book review muthuஒரு பாடலைக் கேட்ட அடுத்த ஐந்து நிமிடங்களில் அந்தப் பாடல் பிடித்திருக்கிறது அல்லது பிடிக்கவில்லை, ரசனையாக இருக்கிறது அல்லது ரசனையாக இல்லை என்ற முடிவுக்கு வந்துவிடுகிறோம். இன்னும் கூடுதலாக இந்தப் பாட்டு வேறு ஒரு பாட்டின் மெட்டை நினைவுக்குக் கொண்டு வருகிறது என்று பலவற்றையும் பேசி நம் இசைஞானத்தைக் காட்டிக் கொள்கிறோம்.

அந்தக் கவிவரிகளுக்கு மெட்டமைத்ததையோ, மெட்டுக்கான பாடல் வரிகள் எழுதியதைக் குறித்தோ, இசைக் கருவிகளின் கான மழையைப் பற்றியோ கவலைப்பட்டது இல்லை.

ஆனால் சமீபகாலமாக, மக்களிடம் பாடல் பிறந்ததற்கான சூழலைக் கவனிக்கும் ஆர்வம் மேலோங்கி இருக்கிறது. அதற்கு விருந்து படைப்பதற்காக வந்த நூல் ‘ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே’ என்ற கட்டுரை நூல்.

பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவரின் கவிதையை ‘இலக்கியம்’ என்ற தனது இதழில்,

‘‘முகிலே முகிலே கருத்த முகிலே
மாமழை பொழியும் மாண்புடை முகிலே’’

என்று தொடங்கும் நேரிசை ஆசிரியப்பா பாடலை வெளியிட்டு, கவிஞன் என்று உவமைக் கவிஞர் சுரதாவால் அறிமுகப்படுத்தப்பட்ட மாணவர்தான் முத்துலிங்கம். படிக்கும் காலத்தில் எழுதிய கவிதைகளைத் தொகுத்து ‘வெண்ணிலா’ என்ற நூலாகப் புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் முன்னுரையுடன் வெளியிட்ட பெருமையும் கலைமாமணி பட்டம் வென்ற இவருக்கு உண்டு.
கவியரங்கத்தை அடுத்த உயர்வுக்கு எடுத்துச் சென்றவர் கலைஞர். அவர் தலைமையிலான கவியரங்கத்தில்,

‘‘தேனாகப் பாடு தம்பி
இருக்கின்றோம் நாங்கள் தும்பி’’

என்று கலைஞர் அறிமுகப்படுத்துவதை இன்றும் குறிப்பிடும் பண்பாளர் இந்த நூலாசிரியர். கலைஞரின் நன் மதிப்பையும், பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆரின் ஆதரவையும் ஒரே நேரத்தில் பெற்றவர் இவர். திரைப்படத்துறையில் காலடி பதிக்கும் முன் பத்திரிகைத் துறையில் வேரூன்றியவர்.

அப்பத்திரிகை எம்.ஜி.ஆருக்கு எதிர்ப்பான செய்திகளை வெளியிட்ட போது அதிலிருந்து விலகினார். மிகவும் சிரமமான சூழ்நிலையில் பத்திரிகைப் பணியை உதறிவிட்டு வந்த செய்தியைக் கேள்விப்பட்ட புரட்சித் தலைவர் கவிஞருக்குப் பண உதவி செய்ய முன்வந்தார். ஆனால் அதை ஏற்க மறுத்த கவிஞர் அதற்குப் பதிலாக வேலையைக் கொடுங்கள் என்று கேட்டுக் கொண்டார். எவ்வளவு வற்புறுத்தியபோதும் பணத்தைத் தொடவில்லை.

சில நாள்கள் கழித்து ‘நல்லதை நாடு கேட்கும்’ என்ற படத்தில் பாடல் எழுதும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார் எம்.ஜி.ஆர். மேலும், உழைக்காமல் வரும் பணத்தை ஏற்காத தன்மானமுள்ள மனிதர் என்பதால் தன்மானமிக்கக் கவிஞர் பாரதிதாசன் பெயரிலான விருதுக்குப் பொருத்தமானவர் இவர் என்று குறிப்பிட்டு அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். விருதும் வழங்கினார்.

கவிஞர் தினமணி இதழில் எழுபத்தியாறு வாரங்கள் தொடர்ந்து எழுதிய தொடர் கட்டுரையே இந்நூல். தொடர் வெளியான ஆரம்ப காலத்தில் கட்டுரையைப் படித்ததும் மதுரை ஆதீனம் தொலைபேசியில் அழைத்துப் பாராட்டியதுடன் இருபத்தையாயிரம் ரூபாய் காசோலை அனுப்பிப் பாராட்டுக் கடிதமும் வழங்கிப் பெருமைப்படுத்தியது நினைக்கத்தக்கது.

இயற்கையிலிருந்து உயிர்கள் படைக்கப்பட்டன. அவற்றில் இயற்கையின் சாயலைக் காண முடிகிறது. மூலத்திற்கும் அதன் சாயலுக்கும் ஒற்றுமைகள் இருப்பது போலவே வேற்றுமைகள் இருப்பதும் இயல்பாகின்றன. அதுபோல் படைப்புக்கும் படைப்பாளிக்கும் இடைவெளி இருப்பதை நடைமுறையில் காண முடிகிறது.

ஆனால் படைப்புக்கும் படைப்பாளிக்கும் இடைவெளி இல்லாமல் இருப்பவர்களைப் பார்ப்பது அரிது. அப்படிப்பட்ட அரிய கவிஞர், பாடலாசிரியர் முத்துலிங்கம் என்பதை ‘ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே’ என்ற இவரின் நூல் வழி நாம் புரிந்து கொள்கிறோம்.

சட்டமன்ற மேலவை உறுப்பினர், அரசவைக் கவிஞர் இப்படிப் பல பொறுப்புகள் வகித்தாலும் எளிமைக்கு இலக்கணமாக வாழ்பவர். சந்தத்தைக் கொடுத்துப் பாடல் எழுதச் சொன்னாலும் சரி, சொந்தமாகப் பாடல் எழுதச் சொன்னாலும் சரி இரண்டும் கைவரப் பெற்றவர்.

மிகவும் போராடிப் பாடல் எழுதும் வாய்ப்பைப் பெற்ற இவர் சில வேளைகளில் பாடல் எழுதிய பிறகும் அது வெளிவராமல் போகும் போது உற்சாகத்தைத் தற்காலிகமாகத் தொலைத்தும் இருக்கிறார்.

இசையமைப்பாளர் ஜி.கே. வெங்கடேஷ் உதவியாளராக இருந்த இளையராஜாவின் முதல் மெட்டுக்குப் பாடல் எழுதியதையும் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். ‘பொண்ணுக்குத் தங்க மனசு’ என்ற படத்திற்காக இசைஞானி இளையராஜா மெட்டமைத்திருந்தாலும் படத்தில் அவர் பெயர் இடம் பெற்றிருக்காது.

தனக்கு முன்னர் இருந்த பாடலாசிரியர்களை எந்த அளவுக்கு மதிப்புடன் சொல்கிறாரோ அதற்குக் கொஞ்சமும் விட்டுக் கொடுக்காமல் அவர் காலத்துப் பாடலாசிரியர்களையும், இளைய தலைமுறைப் பாடலாசிரியர்களையும் கௌரவத்துடன் பதிவு செய்திருப்பது நூலின் சிறப்பாகப் பார்க்கிறேன். தமிழக அரசின் விருதுகளையும், மத்திய அரசின் விருதுகளையும் பலமுறை வென்ற நா. முத்துக்குமாரைக் குறிப்பிடும் நூலாசிரியர், ‘‘உன் கண்கள் வண்டை உண்ணும் பூக்கள் என்பேன்’’ என்ற வரிகளை இதுவரை யாரும் சொல்லவில்லை என்று பாராட்டவும் செய்கிறார்.

கவிஞரின் முதல் கட்டுரையே மூடநம்பிக்கைக்கு எதிராகக் குரல் கொடுத்து வாசகனைப் பகுத்தறிவு பக்கம் திருப்புகிறது. ‘ஆயிரம் கண்ணுடையாள்’ என்ற பாடலுக்கு ஒரு தாலாட்டுப் பாடல் எழுதிக் கொடுத்தார் கவிஞர். அதிலே ‘‘நெஞ்சத்திலே மெத்தையிட்டேன் / நீலக்குயில் நீ தூங்கம்மா’’ என்ற வரிகள் இடம் பெற்றிருக்கும். தயாரிப்பாளரோ ‘‘எடுத்த முதல் காட்சியிலேயே தூங்கம்மா என்ற சொல் வருகிறது.

அதனால் படம் தூங்கிவிட்டால் என்ன செய்வது? எனவே ஆடம்மா போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்திப் பாடலை நிறைவு செய்யுங்கள்’’ என்று சொல்ல, கடைசி வரி ‘‘நீலக்குயில் நீ ஆடம்மா’’ என்று மாற்றப்பட்டது. ஆனால் படம் இரண்டே வாரங்களில் பெட்டிக்குள் ஆடிச் சுருண்டு விழுந்துவிட்டது. எதிலும் ஓரளவுக்குத்தான் சென்டிமெண்ட் பார்க்கலாமே தவிர எல்லா நேரத்திலும் எல்லாவற்றிற்கும் பார்ப்பது எப்படிச் சரியாக இருக்கும்? என்று உறுதியாகச் சொல்கிறார்.

திரைப்படப் பாடல் என்பது எப்படி இருக்கவேண்டும் என்ற வரையறையைப் புரிந்து கொள்ள இப்புத்தகம் உதவுகிறது. ஒருமுறை ‘மீனவ நண்பன்’ படத்திற்கு இயக்குநர் ஸ்ரீதர் பாடலுக்கான காட்சியைச் சொல்லிப் பாடல் எழுதச் சொன்னார். அதைக் கேட்டு,

‘‘அழகுகளே உன்னிடத்தில் அடைக்கலம் – உன்
அங்கங்களே மன்மதனின் படைக்கலம்
இரவினிலே தீபமாகும் உன்முகம் – நீ
இன்பத்தமிழ்க் கவிதைகளின் இருப்பிடம்’’

என்ற வரிகளைப் பாடலாசிரியர் எழுதினார். அதற்குள் இயக்குநருக்கும், இசையமைப்பாளருக்கும் கருத்து வேறுபாடு தோன்றுகிறது. படைக்கலம் என்ற சொல் வேண்டாம் என்கிறார் இயக்குநர்; அடைக்கலம் என்ற வார்த்தை தேவையில்லை என்கிறார் இசையமைப்பாளர். பின்னர் எழுதப்பட்டு மிகப் பிரபலமான பாடல்,

‘‘தங்கத்தில் முகமெடுத்து
சந்தனத்தில் உடலெடுத்து
மங்கையென்று வந்திருக்கும் மலரோ – நீ
மாலை நேரப் பொன்மஞ்சள் நிலவோ’’

என்பது. அப்போது இயக்குநர் சொல்கிறார் - பதவுரை, பொழிப்புரை, விரிவுரை சொல்ல வேண்டிய ஒன்றாகத் திரைப்படப் பாடல் இருக்கக் கூடாது என்றும் கேட்டவுடன் சாதாரண மக்களுக்குப் புரியும் வகையில் அமைய வேண்டும் என்றும் தெளிவாக விளக்குகிறார்.
சங்க இலக்கியங்களில் அரசனிடம் பரிசுபெற்று வரும் புலவர்கள் தத்தம் மனைவிமார்களிடம் அப்பரிசுகளைக் கொடுத்துவிட்டு இப்படிச் சொல்வார்கள்.

‘‘இல்லாத நேரத்தில் நமக்குக் கொடுத்து உதவியவர்களுக்குக் கொடு, நீ யாருக்கு விரும்பினாலும் கொடு’’ என்று அத்தனை செல்வத்தில் சிறிதுகூட சேர்த்து வைக்க நினைக்காத மரபைக் கேட்கும் போது இப்படியும் இருக்க முடியுமா என்ற சந்தேகம் எழுகிறது. கவிஞர் கம்பதாசனைப் பற்றிப் படிக்கும் போது சங்க இலக்கியம் பொய் சொல்லவில்லை என்ற முடிவுக்கு வருகிறோம்.

கம்பதாசன் திரைப்படங்களில் பாடல் எழுதியதுடன் கவிதைகளில் பல புதுமைகளைச் செய்தவர். இவர் முதல் நாள் பத்தாயிரம் வைத்திருந்தாலும் யாரேனும் வந்து கேட்டால் அதை அப்படியே கொடுத்து விட்டு மறுநாள் யாரிடமாவது பத்து ரூபாய் கடன் கேட்டு நிற்பார்.

பத்து ரூபாய்க்கும் கடன் கேட்டு நிற்கும் இவர் பாவேந்தருக்காக நிதி திரட்டிய போது தாராளமாக அள்ளிக் கொடுத்தார். புரட்சிக் கவிஞர் பாரதிதாசனுக்காக அண்ணா நிதி திரட்டிய போது தந்தை பெரியார் முதன்முதலில் நூறு ரூபாய் கொடுத்துத் தொடங்கி வைத்தார். கம்பதாசனும் ஐந்நூற்றியொரு ரூபாய் கொடுத்துத் தொடர்ந்து வைத்தார் என்ற செய்தியை நேர்மையுடன் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர்.

இந்த உலகத்தில் நல்லது நடப்பதற்கு எத்தனையோ நபர்கள் தியாகம் செய்திருக்கின்றனர். ஒரு நாடு விடுதலை பெற எத்தனை உயிர்கள் தியாகம் செய்யப்பட்டிருக்கின்றன. சமூக சீர்திருத்தம் உண்டாக எத்தனை போராட்டங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன.

அப்படித்தான் ஒரு நல்ல திரைப்படம் வெளிவர ஒருவரின் பதவியையே பலி வாங்கியிருக்கிறது சமூகம்! இந்த வரலாற்றை வாசிக்கும் போது இனியேனும் நம் முன்னோர்களுக்காக நாம் நன்றியுடையவரக்ளாக இருக்க வேண்டும் என்ற உணர்வு தானாக வந்து விடுகிறது.

இன்றைக்குப் பகுத்தறிவின் சாரம்சமாக இருக்கும் ‘பராசக்தி’ என்ற படத்தை, நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்குத் திரைத்துறையின் வாசலாக இருந்த படத்தைத் தணிக்கைக் குழுவில் வெளியிடக்கூடாது என்று பல தடைகளைப் போட்டிருக்கின்றனர்.

அதற்குத் தலைவராக இருந்த கே.எஸ். சீனிவாச ஐயங்கார் இது தடை செய்யப்பட வேண்டிய படம் என்று ‘குண்டூசி’ என்ற திரைப் பத்திரிகையில் எழுதிய பிறகும் தணிக்கைக் குழுவின் துணைத் தலைவராக இருந்த சண்டே அப்சர்வர் பாலசுப்பிரமணியம் பல முயற்சிகள் எடுத்துப் படம் வெளியாகத் துணை நின்றார். அதனால் படம் வெளியான ஒரு வாரத்திற்குள் அவர் தணிக்கைக் குழு உறுப்பினர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுவிட்டார் என்பதுதான் வரலாறு.

யாரைப் பார்த்து வளர்கிறோம்; எந்த மாதிரியான சமூகத்திலிருந்து வருகிறோம் என்பதைப் பொறுத்து ஒருவரின் பண்பு தீர்மானிக்கப் படுகிறது. தோழர் ஜீவாவைப் பார்த்து தோழர் நல்லகண்ணு உருவாகியிருக்கிறார் என்பது நாடறிந்த உண்மை. ‘‘ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்’’ என்பது பழமொழி.

நட்புடன் பழகியவர்கள் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரியும் போது அதைப் பயன்படுத்திக் கொண்டு தான் வாய்ப்பு கேட்டுப் பிழைத்து விடலாம் என்று பலரும் பிழைப்பு வாதத்தை வைக்கின்றனர். ஆனால் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கும் கவியரசர் கண்ணதாசனுக்கும் கருத்து மோதல் நடந்தபோது கவியரசர் உதவியாளரான பஞ்சு அருணாசலத்தைப் பாட்டு எழுத எம்.ஜி.ஆர். பரிந்துரை செய்திருக்கிறார்.

‘‘மணமகளே மருமகளே வா வா’’ என்ற பாடல் மூலம் பிரபலமானவர் பஞ்சு அருணாசலம். புரட்சித் தலைவரின் பரிந்துரையை நல்ல வாய்ப்பு என்று பஞ்சு அருணாசலம் நினைக்கவில்லை. வாய்ப்பை ஏற்கலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருந்த போது கவியரசர் ‘‘நீ போய் பாடல் எழுது. எனக்கும் எம்.ஜி.ஆருக்கும் தானே பிரச்சினை உனக்கென்ன’’ என்று வழிநடத்திய விதத்தை இந்தத் தலைமுறையினர் படித்துக் கொண்டு பண்படவேண்டும்.

படைப்பினால் படைப்பாளனுக்கு என்ன பயன் என்று கேட்பவருக்கு இப்படிப் பதில் சொல்வது பொருத்தமானதாக இருக்கும். அந்தப் படைப்பே படைப்பாளனுக்கான பயன். கவிஞர் முத்துலிங்கம் வீட்டு வசதி வாரிய வீட்டுக்காக இருபத்தையாயிரம் ரூபாய் கட்ட முடியாமல் தவித்த போது இராணி மேரிக் கல்லூரியின் பேராசிரியர் அரசு மணிமேகலை கவிஞருக்குப் பணம் கொடுத்திருக்கிறார்.

கவிஞர் அதை மூன்று மாதத்தில் திருப்பிக் கொடுத்தார் என்பது வேறு கதை. இப்படி ஒட்டுமொத்த உலகத்தை இணைக்கும் சங்கிலியாக இருப்பது படைப்புதான்.

தன்னைப் போலப் பிறரை நினைக்கத் தெரியாத மனிதர்களிடம் பணமும் அதிகாரம்மும் சேர்ந்து கொண்டால் என்ன பாடுபடுகிறது என்பதற்கு முடிந்து போன வரலாறுகள் சான்று தருகின்றன.

ஒருவரின் திறமையை அங்கீகரிக்கத் தவறும் போது, குறைந்த பட்சம் வந்தவர்களை உட்கார வைத்துப் பேச வேண்டும் என்ற நாகரிகம் இல்லாதவர்கள் திரைத்துறையில் என்ன பாடுபட்டிருக்கிறார்கள் தெரியுமா? மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர். சுந்தரம் கலைத்துறையில் இசையமைப்பாளர், பாடலாசிரியர்களைச் சந்திப்பதாக   இருந்தால் தான் மட்டும் அமர்ந்து கொண்டு வந்தவர்களை நிற்க வைத்தே பேசுவார்.

பாரதிதாசன், கலைஞர் போன்றவர்கள் வந்தால் மட்டும் முன்கூட்டியே நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்பட்டு அமரச் சொல்வார். இந்தச் சூழலில் இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதனையும், பட்டுக்கோட்டையாரையும் ‘பாசவலை’ படப் பாடலுக்கான காட்சியைச் சொல்ல மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் அழைத்திருந்தார்.

அந்த அறையில் அதிபருக்கான நாற்காலி மட்டுமே இருந்தது. கால் மணிநேரமாக நிற்க வைத்தே பாடல் காட்சிகளை விளக்கும் போது பட்டுக்கோட்டையார் மிகவும் கோபப்பட்டவராக ஒரு தாளில் பல்லவி எழுதி நீட்டியிருக்கிறார். உடனே இரண்டு நாற்காலிகள் கொண்டு வந்து போடச் சொல்லி அவர்களை உட்காரச் சொன்னார் அதிபர். அப்போது எம்.எஸ்.வி. தமக்கு நாற்காலிகளைக் கொடுத்த பட்டுக்கோட்டையாரின் பல்லவியைப் பலவாறாகப் புகழ்ந்தார்.

உண்மையில் என்ன நடந்தது என்பதை நூலாசிரியர் சொல்லும் விதமே தனியழகு. ‘‘மரியாதை கொடுத்து மரியாதை வாங்குங்கள், மனிதரை மனிதராய் மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் என்று எழுதிக் கொடுத்தேனே தவிர பல்லவி ஒன்றும் எழுதித் தரவில்லை’’ என்றார் பட்டுக்கோட்டையார்.

தன் சுயமரியாதையை விட்டுக் கொடுக்க விரும்பாத நிலையை நூலாசிரியர் கம்பீரமாகப் பதிவு செய்திருக்கிறார். இதைக் கேட்ட எம்.எஸ்.வி. இனி தமக்கு மாடர்ன் தியேட்டர்ஸ் வாய்ப்பு கிடைக்காது என்று நினைத்த போது அதன் அதிபர் அப்படி ஒன்றும் நடந்துவிடாது என்று உத்தரவாதம் கொடுத்திருக்கிறார்.

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாருக்குத் திரைப்படங்கள் என்றால் பிடிக்காது என்ற கருத்து உண்டு. அதைப் போலவே திரைப் பாடல்களையும் அவர் விரும்பமாட்டார் என்று சொல்பவர்களும் இருக்கின்றனர்.

ஆனால் அவருக்குப் பிடித்த பாடல் ஒன்றை இந்நூல் பேசுகிறது. உடுமலை நாராயண கவி எழுதிய ஒரு பாடல் பெரியாரை மிகவும் ஈர்த்த பாடல். 1954-இல் வெளிவந்த ‘டாக்டர் சாவித்திரி’ என்ற படத்தில் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனும், டி.ஏ. மதுரமும் பாடுவதாக அமைந்த பாடல் பெரியாரைக் கவர்ந்திருக்கிறது.

‘‘காசிக்குப் போனா கருவுண்டாகுமென்ற
காலம் மாறிப் போச்சு – இப்ப
ஊசியைப் போட்டா உண்டாகும் என்ற
உண்மை தெரிஞ்சுப் போச்சு’’

என்ற வரிகள் குழந்தை வேண்டுபவர்கள் காசிக்குப் போய்க் கொண்டிருந்த மூடநம்பிக்கையை மாற்றுவதாக அமைந்தவை. இப்பாடலைப் பெரியார் மிகவும் ரசித்திருக்கிறார்.

‘‘இந்தத் தேகம் மறைந்தாலும் இசையால் மலர்வேன்’’ என்று பாடு நிலா எஸ்.பி.பி.க்கு அஞ்சலி செய்யப்பட்ட போது அவர் குரலில் பதிவான இந்தப் பாடல் ஒளிபரப்பப்பட்டது. அந்தப் பாடலுக்குச் சொந்தக்காரர் கவிஞர் முத்துலிங்கம்.

ஜெயகாந்தன் பாடல் எழுதியிருக்கும் உண்மைத் தகவல், இசையமைப்பாளர் எம்.பி. சீனிவாசனால் ராயல்டி கொடுக்கும் முறை உருவானது என்ற வரலாறு, பழைய தமிழ்ப் பண்களுக்கு இன்றைய பெயர்கள், பாடலாசிரியர்களான தமிழாசிரியர்கள் இப்படி இன்னும் பல கருத்துக்களை முன்வைக்கும் கருத்துக் கருவூலமாக அமைந்திருக்கிறது புத்தகம்.

அவரவர் கடிதங்களை உரியவர்களிடம் சேர்க்கும் ஓர் அஞ்சல்காரரைப் போல, உரிய கலைஞர்களிடம் அவரவர்களுக்கான பாராட்டுதலைச் சேர்க்கும் விதத்தில் நூல் அமைந்திருப்பது மேலும் சிறப்பாக அமைகிறது.

நூல் : ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே
ஆசிரியர் : கவிஞர் முத்துலிங்கம்
விலை : ரூ. 400 மட்டும்
வெளியீடு: வானதி பதிப்பகம், சென்னை

- முனைவர் சி.ஆர்.மஞ்சுளா