கீற்றில் தேட...

india mapஇந்திய அரசை ஒன்றிய அரசு என்று சொல்லக் கூடாதாம்! தமிழ்நாடு மாநிலத்தையும் தமிழ்நாடு என்று சொல்லக் கூடாதாம்! பாசக தமிழ்நாடு மாநிலத் தலைவர் முருகன் தொடங்கி “தேசிய” நாளேடு தினமலர் வரை குமுறுவதிலும் பொருமுவதிலும் சட்டக் காரணமும் இல்லை: வரலாற்று ஏரணமும் இல்லை.

இந்திய அரசமைப்பு இந்தியாவை ”Union of States” என்றே வரையறுக்கிறது. State என்பதை அரசு என்றோ நாடு என்றோ மாநிலம் என்றோ மொழிபெயர்க்கலாம். Nation without State என்பதை அரசற்ற தேசம் என்கிறோம்.

Stateless people என்றால் நாடற்ற மக்கள் என்று பொருள். United States of America என்பதை அமெரிக்க ஐக்கிய நாடுகள் என்று சொல்கிறோம். நீதிமன்றத் தீர்ப்புகளில் இந்திய அரசானாலும் மாநில அரசானாலும் State என்றுதான் குறிக்கப்பெறும்.

State Government என்னும் போதுதான் அன்றாட வழக்கில் மாநில அரசு என்றாகிறது. இதிலும் கூட province அல்லது மாகாணம் வேறு. State அல்லது மாநிலம் வேறு. மாகாணம் என்பது வெறும் ஆட்சியலகு (admninistrative unit). State அல்லது மாநிலம் என்பது இறைமை அல்லது அரசுரிமையைக் குறிக்கும்.

இங்கு மாநிலம் என்பதை குறுநிலத்துக்கு எதிர்நிறுத்திப் புரிந்து கொள்ள வேண்டும். குறுநிலம் என்பது இறைமையற்றது, ஒரு பேரரசுக்குக் கப்பம் கட்டி வாழ்வது. அயலாட்சிக்கு அடங்கிய பாளையப்பட்டைப் போன்றது. எனவே Union of states என்பதை அரச மாநிலங்களின் ஒன்றியம் என்று தமிழாக்கம் செய்வது பொருத்தமாக இருக்கும்.

“India, that is Bharat, shall be a Union of States” (பாரதம் என்னும் இந்தியா அரசமாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும்) என்பதுதான் அரசமைப்புச் சட்டத்தின் முதல் உறுப்பு (Article 1).

சட்ட முறைப்படியும் அதிகாரமுறைப் படியும் இந்திய ஒன்றியம் என்பதுதான் இந்த நாட்டின் சரியான பெயர். ஆண்டுதோறும் இந்திய நிதியமைச்சர் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வது ஒன்றிய நிதிநிலை அறிக்கைதான்.

உச்ச நீதிமன்றமும் உயர் நீதிமன்றங்களும் எப்போதுமே இந்திய அரசை ஒன்றியம் (Union) என்றுதான் குறிப்பிடுகின்றன. ஊடகங்களும் எளிய மக்களும் இந்திய அரசை மத்திய அரசு என்றோ மைய அரசு என்றோ நடுவண் அரசு என்றோ தில்லி சர்க்கார் என்றோ சொல்வதால் இந்திய ஒன்றியம் என்ற அதிகாரமுறைப் பெயர் மறந்தோ மறைந்தோ போய் விடாது.

எனவே இந்திய ஒன்றியம் என்பதில் சொற்குற்றம் ஏதுமில்லை. அதற்கு உள்நோக்கம் கற்பிப்பது இந்திய அரசமைப்பின் சிற்பிகளுக்கும் அரசமைப்புப் பேரவைக்கும் உள்நோக்கம் கற்பிப்பதே ஆகும். இந்திய ஒன்றியம் என்பதற்கு மாறுபட்ட பொருள்விளக்கம் தருவதிலும் பிழையில்லை; அது கருத்துரிமையின் பாற்பட்டது.

தமிழ்நாடு என்ற பெயருக்கு மறுக்கவியலா இலக்கிய, வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. தொல்காப்பியம் ”வடவேங்கடம் தென் குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலகம்” என்று எல்லை வரையறையே கொடுத்துள்ளது.

சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் ”இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய இது நீ கருதினை ஆயின்” என்று முக்கடலையும் வேலியாகக் கொண்ட தமிழ்நாடு என்பதை அறுதியிட்டுரைப்பார்.

எந்த வினாவுக்கும் சரியான விடை (வழா விடை) சொல்ல வேண்டும் என்பதற்கு 11ஆம் நூற்றாண்டிலேயே தொல்காப்பிய உரையாசிரியர் இளம்பூரணார் எடுத்துக் காட்டியது என்ன தெரியுமா? ”நும் நாடு யாதென்றால் தமிழ்நாடு என்றல்”!

இவ்வளவு தொன்மைச் சிறப்பு வாய்ந்த தமிழ்நாடுதனை பற்பல பாவலர்களும் அறிஞர்களும் போற்றிய போதிலும் தமிழ்நாடு என்ற அரசியல் அலகு ஏதும் அதிகாரமுறைப்படி அறிந்தேற்கப்படாத நிலைதான் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரை நிலவிற்று.

தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பிய காந்தியார் மொழிவழிக் குமுகங்களின் விடுமைக்காகக் குரல் கொடுத்தார். முதல் படியாகக் காங்கிரஸ் மாகாண அமைப்புகளை மொழிவழி வகுத்தமைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

1920ஆம் ஆண்டு ஒத்துழையாமை இயககம் நடத்தத் தீர்மானித்த அதே நாகபுரிப் பேராயத்தில்தான் காந்தியாரின் விருப்பப்படி காங்கிரஸ் அமைப்பை மொழிவழி வகுத்தமைக்கவும் முடிவு செய்யப்பட்டது. இப்படித்தான் தமிழ்நாடு காங்கிரஸ் என்ற பெயர் வந்தது.

1924-25 இல் தந்தை பெரியார் தலைவராக இருந்தது தமிழ்நாடு காங்கிரசுக்குத்தான்! இப்போதும் சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி என்ற பெயர்ப் பலகையைக் காணலாம்.

விடுமைப் போராட்டக் காலத்தில் மொழிவழி மாநிலங்கள் அமைப்பதாக உறுதியளித்து வந்த காங்கிரஸ் தலைமை அதிகாரக் கைமாற்றத்துக்குப் பின் மொழிவழி மாநிலங்கள் அமைந்து விடாமல் பார்த்துக் கொண்ட போது பொட்டி சிறிராமுலுவின் உயிரீகமும், ”விசலாந்திரத்தில் மக்கள் இராச்சியம்” என்ற முழக்கத்துடன் பொதுமையர் தலைமையில் நடந்த வீரத் தெலங்கான ஆய்தப் போராட்டமும் 1953இல் ஆந்திர மாநிலம் அமைக்கச் செய்தன.

மொழிவழி மாநிலம் அமைத்து அதற்குத் தமிழ்நாடு என்று பெயரிடக் கோரி விருதுநகர் சங்கரலிங்கனார் 76 நாள் பட்டினிப் போராட்டம் நடத்தி 1956 அக்டோபர் 13ஆம் நாள் உயிரீகம் செய்தார்.

1956 நவம்பர் முதல் நாள்தான் ’மதராஸ்’, கேரளம், கர்நாடகம் ஆகிய மொழிவழி மாநிலங்கள் பிறந்தன. நம் தமிழ்நாடுதான் அப்போது மதராஸ் என்றும் Madras என்றும் சென்னை என்றும் பலவாறு பெயரிட்டழைக்கப் பட்டது.

இந்த மாநிலத்துக்குத் தமிழ்நாடு என்று பெயர்சூட்ட வேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரஸ் ஆட்சியாளர்கள் ஏற்க மறுத்தார்கள். முதலமைச்சர் காமராசரே எள்ளி நகையாடினார்.

1967ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் சென்னை மாநிலத்துக்குத் தமிழ்நாடு என்று பெயர்மாற்றம் செய்வதற்கான

தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக இயற்றப்பட்டது. 1968 நவம்பரில் இந்திய நாடாளுமன்றம் இந்தப் பெயர் மாற்றத்துக்கு ஒப்புதல் அளிக்க வேண்டியிருந்தது.

இப்போது அரசமைப்புச் சட்டத்தின் முதல் அட்டவணையில் அரசமாநிலங்களின் பட்டியலிலும் தமிழ்நாடு என்ற பெயர்தான் உள்ளது. இந்திய ஒன்றியம் என்று சொல்லாதே என்பதில் போலவே தமிழ்நாடு என்று சொல்லாதே என்ற கூச்சலிலும் சட்டக் காரணமோ வரலாற்று ஏரணமோ துளியும் இல்லை.

இருக்கிற அரசமைப்புக்கு உட்பட்ட சில உரிமைகளையும் கூட மறுக்கவும் அந்த மறுப்பை ஞாயப்படுத்தவும் இந்திய ஆட்சியாளர்கள் செய்து வரும் கெடுஞ்சதிக்கு உருமறைப்பாகவே இந்துத்துவ ஆற்றல்கள் கூச்சல் கிளப்பிக் கொண்டுள்ளன.

இந்திய ஒன்றியம் என்பதிலோ தமிழ்நாடு என்பதிலோ பேச்சுக்கும் கூட பிரிவினை இல்லை. அரசமைப்புக்குட்பட்ட மாநில உரிமைகளையும் கூட மறுத்து அழிச்சாட்டியம் செய்வதன் வாயிலாக நரேந்திர மோதி – அமித்சா வகையறாதான் பிரிவினை எண்ணத்தை மாநிலங்கள் எங்கும் விதைத்து வருகின்றார்கள் என்பதே உண்மை.

ஆட்சியாளர்களின் பிரிவினைத் தூண்டுதல் செயல்பாடுகளை மறைக்கவே இந்துத்துவக் கையாட்கள் பிரிவினைப் பூச்சாண்டி கிளப்பி வருகின்றனர். எந்தப் பூச்சாண்டிக்கும் அஞ்சாமல் எல்லாத் தரப்பினரும் இந்திய ஒன்றியம், தமிழ்நாடு என்ற பெயர்களைத் தொடர்ந்து பொருத்தமான எல்லாவிடத்தும் ஆள வேண்டுகிறோம்.

அதேபோது, இந்தப் பெயர்கள் மட்டுமே இந்திய வல்லரசியத்தை வழிக்குக் கொண்டுவந்து விடும் என்ற மயக்கம் கூடாது. தமிழ்நாடு அரசு இறைமை கொண்டது என்பது மெய்யா? மாநில அதிகாரப் பட்டியல் என்ற அளவிலாவது அதற்கு இறைமை உள்ளதா? மாநிலப் பட்டியலில் மிச்சமுள்ள அற்பசொற்பக் கூறுகளில் சட்டமியற்றுவதானலும் கூட ஆளுநரிடம் (அல்லது குடியரசுத் தலைவரிடம்) ஒப்புதல் பெற வேண்டும் என்ற விதிமுறை இருப்பதால் இந்த அரசமைப்பில் மாநில இறைமை என்பதெல்லாம் சட்டக் கற்பனையே தவிர வேறல்ல.

ஒன்றியம் என்ற பெயரே இந்திய ஒன்றியத்தை சோவியத்து ஒன்றியம் போன்றதாக்கி விடாது. ஒன்றியம் என்ற பெயர் இருப்பினும் அதன் உறுப்பலகுகளுக்கு (மொழிவழித் தேசங்களுக்களுக்கு) பிரிந்து செல்லும் உரிமை உள்ளிட்ட தன்தீர்வுரிமை கிடையாது.

ஒன்றியம் என்ற பெயரைச் சொன்னாலே கூட்டாட்சிக்கு வழிதிறக்கும் என்பதற்கும் அடிப்படை இல்லை. இந்தியாவைக் கூட்டாட்சி என்று குணங்குறிப்பதை அண்னல் அம்பேத்கர் வன்மையாக மறுத்தார்: அமெரிக்காவில் நடந்தது போல் தற்சார்பான தனித்தனி குடியேற்றங்கள் விரும்பிச் சேர்ந்துதான் கூட்டாட்சி அமைத்தன.

இங்கு நாமாக விரும்பிச் சேரவில்லை. பிரித்தானிய ஆட்சியாளர்களே பொருளியல், அரசியல் காரணங்களுக்காக நம்மைச் சேர்த்து வைத்தனர். நாம் சேர்ந்து போராடினோம். சேர்ந்தே தொடர்வோம். அதற்கு ஏற்றது ஒன்றியமே என்றார்.

மாநிலங்களுக்கென்றுத் தனியாக அதிகாரப் பட்டியல் இருப்பதால், அந்த அளவுக்கு அவை இறைமை கொண்டவை என்று அம்பேத்கர் விளக்கமளித்தார். அவரது எண்ணம் பட்டறிவால் மெய்ப்படவில்லை. இறைமை இருக்கட்டும், மாநில உரிமைகள் படும் பாட்டை அவர் கண்டிருக்க வேண்டும்.

அரசமைப்புப் பேரவையில் மகபூப் அலி பெய்க் சாகிப் பகதூர் என்ற உறுப்பினர் தந்த எச்சரிக்கையின் தொலைநோக்கு நம் கவனத்துக்குரியது:

“நமது அரசு ஒரு கூட்டாட்சி அரசாகத்தான் இருக்க வேண்டும் என்றும், ஒற்றையாட்சி அரசாக இருக்கக் கூடாது என்றும் நீங்கள் கருதினால், எதிர்காலத்தில் ஏதேனும் அதிகார நாட்டங்கொண்ட கட்சி இதனை ஒற்றையாட்சி முறையாக மாற்றி, பாசிச வல்லாட்சியாக்கி விடுவதை நீங்கள் தடுக்க விரும்பினால், கூட்டாட்சி என்ற சரியான சொல்லைத்தான் பயன் படுத்த வேண்டும். ஆகவே ஒன்றியம் என்பதற்கு மாற்றாக கூட்டாட்சி என்ற சொல்லைப் பயன்படுத்துமாறு முன்மொழிகிறேன்.”

அவரது முன்மொழிவு மறுதலிக்கப்பட்டது. அவரது எச்சரிக்கையின் அருமையை பாசக ஆட்சி இப்போது புரிய வைத்து விட்டது.

அறிஞர் கே.வி. ராவு ”இந்திய நாடாளுமன்றக் குடியாட்சியம் (ஒரு குற்றாய்வு)” என்ற நூலில் ஒன்றியத்தின் உண்மையை உடைக்கிறார்:

“நமது அரசமைப்புச் சட்டத்தில் உள்ள ஒற்றையாட்சிக் கூறுகளைக் கோடிட்டுக் காட்டுவதற்குத்தான் ஒன்றியம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. கூட்டாட்சி என்ற சொல் அரசமைப்புப் பேரவையில் வன்மையாகவும் வெற்றிகரமாகவும் எதிர்க்கப்பட்டது.”

ஆக, இந்திய ஒன்றியம் என்பது மாநிலங்கள் விரும்பிச் சேர்ந்ததோ விரும்பினால் பிரிந்து செல்லத்தக்கதோ அன்று. இது கூட்டாட்சித் திரையால் தன்னுரு மறைத்துக் கொள்ளும் ஒற்றையாட்சி ஒன்றியமே தவிர, உரிமைகளை மதிக்கும் கூட்டாட்சி - ஒன்றியமன்று.

தமிழ்நாடு நாடெனப்பட்டாலும் இறைமை கொண்டு இலங்குவதன்று. மாநிலம் எனப்பட்டாலும் தன்னாட்சி கொண்டு இலங்குவதன்று. இறுதிக்கும் இறுதியாக, அது இந்திய வல்லரசியத்துக்கு அடிமைப்பட்ட ஒரு தேசம். பெயரை மட்டும் மாற்றி வைப்பதாலேயே மீட்சி பெற்று விட முடியாது.

இந்திய ஒன்றியம், தமிழ்நாடு என்று நாம் சொல்வதால் இந்துத்துவக் கும்பல் ஆத்திரப்படுவதைக் கண்டு மனநிறைவுற்று, இறைமை மீட்புக்கும் தன் தீர்வுரிமைக்குமாகப் போராடும் தேவையைப் புறக்கணித்து விட வேண்டாம்.

- தியாகு