aruna in vienna frontஒவ்வொரு முறை ஊட்டி, மூணார், கொடைக்கானல் போன்ற hill stations செல்லும் போதெல்லாம் மனதைக் கொள்ளையடிக்கும் இயற்கையின் எழிலை எவ்வளவு ரசித்திருக்கிறேனோ, அதே ரசனையுடன், ஆங்காங்கே தங்கள் bike-ஐ அல்லது car-ஐ ஓரமாக நிறுத்திவிட்டு, கையில் ஒரு சிகிரெட்டோடோ, பீர் டின்னோடோ, நண்பர்களுடன் அரட்டை அடித்து, உளமாற சிரித்துக் கொண்டு இருக்கும் ஆண்கள் உலகத்தையும் ரசித்திருக்கிறேன்.

பொருளாதாரம் மற்றும் வாகன வசதிகளை ஏற்பாடு செய்து கொண்டு, உள்ளூரில் ஊர் சுற்றவும், Bangkok, Thailand, Indonesia என செக்ஸ் டூர் செல்லவும், மற்ற வெளிநாடுகளில் நண்பர்களோடு சிலாகிக்கவும், ஆண்களுக்கு எவ்வித கட்டுப்பாடுகளையும் விதிக்காத இந்திய சமூகம், தங்கள் நண்பர்களுடன் பக்கத்திலுள்ள mallக்கு செல்ல நினைக்கும் பெண்களிடம் பத்தாயிரம் கேள்விளைக் கணைகளைத் தொடுக்கும்.

அப்படிப்பட்ட ஓர் சமூகத்தில், தனது நண்பர்களோடு Europe tour சென்ற ஒரு பெண், அதனை ஒரு “mini travelogue” வடிவத்தில் சிறு நூலாகவும் எழுதியதற்காக உளமார்ந்த பாராட்டுகளோடும் நன்றியோடும் “Aruna in Vienna” நூல் அறிமுகத்தைத் தொடங்குவதே சிறப்பாக இருக்கும் எனக் கருதுகிறேன். Hats off Dr.Aruna!

தொடர்ந்து சிறந்த நூல்களைத் தேர்வு செய்து வெளியிட்டு வரும் நிகர்மொழி பதிப்பகத் தோழர்கள் பிரபாகரன் மற்றும் ஜோன்சன், “Amazon Kindle”இல் வெளியான இந்நூலினையும், கண்ணைக் கவரும் வண்ணப் படங்களோடு அச்சு வடிவத்தில் வெளியிட்டுள்ளனர். அவர்களுக்கும் நன்றி.

ஓகே நன்றிக் கடனெல்லாம் முடிச்சாச்சு. இப்ப நூலைப் பற்றிப் பார்ப்போம். “பொம்பள புள்ளைங்க தனியா வெளிநாடு போறதெல்லாம் பாதுகாப்பு இல்ல! இந்த வயசுல குடும்பத்தோட போகாம இதென்ன புதுப் பழக்கம்” என வழக்கமான irritating advice களுடன் தான் இவர்களின் பயணமும் தொடங்கியிருக்கிறது.

ஏர்போர்ட், விமானப் பயணம், புடாபெஸ்ட் அபார்ட்மெண்ட், புடாபெஸ்ட் ரவுண்ட் அப், வியன்னா, சால்ஸ்பர்க், ப்ராக், செஸ்கி என அனைத்து இடங்களுக்கும் நாமும் கூடவே சென்றது போன்ற சுவாரஸ்யமான எழுத்துநடை!! அதனுடன் பல நக்கல், நகைச்சுவை, அவர்கள் சந்தித்த பிரச்சனைகள், பல தகவல்கள் என அருமையான travelogue-ஐ எழுதியுள்ளார் அருணா.

பயணம் பற்றிய அனுபவப் பதிவு தான் என்றாலும், பல இடங்களில் தற்கால அரசியலைப் பொருத்தி எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. உதாரணமாக, “புடாபெஸ்ட் அபார்ட்மெண்ட்டில் லக்கேஜுடன் அறுபது படிகள் ஏறி இறங்குவதற்குள் ‘திருமாவளவன் சிதம்பரம் தொகுதி தேர்தல் முடிவு போல ஆகிவிட்டது” என ஒப்பிடுகிறார். டீமானிடைஷேசன், மோடியின் வெளிநாட்டுப் பயணங்கள், என மேலும் பல இடங்களில் அரசியல் பேசியுள்ளார்.

“அருணா இன் வியன்னா” தான் நூலின் தலைப்பு என்றாலும் புடாபெஸ்ட் தான் அருணாவிற்கு மிகவும் பிடித்துப் போனதாலோ என்னவோ, Europe tour சென்றால் முதலில் புடாபெஸ்ட் தான் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் நமக்கும் தொற்றிக் கொள்ளும்.

நாங்கள் கல்லூரி நண்பர்களுக்கென்று ஒரு Whatsapp குழு வைத்திருக்கிறோம். அதில் பெரும்பாலான தோழிகள் சமையல் மற்றும் குழந்தை பற்றித் தான் பல நேரங்களில் பேசிக் கொண்டிருப்பார்கள்.

அதில், நான் பெரிதாகக் கலந்து கொள்வதில்லை. இவ்வாறு என்னைப் போல உள்ள பல/சில பெண்களுக்கும் அவர்களை அறியாமல் அருணாவுடன் ஒரு connect ஏற்படும். ஏனெனில், இதே பிரச்சனை அவருக்கும் இருக்கிறது.

மேலும் வீட்டில் தினமும் சமைத்தாலும் ஊர் சுற்ற வந்த இடத்திலும் சமைக்க வேண்டுமா? என்ற சலிப்பே உடன் வந்திருந்த தோழிகளுக்கு இல்லை எனக் கூறும் இடத்தில், “ஏன் இந்த பெண்களுக்கு சமையலில் இவ்வளவு ஆர்வம்?” என்ற கேள்வி எழத் தான் செய்கிறது.

பல அனுபவங்களையும் ஏக்கங்களையும் அருணாவுடன் சேர்ந்து பெண்கள் நாமும் உணருமாறு உள்ள போதிலும், ஓர் நிகழ்வு என் மனதை மிகவும் கவர்ந்தது.

டான்யூப் நதியில் க்ரூயிஸ்காக காத்திருக்கும் போது காதல் ஜோடி ஒன்று கண்மூடி, ரசித்து, சுவைத்து முத்தமிட்டுக் கொண்டே வந்த காட்சியை அவ்வளவு அழகாக எழுதியோடு விடாமல், நம்மூர் ஆண்களை ஒப்பீடு செய்த இடத்தில், இணையரிடம் public lip lock கேட்டு அவரின் வெட்கத்தை மட்டுமே பரிசாகப் பெற்ற என்னைப் போன்ற பெண்ணாக இருப்பீர்களானால் சிரித்து ரசிக்கலாம்.

இன்னும் ஒரு படி மேலே போய் நடுரோட்டில் முத்தமிட வெஸ்டர்ன் கன்ட்ரியில் பிறந்த ஓர் ஆண் தேவை என எழுதி எனக்கும் ஆசையைக் கிளப்பி விட்டதற்குக் கண்டனங்கள்.

இறுதியாக, ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன். இந்நூலை எனது தோழிகள் பலருக்கும் வாசிக்கக் கொடுத்தேன். எல்லோரும் எழுத்தாளர் அருணாவின் fans ஆகிவிட்டார்கள். எனவே, என்னை மட்டுமல்லாமல், என்னைப் போன்ற பல இளம் பெண்களையும் இந்நூல் நண்பர்களோடு ஒரு ஜாலியான ட்ரிப் ஏற்பாடு செய்யத் தூண்டியிருக்கும் என்பதில் எவ்வித அய்யமுமில்லை.

“இது போல தோழிகளுடன் ஊர் சுற்றும் வாய்ப்பு அமையுமா? என்று தெரியவில்லை. அவ்வாறு சுற்றும் பட்சத்தில் புதிய அனுபவங்களுடன் மீண்டும் சந்திப்போம்” என்று நூலின் இறுதி வரியில் குறிப்பிட்டிருக்கிறார் எழுத்தாளர்/மருத்துவர் அருணா.

அந்த வாக்குறுதியை மறக்காமல், உங்கள் நண்பர்களுடன் மேற்கொள்ளப் போகும் பல பயண அனுபவங்களைப் பற்றி அவசியம் எழுதுமாறு மேற்கூறிய உங்கள் Fans சார்பாக நான் கேட்டுக் கொள்கிறேன்.

[இந்நூல், “Periyar books” இணையதளத்தில் உள்ளது https://www.periyarbooks.in/aruna-in-vienna.html ]

- யாழ்மொழி