கடவுள் மனிதனைப் படைத்தாரா? அல்லது மனிதன் கடவுளைப் படைத்தானா? கண்முன்னே தெரியும் ஒவ்வொன்றையும் யார் படைத்தது? இதுபோன்ற முடிவில்லாத கேள்விகள் அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியின் வியக்கத் தகுந்த காலகட்டத்திலும் தொடர்ந்து கேட்கப்பட்டு வருவதை நடைமுறையில் கண்டு வருகிறோம்.

humanbeings 600அதே சமயத்தில் அறிவியல் வல்லுநர்கள் நாம் வாழ்ந்து வரும் பிரபஞ்சம் குறித்த உண்மைகளைத் தொடர்ந்து தேடிவருகிறார்கள். அவைகளின் அடிப்படையில், ஆய்வுக் கண்ணோட்டத்தில் மனித குல வரலாறு வடிவமைக்கப்பட்டு வருகிறது. மனித குல வரலாற்று வளர்ச்சி வாழ்க்கையைத் தொடர்ந்து ஆழமாகவும் விரிவாகவும் அறிந்து கொள்ள வசதிப்படுகிறது.

இதுவரை, கதை, காவியம், கல்வெட்டு, ஓலைச்சுவடி அகழ்வாய்வு பொருட்கள், கவிதை, புராணம், வாய்மொழி போன்றவைகளின் அடிப்படையில் வரலாறு வடிவமைக்கப்படுகிறது. இந்த வரலாறு கல்விக் கூடங்களில் கற்பிக்கப்படுகிறது. சாராம்சத்தில் இதுபோன்ற வரலாறு ஊகங்களின் வாயிலாக வடிவமைக்கப்பட்டவை. அறிவியல் கண்ணோட்ட அடிப்படையில் அவை அமைக்கப்படவில்லை. அதனால் அந்த வரலாறு அதிக அளவில் கற்பனைக்கு இடமளிக்கிறது. அறிவயில் சார்ந்த கண்ணோட்டத்திலிருந்து அது மாறுபட்ட வகையில் தொடர்ந்து இயங்கி வருகிறது.

கற்பனைகள் தெளிவின்மையையும் குழப்பங்களையும் விளைவிக்கின்றன. சமூக அறிவியல் சார்ந்த வரலாற்றுக் கண்ணோட்டம் தவிர்க்கப்படுகிறது. அதனால் தாறுமாறான விவாதங்களும், புரிதல்களும் நிகழ்கின்றன. அதிலிருந்து மாறுபட்ட ஒரு வரலாற்றை ஆழமான அக்கறையோடு தீவிரமான முயற்சிகளின் வாயிலாக அறிவியல் கண்ணோட்ட அடிப்படையில் வியக்கத்தகுந்த மனித சமுதாய வரலாற்றை டி.கே.மித்ராபோல்ஸ்கி வடிவமைத்திருக்கிறார்.

மனிதனின் தோற்றம் முதல் அவனுடைய சமுதாயம் தோன்றி வளர்ந்து வந்த வரலாற்றைத் தெளிவாகவும், துல்லியமாகவும் கண்டறிந்திருக்கிறார் அளவிட முடியாத பிரபஞ்சத்தைக் குறித்த உணர்வோடும் வியக்கத் தகுந்த அதன் இயங்குதலைப் பற்றிய ஒரு புரிதலோடும் மண்ணில் உயிர்வாழ்க்கையை இனம் கண்டு வெளிப்படுத்துகிறார். இந்தப் பின்னணியில் அறிவியலாளர்களின் கருத்துகளையெல்லாம் உள்வாங்கிக் கொண்டு அதன் வெளிப்பாடாக இந்த வரலாற்றை அவர் வடிவமைத்திருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது.

“திரியோ பிதேஸின் என்று அழைக்கப்படும்” மிக வளர்ச்சியடைந்த, இப்பொழுது முற்றிலும் அழிந்துவிட்ட ஆதிகால மரமேறும் வாலில்லாக் குரங்குகளின் எலும்புக் கூடுகளைப் பத்தொன்பதாவது நூற்றாண்டில் புதை பொருள் ஆராய்ச்சியாளர்கள் தோண்டி எடுத்தனர்.

பல நூற்றாண்டுகளின் காலப் போக்கில் மிருக உலகம் பெற்றுள்ள பரிணாம வளர்ச்சியைப் பற்றிப் புகழ்பெற்ற ஆங்கில இயற்கை விஞ்ஞானி சார்லஸ் டார்வினும், அவரது சீடர்களும் ஆராய்ச்சி நடத்தினர். இந்த ஆராய்ச்சிகளைப் பயன்படுத்தி மனிதனுக்கும், மிருக உலகத்திற்குமிடையே உள்ள ஜீவிதத் தொடர்பையும், மிக வளர்ச்சியடைந்த பண்டைய வாலில்லாக் குரங்குகள் படிப்படியாக மாறி மனிதனாக வளர்ச்சியடைந்ததையும் விஞ்ஞானரீதியாக நிரூபித்தனர்.

உடற்கூற்று நூல் கருவளர்ச்சி நூல் தொல் உயிர் அமைப்பு நூல் ஆகியவை அளித்துள்ள புள்ளி விவரங்களில் இந்தத் தத்துவம் நிரூபிக்கப் பெறுவதைக் காணலாம். குறிப்பாக, எலும்புக் கூட்டின் அமைப்பு, மூளை வளர்ச்சி, இரத்தக் கலவை ஆகியவற்றில், நவீன மனிதனுக்கும் வாலில்லாக் குரங்குகளுக்குமிடையே காணப்பெற்ற அடிப்படை ஒற்றுமை அந்தத் தத்துவத்தை மேலும் நிரூபிக்கிறது. இந்த உலோகாயத வாதத் தத்துவத்தின் உண்மையை நவீன விஞ்ஞான வளர்ச்சி அற்புதமாக நிரூபிக்கிறது.”

இதன் அடிப்படையில் இந்த மனித சமுதாய வரலாறு தோற்றம் பெற்று விரிவாகும் விதத்தில் ஆய்வாளர் இந்த நூலை வடிவமைத்திருக்கிறார்.

தொடர்ந்து, மனிதன் தொடக்க கால மிருக நிலையிலிருந்து மனிதனாக அவன் மாறிய சாரத்தை விளக்கும் வகையில் ஏங்கல்ஸின் கண்டுபிடித்தலை முன்வைத்து விளக்குகிறார் இவர். “தானே உருவாக்கிய கருவிகளின் துணை கொண்டு சமூகத்திற்குப் பயன்தரும் வகையில் மனிதன் ஈடுபட்ட உழைப்பே. அவனை மிருக உலகத்தை விட உயர்ந்த நிலையில் வைக்கிறது” என்ற உண்மையை அவர் முதன் முதலில் கண்டார்.

அடுத்து, இவர் மனித சிந்தனையின் வளர்ச்சியையும் விளக்குகிறார். “தொடர்ந்து மாமிச உணவு அருந்தியதால் குறிப்பாக மூளை வளர்ச்சிக்கு வேண்டிய ‘புரோட்டீன்’ போன்ற சத்துக்கள் நிறைய கிடைத்தன. இந்தச் சத்துக்கள் மனித மூளை துரிதமாக வளர்ச்சி பெறுவதற்கு உறுதுணை புரிந்தன. புலனுணர்ச்சித் தூண்டுதலுக்கேற்ப பணிபுரிந்த புராதன மனிதன். மனமறிந்து உழைப்பில் ஈடுபடத் தொடங்கினான்.”

சிந்தனைத்திறன் வளர வளர மனிதன் தனது சுற்றுப்புறத்தை அறிந்து கொள்ளும் ஆற்றலைப் பெற்றான். தனது உழைப்பும், அந்த உழைப்பு இயற்கையில் ஏற்படுத்திய மாற்றங்களும் மனித உடல் முழுவதின் வளர்ச்சியை ஊக்குவித்தன; அவனுடைய மூளை செழுமை பெற்றது.

அதன் தொடர்ச்சியாக மொழி தோன்றிய விதத்தையும் ஆய்வு செய்து கருத்துக்களை முன்வைக்கிறார் இவர். “உழைப்பில் ஈடுபட்டிருக்கும் காலத்து உருவாகியதே மனிதனின் தெளிவான பேச்சு. மனித எண்ணமும் உணர்வும் வடிவமற்ற சிந்தனையில் மூழ்கும் திறன் பெற்றவை. அதாவது, சொல்லால் மட்டுமே சித்திரிக்கக் கூடிய கருத்துக்களைப் பற்றிச் சிந்திக்கும் குணம் பெற்றவை.”

மனிதன் ஒரு சமுதாயமாக வாழவேண்டிய கட்டாயத்தை நோக்கி வளர வேண்டிய வாழ்வியல் பின்னணியை அதன் தொடர்ச்சியாக இவர் விவரிக்கிறார். “உழைப்பு என்பது எப்பொழுதுமே ஒரு கூட்டுச் செயலாகும். ஒரு சமூக நடவடிக்கையாகும். ஒரு தனிமனிதன் ஆற்றும் பணி அவன் வாழும் சமுதாயத்திலிருந்து பிரிக்க முடியாதபடி இணைந்த ஒரு நடவடிக்கை.

ஆகவே, உற்பத்திப் பணியில் மனிதர்களின் கூட்டுச் சமுதாயம் ஒன்றுபட்டு ஈடுபட்டதன் விளைவாக, தனது மனத்திலும், சிந்தனையிலும், செயலிலும்தான் அந்தக் கூட்டுச் சமுதாயத்தின் உறுப்பினன் என்பதும், அதற்குக் கட்டுப்பட்டவன் என்பதும் மனிதனின் உள்ளத்தில் பதிந்தது. அதனால்தான், ஒருவருக்கொருவர் பேசி, கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள வேண்டியதின் அவசியத்தைக் கூட்டு உழைப்பில் ஈடுபட்டிருந்த காலத்தில் மனிதன் உணர்ந்தான்.”

தொடர்ந்து, இவர் புராதன சமூகத்தின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் பற்றிக் குறிப்பிட்டு விளக்குகிறார்.

“ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாது, தனித்து வாழ்ந்த சிறுசிறு மனித சமூகங்களின் வரலாறே பண்டைக் கால சமூகத்தின் வரலாறாகும். ஆகவே அப்படித் தனித்து வாழ்ந்த மக்களின் மொழிகளும் இயல்பாகவே தனித் தனியாக வளர்ந்தன. ஒரு சமூகத்தின் மொழி பிற சமூகத்தின் மொழிகளைப் போலல்லாது வேறாகவே வளர்ந்தது.”

தொடர்ந்து, இயற்கைக்கும், மனிதனுக்கு மிடையில் காணப்படும் உறவைப் பற்றிக் குறிப்பிட்டு இவர் சமுதாய வளர்ச்சியைத் தெளிவுபடுத்துகிறார். “சமூக வளர்ச்சிக்குப் புவிச் சுற்றுச் சார்பு மிகப் பெரிய அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். மனித வாழ்க்கைக்கும், செயலுக்கும் வேண்டிய மூலப் பொருட்களை தந்தளிக்கிறது இயற்கை, இந்த இயற்கை என்னும் அரங்கின் மீதே மனித சமுதாயத்தின் வாழ்க்கை மலர்கிறது.”

“மனிதனின் பௌதிகத் தேவைகளை உற்பத்தி செய்வதற்கு அவன் தனது ஆற்றலைப் பயன்படுத்துவதற்குரிய பொருட்களும், அதற்குரிய சாதனமான உழைப்புக் கருவிகளும் இருந்தாக வேண்டும்.”

இவைகளைக் குறித்து இவர் விரிவான விளக்கத்தைத் தெளிவாக வழங்குகிறார். சமூதாய அமைப்பைக் குறித்த விளக்கத்தை இவர் உற்பத்தி உறவுகளின் அடிப்படையில் வரையறை செய்கிறார். “சிக்கல் நிறைந்த உற்பத்திச் செயல்முறை முழுவதையும் தன்னந் தனியாக மனிதனால் சாதித்துவிட முடியாது. இதர மனிதர்களுடைய துணையும், பங்குமில்லாது வாழ்க்கைத் தேவைகள் அனைத்தையும் எந்த ஒரு தனிமனிதனும் பூர்த்தி செய்துவிட முடியாது. இயற்கையின் ஆவேசத்தை எந்த ஒரு மனிதனும் தன்னந்தனியாக சமாளித்திருக்க முடியாது.

ஏறுமாறான அந்தப் போராட்டத்திலே அவன் அழிந்து போயிருப்பான். சமூகங்களாக ஒன்று சேர்ந்து முந்திய தலைமுறையின் அனுபவத்தையும், நுட்பங்களையும் பயன்படுத்துவதன் மூலமே மனிதர்கள் பண்ட உற்பத்தியைப் பெருக்க முடியும். எனவே, உழைப்பு சமூகத் தன்மை வாய்ந்ததாக மட்டுமே இருக்க முடியும்.”

மேலும் மனிதனின் பரிணாம வளர்ச்சியைப் பற்றியும், பண்டைக்கால கூட்டமைப்புச் சமுதாயம் பற்றியும் அதன் படிப்படியான மாற்றங்களின் அடிப்படையில் வளர்ச்சியடைந்த முறையையும் தெளிவுபடுத்துகிறார். பண்டைக்கால மனிதன், அவன் கையாண்ட கருவிகள் நெருப்பின் பயன்பாடு, பனிக்கட்டி யுகக் கருவிகள் போன்றவற்றைக் குறிப்பிட்டு விளக்குகிறார்.

நவயுக மனிதனின் தோற்றம் பற்றிக் குறிப்பிட்டு இவர் அவனுடைய பரிணாம வளர்ச்சியையும் இனம் காண்கிறார். உடல் அமைப்பிலும், அங்கங்களிலும் நவீன யுக மனிதனை பெருமளவுக்கு ஒத்திருந்த ஒருவகை மனிதன் சுமார் 20,000 ஆண்டுகளுக்கு முன் தோன்றினார். இந்த வகை மனிதனுக்கே க்ரோ - மான்ய மனிதன் என்று பெயர்.

நிலப்பரப்பில் இந்த வகையான மனிதர்கள் எங்கெல்லாம் வாழ்ந்தார்கள் என்பதைப் பட்டியலிடுகிறார். இவர்களை நியாந்தர்தால் மனிதர்களுடன் ஒப்பிடுகிறார்.

இனப் பிரிவின் தோற்றம் குறித்து விளக்கும்பொழுது அவற்றின் தனித் தன்மைகளைக் குறிப்பிட்டு விளக்கும்போது தன்னுடைய நிலைப்பாட்டை உறுதிப்படுத்துகிறார்: “ஒவ்வொரு இனமும் வேறுபட்ட தனித்தனி மூதாதையர்களிலிருந்து தோன்றியது. ஆகவே, இனங்களுக்கிடையே ஏற்றத்தாழ்வும், வேறுபாடுகளும் இருப்பது இயல்பே என்று முதலாளித்துவ வாதிகள் கூறுகின்றனர்.

ஆனால், இதுபோன்ற உயர்ந்த இனம், தாழ்ந்த இனம் பற்றிய தத்துவங்கள் முற்றிலும் தவறானவை என்பதை விஞ்ஞானமும் மனித சமூகத்தின் வளர்ச்சி பற்றிய வரலாறும் நிரூபித்துள்ளன. பிறரை அடக்கி ஆளுதலும், காலனி அடிமைத் தனமும் நியாயமானவை என்று நிரூபிக்கும் நோக்கத்தோடும், தேசிய விடுதலை இயக்கங்கள், ஆசிய ஆப்பிரிக்க, தென் அமெரிக்க மக்களால் நடத்தும் காலனி எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்கள் ஆகியவற்றைத் தடுத்து நிறுத்தும் பொருட்டு அந்த விஞ்ஞான வினோதமான தத்துவங்களைக் கண்டுபிடித்து அவர்கள் வெளியிட்டனர்.”

மனித இனத்தின் பெருக்கத்தில் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி ஒரு தீர்க்கமான அம்சமாகத் திகழ்ந்தது இதன் விளைவாக வேட்டையாடுவதற்கு வசதியான இடங்களிலும், நல்ல புல் வெளிகளிலும், செழுமையான நிலப் பகுதிகளிலும், மீன் பிடிக்க வசதியுள்ள நதியோரக் கரைகளிலும் அளவுக்கு மீறிய மக்கள் தொகைப் பெருக்கமும் தோன்றின.

காலப் போக்கில் உலகெங்கிலும் வாழ்ந்த மனித இனம் இடம்பெயர்ந்து புதிய முறைகளில் வாழத் தொடங்கின. வரலாறு நெடுகிலும் மனிதர்கள் புலம் பெயர்ந்ததால் அவர்களிடையே ஏற்பட்ட உறவுகளின் விளைவாக உலக சமுதாயம் தோன்றி வளர்ந்து வருகிறது. மனித சமுதாய வளர்ச்சியில் புலம் பெயர்தல் நிகழ்த்திய விளைவுகள் பற்றிய அறிவியல் கண்ணோட்டத்தை இந்த வரலாற்று நூல் தெளிவுபடுத்துகிறது.

புராதன கூட்டமைப்பு சமுதாயம் உருவான காலத்தில் நிலவிய உற்பத்தி உறவுகள் பற்றிய விளக்கங்களை இவர் வழங்குகிறார். தொன்மையான மனித மந்தை, இயல்பான வேலைப் பிரிவினை, தொல்குலம் உருவாகிய வகை, தொல்குலத்தில் நிலவிய உற்பத்தி உறவுகள் பற்றிய அறிவியல் அடிப்படையிலான மதிப்பீடுகள் வாயிலாக இவர் புலப்படுத்துகிறார்.

மனித சமுதாய வளர்ச்சிப் போக்கில் காணப்பட்ட புராதன கம்யூனிசத்திற்கும் கம்யூனிச சமூகத்திற்கும் இடையில் காணப்படும் அடிப்படை வேறுபாடுகளை இனம் கண்டு அடையாளப்படுத்துகிறார். இதில் இவர் இனம் காட்டும் ‘தாய்வழிச் சமுதாயம்’ விரிவான ஒரு புரிதலுக்கு நம்மை உள்ளாக்குகின்றது.

அடுத்து, பொருளுற்பத்தியின் விளைவாகத் தொடர்ந்து நிகழ்ந்த சமுதாய வளர்ச்சியில் அறிவியல் கண்டுபிடிப்புக்கள் நிகழ்த்திய சாதனைகளை இவர் குறிப்பிடுகிறார். புதிய கருவிகள் கண்டுபிடித்தல், விவசாயம், கால்நடை வளர்ப்புத் தொழில் பற்றிக் குறிப்பிட்டு அதன் தாக்கங்களை இவர் இனம் காண்கிறார்.

சமூகத்திற்குள் நிலவிய பொருளாதார, உற்பத்தி உறவுகள் உறுதிபடும் சூழலைத் தெளிவாகக் குறிப்பிடுகிறார். வளர்ச்சிக்குரிய காரணங்களாகப் பழங்குடி அமைப்பு, பண்பாட்டின் தோற்றம், மதக் கருத்துக்களின் தோற்றம் ஆகியவற்றின் கருதுகோள்களின் வாயிலாக இவர் விவரிக்கிறார்.

பண்டைய கூட்டுச் சமுதாயத்தின் சிதைவையும், வெண்கல, இரும்பு யுகத்தில் உற்பத்திச் சக்திகளால் நிகழ்ந்த மாற்றங்களும், வளர்ச்சிகளும் இந்த நூலில் விளக்கப்படுகின்றன. இதில் உலோகக் கருவிகளின் தோற்றம், விவசாயத்தின் வளர்ச்சி, கால்நடை வளர்ப்பு பற்றிய தகவல்கள் முன்வைக்கப்படுகின்றன.

மேலும், உற்பத்தி உறவுகளின் மாற்றம் குறித்த விளக்கத்தை இவர் வழங்குகிறார். அதில், முதல் சமூக வேலைப் பிரிவினை, சமூகத்தின் இரண்டாவது வேலைப் பிரிவின் பண்ட மாற்றத்தின் தோற்றம், தந்தை வழிச் சமுதாயம் போன்றவை விளக்கப்படுகின்றன.

இதைத் தொடர்ந்து புராதனக் கூட்டுச் சமூதாய அமைப்பின் உற்பத்தி உறவுகளில் தோன்றி நெருக்கடிகளைக் குறிப்பிடுகிறார். அதற்குக் காரணமாக அமைந்த மிஞ்சிய உற்பத்தியின் தோற்றம், பண்ட விநியோகத்தில் ஏற்பட்ட மாற்றம், தந்தை வழிக் குடும்பம், தனிச் சொத்துடைமையின் தோற்றம், அடிமை அமைப்பின் தோற்றம், வர்க்கங்களின் தோற்றம் போன்றவை எந்த வகையில் பண்டைக் காலச் சமுதாயத்தைச் சிதைத்தன என்பதைக் குறிப்பிடுகிறார்.

பண்டைக் காலக் கூட்டுச் சமுதாயத்தின் அழிவுக்குப் பிறகு, ஆசியாவிலும், ஆப்பிரிக்காவிலும் நிலவிய அடிமை உடைமை முறையின் தோற்றம் பற்றிய விரிவான விளக்கத்தை இவர் தருகிறார். தொல்குல, தந்தை வழிக் குடும்ப கால அடிமை அமைப்பு, அரசின் உதயம், அரசின் வேலைகள், வர்க்கங்களும் அரசும், பழங்குடி ஐக்கிய அமைப்பு, ஆசியா, ஆப்பிரிக்காவிலே தோன்றிய முதல் அடிமை அரசுகள், அடிமை உடைமைக் கொடுங்கோன்மை, அடிமை முறை அரசின் உற்பத்தி உறவுகள் அடிமைகளும், அடிமை உடைமையாளரும், அடிமை அரசுக்குள்ளேயே இயங்கிய கூட்டுச் சமுதாயம் போன்றவற்றை விளக்குகிறார். அவற்றின் வாயிலாக முதலாளித்துவத்திற்கு முந்திய சமுதாயத்தை இனம் காணமுடிகிறது.

முதலாளித்துவ சமுதாய அமைப்பில் வர்க்கங்கள் தோன்றியதும், மனித இனத்தின் வரலாறு, ஒருசில வர்க்கங்கள் உதயமாகி, வேறு சில வர்க்கங்கள் அழிவதைக் கூறும் வரலாறாகிவிட்டது. அதாவது, ஈவிரக்கமற்ற வர்க்கப் போராட்டத்தின் வரலாறாகிவிட்டது. அதன் விளைவாக வர்க்கப்போராட்டம் புதிய உள்ளடக்கத்துடன் தோன்றி வளரத் தொடங்கியது.

ஒன்றன் பின் ஒன்றாக வரலாறு நெடுகிலும் மாறுபட்ட பல வகையான அரசுகளின் தோற்றங்களையும், வளர்ச்சிகளையும், வீழ்ச்சிகளையும் இந்த நூலில் விரிவாக விளக்குகிறார் இவர். அவைகளில், அமெரிக்காவின் அடிமை முறை அரசுகள் குறிப்பிடத் தகுந்தவை.

ஐரோப்பாவில் கிரீஸ், ரோம் அரசுகளின் தோற்றம் நிகழ்த்திய விளைவுகளையும் இவர் குறிப்பிட்டுக் காட்டுகிறார். உலகளாவிய மனித சமுதாயத்தின் வளர்ச்சிப் போக்கில் பொருள் உற்பத்தி முறையில் நிகழ்ந்த மாற்றங்களின் விளைவாக நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறை தோன்றி வளர்ந்து, சிதைந்து அழிந்து போன நிகழ்வுகளை இந்த வரலாற்று நூலில் இவர் விரிவாகப் பதிவு செய்கிறார்.

நிலப்பிரபுத்துவ சமுதாயத்தைத் தகர்க்க நிகழ்ந்த முதலாளித்துவப் புரட்சிகளையும் இவர் குறிப்பிடுகிறார். குறிப்பாக, 16 ஆம் நூற்றாண்டில் நெதர்லாந்தில் நிகழ்ந்த முதலாளித்துவப் புரட்சியின் எழுச்சியையும், வீழ்ச்சியையும், சாதனைகளையும் குறிப்பிடுகிறார் இவர்.

social book 450அடுத்து, முதலாளித்துவ சமுதாயம் தோன்றி வளர்ந்த முறைகளைக் குறிப்பிடுகிறார். அதே சமயத்தில் அதில் அடங்கியுள்ள சுரண்டலின் சாரம் பற்றி இவர் விவரிக்கிறார். மேலும் முதலாளித்துவ உற்பத்தியின் முதன்மையான நோக்கங்கள், வர்க்கச் சேர்க்கை, முரண்பாடுகள் பற்றியும் விரைவாக இவர் பேசுகிறார்.

அமெரிக்காவில் தொடர்ச்சியான முதலாளித்துவ வளர்ச்சியைக் குறிப்பிடும் இவர் ஐக்கிய அமெரிக்காவில் நடைபெற்ற 1861 - 65 வருட உள்நாட்டுப்போர் பற்றியும் இவர் குறிப்பிடுகிறார்.

அதைத் தொடர்ந்து ரஷ்யாவில் தோன்றிய முதலாளித்துவ வளர்ச்சியையும் பதிவு செய்கிறார், அதே சமயத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய தொழிலாளி வர்க்க இயக்கம் குறித்தும், மார்க்சியத்தின் தோற்றம் குறித்தும், விளக்குகிறார் இவர். மேலும், வரலாற்றின் முக்கிய திருப்பு முனையாக அமைந்த பாரிஸ் கம்யூன் பற்றியும் இவர் குறிப்பிடுகிறார்.

தொடர்ந்து வரலாற்றில் தோன்றிய காலனி அமைப்பு முறை ஏகாதிபத்தியத்தின் தோற்றம், அதன் கொள்கைகள் பற்றிய விவரங்களைத் தகுந்த ஆதாரங்களோடு தெளிவாக இவர் விளக்குகிறார். கடைசியாக, ரஷ்யாவின் சோசலிசம் புரட்சிக்கான பின்னணியையும் புலப்படுத்துகிறார்.

‘சமுதாய வரலாற்றுச் சுருக்கம்’ என்ற இந்த மனிதகுல வரலாற்று நூல் செறிவான தகவல்களையும் ஆழமான கருத்துக்களையும் உள்ளடக்கியுள்ளது. நீண்ட நெடிய மனித வாழ்க்கையை வெளிச்சப்படுத்தும் இந்த வரலாறு ஒரு புதிய புரிதலுக்கு வாசகனை உள்ளாக்கும் என்பது நிச்சயம்.

தொன்மைக் கால மனிதனிலிருந்து, இருபதாம் நூற்றாண்டு தொடக்க கால சோசலிச மனிதன் வரை உலகளாவிய அளவில் வளர்ச்சியடைந்த விதத்தை இந்த வரலாறு வாசிப்பவருக்கு உணர்த்துகிறது. இடையறாத தேடுதல் உணர்வு உள்ளவர்களுக்கு இந்த வரலாறு பல அரிய தகவல்களைத் தருகிறது. ஒரு புதிய விழிப்புணர்வுக்கு நம்மை இட்டுச் செல்கிறது.

ஒவ்வொருவரும் குறிப்பாக வரலாற்றுக் கண்ணோட்டத்தில் மனித வாழ்க்கையை மதிப்பீடு செய்யும் வாசிப்பாளருக்கு மனப்பூர்வமான அளவில் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இந்த வரலாறு ஆழ்ந்த ஈடுபாட்டுடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. வாசிப்பதற்கு வசதிப்படும் வகையில் அருமையாக இது மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

நான் வரலாற்றில் கலந்து கரைந்துள்ளேன் என்ற உள்ளுணர்வோடு இந்த வரலாற்று நூலை வாசிப்பவர்களுக்கு ஒரு புதிய வெளிச்சத்தை உணர்த்தும். ஒரு புதிய விழிப்புணர்வை வாயிலாகப் பெறமுடியும்.

சமுதாய வரலாற்றுச் சுருக்கம்
தி.கே. மித்ரோ போல்ஸ்கி
தமிழில்: கார்த்தி ப. விருத்தகிரி
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்
41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட் (பிலிட்)
அம்பத்தூர், சென்னை 600 050.
விலை ரூ. 350/-