bookதமுஎகச அறம் கிளையின் முன் எடுப்பாக இந்த சிறுகதைத் தொகுப்பு துவக்கப்பட்டுள்ளது இதில் இடம்பெற்றுள்ள பன்னிரண்டு சிறுகதைகளும் சமகாலத்தை மிகச்சரியாகப் பிரதிபலிக்கும் நண்பர்களுடைய கதைகளாகவே இருக்கின்றது.

ஒரு மனிதன்தான் வாழ்கிறான் என்று கூறுவார்கள். ஒவ்வொரு மனிதனும் இறந்த பின்பு என்னவாகிறான் அவன் கதையை ஆகிறான் என்றும் சொல்வார்கள். அது போல ஒரு மனிதனுக்குக் கதை எழுத தோன்றிவிட்டால் அவன் தனது கண்களால் பார்ப்பதை விரல் நுனிகளில் கொண்டுவந்து கைகளால் நிரப்பி விடுகிறான். அப்படி ஒரு உத்வேகத்துடன் தொடங்கியதுதான் இந்த பன்னிரண்டு சிறுகதைகளும்.

முதல் கதை: பொறி - கு ஹேமலதா

பஜனையுடன் கதையைத் தொடங்கி நம்மை பக்தி மையத்திற்கு இழுத்துச் செல்கிறது எனக் கண்களை விரித்து கதையைப் படித்தால் பக்தியின் பேரால் என்று மக்களை மூளைச் சலவை செய்து கொண்டிருக்கும் பாசிச சக்திகளை பற்றி பளிச்சென்ற ஒரு கதை.

செந்தில், அருணா, குமார் இந்த மூவருடன் கதை நகர்கிறது. குமார் ஒரு கட்சியின் நிர்வாகியாகவும் ஆன்மீக பணி செய்யும் அன்பர் அகவும்  திரிகிறார். ஆனால் பெண்களின் மத்தியில் குமாரின் மீது ஒரு குற்றம்  சுமத்தப்பட்டுக் கொண்டே இருக்கிறது. 

செந்திலையும் தன் வலைக்குள் இழுத்துக்கொள்ள குமார் எவ்வளவோ முயற்சி செய்கிறார். அது செந்தில் மனைவி அருணாவுக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை ஒவ்வொரு முறையும் செந்திலின் செயல்பாடுகளை அவள் தடுக்கவே நினைக்கிறாள்.

ஆன்மீகத்தின் பெயரால் மக்கள் தங்கள் அன்றாட வாழ்விற்குச் சேமித்து வைத்திருக்கும் காசுகளை உண்டிகளிலும் இதுபோன்ற நன்கொடையாக கரைத்து விடுவது அருணாவுக்குப் பிடிக்கவே இல்லை.

பாலியல் குற்றத்தில் குமாரின் நண்பர்கள் மாட்டிக்கொள்ள குமாரையும் போலீஸ் தேடுகிறது. செந்தில் கூடுதலாக நட்பு புண்டுருந்தால்  குமார் வைத்த ‘பொறி’யில் செந்திலும் மாட்டியிருப்பார்.

ஜீம்பூம்பா- சாந்தி சரவணன்

குக்கூ.. குக்கூ… என என்ஜாய் என்ஜாமி பாடல் பிரபலம் ஆவதற்கு முன்னதாகவே. இந்த சிறுகதையில் முதல் வரியாக ‘குக்கூ...  குக்கூ…’ அலாரம் இடம்பெற்றிருப்பது தீர்க்கதரிசனமாக நான் கருதுகிறேன்.

சௌமியா, ரிஷி ஒரு சின்ன வீட்டுக்குள்ளே நடத்தப்படும் இணையம் வகுப்பு தான் இந்த கதை. ஐந்து வயது சிறுவர்களுக்கு ஒரு கைப்பேசியைக் கொடுத்து அவர்களை அதன் முன்னால் அமரச்சொல்லி பாடங்கள் கற்பிக்கும் அளவிற்கு ஆசிரியர்களுக்குத்  திறமை வரவில்லை, அதுமட்டுமல்லாது அந்த பாலகர்களுக்கு அப்படி ஒரு கட்டாயக்கல்வி தேவையற்ற ஒன்றாகவே தான் நானும் கருதுகிறேன். அதைத்தான் ஜீபூம்பாவும் விளக்குகிறது.

ஒரு அம்மா தன் மகனுடன் அன்றாடம் படும் சின்ன சின்ன இன்னல்களையும் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்ளும்  பரமதயாளியாக  சௌமியா இருக்கிறாள். பள்ளி ஆசிரியை ஒவ்வொரு மாணவர்களாகவும் இணையம் வழியாகப் பாடங்கள் கற்பிக்க முயலும் போது மாணவர்களைத் தனது இரும்புக் கரங்களுக்குள் அடக்க நினைக்கிறார். 

ஆனால் அந்த இளங்கன்றுகள் அதைப் பெரிதும் கண்டுகொள்ளாமல் ‘வணக்கம் அம்மா...’ என ஆசிரியரேயே தமாஷ் செய்கிறது. வகுப்பும் புறக்கணிக்கப்பட்டு சோப்பு நுரையுடன் நீர்க்குமிழி செய்து விளையாடும் எதார்த்தம் நிறைந்தது தான் இந்த சிறுகதை.

சுவாதி – ராதிகா விஜயபாபு

கதையின் தலைப்பிலே கதாபத்திரம் இருக்கிறது. கத்தியுடன் கையை அறுத்துக் கொள்ளும் முயற்சியில் இருக்கும் சுவாதி சற்று மனமாற்றத்திற்கு பின்னால் அதை நிறுத்தி விடுகிறாள், மேலும் பல முறைகளுக்கும் முயன்று பார்க்கிறாள். 

தனக்குத் தற்கொலை செய்துகொள்ளக் கூட வரவில்லையே? என்கிற வருத்தம் வேறு கொள்கிறாள். முதலில் அவள் ஏன் தற்கொலைச் செய்து கொள்கிறாள். இந்த அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து நம்மைக் கதைக்கு  அருகே நிற்க வைத்து விடுகிறார்.

நட்பால் நண்பனை நம்பி ஏமாந்து அவனின் காம வலைக்குள் சிக்கிக் கொள்கிறார்கள். அவன் அதை வைத்தே அவளைப்  பயன்படுத்துகிறான். இணையத்தில் வெளியிட்டு விடுவதாக., மேலும் கதையின் இறுதி அத்தியாயங்கள் பெண்களுக்கான தைரியம் அளிப்பதாகவே முடிகிறது.

அடிமைகள் – பா. தீபா லட்சுமி

மாலினி, நிரோஷா, ஷாபனா தனியார் நிறுவனத்தில் கொத்தடிமைகளை விட மிக மோசமாக வாழும் தொழிலாளர்களைப்  பற்றியதுதான் இந்த சிறுகதை அங்கே ஒருவருக்கொருவர் மனமுவந்து பிறரை குறை சொல்லி அவர்கள் காண முன்னேற்றத்தை அமைத்துக் கொள்வதே அடிமைகள் கதை.

நிறுவனம் ஒருகட்டத்தில் வேலை செய்யக்கூடிய ஆட்களை மட்டுமே தேர்வு செய்யும் போது. அங்கே  எட்டப்பன்  வேலை பார்த்துக்  கொண்டிருந்த ஷாபனா வீண் வேலை பறிபோகிறது. நேர்மையாக எங்கு வாழ்ந்தாலும் நிரந்தரமான ஒரு தீர்வு உண்டு என்கிறதை இந்தக் கதை நமக்கு உணர்த்துகிறது.

என்னங்க சார் உங்க சட்டம்? -  மீ முத்து விஜயன்

பாக்கியம், ராக்கு

இந்த இரண்டு கூலி வேலை செய்யும் தாய்மார்களும் தங்கள் பிள்ளைகளைப் பள்ளியில் சேர்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடும் போதுதான். அரசாங்கம் கொண்டுவந்த புதிய சட்டத்தினால் மாணவர்களை அரசுப் பள்ளியில் சேர்க்க இயலாத நிலையில் தள்ளப்பட்டு உள்ளதை அறிந்து. தங்களின் பிள்ளைகளின் எதிர்காலம் தங்களைப் போல் கேள்விக்குறியாய் மாறியதை அறிந்து நாமக்கு வேந்து நெந்து உணர்த்தப்படுகிறது.

அந்த சாலைகளில் அவர்கள் புலம்பிய திரியும் வேளையில், இந்த மண்ணில் எங்கோ ஒரு மூலையில் ஒரு சட்டத்தால் பல மாணவர்களின் கல்வி பறிக்கப்படுமே ஆனால் அந்த சட்டம் மாணவர்களுக்கான பயனைக் கடுகளவும் அளிக்கவில்லை எனும்போது. அப்படி ஒரு சட்டம் எதற்கு என்ற கேள்வி நம் மனதில் ஆழமாய் எழுப்புகிறது.

இந்தக் கதையைப் படிக்கும் பொழுது பெரியார் சொன்ன சொல் தான் ஞாபகம் வருகிறது. “ஒரு சாமானியன் கஷ்டப்பட்டு  அடிபட்டுத்  துன்பப்பட்டு முன்னேறி வரும் பொழுது அவனைத் தடுப்பதற்காகச் சனாதனம் சட்டத்தைக் கையில் வைத்திருக்கும்”  என்றார் அது மிகச்சரியாக இந்த கதையில் படம் பிடித்து காட்டப்படுகிறது நமக்கு.

முடக்கம் – மு ஜெய்கணேஷ்

முருகன், முருகன்  மனைவி, கந்துவட்டி பெருமாள் இவர்களுடன் கதை நகர்கிறது. பெருமாளின் வீட்டு வாசலில் அதிகாலையில் கந்து வட்டிக்குக் கதை நாயகன் முருகன் காத்திருக்கிறார். ஊரடங்கு காரணமாகத் தொழில்  நன்றாக இருந்ததால் மீண்டும் தொழில் தொடங்குவதற்குப் பணம் தேவைப்படுகிறது.

ஒரு ஹோட்டல் நடத்துவது எவ்வளவு கஷ்டம் என்பது கதையின் வாயிலாக நமக்கு நன்றாக உணர்த்தப்படுகிறது.

உணவகத்தில் தயாரிக்கப்படும் பரோட்டா நம் தட்டில் எப்பொழுது வந்து விழும் என்கிற எதிர்பார்ப்பும், கடன் கேட்டு வந்த முதல் நபருக்கு அன்புடன் அளிக்கும் குணமும் மாஸ்டர் முருகனிடம் வெளிப்படுகிறது.

கடைகளில் இருக்கும் மிகச் சரியான ஏற்ற தாழ்வுகளை கதைமாந்தர்கள் உடன் நமக்கு எடுத்துரைக்கிறார் எழுத்தாளர் மு ஜெய்கணேஷ்.

மீறல் – சு இளவரசி

ப்ரித்தா, வனிதா, ஆசிப்

கல்லூரியில் படிக்கும் சக மாணவர்களிடம் சாதிய பாகுபாடுகள் இல்லாமல் சமமாகப் பார்த்துப் பழகும் மாணவி ப்ரீத்தா. ஆனால் அவர்களது குடும்பம் தாத்தா முதல் அண்ணன் வரை எல்லோரும் சாதியில் ஊறிய பன்றிகளாகவே இருக்கிறார்கள்.  

அவர்கள்  பேசுவது அவளுக்குப் பிடிக்கவும் பிடிக்காது தனது கல்லூரி நண்பர்களைச் சமமாக நட்பு கொள்வதே இந்த கதையின் ஆகச்சிறந்த ‘மீறல்' ஆகவே இருக்கிறது.

மொட்டுகள் – மு காயத்திரி தேவி

வித்யா, ஹரிணி. அம்மா, மகள்  

சென்னை அடுக்குமாடிக் குடியிருப்பில் கணவன் துணை இல்லாமல் வாழும் வித்தியா அவர்களின் எட்டு வயது மகள் இருக்கிறாள்.  அவள் திடீரென பருவம் எய்து உடன் அவளுக்கு பல்வேறு குழப்பங்கள் வந்து விடுகிறது.

தன் மகளை ஒரு பொறுப்பான அம்மாவாக எப்படி வளர்ப்பது என்று? அவளுக்கு குட் டேச் பேட் டேச்  சொல்லிக் கொடுக்கிறாள்.

நாம் செய்வது சரிதானா என்று யோசித்துக் கொண்டிருக்கும் நிலையில். அவர்கள் தங்கியிருந்த  அடுக்குமாடிக் குடியிருப்பு  அவசரமாக கூட்டத்திற்கு அழைக்கிறார்கள்.

பக்கத்து அடுக்குமாடிக்குடியிருப்பில் ஒரு கல்லூரி படிக்கும் இளைஞன் ஒரு குழந்தையை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதின் விழிப்புணர்வு கூட்டமாக இருந்தது. பெண் குழந்தைகளை வைத்திருக்கும் ஒவ்வொரு பெற்றோர்களின் மனதில் கதை ஆழமான, ஒரு பதற்றத்தை ஏற்படுத்தும்.

சு'தந்திரம் – இவள் பாரதி

காவ்யா, கதையாசிரியர் ஒரு பத்திரிக்கை அலுவலகத்தில் நடக்கும் அப்பட்டமான அரசியலை கேமரா கண்களாலும் கைகளாலும்  நமக்குப் படம் பிடித்துக் காட்டுகிறார் இவள் பாரதி.

ஒரு அலுவலகத்தில் பணியாளர்களுக்கு விதிக்கப்படும் அதிக கட்டுப்பாடுகளையும் ஒரு பத்திரிகை அலுவலகத்தின் தோற்றத்தையும்  பென்சில் ஸ்கெட்ச் போல நம் கண் முன்னே வரைந்து காட்டுகிறார் எழுத்தாளர்.

பத்திரிக்கை சுதந்திரம் என்பது பிறர் கருத்துக்களை சுதந்திரமாக பேசுவது என்று கூறுவார்கள். ஆனால் பத்திரிக்கைகளுள் இருக்கும் ஊழியர்களுக்கு தாங்கள் வெளிப்படுத்த வேண்டிய கருத்துக்களைச் சுதந்திரமாக வெளிப்படுத்த அனுமதி இல்லை என்பதை நமக்கு ஆழமாக உணர்த்துகிறது.

ஆங்காங்கே பணிபுரியும் பத்திரிக்கை நண்பர்களும் உண்மையை உரக்கப் பேச நினைக்கும் பொழுது கட்டுப்பாட்டுக்குள் நிறுத்தி வைக்கப் படுகிறார்கள் என்பதே கதையில் நமக்கு விளங்குகிறது.

அனுமதி – அ ஆஃப்ரின் பானு

மோகன், செந்தில்

ஊரடங்கு போது சாமானிய மக்களைக் கசக்கிப் பிழிந்தது தொடர்பான கதைதான் இது. விதிகள் இல்லாமல்  பிரபல  நட்சத்திரம்  பண்ணை வீட்டிற்குப் போய் வந்தது போல. ஒரு சாமானியனுக்குத் தான் குழந்தையை பார்க்கச் செல்ல முடிவதில்லை.

அரசு அதிகாரிகளுக்கு தட்சணை கொடுத்து  இ- பாஸ்  வாங்கிக்கொண்டு பல சிக்கல்களைக் கடந்து குஜராத்தில் போல் நின்றாலும், கால்கள் வீங்கி கண்கள் மயங்கி ஒரு வழியாக வந்து சேர்ந்தோம் என்ற மகிழ்ச்சியை அடைவதற்குள். அதிகாரிகள் உள்ளே நுழைய அனுமதி மறுப்பதால் அதிர்வுடன் முழித்துக் கொண்டிருக்கிறார் மோகன்.

காரியம் சாதித்துக் கொள்ள கையூட்டு ஆதரிப்பது போலச் சிறுகதை இருந்தாலும். ஒரு சாமானியனுக்கு வேறு வழி இல்லை என்பதையும் சேர்த்து உணர்த்துகிறது.

குமிழி – சுகன்யா

சதீஷ், ராமு

பார்வை குறைபாடு உடைய சதீஷ்  வங்கியில் வேலைக்குச் சேர்கிறான் அங்கும் நிரந்தர பணியா அல்லது  காண்ட்ராக்டா  எனக்  குழம்பிப் போன நிலையிலேயே காலம் நகர்கிறது.

அதற்குள் அரசின் அதிரடி அறிவிப்புகள் இன்னும் அவனை அதிரச்சி அடையச் செய்கிறது. பலத்த கனவுடன் இருக்கும் ஒவ்வொரு சாமானியனுக்கும், சிறு பாம்புக்கு சூடு வைத்தவுடன் சுருண்டு விழுவதுபோல சாமானியனுக்கு சூடு போடுகிறது அரசு.

அரசு  தனது சட்டத்தைச் சட்டையில் பொட்டலமாக வைத்துக்கொண்டு. வாழ்வின் பொருளாதாரத்தில் மேம்பட்ட மனிதர்களுக்கு மட்டுமே அந்த சட்டங்கள் பயன்படும் வகையில் அமையச் செய்கிறது.

இங்கே அதனால் சாமானியன் நசுக்கப்பட்டு கொண்டேதான் இருக்கிறான் அவைகளால் ஒவ்வொன்றும் சாமானியனின் கனவும் நீர்க்குமிழிகள் போல மறைந்து விடுகிறது. சதீஷின் கனவுகளும் அப்படியே கதையில்.

செலவு – சீ. குருமணிக்கம்

அன்னபூரணி, ரவி

தனியார் மருத்துவமனையில் தன் அம்மா அன்னபூரணியை அனுமதித்து. அங்கே வசூல் வேட்டை நடத்தப்படும் ஆஸ்பத்திரியின் பேராசை தான் இந்த கதை.

முன்பணம் தொகை மூனு லட்சத்தைக் கட்டிய ரவியின் அம்மாவை பத்து  நாட்களுக்கு மேலாக, அந்த ஆஸ்பத்திரியிலேயே காக்க வைத்து ஏதேதோ டெஸ்டுகள் எடுக்கப்பட்டு ஏறக்குறைய ஐந்து லட்சத்திற்கான ரசீதைத் தயார் செய்கிறார்கள்.

பணம் செலுத்தும் தருணத்தில் ஆஸ்பத்திரியில் நடக்கும் நாடகமும் அப்பட்டமாக நமக்கு விளங்குகிறது. விலையைக் குறைப்பவன் ஏற்கனவே அதை உயர்த்தி வைத்து விற்பது போல ஆஸ்பத்திரியிலும் செய்கிறார்கள். மறைமுக தந்திரமான மருத்துவமனையின் பண குவியல்களை நமக்குப் பொத்தல் போட்டு காட்டுகிறார் எழுத்தாளர்.

இந்தக் கதையில் வரக்கூடிய எண்ணிக்கைகள் எழுத்துக்கள் ஆகவே சொல்லி இருந்தால், இன்னும் சிறப்பாக இருக்கும் அவை எண்களின் வடிவங்களிலேயே இருப்பது கலையின் உயிரோட்டத்தைத் தடுக்கிறது.

இந்த பன்னிரண்டு கதைகளும் சிறுகதைக்கான  அதிர்வு உடனே ஆரம்பிக்கிறது முடியவும் செய்கிறது. சமூகத்தில் இருக்கும் சாமானியர்களை நம் அருகில் கூட்டி வந்து நிறுத்தி விடுகிறார்கள். எழுத்தாளர்கள் இதுபோன்ற இன்னும் சமகாலத்தின் அதிர்வுகளை வெளிப்படுத்த வேண்டும் என்கிறது என்னுடைய அழுத்தமான ஆவல்.

அனைத்து சிறுகதைகளும் அருமை, மிகச்சிறப்பு அன்பும், மகிழ்ச்சியும் தோழர்களே

நூல்: பேரிருளின் புதுச்சுடர்கள்
ஆசிரியர்: அ. உமர் பாரூக்
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
விலை: ரூ. 100
புத்தகம் வாங்க கிளிக் செய்க: பேரிருளின் புதுச்சுடர்கள் – தொகுப்பு: அ. உமர் பாரூக்

- மு.தனஞ்செழியன்

Pin It