தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பை முற்றாக சீர்குலைக்கின்ற தொடர்ச்சியான போக்கில் மோடி ஆட்சி ஈடுபட்டுக் கொண்டே இருக்கிறது. 2014 ஆம் ஆண்டு மோடி ஆட்சிக்கு வந்தவுடன், மருத்துவ மேற்படிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை முற்றிலுமாக ஒழித்துக் கட்டினார். திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்தவுடன், முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இதற்காக சட்டப் போராட்டம் நடத்தி மேற்பட்டப்படிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை அனைத்து மாநில பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கும் மீட்டுக் கொடுத்த ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு செயலை செய்து முடித்தார்.

இப்போது தேசிய மருத்துவ ஆணையம் மற்றொரு அதிரடியான நடவடிக்கையில் ஈடுபட்டு இருக்கிறது. மருத்துவக் கல்லூரியில் இனி மாணவர்கள் சேர்க்கை அனைத்தையும் தேசிய மருத்துவ ஆணையமே ஏற்கும் என்ற முடிவுக்கு அது வந்திருக்கிறது.

MBBS, Diplamo, MD, MS, DM, MCh  போன்ற பட்டப்படிப்பு, முதுநிலை, முதுநிலை சிறப்புப் பாடத்திட்டப் பிரிவுகளில் மாணவர் சேர்க்கை அத்தனையையும், தேசிய மருத்துவ ஆணையம் எடுத்துக் கொள்கின்ற ஒரு முடிவுக்கு வந்து இதற்காக கருத்து கேட்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியிருக்கிறார்கள். இந்த சுற்றறிக்கை கூட மாநில அரசிடம் கருத்து கேட்கவில்லை. துறை சார்ந்த நிபுணர்களிடம் கருத்து கேட்கவில்லை. 'தமிழ்நாட்டு மக்களிடம் கருத்து கேட்கும் இந்த சுற்றறிக்கை' என்ற நாடகத்தை இவர்கள் அரங்கேற்றியிருக் கிறார்கள்.

தமிழ்நாட்டு முதலமைச்சர் இந்த சுற்றறிக்கையைக் கண்டித்து இதை உடனே திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார். இப்படியே நிலைமை போய்க் கொண்டிருந்தால் இனி தமிழ்நாட்டு அரசு மருத்துவமனைகளில், தனியார் மருத்துவமனைகளில் எப்படி நோயாளிகளை சேர்க்கலாம், எந்த நோயாளிகளை சேர்க்கலாம் போன்றவற்றைக்கூட நாங்கள் தான் தீர்மானிப்போம், தமிழ்நாட்டில் மருத்துவ அமைச்சராக யார் வர வேண்டும் என்பதைக்கூட நாங்கள்தான் தீர்மானிப்போம் என்று 'தேசிய மருத்துவ ஆணையம்' ஒரு முடிவுக்கு வந்தாலும் கூட ஆச்சரியப்படுவதற்கு எதுவுமே இல்லை.

தமிழ்நாட்டில் மருத்துவ மேற்படிப்பு படிக்கின்ற மாணவர்களுக்கு உள் ஒதுக்கீட்டு உரிமைகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. ஏற்கெனவே அரசு மருத்துவமனைகளில் பணியாற்றிக் கொண்டே மேற்பட்டப் படிப்பு படிக்கின்ற மாணவர்களுக்கு ஒதுக்கீடு, கிராம சுகாதார நிலையங்களில் பணி செய்ய வருகின்றவர்களுக்கு ஒதுக்கீடு என்று சமூக நீதி அடிப்படையில் பின்பற்றி வருபவைகள் எல்லாம் இந்த நடைமுறை மூலம் முற்றாக ஒழிக்கப் படுகின்ற நிலைமை உருவாகும். அதுமட்டுமில்லாமல் மத்திய அரசே இப்படி மாணவர்களை தேர்வு செய்வதின் மூலம் ஏராளமாக வடநாட்டு மாணவர்கள், தமிழ்நாட்டு அரசு செலவில் இயங்கிவருகின்ற கல்லூரிகளில் படித்து, முழுமையாக பயன்படுத்தி படித்து பயனடையப் போகிறார்கள்.

தமிழ்நாட்டில், தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் படிக்கிறவர்கள், தமிழ்நாட்டில் இரண்டு ஆண்டு பணியாற்ற வேண்டும் என்ற ஒப்பந்தம் ஏற்கெனவே இருக்கிறது. அந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டுதான் வடநாட்டு மாணவர்கள் இங்கே வருகிறார்கள். ஆனால் படிப்பு முடிந்தவுடன் அவர்கள் சொந்த மாநிலத்திற்கு தப்பி ஓடிவிடுகிறார்கள். 2017 ஆம் ஆண்டு மட்டும் 280 மாணவர்கள் இதுபோல் தப்பி ஓடி இருக்கிறார்கள் என்று தகவல்கள் கூறுகின்றன.

எனவே, தமிழ்நாட்டில் படித்துவிட்டு வடநாட்டில் வேலை பார்க்கின்றவர்களுக்கும், தமிழ்நாட்டின் உள் ஒதுக்கீடு என்ற சமூகநீதியை குலைப்பதற்கும் இவையெல்லாவற்றையும் விட தமிழ்நாடு அரசின் மாநில உரிமையை பறிப்பதற்குமான ஆபத்தான இந்த முறையை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும். நீட் தேர்வைத் தொடர்ந்து ஒவ்வொன்றாக இப்படி மாநில உரிமையையும், சமூக நீதியையும் குலைத்துக் கொண்டு வருகின்ற ஒன்றிய அரசுக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுக்க மக்கள் முன் வரவேண்டும்.

- விடுதலை இராசேந்திரன்

Pin It