தமிழ்நாட்டில் மேற்கு மாவட்டங்களில் தொடர்ந்து ஜாதி, தீண்டாமை வன்கொடுமைகள் அதிகரித்துக் கொண்டிருக்கிறன. இடைநிலை ஜாதிகள் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தீண்டாமை வன்கொடுமைகளை நிகழ்த்தி வந்தார்கள். ஆனால் இப்பொழுது, கடந்த நூற்றாண்டில் தீண்டாமைக் கொடுமையலிருந்து விடுபட்ட நாடார் ஜாதியைச் சார்ந்தவர்கள் தாழ்த்தப்பட்ட சக்கிலியர் சிறுவர்கள் இருவரை கடுமையாக தாக்கியுள்ளனர்.

ஈரோடு மாவட்டம் கோபி அருகே கோட்டுப்புள்ளாம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், மகேஸ்வரன் 5-ம் வகுப்பும், தாமோதரன் 6-ம் வகுப்பும் படித்துவருகிறார்கள் அருகில் உள்ள நைனாம்பாளையத்தில் இராஜேந்திரன் என்பவர் 15 வருடமாக மளிகைக் கடை நடத்தி வருகிறார். 18.06.2016 அன்று காலை 11.30 மணியளவில் மகேஸ்வரனும் நண்பர் தாமோதரனும், இராஜேந்திரனின் கடையில் ஜூஸ் குடித்துவிட்டு, தவறுதலாகப் பணம் தராமல் சென்றதால் இராஜேந்திரன் அவர்களைக் கடைக்குள் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு இராஜேந்திரனின் பெரிய மகள் மரியா வசந்தி மற்றும் இளைய மகள் மரியா அந்தோணி லிசியா ஆகிய இருவரும் சிறுவர்களது கன்னம், தலை மற்றும் காதில் ரத்தம் வரும் வரை கொலை வெறியுடன் அடித்து உதைத்துள்ளனர்.

அது மட்டும் இன்றி, தகாத வார்த்தைகளால் திட்டியும் உள்ளனர். இரண்டு சிறுவர்களும் காதிலும் வாயிலும் ரத்தம் ஒழுக வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். இதைப்பார்த்த மகேஸ்வரனுடைய அப்பா சுந்தரம் (எ) மோகன சுந்தரம் தாமோதரனுடைய அப்பா பொன்னுச்சாமி இவர்கள் இருவரும் மளிகைக் கடைக்காரர் இராஜேந்திரனிடம் போய் எங்கள் குழந்தைகளை ஏன் அடித்தீர்கள் என்று கேட்டதற்கு அவர்கள் ஜீஸைக் குடித்துவிட்டு பணம் கொடுக்காமல் சென்றதால் அடித்தேன் என்று சொல்லித் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

இதுபோன்ற தாக்குதலில் ஈடுபடுபவர்கள் பற்றி விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் அவர்களிடம் தலித்துகளும் தவறு செய்கிறார்கள் என்று கேட்ட கேள்விக்கு அவர் சொன்ன பதிலின் சுருக்கம்.

        “தலித் இளைஞன் தவறு செய்தால் அவன் மீது காவல் துறையில் புகார் கொடுக்கலாம். சட்ட நடவடிக்கை எடுக்கலாம். ஆதிக்க சாதிகளைப் பொறுத்த வரையில் தலித் பிரச்சனைகளில் அவர்கள் காவல் துறையை நாடுவதே இல்லை. எடுத்த எடுப்பிலேயே அவர்களாகவே தண்டனையைத் தீர்மானித்து விடுகிறார்கள். அவ்வளவு மோசமான ஜாதிய சமூக இறுக்கம் இங்குள்ளது” -தமிழ் இந்து - 13.06.2016)

வன்கொடுமை வழக்குப் பதிவு

தாக்குதலுக்கு உள்ளான சிறுவர்களைக் கோபி அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளாகச் சேர்க்கப்பட்டார்கள். அங்கு இரண்டு நாள் சிகிச்சைக்குப் பின்பு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கபட்டார்கள். அங்கும் இரண்டு நாள் சிகிச்சை அளிக்கப்பட்டது.

19.06.2016 அன்று கோபி காவல் நிலையத்தில் சிறுவர்களைத் தாக்கியவர்கள் மீது தோழர்களின் முயற்சியால் வன்கொடுமைத் தடுப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராஜ், சமூக நீதிக்கட்சி பொதுச்செயலாளர் இராஜேந்திரன், மாவட்ட செயலாளர் கோபால் மற்றும் காட்டாறு குழு தோழர் ரவி ஆகியோர் அன்று இரவு 8.30 மணிக்கு இராஜேந்திரன் மற்றும் அவரது மகள்கள் மீது வன்கொடுமைத் தடுப்பு (திருத்தம்) சட்டம் 2015ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது (அதன் விவரம் குற்ற எண். 434/16 பிரிவுகள் 3(1)(R)(S) and 3(2)(va) (of Sc and St (POA) Amendment Act 2015 R/W 342, 294(B), 323 IPC)

பொய்யான எதிர்வழக்கு

அன்று மாலை 5 மணிக்கு இராஜேந்திரனை மட்டும் சிறையிலடைத்துவிட்டு, அவரது மகள்களை பொய்யான காரணத்தைக் கூறி தப்பவிட்டுள்ளது காவல்துறை. பாதிக்கப்பட்ட சிறுவர்களின் உறவினர்கள் மற்றும் தோழர்கள் காவல் நிலையத்திலிருந்து கலைந்து சென்றுவிட்டனர். அதன்பிறகு கோட்டுப்புள்ளாம் பாளையம் அதிமுக ஒன்றிய கவுன்சிலர் சின்னச்சாமியின் ஏற்பாட்டில், வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் மீது எதிர்வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

சிறுவர்கள் மகேஸ்வரனின் தந்தை மோகனசுந்தரம் மற்றும் தாமோதரனின் தந்தை பொன்னுச்சாமி, சிறுவர்களைத் தாக்கிய போது பார்த்ததாகச் சாட்சி சொன்ன பருவதம், செண்பகம் சாந்தி, குருநாதன் இவர்கள் ஆறுபேர் மீதும் இராஜேந்திரன் கடைக்குள் அத்துமீறி நுழைந்ததாகவும், தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், பொய்வழக்குப் பதிவு செய்துள்ளது காவல் துறை. (குற்ற எண்: 439/16, 143, 347, 294(B), 223 IPC) இத்தகவல் வழக்குப் பதிவு செய்த 10 நாளுக்குப் பிறகு தான் தெரியவருகிறது.

தாக்குதலுக்கு உள்ளான மகேஸ்வரனின் தந்தை மோகனசுந்தரத்திடம் பேசியபோது அவர், “18.06.2016 அன்று எனது மகன் அவர் நண்பர் தாமோதரன் தாக்கப்பட்ட செய்தியை எனக்கு அறிமுகமான பல உதவிகள் செய்தவருமான ம.தி.மு.க மாட்ட துணைச் செயலாளர் கந்தசாமி அவர்களிடம் தகவல் சொன்னோம். அவர் சிறுவர்களை கோபி அரசு மருத்துவமனையில் உள்நோயாளி களாகச் சேர்க்க அனைத்து உதவிகளும் செய்தார். காவல்துறை சிறுவர்களிடம் விசாரணை நடத்தியதில், இராஜேந்திரன் மற்றும் இரண்டு மகள்கள் தகாத வார்த்தைகளில் திட்டி அடித்துள்ள செய்தி தெரியவந்துள்ளது.

அதன் பிறகு, “வன்கொடுமை வழக்குதான் பதிவு செய்ய வேண்டும். அதனால் வழக்கு வேண்டாம் சமாதானமாக சென்றுவிடுங்கள்” என வலியுறுத்தினார். மாவட்டத் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போதும் வழக்கு வேண்டாம் என்று வலியுறுத்தினார். நாங்கள் வழக்குப் பதிவுசெய்ய வேண்டும் என டி.எஸ்.பி அவர்களிடம் கேட்டுக் கொண்டோம். இனிமேல் இந்த வழக்கு சம்மந்தமாகத் தொடர்புகொள்ளக் கூடாது என்று சொல்லிப் பின்வாங்கினார்” என்று கூறினார்.

தள்ளுபடி செய்யப்படும் தீண்டாமை வன்கொடுமை வழக்குகள்

வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மக்கள் காவல் நிலையத்திற்குச் சென்று வழக்கு கொடுக்கும் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிராகப் பொய் வழக்குப்பதிவு செய்வதை ஆதிக்க வெறிபிடித்த இடைநிலை ஜாதிகளின் சங்கத்தலைவர்கள் பொறுப்பாளர்கள், அரசியல் கட்சி பொறுப்பாளர்கள் காவல் துறை துணையுடன் நாடு முழுவதும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.

வன்கொடுமை வழக்குகளை நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லாமல், புகார் பொய்யானது ( Mistake of Fact ) என்று கூறித் தள்ளுபடி செய்துவிடுகிறது காவல்துறை. இதுபோன்று பொய்வழக்கு என்று காவல்துறை தள்ளுபடி செய்த ஒரு வழக்கை பற்றி பார்ப்போம்.

ஈரோடு மாவட்டம், வரப்பாளையம் காவல் நிலையத்தில் பட்டான் என்பவர் 13.10.2015 அன்று சுப்பராவ் கவுண்டரால் தாக்கப்பட்டு வழக்குக் கொடுத்தார். F.I.R.No.231/2015 U/S 295(B) 506(ii) IPC,R/W,3(i) (X) SC/ST POA Act 1989. உடனே பட்டான் அவர்கள் மீதும், அவரது மனைவி ரங்காள் அவர்கள் மீதும் பொய்யாக ஒரு எதிர் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

திரு. பட்டான் அவர்கள் மீது போடப்பட்ட எதிர்பொய்வழக்கு விவரம், FIR No.324/2015 U/S294(B)506(I) IPC Act வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பட்டான் கொடுத்த தீண்டாமை வன்கொடுமை வழக்கு, பொய்யானது, என்று தள்ளுபடி ( MF ) தள்ளுபடி செய்யப்பட்டது.

ஆனால், பட்டான் மீதும் அவரது மனைவி மீதும் போடப்பட்ட பொய்வழக்கில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு கோபி நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்துக்குச் சென்றால் இது போன்று அலைக்களிப்பு ஏற்படுத்துவோம் என்று காவல் துறையும் இடைநிலை ஜாதியினரும் தாழ்த்தப்பட்ட மக்களை எச்சரிக்கை செய்கிறார்கள். பாதிக்கப்பட்ட மக்கள் மீது எதிர் பொய்வழக்குச் செய்வதைக் கருத்தில் கொண்டு வன்கொடுமைத் தடுப்பு (திருத்தம்) சட்டம் 2015-ல் எதிர் பொய் வழக்குத் தொடுத்தால், சட்ட அலைக்களிப்பு செய்தால் பிரிவு 3 (1) (P) இப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யலாம் என்று சட்ட விதிகள் மட்டுமே உள்ளது. இதை நடைமுறைப்படுத்துவதும் மிகவும் சவாலாக உள்ளது.

பட்டியல் ஜாதியினர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டத்தை வலுப்படுத்துவதற்கான தேசிய கூட்டமைப்பு வெளியிட்ட ஆவணத்தைப் பார்ப்போம்.

“வன்கொடுமை செய்தவர்கள் நீதிமன்றத் தண்டனை பெறுவது என்பது மாநிலங்களுக்கு மாநிலம் வேறுபடுகிறது அது 0.5 சதவீதத்தில் இருந்து 8 சதவீதம் வரை உள்ளது. தமிழகத்தில் 5 . 2ரூ பேரே தண்டனை பெற்றிருக்கிறார்கள்”

பட்டியல் இனத்தவருக்கு எதிரான குற்றங்கள் பெருக்கிக்கொண்டே வருவதைக் குற்றப்பதிவுகளுக்கான இந்தியாவின் தேசிய ஆணையம் (என்.சி.ஆர்.பி) வெளியிட்ட தரவுகள் தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமை 2013 -ஐ விட 2014-ல் 19 ரூ அதிகரித்து இருப்பதாக அந்தத்தரவுகள் சொல்கின்றன. ஜாதியப் பாகுபாடு பற்றிய ஐ.நா அறிக்கையிலும், சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ( தமிழ் இந்து 25.4.2016 )

வன்கொடுமைத் தடுப்பு வழக்குகள் மேலே குறிப்பிட்ட நிலைமையில் தான் உள்ளன. ஆனால் ஆதிக்கவெறி பிடித்த இடைநிலை ஜாதிகளின் சங்கத் தலைவர்கள் இவ்வழக்குகளைப் பற்றித் தவறான கருத்துக்களைப் பரப்பி வருகிறார்கள்.

“பார்ப்பனர்கள் வித்தியாசம் காட்டுவதுடன் பார்ப்பனரல்லாதார்களுக்குள்ளும் பற்பல ஜாதியார் ஒருவருக்கொருவர் வித்தியாசம் பாராட்டுகின்றனர். ‘மேல் ஜாதியார்கள்’ நீங்கள் உங்களுக்குச் சமமாக இருக்க வேண்டுமென்று விரும்புவீர்களானால், உங்களுக்குக் ‘கீழேயுள்ள ஜாதியார்’ களுக்கும் நீங்கள் சமத்துவம் அளிக்க வேண்டும். நம்மிடமிருக்கும் கொடுமை பார்ப்பனர்கள் காட்டும் கொடுமைகளை விடச் சற்று அதிகம் என்றே சொல்ல வேண்டும்.” -தோழர் பெரியார் - குடி அரசு 09.12.1928

கடந்த நூற்றாண்டில் நாடார் சமூகத்தினர் உயர் சாதிக்காரர்களின் தெருக்களில் செருப்பு அணியக்கூடாது. வீடுகளில் திண்ணை அமைத்துக் கொள்ளக்கூடாது, பெண்கள் தண்ணீர்ப் பானைகளை இடுப்பில் எடுத்துச் செல்லாமல் தலையில் தான் சுமந்து செல்ல வேண்டும்.

உயர் ஜாதியினரிடம் உரையாட வேண்டுமெனிலோ, அவர்களுடன் செல்ல வேண்டுமெனிலோ ஒரு குறிப்பிட்ட அடி தூரம் விலகித்தான் செல்ல வேண்டும். நாடார் பெண்கள் இடுப்புக்கு மேலே தோள் சேலை அணியலாகாது நாடார் பெண்கள் காதுகளில் இரும்புக் கொத்து வளையல்கள் தான் அணிய வேண்டும். கோயில்களில் நுழையக்கூடாது.

இதுபோன்ற தீண்டாமைக் கொடுமைகளை அனுபவித்து வந்த நாடார் சமூகத்தைத் திராவிடர் இயக்கமும், பெரியாரும் போராடி, தீண்டாமையிலிருந்து விடுதலை செய்தனர். தாழ்த்தப்பட்ட மக்கள்மீது திணிக்கப்பட்ட வன்கொடுமைகளுக்கு எதிராகவும் களத்தில் இருந்தனர். இன்று ஆதிக்க ஜாதியாகி விட்டோம் என்ற கற்பனையில், ஜாதிவெறியில் இதுபோன்ற வன்கொடுமைகளில் ஈடுபடும் நாடார் சமூகத்தினரின் காட்டுமிராண்டிகாலச் செயல்பாடுகளுக்கு எதிராகவும் திராவிடர் இயக்கங்கள் களமிறங்கவேண்டும். குறிப்பாக கோபி, ஈரோடு பகுதிகளில் இயங்கும் பெரியார் இயக்கங்கள் உடனடிப் பணியாகக் களமிறங்க வேண்டும்.

கள ஆய்வுக்கு உதவிய தோழர்கள்:

கோபி கோட்டுப்புள்ளாம்பாளையம் சூரியா, கோபி ஆனந்தராஜ், காட்டாறு குழு இரவி, அர்ச்சுணன், சேவூர் முதலிபாளையம் இரவி 

Pin It