“தமிழ்நாட்டின் நரிமணம், கோவில் களப்பால், அடியக்க மங்கலம் உள்ளிட்ட பல இடங்களில் பெட்ரோல் மற்றும் எரிவளி கிடைக்கும்போது, கச்சா எண்ணெய் உயர்வைக் காட்டி தமிழகத்திற்கு ஏன் பெட்ரோல், ஏசல், விலையேற்றம்?” என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் கி.வெங்கட்ராமன் கேள்வி எழுப்பினார்.

thathepoka_600

பெட்ரோல், டீசல் விலை குறைக்க தமிழகத்தில் கிடைக்கும் பெட்ரோல் மற்றும் எரிவளி(கேஸ்) வளங்களை தமிழக அரசிடமே ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தி இன்று(23.07.2011) சென்னையில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து பேசிய, கட்சியின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கி.வெங்கட்ராமன், “தமிழ்நாட்டின் காவிரிப் படுகையில் அமைந்துள்ள நரிமணம், அடியக்கமங்கலம், கமலாபுரம், புவனகிரி, கோவில் களப்பால் உள்ளிட்ட பல இடங்களில் தாராளமாக பெட்ரோல் கிடைக்கிறது. திருவாரூர் மாவட்டம் குத்தாலத்தில் கேஸ் கிடைக்கிறது. இங்கு கிடைக்கும் இவ்வளங்களை கொள்ளையிட்டுச் செல்கின்ற இந்திய அரசு, கச்சா விலை எண்ணைய் உயர்வதைக் காரணமாகக் காட்டி தமிழ்நாட்டில் ஏன் பெட்ரோல் விலையை உயர்த்த வேண்டும்?

அசாமில் அசாம் ஆயில் கார்ப்பரேசன் என்று தான் பெயர் வைக்க முடியும். தமிழ்நாட்டில் இருப்பதைப் போல் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் என்றெல்லாம் பெயர் வைக்க முடியாது. அந்தளவிற்கு அங்குள்ள அசாமியர்கள் இந்தியாவிற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதால் தான், அசாமில் பெட்ரோல் எடுப்பதற்காக இந்திய அரசு அவர்களுக்கு உரிமைத்தொகை(ராயல்டி) கொடுக்கின்றது. தமிழ்நாடு இளிச்சவாயநாடாக இருப்பதால் தான் இங்கு பெட்ரோலை திருடி நம்மிடமே, இறக்குமதி வரி போட்டு விலை உயர்த்துகிறார்கள்.

இப்போது காவிரிப்படுகையை இந்திய அரசு தீருபாய் அம்பானியின் ரிலையன்சு குழுமத்திற்கு விற்றுவிட்டது. இந்த கும்பல் 1,70,000 இலட்சம் லிட்டர் பெட்ரோலை சோதனைக்காகவே எடுத்திருக்கின்றனர். அப்படியென்றால் இவர்கள், உற்பத்தியை தொடங்கும்போது எத்தனை இலட்சம் லிட்டர் தமிழக பெட்ரோலை திருடுவார்கள் என எண்ணிப் பார்க்க வேண்டும்” என்று பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழுரிமைக் கூட்டமைப்பின் தலைவர் புலவர் கி.த.பச்சையப்பனார், தமிழர் உலகம் ஆட்சிக்குழு உறுப்பினர் பொறியாளர் சி.பா.அருட்கண்ணனார், த.தே.பொ.க. தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல்.ஆறுமுகம், தமிழக இளைஞர் எழுச்சிப் பாசறை ஒருங்கிணைப்பாளர் தோழர் சதீசுகுமார் உள்ளிட்டோரும் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.