாடுள்ள குழந்தைகளுக்கு மிகவும் பாதகமானதாகும்.

8 கல்வி உரிமைச்சட்டத்தின் பிரிவு 12 (சி)க்கு முன்மொழியப்பட்ட திருத்தம்: கல்வி உரிமைச்சட்டம் 12(சி)பிரிவுக்கு முன்மொழியப் பட்டுள்ள திருத்தம் ’அனுகூலமற்ற’ வகையினருக்கு 25% இட ஒதுக்கீட்டை இல்லாமல் ஆக்குவது பிற்பட்ட வகுப்புக்களிலிருந்தும், சமூகங்களிலிருந்தும் வரும் குழந்தைகள் தரமான கல்விபெறுவதை இழக்கச்செய்துவிடும்.

9 பலவகைத்தன்மைகளை வரவேற்பது ஒரு தவறான நடவடிக்கை, ஏனெனில் அது ‘சமமான விளைவுகள்’ என்ற தேசிய பாடத்திட்ட கட்டமைப்பின் நோக்கத்தை தோற்கடிக்கிறது, மற்றும் கற்பிக்கும் கடைகளை ஊக்குவிக்கிறது. இந்த தே.ககொ.வரைவு பள்ளிகளில் பலவகைத்தன்மை என்பதை வரவேற்பதில் குறுகிய பார்வை கொண்டதாக இருக்கிறது. அது பல்வேறுவகையான மாறுபட்ட பள்ளிகளை (வெளிப்படையாக மதக்கல்வியை அளிக்கும் பள்ளிகள் உள்ளிட்டவற்றையும்) குறிப்பிடுகிறது. மேலும் திண்ணைப்பள்ளிகளை யும்கூட. பொதுநிதிஅளிக்கப்படும் பள்ளிகளின் உள்கட்டமைப்பு குறைபாடுகளுக்கு ஒரு சாத்தியமான மாற்றாக குறிப்பிடுகிறது. பலவகைத்தன்மையான பள்ளிகள், குருகுலங்களையும், மதரஸாக் களையும், திண்ணைப்பள்ளிகளையும் இன்னபிறவற்றையும் உள்ளடக்கியுள்ளது. அவை கற்பித்தல்வகை குறிக்கோள்களில் கற்றல்வெளிப்பாடுகளில் சமமற்றதன்மைக்கும்,மேலும் தனியார்மயத் துக்கும் வழிவகுக்கும். இது 2005 தேசிய பாடத்திட்ட கட்டமைப்பின் நோக்கமான ‘சமமான விளைவுகள்’ என்பதையும்கூட அரித்து வீழ்த்திவிடும். இந்த தே.க.கொ.வரைவு, கல்வி உரிமையை அர்த்தமுள்ளதாக்க தேவைப்படும் குறைந்தபட்ச தரத்தைக்கூட பரிந்துரைக்கத் தவறிவிட்டது.

10 தேசிய தனிபயிற்சி ஆசிரியர் திட்டம் (National Tutor Programme –NTP) மற்றும் கற்பித்தலில் இழப்பீடுசெய்யும் உதவியாளர் திட்டம் (Remedial Instructional Aides Programme- RIAP) ஆகியவை கற்பித்தலில் தரமான நிலைமதிப்பை நிராகரிப்பவை. தேசிய தனிப்பயிற்சி ஆசிரியர் திட்டத்தையும், கற்பித்தலில் இழப்பீடு செய்யும்திட்டத்தையும் சிறப்பாகசெயல்படும் மாணவர்களை ‘நீதிக் கதை கற்பித்தலுக்குள்’ கொண்டுவந்து அதை நிறுவனமயமாக்கி, ஒருமாணவனின் செயல்பாட்டை வளர்த்தெடுப்பது தவறான பயிற்சி ஆகும்: ஒரு மாணவன் அவர்களது ஆசிரியருக்கு இணையானவன் அல்ல.அத்தகைய கற்பித்தல் அதிக அனுபவத்தையும், அத்தகைய மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை அறிந்துகொள்வதில் கூருணர்வையும் கோருகின்றன. ஆசிரியர்கள் அத்தகைய மாணவர்கள் சந்திக்கும் கற்றல்சவால்களுக்கு எதிர்வினையாற்ற பயிற்சியளிக்கப்பட் டுள்ளார்கள்: அவற்றிலிருந்து மீண்டுவர மாணவர்களுக்கு உதவுகிறார் கள்.பயிற்சிபெற்ற ஆசிரியர்களை நீதிக்கதை கற்பிப்பவர்களையும், குருவுக்கு ஒப்பானவர்களையும்கொண்டு மாற்றியமைப்பது அத்தகைய மாணவர்களுக்கு தரமான கற்பித்தலைப் புறக்கணிப்பதாகும். கூடுதலாக, ‘இழப்பீடு’ என்பது ஒருகுழந்தையிடம் உள்ள குறைபாட்டை குறிப்பதாகும். அது ‘இழப்பீடுசெய்யப்படவேண்டும்’ அத்தகைய இழப்பீட்டிலிருந்து பிரித்துவைக்கப்படும் குழந்தைகள் எதிரான உளவியல் தாக்கங்களுக்கு உள்ளாவார்கள்.

11 பள்ளி நிர்வாகக்குழுவில் பெற்றோர்கள். பெற்றோர்கள் கல்வியில் சட்டபூவமான உரிமையுள்ளவர்கள். இருந்தபோதிலும் அசிரியர்களின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்யும் பாத்திரத்தை அவர்களுக்கு அளிப்பது நலன்களில் சச்சரவுகளுக்கு வழியமைத்துவிடும்.

12 வாரியத்தேர்வுகளை நீர்த்துப்போகச்செய்வதும், அவற்றை NTA நடத்தும் சோதனைகளைக்கொண்டு மாற்றியமைப்பதும் மாணவர்கள்மீது கல்விச்சுமைகளை கூடுதலாக்கும்: வணிக மயத்தை ஊக்குவிக்கும். சோதனைகளும், போட்டித்தேர்வுகளும் தனியார் பயிற்சிக்கடைகளோடும், ஐயப்பாட்டுக்கு இடமளிக்கின்ற கையேடுகளையும்,பதில்களுடன்கூடிய கேள்வித்தாள்களை வெளியிடு வோரோடும் தொடர்புடைய மிகவும் வணிகமயமாக்கப்பட்ட நடவடிக்கைகளின் சூழலை உருவாக்கியுள்ளது. வாரியத்தேர்வுகளை நீர்த்துப்பொகச்செய்வதும், NTA சோதனைகளை சேர்ப்பதும் இந்த சுரண்டும்தன்மையுள்ள வணிகத்தை மேம்படுத்துவதை மட்டுமே செய்து, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்மீது நிதிச்சுமைகளை அதிகரிக்கும்.

13 உள்ளீடுகள்மீது வலியுறுத்தல்கள் இல்லாதது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலன்களுக்கு எதிரானது. கற்றல்வெளிப்பாடுகளை நிறைவேற்றுவதை உறுதிப்படுத்த போதுமான உள்கட்டமைப்பு, ஆசிரியர்கள்,மற்றும் கற்றலுக்கான ஆதாரவளங்கள் மீது கொள்கை கட்டாயம் அழுத்தம் தரவேண்டும். உள்ளீடுகளுக்கான கவனத்தை ஒழுங்காற்று அளவுருக்களுக்கு வெளியே விட்டுவிட்டதன் மூலம் இந்த தே.க.கொ.வரைவு மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் உரித்தான போதுமான மற்றும் பாதுகாப்பான கற்றல் சூழ்நிலை களின்மீது அற்பமான மரியாதையை காட்டுகிறது. வெளிப்பாடுகளின் அளவின் அடைப்படையை மட்டுமேகொண்டு ஒழுங்குமுறையை வரையறுக்கமுடியாது. முன் நிபந்தனைகளும் (உள்ளீட்டு தேவைகள்) தோல்விக்கான காரணங்களும், அல்லது திசைமாறல்களும் கட்டாயம் முழுமையாக ஆய்வுசெய்யப்பட வேண்டும், மேலும் கொள்கை மற்றும் ஒழுங்காற்றும் நடைமுறை ஆகிய இரண்டுக்கும் அழுத்தம் தரப்படவேண்டும்.

14 மதிப்பியல்கல்வி நவீனகால, ஜனநாயக மற்றும் மதசார்பற்ற கண்ணோட்டத்துடன் ஒத்துவராத தேர்ந்தெடுக்கப்பட்ட சிந்தனை களை வழிபடுகிறது. பள்ளிக்கல்வியில் உள்ள ஒழுக்கம் மற்றும் நீதிநெறி பற்றி சிந்தித்து முடிவுசெய்வதும்(4,6,8) இந்திய அறிவாண்மை (4,6,9) யின் ஆக்கக்கூறுகளும் ஒருகுறுகிய நீதிநெறி திசைகாட்டியை சுட்டிக்காட்டுகின்றன. அங்கு சிந்தனைகளும் புள்ளிவிவரங்களும் பொறுக்கியெடுக்கப்பட்டு வழிபாடு செய்யப்படுகின்றன. இந்திய அரசியல்சாசனம் ஒருகுறுகிய பாவமன்னிப்பு அளிக்கப்படுகிறது., இந்தியக்குடியரசின் விழுமியங்களை முழுமையற்ற சித்திரமாக முன் நிறுத்துவதற்காக மதசார்பின்மை மற்றும் சோசலிச கொள்கைகள் விடப்பட்டுள்ளன. இந்தியா ஒரு பன்முகத்தன்மைகொண்டதாகவும், வரலாற்றுபூர்வமாக படிப்படியாக வளர்ந்துவரும் உண்மையாகவும் உள்ளபோது, அதன் வளர்ச்சியின் வரலாற்றுப்படிநிலைகள் பண்டைய இந்தியாவின் தத்துவம், யோகா, கணிதம், இலக்கியம் மற்றும் அரசியல் சிந்தனைகளின் வெறும் கட்டுரைப்பொருள்களின் எடுத்துக்காட்டுக்கள் மூலம் குழப்பப்பட்டுள்ளது. உண்மையில் இந்த தே.க.கொ.வரைவின் மதிப்பியல்கல்வி பார்ப்பனத்தன்மையின் நற்குணத்தை பிரச்சாரம்செய்யும் பிணைக்கைதியைப்போல தோற்ற மளிக்கிறது. அதேவேளையில் அம்பேத்கர் மற்றும் நெல்சன் மண்டேலா போன்றவர்களிம் சாதியத்துக்கு எதிரான, இனவெறிக்கு எதிரான குரல்களும் ஓர் அடையாளபூர்வ திசைதிருப்பல்களாக உள்ளடக்கப் பட்டுள்ளன. பள்ளிக்கல்வியின் மிகவும் தீவிரமான ஆகக்கூறுகளில் ஒன்றாக மதிப்பியல்கல்வி இருக்கும்போது,, எப்போதையும்விட இன்றைய காலங்களில் மிகவும் பொருத்தமாக, இந்திய அரசியல்சாசனத்துக்கும், இந்தியப்பொதுவாழ்வில் சுறுசுறுப்புடன் செயல்பட்டுக்கொண்டுள்ள ஒட்டுமொத்த தத்துவார்த்த தொகுப்பின் பிரதிநிதிகளாக உள்ள நவீன இந்தியத்தலைவர்களின் சிந்தனை களுக்கும் இந்த தே.க.கொ.வரைவு மிகவும் ஆழ்ந்த கவனத்தை செலுத்த கடமைப்பட்டுள்ளது.

15 அனைவரும் அடையப்பெறுவது: இந்த தே.க.கொ. வரைவில் அனைவரும் அடையப்பெறுவது என்ற கொள்கை காணப்படவில்லை. “அடையப்பெறுவது” என்பது மரபுசார்ந்த வார்த்தையால் புரிந்துகொள்ளப் பட்டுள்ளது .மேலும் குதித்துப்பாய்தல், கைப்பிடிக்கிராதி மற்றும் கழிப்பிடங்கள் என்பதற்குள் தன்னை சிறைப்படுத்திக்கொண்டுள்ளது.

16 இயலாமை நபர்களின் உரிமைச்சட்டம்: இந்த தே.க.கொ.வரைவு, இயலாமை நபர்களின் உரிமைச்சட்டம் 2016ஐ ஒப்புக்கொள்ளவே இல்லை. அது, இயலாமையுடன் கூடிய குழந்தைகளுக்கும், வயதுவந்தவர்களுக்கும் பல்வேறுபிரிவுகளைக் கொண்டுள்ளது

பள்ளிக்கல்வித்துறை சார்ந்த பரிந்துரைகள் மீது அறிவியல் மற்றும் வரலாற்றுபூர்வமான கருத்துக்களை தெரிவித்திருக்கும் தோழர் யெச்சூரி அவர்கள் ,கல்வியில் அனைத்தையும் மத்தியத்துவப்படுக்குகின்ற, வணிகமயமாக்குகின்ற, மதமயமாக்குகின்ற இந்த தேசிய கல்விக்கொள்கை வரைவை இப்போதுள்ள வடிவத்தில் ஏற்றுக்கொள்ளமுடியாது என்றும், ஒரு கல்விக்கொள்கைய உருவாக்க ,பரந்த அளவிலான கலந்தாலோசனைகள் தேவை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அவர் தெரிவித்துள்ளவாறு மத்திய பா.ஜ.க.அரசு இந்தியாவின் மதிப்புமிக்க கல்வியாளர்கள், ஆசிரியர் அமைப்புக்கள், மாணவர் அமைப்புக்கள், கல்வியின்மீது அக்கறைகொண்டுள்ல பொது அமைப்புக்கள் ஆகியவற்றோடு கலந்துரையாடி, அவர்களின் கருத்துக்களைத்தொகுத்து,பின்வரும் அம்சங்களைக் கணக்கில்கொண்டு புதிய மாற்றுக்கல்விக்கொள்கையை உருவாக்க முன்வரவேண்டும்.:

1. அனைத்துக்குழந்தைகளுக்கும் 18 வயதுவரை அரசே சிறந்த, தரமான கல்வியை அளிக்கவேண்டும். பின்லாந்து போன்ற மற்ற நாடுகளில்உள்ளதுபோல அருகமைப்பள்ளிகளைக்கொண்ட பொதுப்பள்ளிகள் இருக்கவேண்டும்.
2. கல்விகான முழுநிதியையும் அரசே செலவழிக்கவேண்டும். கோத்தாரி கல்விக்குழு 1968ல் நிர்ணயித்தவாறு தேசவருமானத் தில் குறைந்தபட்சம் 6% கல்விக்காக ஒதுக்கீடு செய்யப்படவேண்டும்.
3. கற்பித்தல் மொழியாக தாய்மொழி/பிராந்தியமொழி ஒன்றே இருக்கவேண்டும்.
4. கல்வித்திட்டம், பாடத்திட்டம் உள்ளடக்கம், கற்பித்தல்முறைகள் அனைத்தும் நம் அரசியல் சாசன விழுமியங்களை ஒட்டியே சிறந்த, தரமுடையதாக அமைக்கப்படவேண்டும்.
5. கல்வியில் முன்னேறிய நாடுகள் அனைத்திலும் உள்ளதுபோல், தேர்வுகளும், மாணவர்களை அதேவகுப்பில்மீண்டும் படிக்க வைப்பதும் கைவிடப்படவேண்டும். நாடு முழுமைக்கும் ஒரே தேர்வு எந்த நாட்டிலும் இல்லை. இங்கும் கூடாது.
6. கல்வி நிர்வாகத்தில் பெரும் மாற்றங்கள் கொண்டுவரப் படவேண்டும். கல்வி பொதுப்பட்டியலிலிருந்து மாநிலப்பட்டி யலுக்கு கொண்டுவரப்படவேண்டும்.
7. கடும் ஏற்றத்தாழ்வுகள் உள்ள இந்தியசமுதாயத்தில் பின் தங்கிய மணவர்களுக்கு மற்றவர்களைப் போல சமநிலை அடைவதற்கு சலுகைகளும், வசதிகளும் அளிக்கப்படவேண்டும்.
8. உயர்கல்வி அனைவரின் உரிமை. வசதி உடையவர்க்கு மட்டுமானதல்ல. என்ற கொள்கை ஏற்கப்படவேண்டும்.
9. ஆசிரியர் கல்வி மிகவும் வலிமைப்படுத்தப்படவேண்டும். இதில் தனியாருக்கு எந்தவிதமான பங்கும் இருத்தல்கூடாது.

நமது அரசியல் சாசனம் வகுத்தளித்த ஜனநாயகம், மதசார்பின்மை, சோசலிசம், குடியரசு ஆகியவிழுமியங்களை இந்த நாட்டின் வருங்கால குடிமக்களான நமதுகுழந்தைகளின் மனங்களில் ஆழப்பதிய வைப்பதாக நமது நாட்டின் கல்விக்கொள்கை வகுக்கப்படவேண்டும்.

ஆனால், நமது அரசியல் சாசனத்தையே கஸ்தூரிரங்கன் குழு புறக்கணித்துள்ளது. வேற்றுமையில் ஒற்றுமைகாணும் நமது நாட்டு மக்களை மதவெறி உணர்வைத் தூண்டி பிளவுபடுத்தும் சங்பரிவாரங்களின் இரகசியத் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் கருவியாக இந்த தேசிய கல்விக் கொள்கை வரைவு உருவாக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த தேசிய கல்விக்கொள்கை வரைவு திருத்தப்படவேண்டிய ஒன்று அல்ல; திருப்பப்பெறப்படவேண்டிய ஒன்றுஆகும்.

- செ.நடேசன், முன்னாள் பொதுச் செயலாளர், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி