“எண்ணெய் விலை உயர்வு தவிர்க்க முடியாதது என்றாலும் இப்போதைக்கு விலை உயர்த்தப்படமாட்டாது” என இந்தியப் பெட்ரோலியத் துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி சொல்லி வாய்மூடி 24 மணிநேரத்திற்குள் டீசல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

சென்ற ஆண்டு இறுதியில் சமையல் எரிவாயு விலை உயர்த்தப்பட்டது. இப்போது மானிய விலையில் எரிவாயு உருளை வழங்குவதற்கே வரம்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இனி ஆண்டுக்கு 6 உருளைகள் (சிலிண்டர்) மட்டுமே மானிய விலையில் வழங்கப்படுமாம். அதற்கு மேல் தேவை என்றால் வெளிச் சந்தை விலைக்கு ஒன்றுக்கு இரண்டு மடங்காக பணம் கொடுத்து தான் எரிவளி உருளை பெறலாமாம்.

5 பேர் உள்ள சிறிய குடும்பத்திற்குக் கூட எரிவாயு மாதம் ஒரு உருளைத் தேவைப்படும். அப்படி ஆனால் சமையல் எரிவாயுவிற்கு வழங்கப்படும் மானியம் பாதியாக குறைக்கப்படுகிறது என்றாகிறது. வேறுவகையில் சொன்னால், ஒரு குடும்பத்திற்கு ஓராண்டிற்கு ஆகும் சமையல் எரிவாயுச் செலவு ஒரே அடியாக இரண்டு மடங்காக உயர்த்தப்படுகிறது என்று பொருள்.

நேரடியாக விலை ஏற்றத்தை அறிவிக்காமலேயே மானிய உருளைக்கு வரம்பு கட்டுவதன் மூலம் 100 க்கு 100 சமையல் எரிவாயு விலை ஏற்றப்பட்டுள்ளது. இது வரலாறு காணாத விலை உயர்வு. ஆனால் ஈரத் துணியைச் சுற்றி கழுத்தை அறுப்பது போல் சத்தம் வராமல் இந்த கழுத்தறுப்பு வேலையை இந்திய அரசு நடத்தி முடித்துள்ளது.

இந்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள் இழப்பை சந்திக்கின்றன. அதனை ஈடுசெய்யவே இந்த விலை ஏற்றம் என்ற பழைய பல்லவியே இப்பொழுதும் பாடப்படுகிறது. டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சியும் இன்னொரு காரணமாக கூறப்படுகிறது.

இந்திய அரசு ஒரே பொய்யான காரணத்தை மீண்டும் மீண்டும் சொல்லி ஏற்க வைக்க முயல்கிறது.

இந்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள் ஆண்டு தோறும் இலாபம் ஈட்டி, அரசுக்கு இலாப ஈவு தொகை கொடுத்துக் கொண்டே இருக்கின்றன. அதையும் இதே பெட்ரோலிய துறை அமைச்சகம் தான் ஊடகங்களுக்கு அறிவித்து வருகிறது.

அதுமட்டுமின்றி விலைக் கணக்கீட்டில் கற்பனையான இறக்குமதி கணக்குகள், போக்குவரத்தில் கசிவு என்ற இழப்பு கணக்குகள் காட்டப்படுவதன் காரணமாக எண்ணெய் நிறுவனங்கள் இழப்பில் இயங்குவதாக தவறான சித்திரம் தீட்டப்படுகிறது என்பதை அரசு நியமித்த நரசிம்மம் குழுவும், நாடாளுமன்ற நிலைக்குழுவும் எடுத்துக்காட்டிவிட்டன. எண்ணெய் நிறுவனங்களின் தவறான கணக்கீட்டு முறையை மாற்றி அமைக்குமாறு அறிவுறுத்திவிட்டன. ஆயினும் அரசின் கோணல் கணக்கு தொடருகிறது. அதன் வழியாக எண்ணெய் நிறுவனங்கள் இழப்பில் இயங்குவதாக பொய்யுரைக்கப்படுகிறது.

உள்நாட்டில் உற்பத்தியாகும் எண்ணெயும் டாலர் நாணய மதிப்பில் இறக்குமதி ஆவதாக பொய்யாகக் காட்டப்படுவதால் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி இறக்குமதி விலையை உயர்த்திவிட்டதாக பொய்க் கணக்கு காட்டப்படுகிறது.

இவ்வாறு பொய்யான கணக்குகள் அரசு நிறுவனங்களின் எண்ணெய் விலை ஏற்றத்தை திரையிட்டு மறைக்கப் பயன்படுகின்றன. அதுமட்டுமின்றி இந்த மோசடியான கணக்கீட்டின் அடிப்படையிலேயே உள்நாட்டில் எண்ணெய் எடுத்து விற்கும் ரிலையன்ஸ், எஸ்ஸார் நிறுவனங்களும் பெட்ரோல், டீசல் விலை தீர்மானிப்பதால் அவை கொள்ளை இலாபம் அடிக்கின்றன. இந்த கொள்ளையில் ஒரு பகுதி ஆட்சியாளர்களுக்கும் , அதிகாரிகளுக்கும் கையூட்டாக கைமாறுகிறது.

டீசல் விலையில் 37விழுக்காடு இந்திய அரசின் வரி விதிப்பினால் வருவது. இதனை குறைத்தாலே டீசல் விலையை உயர்த்தாமல் இருக்க முடியும். உண்மையில் டீசல் விலை உயர்வு அதன் மீதான இந்திய அரசின் வரி வருவாயை உயர்த்தப் பயன்படுகிறது.

இந்த விலை உயர்வையும் தமிழகம் சுமக்க வேண்டிய அவசியம் இல்லை. தமிழகத்தின் டீசல் தேவையில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கு தமிழகத்திலேயே கிடைக்கிறது. தமிழகத்தின் டீசல் நுகர்வு மாதத்திற்கு 3.60 இலட்சம் கிலோ லிட்டர் ஆகும். தமிழக மண்ணிலிருந்து மாதம் தோறும் கிடைக்கிற டீசலின் அளவு 1.20 இலட்சம் கிலோ லிட்டர் ஆகும்.

இந்த டீசல் முழுவதும் தமிழகத்திற்கே சொந்தமாக்கப்படுமானால் டீசல் விலையை 30 விழுக்காடு குறைக்க முடியும் என்று பொருள். மாறாக தமிழகத்திலும் டீசல் விலை உயர்த்தப்படுகிறது.

தமிழ்நாடு இந்தியாவின் காலனியாக - அடிமைத் தேசமாக நீடிப்பதால் ஏற்பட்ட விளைவு இது.

தமிழ்நாட்டு எரிவாயு தேவையில் 80 விழுக்காடு தமிழ்நாட்டிற்குள்ளேயே கிடைக்கிறது. இதற்கும் இப்போது மறைமுகமாக இரண்டு மடங்கு விலை உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு எரிவளி தமிழகத்திற்கு சொந்தமாக இல்லாத அடிமைத் தனத்தின் விளைவு இது.

இந்த விலை உயர்வு தேவையற்றது, தவிர்க்கக் கூடியது; எதிர்க்கப்பட வேண்டியது.

Pin It