shook emphire book(சென்ற இதழின் தொடர்ச்சி)

பஞ்சாப் மாநிலத்தில், அம்மாநிலத்தின் துணை ஆளுநரான ஓட்வியரும் இராணுவ அதிகாரியான டயரும் இணைந்து  நடத்திய கொடூரச் செயல்கள்  சென்ற இதழில் இடம் பெற்றிருந்தன.

இந்நிகழ்வுகள் குறித்த சரியான புரிதல் பிரித்தானிய மக்களுக்கு இல்லை. உண்மையான செய்திகள் நாளேடுகளில் இடம் பெறாதவாறு அதிகார வர்க்கம் பார்த்துக்கொண்டது.

பஞ்சாப் மாநில மக்கள்மீது இராணுவ அடக்குமுறையை முன்நின்று நடத்திய ஓட்வியர், டயர் என்ற இருவரைக் குறித்தும் மாவீரர் போன்ற  ஒரு பிம்பம் இங்கிலாந்தில் உருவாக்கப்பட்டிருந்தது.

இச்சூழலில் சர் சங்கரன் நாயர் என்பவர் ஜாலியன்வாலாபாக் நிகழ்வுகளின் உண்மைத்தன்மையை வெளிப்படுத்தும் வகையில் நூல் ஒன்றை எழுதினார்.

இந்நூல் குறித்து அவதூறு வழக்கு ஒன்று இங்கிலாந்து நீதிமன்றத்தில் சங்கரன் நாயருக்கு எதிராகத் தொடரப்பட்டது. இவ்வழக்கை அவர் எதிர்கொண்டார்.

1857 இல் நிகழ்ந்த சிப்பாய் எழுச்சி போன்ற ஒரு கலகச் செயல் நிகழ இருந்த நிலையில் ஓட்வியரும் டயரும் இணைந்து உரியநேரத்தில் மேற்கொண்ட தீரமான செயல்பாடுகள்தான் அது நிகழாதவாறு தடுத்து நிறுத்தியது என்ற எண்ணம் மேலோங்கியிருந்த சூழலில் இவ்வழக்கு அவருக்கு எதிராகத் தொடுக்கப்பட்டது.

 இவ்வழக்கின் வரலாறும், இதற்குக் காரணமான நூல் எழுதப்பட்டதற்கான    தேவை குறித்தும், வழக்கின் முடிவும் அது ஏற்படுத்திய விளைவுகளும் குறித்தும் இனிக் காண்போம்.

பஞ்சாப் மாநில நிகழ்வுகளும், ஜாலியன்வாலாபாக் படுகொலைச் செயல்களும் வெளிவராதபடி பஞ்சாப் மாநிலத்தின் அதிகாரவர்க்கம் பார்த்துக்கொண்டது. இருப்பினும் வெளிமாநிலங்களில் இருந்து வெளியான ஆங்கில இதழ்களில் இந் நிகழ்வுகள் குறித்த செய்திகள் வெளியாயின.

இச் செய்திகளை இலண்டனில் இருந்த இந்தியாவுக்கான செயலாளர் மாண்டேகு படிக்க நேரிட்டது. உடனே அமிர்தசரஸ் துப்பாக்கிச் சூடு, இராணுவச் சட்டம் நடைமுறைப்படுத்தப் பட்டமை குறித்த விவரங்களை அனுப்பிவைக்கும்படி  இந்தியாவின் வைசிராயாக இருந்த செம்ஸ்போர்டுக்குக் கடிதம் எழுதினார்.

இதற்கான பதிலை 21 மே 1919இல் தந்தி வாயிலாக செம்ஸ்போர்டு அனுப்பினார். அதில் டெல்லி, அமிர்தசரஸ், அகமதாபாத், கல்கத்தா ஆகிய நகரங்களில் மொத்தம் ஆறு அல்லது ஒன்பது அய்ரோப்பியர்களும், ஏறத்தாழ 400 இந்தியர்களும் இறந்து போனதாகக் குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன் தெருவில் ஊர்ந்து செல்லும் தண்டனை நடைமுறைப்படுத்தப் பட்டிருந்ததையும் குறிப்பிட்டிருந்தார். இந்திய வைசிராயின் ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக இருந்த சங்கரன் நாயரைப் பஞ்சாப் நிகழ்வுகள் பெரிதும் வருத்தின.

வைசிராயின் அனுமதியின் பெயரிலேயே பஞ்சாப் கொடூரங்கள் நிகழ்ந்துள்ளன என்பதை அறிந்தபோது அவர் அதிர்ச்சி அடைந்தார். வைசிராயின் ஆலோசனைக் குழு உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகும் முடிவை எடுத்தார்.

அவ்வாறு செய்யவேண்டாமென்று ஆண்ட்ரூஸ் பாதிரியார், அன்னிபெசண்ட், மோதிலால் நேரு ஆகியோர் அறிவுறுத்தினர்.

ஆலோசனைக் குழு உறுப்பினர்களில் அவர் ஒருவர்தான் இந்தியர் என்ற நிலையில் அவரது பணி தேசத்திற்கு தேவை என்ற நிலையில் இவ்வாறு கூறினர்.

ஆண்ட்ரூஸ் பாதிரியார்

இவ்வாறு சங்கரன் நாயரை அறிவுறுத்தியவர்களில் ஒருவரான சி.எஃப். ஆண்ட்ரூஸ் பாதிரியார் இங்கிலாந்து கிறித்தவத் திருச்சபையின் குரு ஆவார். சமயப்பரப்பலுக்காக இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்கு வந்தவர். இருப்பினும் இந்திய தேசிய இயக்கத்தின் ஆதரவாளராக விளங்கினார்.

பஞ்சாப் நிகழ்வுகள் குறித்து வைசிராயைச் சந்தித்து உரையாடியபோது, ஓர் ஆங்கிலேயரைத் துன்புறுத்தினால் ஏற்படும் விளைவுகளை, இந்தியர்கள் இப்போது உணர்ந்திருப்பார்கள் என்று வைசிராய் குறிப்பிட்டார்.

இதைக் கேள்வியுற்ற நாயர் வைசிராயின் ஆலோசனைக் குழுவில் இருந்து விலகுவதில் மேலும் உறுதியான நிலைபாட்டை எடுத்தார். தாம், லாகூர் சென்று திரும்பும் வரை உறுப்பினர் பதவியில் தொடரும்படி ஆண்ட்ரூஸ் பாதிரியார் வேண்டினார். ஆனால் லாகூர் செல்லும் வழியிலேயே அவர் கைது செய்யப்பட்டுத் திருப்பியனுப்பப்பட்டார்.

பதவி விலகல்

எனவே முதலில் எடுத்த முடிவுப்படி 1919 ஜூன் 23 இல், வைசிராய் நிர்வாகக்குழு உறுப்பினர் பொறுப்பிலிருந்து நாயர் விலகினார். தன்னை வந்து பார்க்கும்படி செம்ஸ்போர்டு அவரை அழைத்தார்.

அதன்படி நாயர் அவரைச் சந்தித்தபோது, நாயரின் பதவி விலகல் குறித்து வருத்தம் தெரிவித்தார். அவரது பதவி விலகலைத் தான் ஏற்றுக் கொண்டதை வெளிப்படுத்தும் வகையில், அவருக்குப் பதிலாக வேறு ஒருவரின் பெயரைப் பரிந்துரைக்க முடியுமா என்று வைசிராய் வினவினார்.

அவ்வாறு பரிந்துரைக்க முடியும் என்பதை வெளிப்படுத்தும் வகையில் “Yes" (எஸ்) என்று கூறிவிட்டு, மென்மையான குரலில், ராம்பிரசாத்' என்று கதவருகில் நின்று கொண்டிருந்த ஒருவரைச் சுட்டிக்காட்டினார்.

அவர் சுட்டிக்காட்டிய  ராம்பிரசாத் தலையில் தலைப்பாகையுடன் சீருடையில் நின்று கொண்டிருந்த கடைநிலை ஊழியர் (பியூன்) ஆவார்.

நாயரின் உடனடியான இப்பதில் செம்ஸ்போர்டை அதிர்ச்சி அடையச் செய்தது. நாயர் தொடர்ந்தார். “ ஏன் கூடாது? அவர் நல்ல தோற்றப்பொலிவுடன் உள்ளார்.

தன் சீருடையை நன்றாக அணிந்துள்ளார். நீங்கள் கூறும் எல்லாவற்றிற்கும் சரி என்று கூறுவார். ஆலோசனைக் குழுவுக்குப் பொருத்தமான உறுப்பினராக விளங்குவார்”. இவ்வாறு கூறிவிட்டு, வைசிராயிடம் கை குலுக்கி விடை பெற்றுச் சென்றார்.

நாயரின் பதவி விலகல் உடனடியாகச் சில விளைவுகளைத் தோற்றுவித்தது. அவர் பதவி விலகிய மூன்று நாட்களில், பஞ்சாபில் நடைமுறையிலிருந்த  ஊடகத் தணிக்கை நீக்கப்பட்டது.

பதினைந்து நாட்களில் இராணுவச் சட்டம் நீக்கப்படும் என்று வைசிராய் அறிவித்தார். நாயரின் பதவி விலகலால் அதிர்ச்சியடைந்த மாண்டேகு  பஞ்சாப் நிகழ்வுகள் குறித்து ஆராய விசாரணை ஆணையம் ஒன்றை அமைக்கும்படிக் கூறினார்.

ஹண்டர் விசாரணை ஆணையம்

செம்ஸ்போர்டுக்கு இதில் உடன்பாடு இல்லையென்றாலும் அரைகுறை மனதுடன் 1919இல் விசாரணை ஆணையம் ஓன்றை நிறுவினார். இதன் தலைவராக வில்லியம் ஹண்டர் என்பவரை நியமித்தார்.

இவர் ஸ்காட்லாந்து சட்டக்கல்லூரியின் பேரவை உறுப்பினராகவும் (செனட்டர்) இங்கிலாந்து  அரசின் தலைமை வழக்கறிஞராகவும்  பணியாற்றியவர்.

1919ஆவது ஆண்டில் அமிர்தசரசிலும் பிற பகுதிகளிலும் உண்மையில் என்ன நடந்தது என்பதைக் கண்டறிவது இந்த ஆணையத்தின் நோக்கமாக அமைந்தது. இதன் உறுப்பினர்களாக ஹண்டர் உள்ளிட்ட எண்மர் இருந்தனர். இவர்களுள் ஐவர் ஆங்கிலேயர்; மூவர் இந்தியர்.

விசாரணை ஆணையம் நிறுவப்பட்ட பின்பு, ஆணையத்தின் தலைவரான ஹண்டரிடம் மாண்டேகு  கூறியதன் சாரம் வருமாறு:  இந்த விசாரணை ஆணையத்தின் நோக்கம் உண்மையை உலகறியச் செய்வதும் இழந்துபோன பொது மக்களின் நம்பிக்கையை மீட்டெடுப்பதும்தான்

ஹண்டர் விசாரணை ஆணையத்தில்  அதன் தலைவரான ஹண்டர் தவிர எழுவர் உறுப்பினர்களாக இருந்தனர். இவர்களுள் நால்வர் ஆங்கிலேயர்கள்.மூவர் இந்தியர்கள்.

1919 அக்டோபர் 29 இல் தில்லியில் எட்டு நாட்களும் அகமதாபாத்தில் ஆறு நாட்களும் மும்பையில் மூன்று நாட்களும் லாகூரில் 29 நாட்களும் இவ் ஆணையத்தில் சாட்சியளித்தனர்.

ஓட்வியர் உள்ளிட்ட நால்வர் மட்டுமே வெளிப்படையாக இன்றி  மூடிய அறைக்குள் சாட்சியமளித்தனர். விசாரணை ஆணையத்தின் உறுப்பினர்கள் சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடத்தி விரிவான முறையில் நடந்த நிகழ்வுகளை வெளிப்படுத்தினர்.

இவை வெளிப்படையாக நிகழ்ந்தமையால் விரிவான முறையில் இந்தியாவிலும் இங்கிலாந்திலும்  செய்தித்தாள்களில் வெளியாயின.

இந்தியாவுக்கான செயலாளரான மாண்டேகு விசாரணை அறிக்கையைப் படித்தறிந்தார். அதன் அடிப்படையில் பாரளுமன்றக் குழு ஒன்றினை இது குறித்து ஆராய அமைத்தார்.

இக் குழுவின் முன் சாட்சியமளிக்க இலண்டனுக்கு வரும்படி நாயரை அழைத்தார். இதை ஒரு நல்ல வாய்ப்பாகக் கருதிய நாயர்  மாண்டேகுவின் அழைப்பை ஏற்றுக் கொண்டார்.

இலண்டனுக்குச் செல்வதற்குமுன் நாயர்  வைசிராய் செம்ஸ்போர்டைச் சந்தித்தார். தமது இலண்டன் பயணம் குறித்து செம்ஸ்போர்டிடம் குறிப்பிட்டபோது, தம் சொந்தச் செலவிலேயே நாயர் இலண்டன் செல்ல வேண்டுமென்றும் அரசின் விருந்தினராக அவர் கருதப்படமாட்டார் என்றும் செம்ஸ்போர்ட் கூறினார்.  செலவைப் பற்றிக் கவலைப்படாது நாயர் இலண்டன் சென்றார்.

வைசிராய் செம்ஸ்போர்டு அனுப்பிய விரிவான அறிக்கை மாண்டேகுவை அதிர்ச்சியடையச் செய்தது. குப்புற விழுந்த நிலையில் தெருவில் ஊர்ந்து செல்லும் தண்டனையானது அருவருப்பானதாகவும் வெறுக்கத்தக்க ஒன்றாகவும் அவருக்குப் பட்டது.

டயர் மீது கடுமையான எதிர்மறை விமர்சனங்களை முன்வைத்ததுடன் தலைமைப் பொறுப்பிலிருந்து டயரை விடுவித்து இங்கிலாந்துக்கு அனுப்பும்படி கூறிவிட்டார். ஆனால் செம்ஸ்போர்டுக்கு இதில் உடன்பாடில்லை.

டயர் மேற்கொண்ட செயல்களை நியாயப்படுத்தி பதில் அனுப்பினார். மாண்டேகு இதை ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்நிகழ்வுகள் ஒருபுறம் இருக்க மற்றோரு பக்கம் இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகக்குழு ஜூன் 8இல் அலகாபாத்தில் கூடியது. பஞ்சாப் மாநில நிகழ்வுகளுக்கு விசாரணை வேண்டும் என்ற முடிவை அங்கு எடுத்தது. அத்துடன் இலண்டன் சென்று இதற்கு ஆதரவு திரட்டும்படி சங்கரன் நாயரை வேண்டியது.

சங்கரன் நாயர்

கேரளத்தின் பரத ஆற்றங்கரையில்  உள்ள மன்காரா என்ற கிராமத்தில் 1857 ஆவது ஆண்டில் பிறந்தவர் சங்கரன் நாயர். அவருடைய தாத்தா அரசு அதிகாரியாகப் பணியாற்றியவர். அவருடைய தந்தை தாசில்தார் ஆக இருந்தார்.

இதனால் நவீனக் கல்வி கற்பதன் அவசியத்தை அவரது குடும்பத்தினர் உணர்ந்திருந்தனர். பள்ளிப்படிப்பை முடித்தவுடன் சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலை வகுப்பில் பயின்று பட்டம் பெற்றார்.

பின்னர் சட்டக் கல்லூரியில் பயின்று பி.எல். பட்டம் பெற்று வழக்கறிஞரானார். பின்னர் சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதியுமானார்.

காங்கிரஸ் இயக்கத்தில் அவருக்கு ஈடுபாடு இருந்தது. 1858இல் விக்டோரியா மகாராணி வெளியிட்ட அறிக்கை மீது அவருக்கு நம்பிக்கை இருந்தது.

ஆனால் அந்த அறிக்கையில் இடம் பெற்றிருந்த அமைதி, அன்பு, சுதந்திரம், சமத்துவம் என்பன இந்தியாவில் உள்ள அவரது குடிமக்கள் அனைவருக்கும் உரியவை என்ற அவரது விருப்பத்தை நிறைவேற்றுவதில் இந்தியாவில் பணியாற்றும் ஆங்கில அதிகாரிகள் ஆர்வம் காட்டாததுடன், இந்தியர்களுக்கு எதிராகவே செயல் படுகிறார்கள் என்பது அவரது கருத்தாக இருந்தது.

கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு வழங்கியது போன்ற சுயநிர்ணய உரிமை வழங்கப்பட்டு இந்தியாவை இந்தியர்களே ஆளும் நிலையை அவர் விரும்பினார்.

1897இல் அமராவதியில் நடைபெற்ற இந்திய தேசியக் காங்கிரசின் 13ஆவது மாநாட்டிற்குத் தலைமை ஏற்கும்படி அவரை அழைத்திருந்தனர். இதற்கு முன்னும் பின்னும் தலைமை ஏற்றவர்களில் இவர்தான் வயதில் இளையவர்.

அந்த ஆண்டுதான் திலகருக்கு  தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இது குறித்து சில உண்மைகளைத் தம் உரையில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

பிரித்தானிய அரசானது ஓர் இந்தியரைக் கைது செய்து எவ்வித நீதி விசாரணையும் இன்றி சிறையில் அடைக்க முடியும். ஆனால் ஓர் ஆங்கிலேயனைக் கைது செய்தால் நீதி வழங்கும் ஆயத்தார் (Jury) முன் நிறுத்தி விசாரித்த பின்பே தண்டனை வழங்கப்படும்.

இத்துடன் நில்லாது வேறு சில விமர்சனங்களையும் அவர் முன்வைத்தார். அவை வருமாறு:

இந்திய நாட்டின் வருவாயிலிருந்து இந்திய ராணுவம் பராமரிக்கப் படுகின்றது. பிரித்தானிய. ஆட்சியைப் பிற நாடுகளில் தக்கவைத்துக் கொள்ள இந்த ராணுவம் பயன்படுத்தப்படுகிறது.

இதற்காகும் செலவை இந்தியா ஏற்றுக் கொள்ள வேண்டியுள்ளது.ஓர் இனம் என்ற முறையில் தங்களை உயர்வானவர்கள் என்று கருதும் ஆங்கிலேயர்கள், இந்தியர்கள் பொறுப்பற்றவர்கள் என்று கருதி இந்தியாவை ஆயுதங்களின் துணையுடன் அடக்கிவைத்துள்ளார்கள், என்று கண்டித்தார்.

அனைத்து முக்கிய அலுவலகங்களும் ஆங்கிலேயர்களால் நிர்வகிக்கப் படுவதைச் சுட்டிக்காட்டி அரசுப் பொறுப்புகளில் இந்தியர்களும் ஆங்கிலேயர்களுக்கு இணையாக நியமிக்கப்படவேண்டுமென்று வலியுறுத்தினார்.

1920களில் இந்திய தேசியக் காங்கிரசின் தலைவராகவும். சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாகவும், இந்திய வைசிராயின் நிர்வாகக்குழு உறுப்பினராகவும் பணியாற்றினார். இத்தகைய ஆளுமை கொண்ட இவர்  காந்தியின் கருத்துக்கள் சிலவற்றுடன் மாறுபாடு கொண்டிருந்தார்.

நாயரின் இலண்டன் வருகை

ஹண்டர் ஆணையத்தின் முன் டயர்  அளித்த சாட்சியம் இங்கிலாந்தின் பயோனியர்' இதழில்  வெளியான நேரத்தில் நாயர் இலண்டன் வந்தடைந்தார்.

அதில் ஜாலியன் வாலாபாக் துப்பாக்கிச் சூடை முன்னரே திட்டமிட்டதாகவும், கூட்டத்தைக் கலைப்பதற்காக மட்டுமின்றி ஒரு படிப்பினையை நாடு  முழுவதற்கும் வழங்கவேண்டும் என்பதற்காகவும் மேற்கொண்டதாகக்   குறிப்பிட்டிருந்தான்.

வாய்ப்புக் கிட்டியிருந்தால் இயந்திரத் துப்பாக்கிகளையும் கவச ஊர்திகளையும் பயன்படுத்தி இருப்பேன் என்றும் கூறியிருந்தான். காயமடைந்தவர்களை  சாகும்வரை விட்டுவிடும் முடிவைத் தான் முதலிலேயே எடுத்து விட்டதாகவும் ஒத்துக்கொண்டான்.

 டயரின் இக்கூற்றை வெஸ்ட் மினிஸ்டர் கெசட் இதழின் ஆசிரியர் பார்வைக்கு நாயர் கொண்டு சென்றார். இதன் அடிப்படையில் அவர் எழுதிய கட்டுரை இங்கிலாந்து முழுவதும், பரபரப்பை ஏற்படுத்தியது.

அமிர்தசரசில் உண்மையில் என்ன நடந்தது என்பது  இங்கிலாந்தின் பொதுமக்களுக்கு இருட்டடிப்புச் செய்யப்பட்டிருப்பதாக “தி மார்னிங் போஸ்ட்” இதழ் எழுதியது. 

டயர் குறித்த திறனாய்வுடன் கூடிய தன் கருத்துக்களை  மாண்டேகுவிற்கு நாயர் எழுதியனுப்பினார். இந்தியாவுக்கான செயலாளரின் பேரவையில் உறுப்பினர் பொறுப்பை நாயருக்கு வழங்குவதாக மாண்டேகு கூறினார். நாயர் அதை ஏற்றுக்கொண்டு 2-1-1920 இல் அப் பேரவையில் உறுப்பினரானார்.

ஆணையத்திலிருந்து குழுவிற்கு

பஞ்சாப் கொந்தளிப்பு குறித்த இந்திய அரசின் அறிக்கையானது நாயர் இப் பதவியை ஏற்றுக்கொண்ட சில நாட்களில் இந்தியாவுக்கான செயலாளரின் பேரவைக்கு வந்தது.

நாயரைத் தவிர ஏனைய உறுப்பினர்கள் அனைவரும் இந்திய அரசின் கருத்தை ஏற்றுக் கொண்டனர். பஞ்சாபில் இந்திய அரசின் செயல்பாடுகள் கண்டனத்திற்குரியவை என்ற கருத்தமைந்த அறிக்கையை நாயர் முன்வைத்தார்.

இவ்விரண்டு அறிக்கைகளும் கலைந்து போகும்படி மக்களிடம் கூறாமை, எச்சரிக்கை செய்யாது சுட்டமை, மக்கள் திரள் கலைந்துபோக ஆரம்பித்த பின்னரும் சுட்டமை என்ற செயல்களுக்காக ஜெனரல் டயரைக் கண்டித்தன. இச் செயல்களின் மூலம் மாபெருந் தவறை டயர் செய்ததாகக் கூறின.

ஆயினும் ஏப்ரல் 13க்கு முன் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடை நியாயமான செயல் என்று  ஆங்கிலேய உறுப்பினர்கள் ஏற்றுக் கொண்டனர். குழுவின் உறுப்பினர்களாய் இருந்த இந்தியர்கள் இதை ஏற்றுக் கொள்ளவில்லை.

இது போல் இராணுவச் சட்டம் நடை முறைப்படுத்தப் பட்டதைப் பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஏற்றுக்கொண்டனர்.

ஜெனரல் டயரின் நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கியதில் ஓட்வியர் தன் அறிவைச் செலுத்தியிருக்க வேண்டும் என்றும் விமர்சனம் செய்திருந்தனர்.

சலாம் இடும் கட்டளை, ஊர்ந்து செல்லும் கட்டளை என்ற இரண்டையும்  விசாரணை ஆணையம் கண்டித்திருந்தது.

இருப்பினும், டயர் மீது எந்த நடவடிக்கைக்கும் விசாரணை ஆணையம் பரிந்துரைக்கவில்லை. இந்தியப் பணியில் இருந்து அவனை விடுவித்து மருத்துவ விடுப்பில் செல்லும்படி இந்திய அரசு பணித்தது.

ஹண்டர் விசாரணை  ஆணையத்தின் அறிக்கையைப் படித்த மாண்டேகு அது வெளிப்படுத்தியுள்ள உண்மையைப் பரிசீலிக்க குழு ஒன்றை அமைக்கும்படி இங்கிலாந்தின் மந்திரிசபையைத் தூண்டினார்.

அதன்படி குழு ஒன்று அமைக்கப்பட்டது. குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான வின்சண்ட் சர்ச்சில் டயர் தண்டிக்கப்படவேண்டும் என்று விரும்பினார். குழுவும் இதே கருத்தைக் கொண்டிருந்தது.

ஆனால் இராணுவத் தலைமை இதை ஏற்றுக் கொள்ளவில்லை. உடல் நலம் குன்றிவந்த நிலையில் பணியில் இருந்து விலகிக்கொள்ள அனுமதிக்கப்பட்டான்.

 மற்றொரு பக்கம் தன் நடவடிக்கைகளுக்கு ஆதரவு வேண்டி மாண்டேகுவைச் சந்திக்க ஓட்வியர் முயன்றான். அதில் பயன் கிட்டா நிலையில் தாமும் ஜெனரல் டயரும்  மேற்கொண்ட செயல்கள் சரியானவை என்ற கருத்தை நிலைநாட்ட இங்கிலாந்தின் பிரதமராக இருந்த லாயிட் ஜார்ஜை சந்தித்தான்.

அவனது முறையீடு கேட்கப்பட்டதோடு முடிந்து போயிற்று. ஜாலியன் வாலாபாக்கிலும் பஞ்சாபிலும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை நியாயப்படுத்த முடியாது என்பதில் இங்கிலாந்து அரசு தெளிவாக இருந்தது.

சங்கரன் நாயரின் நூல்

காந்தியுடனான தன் கருத்து மாறுபாடுகளை வெளிப்படுத்தி, “காந்தியும் அரசு இல்லாக் கொள்கையும்” (Gandhi and Anarchy) என்ற நூலை எழுதினார். இந்த நூலில் காந்தி மேற்கொண்ட சிவில் சட்டமறுப்பு இயக்கத்துடன் தமக்கு உடன்பாடு இல்லாமையை வெளிப்படுத்தியிருந்தார்.

அகிம்சை, ஒத்துழையாமை, சிவில் சட்ட மறுப்பு என்பனவற்றை மேற்கொண்டு இந்தியா தன்னாட்சி (Home Rule) பெறமுடியும் என்பதை அவர் நம்பவில்லை. இத்தகைய இயக்கமானது ஒழுங்கின்மை, குழப்பம், கலகம், இரத்தம் சிந்துதல் என்பனவற்றை ஏற்படுத்தும் என்று நம்பினார். இது குறித்து, தன்னுடைய மாற்றுக்கருத்துக்களை இந்நூலில் பதிவு செய்திருந்தார்.

அத்துடன் பஞ்சாப் மாநிலத்தில், குறிப்பாக அமிர்தசரஸ் நிகழ்வுகள் குறித்து சில கருத்துக்களையும் வெளிப்படுத்தியிருந்தார். அவற்றின் சாரம் வருமாறு:

பஞ்சாபின் துணை ஆளுநராக இருந்த ஓட்வியர் மேற்கொண்ட வன்கண்மையான முறைகளும், இராணுவச் சட்ட நடைமுறைகளும், குஜ்ரவாலில் விமானம் மூலம் குண்டு வீசித் தாக்கியதும் டயர் நடத்திய ஜாலியன் வாலாபாக் படுகொலையும் பஞ்சாப்பில் உருவான அமைதியின்மைக்குக் காரணம்.

ஓட்வியர் முற்றிலும் அறிந்தே, அவரது அனுமதியுடனேயே பஞ்சாபில் அட்டூழியங்கள்  நிகழ்ந்துள்ளன. சங்கரன் நாயர் எழுதிய நூலின் ஒரு படி இந்தியாவிலுள்ள அவரது நண்பர் வாயிலாக ஓட்வியரைச் சென்றடைந்தது.

அதைப் படித்ததும் பஞ்சாப் நிகழ்வுகளின் காரணமாகத் தனக்கு ஏற்பட்டிருந்த அவப்பெயரைப் போக்கிக்கொள்ளும் கருவியாக இந்நூலைப் பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்து விட்டான்.

ஹண்டர் ஆணைய அறிக்கை, பிரித்தானிய அரசு எடுத்த நடவடிக்கைகள், என்பனவற்றில் இருந்து  தன்னை விடுவித்துக்கொள்ளும் வழிமுறையாக இந்நூலை எழுதிய சங்கரன் நாயர் மீது அவதூறு வழக்குத் தொடுத்தான்.

வழக்கு

16.ஜூன் 1922இல்  இங்கிலாந்தில் உள்ள உயர்நீதி மன்றத்தை (King ‘s Bench) இதற்காக அவன் தேர்வு செய்தான். இதில் பணியாற்றும் ஆங்கில நீதிபதிகள் தன் பக்கம் இருப்பார்கள் என்பதை அவன் உணர்ந்திருந்தமையே இத் தேர்வுக்கான காரணமாகும்.

தாம் எழுதிய நூலை, சங்கரன் நாயர் திரும்பப் பெற்றுக் கொள்ளவேண்டும், மன்னிப்புக் கேட்கவேண்டும். அத்துடன் ஓட்வியர் குறிப்பிடும் அறச்செயல்களுக்கு ஆயிரம் பவுண்ட் பணம் தரவேண்டும் என்று நீதிமன்ற மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

(தொடரும்)

- ஆ.சிவசுப்பிரமணியன்

Pin It