அலைகளின் மீதலைதலும், கடலலையில் இளைப்பாற ஒரு துண்டு நிலம் தேடுதலும் காணி நிலமேனும் சொந்தம் கொண்டவருக்குப் புத்துயிர் அனுபவம் தருவதாக இருக்கலாம். உள்ளம் கெலிக்கும் குதூகலமாகலாம். அவர்களுக்குக் கடல் என்பது நீலத்தாய். அலைகள் நுரைப்பு, பூரித்த பொங்கோதம். இதுவே நிலமற்ற, மண்ணற்ற, நாடற்றவர்களுக்கு? அல்லது நிலத்தையும் மண்ணையும் நாட்டையும் தொலைத்தவர்களுக்கு? கடல் என்பதும், அலை என்பதும் சாபம்! இந்த நீலக்கடலுக்கு ஏன்தான் இவ்வளவு பரந்துவிரிந்த நிலம்? இந்தக் கடல் கொஞ்சம் தன்னை உள்வாங்கிக்கொண்டால், இரண்டு கால்களில் ஒன்றையேனும் ஊன்றிக் கொள்ளலாம் தானே!. ஒரே கடல்தான். ஒரே அலைதான்! ஒருவருக்கு வர்ணனைக்கான மூலப்பொருளாக இருக்கிறது. மற்றொருவருக்கு வாழ்வதற்கான ஆதாரம் தேடும் இடமாக இருக்கிறது!

naadiliஅலைகளின் மீதலைதல், கவிஞர் சுகன்யா ஞானசூரிக்கு கற்பனை அல்ல, புலம்பெயர் அனுபவம். அதுவே அவரது முதல் கவிதைத் தொகுப்பும் கூட. நாட்டைத் தொலைத்துவிட்டு, அலைஅலையாக அலைகளில் வாழ்விடம் தேடிய அகதிகளின் துர்வாழ்வை கவிதையாக்கம் கொண்ட நூல் அது. கவனம் பெற்றது. வாசித்தவர்களின் கண்களில் கண்ணீர் கோர்த்தது. இவரது அடுத்த படைப்பு நாடடைந்த, தொலைத்த நாட்டைக் கண்டடைந்த கதம்பக் கொத்தாக இருக்குமென்றே, நானும், என்னைப் போல நீங்களுமாய் காத்திருந்தோம். அடுத்தத் தொகுப்பைத் தந்திருக்கிறார். மதுரை கடற்காகம் பதிப்பகம் வழியே, ‘நாடிலி’. இத்தொகுப்பிற்கு ஏதிலி என்றோ அகதி என்றோ தலைப்பு தந்திருந்தால் கொஞ்சம் ஆசுவாசமாக இருந்திருக்கும். ‘ஏதிலி’யைப் போன்று, ‘அகதி’யைப்போன்று, ‘நாடிலி’ அதற்கு நிகரான சொல் அல்ல.

அகதி, ஏதிலி இவ்விரு சொற்கள் தமிழக மக்களுக்குப் பரிச்சயமானவை. நாடிலி, பயன்பாட்டளவில் புதியது. ஏதுமற்றவர்கள் ஏதிலி. எல்லா நாட்டிலும் ஏதிலிகள் உண்டு. இவர்கள் வாழும் நாட்டிலேயே நாதியற்றவர்களாக ஆக்கப்படுகிறவர்கள். நாடோடியாக வாழ்ந்து, பிச்சை எடுத்துப் பிழைத்துக் கொள்ள உரிமை பெற்றவர்கள். பழங்குடிகளின் வாழ்வு இப்படியாகத்தான் ஆகிக்கொண்டிருக்கிறது. மலை மேல் குடியிருக்கும் மலைவாசிகள், பெருஞ்சுரண்டலால், மண், நிலம், பூர்வீகத்தை இழந்துவிடுகிறார்கள். அதேநேரம், இவர்கள், எங்கேயும் வாழ்ந்துகொள்ளலாம், என்கிற உரிமை கொண்டவர்களாகி விடுகிறார்கள்.

அகதி, தான் வாழ்ந்த நிலத்தை விடுத்து, பிற காரணங்களால் இடம் அல்லது புலம் பெயர்பவர்கள். இடம் பெயர்வும் புலம் பெயர்வும் ஒன்றல்ல. கிளிநொச்சியை விடுத்து, யாழ்ப்பாணத்தில் குடியேறுவது இடம் பெயர்வு. ஈழத்தை விடுத்து கனடாவை நோக்கி நகர்வது புலம் பெயர்வு. புலம் என்பதற்கு துறை, துறைமுகம், நிலம், அறிவு, துருவம், இடம் என இன்னும் பல பொருளுண்டு. இங்குப் புலம் என்பது நிலம். சொந்த நாட்டினரால், சொந்த மக்கள் அகதியாக்கப்படும் சூழல், போர்ப்பெருங்கலைகளில் ஒன்றாகி வருகிறது.

அகதிகள், ஒரு கட்டத்தில் சொந்த புலம் அல்லது இடத்திற்குத் திரும்புகையில், விடுத்துச் சென்ற இடம் திரும்பவும் கிடைக்கையில், அவர்கள் ‘வீடடைதல் ஆகிறார்கள். நாடிலி, கவிதைத் தொகுப்பில், ஒரு கவிதையில் ஒரு பறவை அப்படியாக வீடடைகிறது. அதே விட்டுச் சென்ற இடம், கொடுங்கர ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி, அவர்களின் வாழ்ந்ததற்கான அடையாளம் அழித்தொழிக்கப்படுகையில், நிலத்தை இழந்தவர்கள், நாடிலி ஆகிறார்கள்.

 நாடிலி என்பவர் நாடற்றவர்கள் அல்ல. நாட்டை இழந்தவர். நாட்டைப் பறிகொடுத்தவர்கள். ஞானசூரியின் இக்கவிதைத்தொகுப்பு, நாடிழந்த, நாட்டை இழந்ததன் மூலம் மண், மரம், செடி, கொடி, இணை உயிர்கள், காற்று, சுதந்திரம், வாழ்க்கை, தொழில், சொந்தம், உறவு, நிம்மதி, அமைதி,..என பலவற்றையும் இழந்தவர்களின் ஒவ்வொரு நொடி வாழ்தலையும் திணையாகக் கொண்டு பாடுகிறது. அகத்திணையில் வறட்சி, வெப்பம் பிரிவு, துக்கம் என இடர்களைக் கொண்டது பாலை திணை. அதேபோன்று நாடிலி, நாடிழந்தவர்களின் துயர், துன்பம், துக்கங்களைத் திணையாக பாடுகிறது.

ஒரு கவிதையில் குயிலின் ஓசையன்று பெரும் கட்டடங்கள் முளைத்த மாநகரில் கேட்கிறது. குயில் வனத்தைத் தேடும் குயிலுக்கு, அது அமர்ந்து பாட எப்படியோ ஒரு மரம் கிடைத்துவிடுகிறது. வனம் தொலைத்த குயிலுக்கு, அந்த ஒரு மரம் சிறுவனமாக கிடைத்துவிட்ட மகிழ்ச்சி அதற்கு. தன் மரத்தை இழந்து, குடைந்தடைய மரமற்று, ஒரு சில்வண்டு தனக்கான இடத்திற்காக வெப்பம் பொதிந்த பொழுதில் தன் புலத்தைத் தேடி உரக்க ரீங்கரிக்கிறது. குயிலின் கூவுதலும், சில்லுவண்டின் ரீங்காரமும் ஒன்றல்ல. ஞானசூரியின் கவிதைகள் சில்லுவண்டின் ரீங்காரத்திற்கு ஒத்தவை. தொலைத்த புலத்தை, தொலைவிற்குக் காரணமான, காது கொடுத்துக் கேட்க மறுப்பவர்களின் காதுகளைக் குடையும் குரல்.

நாடிலி, இந்நூலை கவிஞர், "நாடற்று அலையும் அத்தனை ஏதிலிகளுக்கும்" சமர்ப்பணம் செய்துள்ளார். நாடிலி, என்கிற சொல்லைக் கண்டதும், எனக்கு வகிபாகம் சொல்லுடனான ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. இந்தியாவில் தேசிய குடியுரிமைத் திருத்தச் சட்டம், பேசும் பொருளாக மாறியிருக்கையில், ஒரு பத்திரிகைக்கு எழுதிய ஒரு கட்டுரையில், வகிபாகம் என்றொரு சொல்லைப் பயன்படுத்தியிருந்தேன். கட்டுரையைப் பிரசுரிப்பதற்கு முன்பாக, அப்பத்திரிகையின் ஆசிரியர் வகிபாகம் சொல் குறித்து, விளக்கம் கேட்டார். விளக்கத்தை உள்வாங்கிய அவர், இது ஈழச் சொல் அல்லவா, இதை ஏன் தமிழ்நாட்டில் புகுத்துகிறீர்கள், என்றார். ஈழச்சொல் தமிழ்ச்சொல்தானே, என்றேன்.

வகிபாகம், என்கிற சொல் இங்கே வேரிட்டிடக் கூடாது, என்பதும் ஈழ நாடிலிகள் இங்கே நிரந்தரமாகக் குடியேறிவிடக்கூடாது, என்பதும் இருவேற்றுமை அல்ல. இந்த உரையாடல் நடந்த ஒரு மாதத்தில், தேசிய குடியுரிமைத் திருத்தச் சட்டம், கொள்கை முடிவு வெளியானது. இந்தத் திருத்தத்தில் மியான்மர், பூடான், வங்கதேசத்து, பாகிஸ்தான் இந்துக்களை இந்திய குடிமகன்களாக ஏற்க முன்வந்த அரசு, ஈழத்தமிழர்கள் இந்துக்களாக இருந்த போதிலும், இந்தியாவின் அடையாளமாக இதிகாசிக்கப்படும் இராமாயணத்தின் கதை அங்கு நடந்தேறியிருந்த போதிலும், அவர்களை ஒரு பொருட்டாக நினைக்கவோ, உள்வாங்கும் முடிவைப் பரிசீலிக்கவோ இல்லை. இப்படியான தருணத்தில்தான், நாடிலி என்கிற இக்கவிதைத் தொகுப்பும், நாடிலி ஒருவரால் எழுதப்படும் பாடுபொருளும் அதிமுக்கியத்துவம் பெறுகிறது.

"அலைக்கழிக்கும் பறவை" என்றொரு கவிதையில், அந்தகார இருளுக்கப்பால் பெருவெளியெங்கும் தேடியலையும் பறவை ஒரு வேளை உங்கள் பார்வைக்குப் புலப்பட்டால் அப்பறவை குறித்து சிறுகுறிப்பு வரைக, என்கிறார் கவிஞர். அதற்கான குறும்பதில், "காணாமல் ஆக்கப்பட்டவை" என்கிற கவிதையில் கிடைக்கப் பெறுகிறது. ஓயாமல் ஒலித்த படியிருக்கும் பூச்சிகளின் ரீங்காரம், பெருங்காட்டைத் தொலைத்த பறவைகளுக்கும் சேர்த்து குரல் எழுப்புகிறது. ஓயாமல் ஒலிக்கும் நாடிலி பூச்சி, கவிஞர் சுகன்யா ஞானசூரி.

நாடற்றவர்களின் வாழ்வில் வேறு என்னவெல்லாம் கனவாக இருக்கின்றன, என்பதைக் கவிதைகளால் இடறிவிடும் சொற்கதிர்கள் புலப்படுத்துகின்றன. தாயகம், பறவை, தாய்நிலம், அடையாளம், முகாம், வீடடைதல், வாழ்வு, வைகறை, நாளை, ஆசை, வானம், ஆதிக்குத் திரும்புதல், முகம், அரசியல், நவதிசை, மழை, ஊர், நதி பார்த்தல், சொற்கள், பெருவெளி, மொழி, இவை பாடுபொருளாகவும், அதன் மீதான கனவும் கனம் பொதிந்த வாழ்வும் கவிதைகளாக களம் கொள்கின்றன.

ஒரு நாடிலியிடம், இப்படியான நிலைக்குத் தள்ளிய அதிகாரம், கேள்வி எழுப்புகிறது. உனது அடையாளம் என்ன? என்று. “மிச்ச மீதியாயிருக்கும் / உயிரைக் காக்கப் போராடும் / அடிமையான அகதி நாங்கள்/ வேறென்ன அடையாளம் சொல்ல? என்கிறது ஒரு கவிதை. "அதிகாரமே இல்லாத அகதிக்குத்தான்/ எத்தனை வண்ண வண்ண /அடையாள அட்டைகள்" என்கிறது மற்றொரு கவிதை. அகதிகளின் வண்ணமயமான அடையாள அட்டையில் பொதிந்து கிடக்கும் நிறமற்ற இருண்ட வாழ்வைக் கண்களுக்கும் வெளியே கண்ணீராக வடிக்கிறது.

போதி மரத்தின் நிழல் வரலாற்றுக் கதையாடலில் ஞானம், நிலம், அமைதி கொடுக்கும் உருவமாக இருக்கிறது. ஆனால் அதன் நிஜமோ, நிழல் எது இருள் எது எனப் பிரித்தறிய முடியாத இருண்மையைக் கொண்டிருக்கிறது. அந்த நிழல் அச்சமூட்டுவதாகவும், கொலை ஆயுதம் நீட்டுவதுமாக இருக்கிறது. அந்த நிழலிலிருந்து விலகு என்கிறார் கவிஞர். இல்லையேல் நிழலை வெட்டி வீழ்த்து என்கிறார். நிஜத்தை வீழ்த்தாமல், நிழலை வெட்டி வீழ்த்துவது அத்தனை எளிதா, என்ன?

அச்சமோ அழுகையோ / ஏதோவொன்று / ஒரு முறையாவது / புத்தனின் கண்கள் திறந்துமூடுவதைப் பார்த்துவிடும் / அவா எனக்கு, என்கிறார் கவிஞர். அவருக்கு மட்டுமா?

வாழ்வதற்கு நாடற்ற நாடிலிக்கு சாவுவதற்கேனும் ஒரு நாடு வேண்டும், எனக் கேட்பது, என்னே கொடியது. நாடே இல்லையாயினும் அவனுக்கு உரிமையான ஒரு மரத்தின் கிளையேனும் வேணும், எனப் பாடுவது, எத்தனை வலியது. எல்லையற்ற வெளியில் வாழ்ந்துகொண்டிருக்கிறேன் / மகள் இப்போது என் தாய்நாடு பற்றி வினவுகிறாள் / நான் பிரபஞ்சத்தின் மேலிருந்து ஒற்றைச் சுருக்கில் தொங்குகிறேன் என எழுதுகிறார் கவிஞர். தான் பெற்ற மகள், என் தாய்நாடு எனக் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல இயலா ஒரு தந்தையால் வேறென்ன செய்ய இயலும்?. பிரபஞ்சத்தில் தொங்கும் ஒற்றைச் சுருக்குக் கயிறை விடவும், மகளின் நாடு பற்றியக் கேள்வி பதைக்க வைக்கிறது.

தான் பேசும் மொழியில், சாதீயை, மதத்தைத் தேடும் குரூரம் நவநாகரிக பழக்கமாகி வந்துள்ளது. நாடிலி என்பதே ஒரு சாதியாகவும் மதமாகவும் ஆகிவரும் இவரிடம் அதை ஏன் தேடுவானேன்? கவிஞனின் ஒரு நாள் கழிவு, எத்தகையது எனத் தேடினேன். `ஒரு நாளின் 24 மணி நேரம் என்பது / அகதிகளான எங்களுக்குப் / பெரும் அவஸ்தை’ என்கிறார். மருத்துவ ஆய்வகத்தில் நுண்ணோக்கியில் அலைவுறும் நுண்ணுயிரிகளின் வெளியில் / அவருக்கான உயிர்க்காட்டைத்/ தேடும் கவிஞர், அந்த ஆய்வகம் இருந்த இடத்தில் அத்தனை இரைச்சலுக்குமிடையில் கூவும் ஒற்றைக் குயிலின் கூவுதலில் தொலைத்த வனத்தைத் தேடும் பறவையோடு அவருக்கான வனத்தையும் தேடுகிறார். பச்சை மட்டுமே வாழ்ந்த இடத்தில், இப்போது சிவப்பு மஞ்சள் பச்சை.

அலைக்கழிக்கும் பறவை, உருமாறுகிறது வெண்ணிலவு, நட்சத்திரங்களினூடே, கொடிய நிழல், ஆதிக்குத் திரும்புதல், புலம் பெயராது இருந்திருக்கலாம், வெறுங்கழுத்தி, பெருந்தொற்றில், இருள் விலகா மௌனம் தலைப்புகளில் நாடிலியின் இருபத்து நான்கு மணி நேரங்கள் அலையாடுகிறது. ஒரு கவிதை, குளத்தின் வட்டச்சுழல் அதிர்வையும் மனஅதிர்வையும் ஒப்பிட்டு சுழலாற்றுகிறது.

சிறு கல் / விழுந்த குளத்தின் / அதிர்வென விரியும் / வட்டச்சுழலில் / நினைவதிர்வொன்று / சுழன்றபடி இருக்கிறது / ஒரு பாடல் / நுழைந்த மனதில்.

ஒரு கவிதையில், ஏன் என்னை அகதியாக்கினீங்கள்? எனக் கேட்கிறார். அவரது தந்தையிடம் அவர் கேட்கும் கேள்வியாக அது இருந்தாலும், அக்கேள்வி இந்த உலகத்தைப் பார்த்துக் கேட்கும் கேள்வியாகவும் இருக்கிறது. அப்படியாகக் கேட்ட கவிஞர்தான், தன் என்னுரையை இவ்வாறு முடிக்கிறார், “அகதிகள் இல்லா உலகம் உருவாக வேண்டுகிறேன்,” சபிக்கப்பட்டவர்களால் நிரம்பிக் கிடக்கும் இந்த உலகில், இந்த வேண்டலை அவர் யாரிடம் கேட்டிருக்கக் கூடும்? காது உடையவர்களிடமா? இல்லை, மென்மெல்லிய இதயம் உள்ளவர்களிடம்!

கடல் மீதும் துண்டு நிலம் தேடும் நாடிலியின் பாதங்கள், தனக்கான புலத்தைச் சென்றடைய வேண்டும், என்பது என் வாழ்த்துகை அல்ல, வேண்டல்!!

- அண்டனூர் சுரா