ருஷ்யாவில் நதியோர நகரமான நிழ்னி நோவோகிராட்டில் பிறந்த கார்க்கியின் படைப்புகள் உலகம் முழுவதும் நரம்புகளும் ரத்தங்களும் பரப்புகின்றன. உலக முற்போக்கு இலக்கியத்துக்கு நம்பிக்கையும், தெம்பும், புத்துயிர்ப்பும் தருகிற ஆற்றல்மிக்க படைப்புகள் மாக்ஸிம் கார்க்கியின் படைப்புகள். உலகக் கம்யூனிஸ இலக்கியவாதி என்ற தனித்துவ அடை யாளமும் கார்க்கியின் தனிச்சிறப்பு.
நிரந்தரமான நளினமிக்கப் படைப்புகள் என்றென்றும் நினைக்கத்தக்கவை; இப்போதும் வாசித்து வெளிச்சம் பெறத்தக்கவை.
‘நான் எவ்வாறு எழுதக் கற்றுக் கொண்டேன்’ என்ற நூலையும், ‘எனது குழந்தைப் பருவம்’ என்ற நூலையும் இப்போதுதான் வாசித்து முடித்தேன். ‘இது எத்தனையாவது தடவையான வாசிப்பு’ என்று என்னாலேயே கணக்கு சொல்ல முடியாது. அப்படியிருந்த போதிலும் நான் புதிதாக உழப்பட்டதாக உணர்கிறேன். ஒவ்வொரு வாசிப்பின் போதும் ஏற்படுகிற அதே உணர்வையும், தெளிவையும், புதிய வெளிச்சத்தையும் இப்போதும் பெறுகிறேன்.
தோழர் எஸ்.ஏ. பெருமாள் அவர்கள் கைகாட்டிய திசைதான் மாக்ஸிம் கார்க்கி. “அவற்றைத் தேடித்தேடி காலம் பூராவும் படி. அது எப்போதும் உன்னை புத்தம் புதிதாக வளர்க்கும் வளர்க்கும்’’ என்று எனது பதினெட்டா வது வயதில் (1996) சொன்னார். அது எத்தனை சத்தியமான ஒளி என்பதை இப்போதும் உணர்கிறேன்.
மாக்ஸிம் கார்க்கியின் மேதமை வர்ணிப்புக்கு அப்பாற் பட்டது. மற்ற எந்த எழுத்தாளரிடமும் பார்க்காத ஒரு பேராற்றலை பெரும் பண்பை - கார்க்கியிடம் காணமுடியும்.
‘நான் எவ்வாறு எழுதக் கற்றுக் கொண்டேன்’ என்று இலக்கிய மாணவர்கள் மத்தியில் அவர் ஆற்றிய உரைதான் அந்த நூல். இந்தத் தலைப்பில் அந்தக் காலத்தில் யாரும் தன்னைப் பகிர்வதில்லை.
ஏனெனில் எழுத்தாளர்கள் என்று அடையாளப்பட்டவர்கள் யாவரும் பிரபுத்துவ குடும்பத்திலிருந்து வந்த கனவான்கள், கல்விமான்கள். சமூகத்தின் அந்தஸ்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருந்தவர்கள்.
கனவான்களாகவும் கல்விமான்களாகவும் உள்ளவர்கள், ‘இலக்கியப் படைப்பாளி’ என்ற ராஜ சிம்மாசனத்தை கூடுதல் அந்தஸ்தாகப் பெறுவது, அதிசயமன்று; ஆச்சரியமன்று; வியப்பன்று; மாறாக, மிகமிகமிக இயல்பானது. ஆகவே, ‘நான் எவ்வாறு எழுதக் கற்றுக் கொண்டேன்’ என்று சொல்ல வேண்டியதில்லை. அதில் சொல்வதற்கொன்றுமிருப்பதில்லை.
ஆனால்......கார்க்கி அப்படியல்ல.
ஓர் எழுத்தாளராக பரிணமிப்பதற்கான ஒரு கல்விச் செழிப்போ.....பிரபுத்துவ குடும்பப் பின்புலமோ.....கனவானோ.....அல்ல, கார்க்கி.
விபரம் தெரியத் துவங்கிய வயதிலேயே தகப்பனை இழந்து, விபரம் தெரிய ஆரம்பித்த வயதில் தாயையும் இழந்து, பாட்டி, தாத்தாவிடம் அடிபட்டு உதைபட்டே வளர்ந்த கார்க்கி கற்ற கல்வியும் மிகமிகமிக சொற்பம்; அற்பம். வறுமையில் தள்ளப்பட்டவர். வயிற்றுக்காகத் திருடியவர்.
திருடர்களும், நோயாளிகளும் பிச்சைக்காரர்களும் தங்குகிற இடத்தில் வாழ்ந்தவர். இவர் கற்றதெல்லாம், வாழ்க்கையினால் தூக்கியெறியப்பட்ட இந்த மாதிரி உதிரி மனிதர்களைத்தான். இவர்களது வாழ்க்கையூடாக சமுதாயத்தைக் கற்றார். வாழ்க்கையின் அகம்-புறம் கற்றார். கற்றதால் அவர் அடைந்தது, கசப்புணர்வைத்தான். கைப்புணர்வைத்தான். கசப்பு, கைப்பு என்ற பொருள் தாள், ‘கார்க்கி’ என்ற வார்த்தைக்கு.
அடித்தட்டு மக்களிடமிருந்து முளைத்தெழுந்த மாக்ஸிம் கார்க்கி.....எழுத்தாளரானது எப்படி என்பது அச்சரியத் திற்குரிய -வியப்புக்குரிய _ அதிசயமான அபூர்வ விஷயம் தான். பகிர்வதற்குரிய வரலாற்றுப் புதுமைதான். அந்த வகையில் கார்க்கி மிக குறிப்பிடத்தக்க அளவுக்கு தனித்துவமானவர்.
எந்த எழுத்தாளருக்கும் அடிமனதில் ‘தாமே தலைசிறந்த எழுத்தாளன்’ என்ற எண்ணமும், இறுமாப்பும் இருக்கும். அதைத்தான் ‘ஈகோ’ என்பார்கள். அந்த ஈகோ, கார்க்கியிடம் துளிகூட காணப்படவில்லை.
‘சிருஷ்டிப்பணி’ என்ற சொல்லாடலைக் கூட கண்டிக்கிறார். “மேட்டுக்குடி மேதைகளின் உயர்வகைச் சொல்லாகும் அது’’ என்கிறார். “உண்மையில்...அது ஒருவேலை என்று குறிப்பிடுங்கள் போதும்’’ என்கிறார்.
“இலக்கியப் படைப்பு என்பது பிரம்மாவின் சிருஷ்டிப் பணிக்கு நிகரானது. ‘கருவிலேயே திருவுடையோர்’ மட்டுமே செய்யக்கூடியது. காளியின் அருள் பெற்றவனோ, கலைவாணி அருள் பெற்றவனோதான் கலைப்படைப் பாளியாக முடியும்’’ என்று நிலவிலிருகிற கருத்துலக பிம்பத்தை காலால் எற்றித் தகர்க்கிறார் கார்க்கி.
‘இலக்கியம் இலக்கியத்திற்காகவே’ என்ற கொள்கையுடன் எழுத்துலகில் மிகப்பெரிய திருப்தியுடன் நிலவுகிற பிலிஸ்டைன் வகைப்பட்ட அறிவு ஜீவிகளின் தத்துவம், கோட்பாடு, நடைமுறை ஒழுங்கீனம், தற்கொலைக் கோழைப்புத்தி எல்லாவற்¬யும் துல்லியமாக அம்பலப் படுத்துகிறார். தாட்சண்யமற்ற அசூயை உணர்வுடன் அடித்துத் தள்ளுகிறார்.
‘ஏராளமான அனுபவங்கள் சேர்ந்துவிட்டன. அதைப் பகிர்வதற்காக’ எழுதப்படுகிற வகைகளையும், ‘அழுத்திக் கொல்கிற முடிவில்லாத சலிப்பின் காரணமாக’ எழுதத் துவங்குகிற இலக்கிய வகைகளையும் தனித்தனியாக பிரித்து அலசிப் பரிசீலிக்கிறார்.
யதார்த்தத்துக்கும் கற்பனா வாதத்துக்குமான முரணையும் வித்தியாசத்தையும் மிகுந்த நுட்பமாக விளக்குகிறார். கற்பனாவாதத்துக்குள்ளேயே பிரிகிற உட்பிரிவு வகைப் பாடுகளையும், அதன் குணாம்சங்களையும், அதற் கான சமூகக் காரணங்களையும் விளக்குகிற போது..... எழுத்தாளர்களுக்கான இலக்கியக் கல்வியாகவே உயர்ந்து ஒளிர்கிறது.
அவருடைய மொழிநடை குறித்து அவரே பரிகாசம் பண்ணிக் கொள்வதும், அவரது மொழிநடை காரணமாக ஏற்படுகிற சித்தரிப்புப் பிழைகளை அவரே அம்பலப்படுத்திக் கொள்வதும் எந்த எழுத்தாளரிடமும் காணமுடியாத தனிச்சிறப்பான தனித்துவமாகும்.
ஈகோ உள்ள எந்தப் படைப்பாளியிடமும் காணமுடியாத துணிச்சலையும், தன்னம்பிக்கை கம்பீரத்தையும் கார்க்கி கொண்டிருந்தார் என்பதற்கு இதுவே சாட்சியம்.
சோசலிச யதார்த்தம் குறித்த அவரது கருத்தும் நிர்ணயிப்பும், அதை ஒரு புதிய கோட்பாடாக முழுமைப்படுத்தி தருவதும் மிகப்பெரிய இலக்கியக் கல்வியைத் தருகிறது.
“எனது குழந்தைப் பருவம்’’ ஒரு சுயசரிதையை இலக்கியத் தரமான நாவலைப் போல எப்படிப் படைத்து வழங்குவது என்பதற்கான நேரடி சாட்சியம். அப்படியே நாவலுக்குரிய மொழிநடைதான். சுவாரஸ்யமும், வாசிப்போட்டமும் தருகிற மிகச்சிறந்த இலக்கியமொழி நடையில் எழுதப்பட்ட சுயசரிதையில் ஒருபகுதி.
கார்க்கி பாலகனாக இருக்கிற வயதில்..செத்துக் கிடக்கிற அப்பாவிடமிருந்து நாவல் துவங்குகிறது.
நாதியற்ற விதவைத் தாயுடன் தாத்தா பாட்டியிடம் தஞ்சமடைகிற அனுபவம்.
அடியாத மாடு படியாது என்பதில் அழுத்தமான நம்பிக்கையுள்ள தாத்தாவிடம் பட்ட அடிகளைத் தின்றே வளர்கிற மாக்ஸிம். இவனது அம்மா சீரழிந்த வரலாறு, தாத்தா குடும்பம் சிதைந்த வரலாறு, அப்பா கொல்லப்பட்ட வரலாறு, தாய்மாமன்கள் நிலைகுலைந்து நிர்மூலமான வரலாறு என்று பல ‘வரலாறுகள்’ உணர்த்தப்படுகின்றன.
நேரடியாக உணர்த்தப்படாமல்......சம்பவங்களை தொகுத்து வழங்குகிற மிகப்புதிய உத்திகள் காரணமாக...இது மிகச் சிறந்த இலக்கியப் படைப்பாகிறது.
அற்பப்புத்தியும் கருமியுமான தாத்தாவின் பிராத்தனைகள், அன்பும் கருணையும் பொறுமையுமான பாட்டியின் பிரார்த்தனைகள் நிறைய சொல்லப்படுகின்றன.
சகல பாவங்களையும் தண்டித்து சம்ஹாரம் செய்கிற ஈவிரக்கமற்ற கடவுள் ஒன்றும், சகல ஜீவராசிகளையும் அன்பால் அரவணைக்கிற கருணைமிக்க கடவுள் ஒன்றுமாக இரண்டு கடவுள் உலகில் நிலவுவதாக அந்தச் சிறுவன் உணர்கிறான்.
‘பிற்காலத்தில் எனக்குள் எழுந்த ஆன்மீகக் கோட்பாட்டுப் பூசல்களுக்கு இந்த இளம் பாலக வயசுச் சிந்தனை அடிப்படையாக இருந்தது’ என்கிறார் கார்க்கி.
இந்தச் சமூகமும், வாழ்க்கையும் எத்தனை பயங்கரமான கொடிய ராட்சஸமாக இருக்கிறது என்பதையும், இதனால் சுழற்றி உருமாற்றப்படுகின்றன மனிதர்களிடையே மோசமான சிறுமைப் பண்புகள் உருவாவதையும்...இவை எல்லாவற்றையும் கடந்து ஒவ்வொரு மனிதருள்ளும் மானுடப் பண்பு புதைந்து கிடந்து அவ்வப்போது கசிவதையும் கண்டுணர முடிகிறது நம்மால். ருஷ்ய சீதோஷ்ண நிலைமைகளும், வாழ்வின் இழிந்த கொடூரங்களும் உணர்த்தப்படுகின்றன.
‘நம்பி’யின் மொழிபெயர்ப்பில் தமிழ்ப் படைப்பாகவே மாயம் கொள்கிறது. மிகுந்த நேர்த்தியும் நளினமுமிக்க அற்புத மொழிபெயர்ப்பு.
இந்த இரண்டு நூல்களிலுமே.....எத்தனை நுட்பமாக தேடிக் கண்டுபிடித்தாலும் ஒரு பிழையைக்கூட பார்க்க முடியவில்லை. அத்தனை தெளிவான அச்சாக்கம் வாசிப்புக்குரிய வடிவமைப்பு.
தாத்தா பாட்டி, அம்மா, சிறு தந்தை மற்றும் சகலராலும் கைவிடப்பட்டு முரட்டுமூர்க்க உலகத்துடன் கட்டிப் புரள்வதற்கு தன்னந்தனியாக ஒரு சிறுவன் செல்வதுடன் நாவல் முடிவடைகிறபோது, நம்முள் கவிந்த சோக இருள் விலகவே மறுக்கிறது,
......இந்த இரண்டு நூல்களுமே தமிழில் புதிதாக என்.சி.பி.எச். நிறுவனத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்த நூல்கள் ருஷ்யாவை கற்றுத் தருகிறது. முதலாளித்துவ உலகக் குணத்தைக் கற்றுத் தருகிறது. மனிதர்களை கற்பது எப்படி என்கிற இலக்கிய அறிவை கற்றுத் தருகிறது. என்னுள் கவிந்த பிரம்மாண்ட பிரமிப்பு இன்னும் விலக மறுத்து, ஆக்ரமிக்கிறது.