29.12.1938 அன்று சென்னையில் தென்னிந்தியர் நல உரிமைச் சங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெரியாரின் தலைமை உரையின் ஒரு பகுதி.

"நமக்குத் தேசீய உணர்ச்சியில்லையா? தேசிய என்ற ஆரிய (வட) மொழிச் சொல்லுக்குச் சரியான ஆங்கில மொழிச்சொல் நேஷனல் () என்பதாகும். நேஷனல் என்ற சொல்லுக்கு ஜாதியம் என்பதுதான் சரியான கருத்து எனக் கற்றோர் கூறுகின்றனர். அக ராதியும் சொல்லுகிறது.

ஐரோப்பாக் கண்டம் என்ற ஒரு பூபாகத்தில் ஜெர்மனி நேஷன் வேறு; இட்டலி நேஷன் வேறு. ஐரோப்பிய மகாயுத்தத்திற்கு முன்பு போலிஷ் ஜனங்கள் தனி நாடின்றி ருஷிய, ஆஸ்திரிய, பிரஷிய ஆதிக்கங்களுக்குட்பட்டிருந்தும் தங்களை ஒரு நேஷன் என்று சொல்லி வந்தனர். யூதர்களுக்கெனத் தனிப்பட்ட நாடொன்று தற்போது இல்லாவிடினும் யூதர்களும் ஒரு நேஷனே.

மேலே காட்டியபடி நேஷன் என்ற வார்த்தைக்கும் பொருள் கொண்டு பார்த்தால் இந்தியாவை ஒரு நேஷன் என்று கூறுவது எவ்வாறு பொருந்தும்? மொழிகளை அடிப்படையாக வைத்துப் பிரித்தால் இந்தியாவை அநேக நேஷன்களாகப் பிரிக்கலாம். அல்லது அங்கமச்ச அடையாளத்தின் மீது பாகுபாடு செய்தாலும் ஆரியர்கள், திராவிடர்கள், மங்கோலியர்கள் எனப் பல (நேஷன்) பிரிவுகளாகும். பழக்கவழக்க சமுதாயக் கோட்பாடுகளைக் கொண்டு பிரித்தாலும், அதுவும் பார்ப்பனர், பார்ப் பனரல்லாத இந்துக்கள் எனப் பல ஜாதி வகுப்புக்களாகப் பிரிக்கப்படும். மற்றும் எவ்வகையில் பார்த்தாலும் இந்திய நேஷன் என்பதற்கு இந்தியா முழுமையும் சேர்ந்த நிலப்பரப்பு மாத்திரம் என எவ்வாறு பொருள்படும்?

ஆந்திர தேசீயவாதிகள் சென்னை மாகாணத்தை விட்டுப் பிரிந்து தனி மாகாணமொன்று ஏற்படுத்தி அதன் நிர்வாகத்தைத் தாங்களே மேற்கொள்ள வேண்டுமென்று முயற்சிக்கின்றனர். அவ்வாறே ஒரிசாவும், சிந்துவும் தனித்தனி மாகாணமாய்விட்டன. பர்மாக்காரர்கள் இந்தியாவிலிருந்து பிரிந்து பர்மா பர்மியருக்கே  என்று தீவிர கிளர்ச்சி செய்து வெற்றி பெற்றது நாம் அறிந்ததே. இலங்கைக்காரர்களும் இப்படியே. மற்றொரு வகையில் வடமேற்கெல்லை முஸ்லீம்கள் இந்துக்களிடமிருந்து பிரிந்து கொண்டார்கள். இப்படியே ஒரே மதத்தினரும், ஜாதியினரும் கூடத் தனித்தனி பிரிந்துபோக ஆசைப் படும்போது, இந்திய தேசிய சங்கம் என்னும் காங்கிரஸும் இதை அனுமதிக்கும்போது, தேசியம், தேசியம் என்று பறையறைவதின் அர்த்தந்தான் என்ன என்பது எனக்கு விளங்கவில்லை.

வங்காளிகளிடமிருந்தும், குஜராத்தி களிடமிரந்தும், காஷ்மீரிகளிடமிருந்தும், சிந்திகளிட மிருந்தும், தமிழ்நாட்டினர், ஆந்திர நாட்டினர், மலை யாள கன்னட நாட்டவர் பிரிந்து போக வேண்டுமென்று எண்ணுவது தேசியத்திற்கு விரோதமா? அதேபோல் ஆரியர்களிடமிருந்தும் மங்கோலியர்களிடமிருந்தும், திராவிடர்கள் பிரிந்துபோக நினைப்பது தேசீயத்திற்கு விரோதமாகுமா? வெள்ளையர் ஆட்சியின்கீழ் இல்லாவிட்டால் அந்நியர் படையெடுப்பினின்று நம்மைக் காத்துக் கொள்ள முடியாதெனக் கூறப்படுமானால் சிலோன், பர்மா இவைகளைப் போலவோ அன்றி கனடா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா இவைகளைப் போன்றோ தமிழ்நாடோ திராவிட நாடோ பிரிந்திருக்கலா மல்லவா? வெள்ளையர் ஆட்சியின் கீழேயே இருக்க லாகாது; பூரண சுதந்தரம் பெற்ற தேசமாக இருக்கலாம் எனப்படுமானால் ஐரோப்பாவில் 3 கோடி 4 கோடி ஜனத்தொகை கொண்ட பெல்ஜியம், ஹாலண்டு, ஸ்விட்ஸர்லாண்டு, டென்மார்க் போல சென்னை மாகா ணமோ, தமிழ்நாடோ தனித்த நாடாக இருப்பது அசாத்தியமா?

அப்படிக்கின்றி இந்திய தேசிய சபையின் சர்வாதிகாரி குஜராத்தி நேஷனைச் சேர்ந்தவர்; பெருந்தலைவர் களிலே ஒருவர் காஷ்மீரி நேஷனைச் சேர்ந்தவர்; மற்றொருவர் வங்காளி நேஷனைச் சேர்ந்தவர். நிர்வாக சபையினர் அனைவரும் தமிழர்களோ, தமிழ் நாட்டினரோ அல்லாமல் இதரர்களாயிருந்துகொண்டு தேசீயம் பேசுவதென்றால் காங்கிரஸ் உண்மையில் எவ்வாறு தேசிய சபையாகும்? அன்றியும் இந்தியா முழுவதும் ஒரே நாடு என்றுதான் எவ்வாறு சொல்வது? அவ்வாறு கூறுவதற்குப் பூகோளப் படம் தவிர வேறு என்ன ஆதாரமிருக்கிறது? ஐரோப்பிய பூகோளப் படத்தைப் போலவே இந்தியப் பூகோளப் படமும் வருடத்திற்கு ஒருமுறையில்லாவிட்டாலும் அடிக்கடி திருத்தப்படுவதை நாம் பார்க்கிறோம்.

இரண்டு ஜில் லாக்கள் ஒரு ஜில்லாவாகின்றன; பெரியமாகாணங்கள் சிறியனவாகவும், சிறியன பெரியனவாகவும், மாற்றிய மைக்கப்படுகின்றன. சென்னைக்காரனும் வங்காளியும் சுரண்டுவதை பர்மாக்காரன் பொறுக்க முடியாமல் துடிக்கிறான். தென்னாட்டான் சுரண்டுவதைப் பொறுக்க மாட்டாமல் சிங்களத்தான் சீறுகிறான். குஜராத்தி சுரண்ட லும் இந்து மார்வாடி சுரண்டலும் தமிழ்நாட்டைப் பாப் பராக்குகிறது. இதற்கு நாம் துடிதுடித்தால் தேசியத்திற்கு விரோதமாய் விடுகிறது! திராவிட மக்கள் (தமிழ் மக்கள்) மீது ஆரிய மதம் சுமத்தப்பட்டு அத்தமிழர் உழைப்பின் பலனையெல்லாம் தமிழரல்லாத ஒரு சிறு கூட்டத்த வர்கள் பகற்கொள்ளை போல் சுரண்டுவதை, உறிஞ்சு வதை, இது நீதியா, முறையா, அடுக்குமா என்று கேட்கப் புகுந்தால் அது தேசிய துரோகமாவதுடன் ராஜதுவேஷ மும், வகுப்புத் துவேஷமுமாகி விடுகிறது. இம்மாதிரி தேசீய வேஷம் போட்டு நாம் அழிந்து போவதா? அல்லது அதைக் கண்டு பயந்து தற்கொலை செய்து கொள்வதா? தோழர்களே! ஆழ்ந்து யோசியுங்கள்.

உலக ஒற்றுமையை நான் வெறுப்பவனல்ல. உலக மக்கள் சமதர்ம வாழ்வை மேற்கொள்வதை வேண்டா மென்று கூறவில்லை. மக்கள் யாவரும் விகிதாசாரம் உழைத்து அவ்வுழைப்பின் பலனை விகிதாசாரம் பகிர்ந்து, தத்தம் தகுதிக்கும் தேவைக்கும் அவசியமான அளவு அனுபவிப்பதை நான் ஆட்சேபிக்கவில்லை. ஆனால் தேசீயம் என்றும், தேச சேவையென்றும், தேச பக்தி என்றும், தேச விடுதலை என்றும், தேச ஒற்றுமை என்றும், ஆத்மார்த்தம் என்றும், பிராப்தம் என்றும் பல பல சொற்களைக் காட்டி மெய்வருந்திப் பாடுபட்டுப் பொருளீட்டும் பொது மக்களை, கட்டின ஆடை கசங்காமல், மெய்யில் வெய்யில் படாமல் வாழ்க்கை நடத்தும் ஒரு சிறு கூட்டத்தார், வஞ்சித்து, ஏமாற்றி வயிறு வளர்ப்பதை, ஏன்? உழைப்பாளிகளைவிட அதிகச் சுகமான வாழ்வு வாழ்வதை அடியோடு ஒழிக்க வேண்டுமென்பதற்காகவே நான் இதைச் சொல்லுகிறேன். ஆகவே தேசியம் என்கின்ற பேச்சு ஆத்மார்த்த விஷயத்தில் மோக்ஷம் வாங்கித் தருவது என்ற கூற்றுக்குச் சரியான கருத்தைக் கொண்டதேயாகும்.

Pin It