shook emphire bookஇந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் புறக்கணிக்க இயலாத ஒரு கொடூரமான நிகழ்வு, 1919 ஏப்ரல் 13ஆம் நாளன்று பஞ்சாபின் அமிர்தசரஸ் நகரில் ஆங்கிலஅரசு பொதுமக்கள் மீது நடத்திய கொடூரமான தாக்குதல். இது நிகழ்ந்த இடம் ஜாலியன்வாலாபாக் என்ற பூங்காவாகும். இதன் அடிப்படையில் இந் நிகழ்வு ஜாலியன்வாலாபாக் படுகொலை என்று வரலாற்றில் பதிவாகியுள்ளது. இந்தியாவை மட்டுமின்றி உலகையே உலுக்கிய இப்படுகொலை அரசியல் எல்லை கடந்து கண்டனத்திற்காளானது.

சிறந்த கவிஞராகவும் கல்வியாளராகவும் விளங்கிய ரவீந்திரநாத் தாகூர்இப் படுகொலைக்குத் தம் எதிர்ப்பைத் தெரிவிக்கும் முகமாக ஆங்கில அரசால் தமக்கு வழங்கப்பட்ட ‘சர்’ பட்டத்தைத் திருப்பிக்கொடுத்துவிட்டார்.

‘சர்’பட்டமானது இங்கிலாந்து நாட்டின் அரசால் வழங்கப்படும் உயரிய பட்டமாகும். இப்பட்டம் பெற்றவர்களில் ஒருவர் உலகப் புகழ்வாய்ந்த அறிவியலாளர்களில் ஒருவரான ஐசக் நியூட்டன் ஆவார். தாகூர் விடுதலை இயக்கத்தில் தம்மை முழுமையாக இணைத்துக் கொண்டவரல்லர்.

இது குறித்து நேரு, தந்தக்கோபுரத்தில் வீற்றிருக்கும் குயில் என்று தாகூரைக் குறிப்பிட்டுள்ளார். இக் குயிலானது அவ்வப்போது வெளியில் வந்து கூவிவிட்டு மீண்டும் தந்தக்கோபுரத்தினுள் சென்று அமர்ந்துவிடும் என்றும் விமர்சித்துள்ளார்.

விடுதலை இயக்க அரசியலில்இருந்து விலகி நின்ற தாகூரைக்கூடஇப்படுகொலை சினம் கொள்ளச் செய்து, தாம் பெற்ற உயரிய பட்டமான சர் பட்டத்தை மறுதலிக்கச் செய்துவிட்டது.

இப்படுகொலைக்கு எதிரான குரல் இந்தியா முழுவதும் ஒலித்துள்ளது. பொதுமக்களுடன் நாடகக் கலைஞர்களும்,கவிஞர்களும் இணைந்து கொண்டனர்.

தமிழ்நாட்டில் தியாகி விசுவநாததாஸ் என்ற நாடகக் கலைஞர்தாம் இயற்றி நாடகமேடைகளில் பாடிவந்த “பஞ்சாப்படுகொலை பாரினில் கொடியது” என்று தொடங்கும் பாடலின், முழுவடிவத்தை தியோடர் பாஸ்கரன் வெளியிட்டுள்ளார்.

அத்துடன் "1919-இல் நடந்த ஜாலியன்வாலாபாக் படுகொலை கிளப்பிய அடக்கவொண்ணா சினம் வெகுசன நாடகத்தை அரசியல்மயப்படுத்தியது”என்றும் மதிப்பீடு செய்துள்ளார்.

இத்தகைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஜாலியன் வாலாபாக் படுகொலையை அடுத்து இங்கிலாந்து நீதிமன்றத்தில் நிகழ்ந்தவழக்கு ஒன்றை அடிப்படையாகக் கொண்டே இங்கு அறிமுகமாகும் நூல் எழுதப்பட்டுள்ளது. ஆங்கிலேயர்கள்

பஞ்சாபில் நடத்திய அட்டூழியங்களையும்,அவற்றை உலகறியச் செயவதில் சர்.சி.சங்கரன் நாயர் ஆற்றிய பங்களிப்பையும் வெளிப்படுத்தும் நோக்கில் இந்நூலை எழுதியுள்ளதாக நூலாசிரியர்ரகு பல்லத் நூலின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.

இங்கு சங்கரன் நாயரின் பங்களிப்பென்பது அவர் மீது மிக்கேல் ஓட்வியர்என்ற ஆங்கிலேயர் (பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் துணை ஆளுநர்) இங்கிலாந்து நாட்டின் உயர் நீதிமன்றத்தில் (King’s Bench) தொடுத்த அவதூறு வழக்கை எதிர்கொண்டு அதன் வாயிலாக ஆங்கில அரசு மேற்கொண்ட கொடூரச்செயல்களை வெளிப்படுத்தியதாகும்.

நூலாசிரியர்கள்

இந்நூலாசிரியர்கள் இருவருமே சங்கரன் நாயர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். ரகு பல்லத் சங்கரன் நாயரின் நேர்மரபில் வந்தவர்(பூட்டன்). வங்கித்தொழில் ஆலோசகராகவும் ஆசிரியராகவும் எழுத்தாளராகவும்தொழிலதிபராகவும் விளங்குபவர். இந்நூலின் துணையாசிரியரான புஷ்பா பல்லத் டைம்ஸ் ஆஃப் இந்தியா, எக்கனாமிக் டைம்ஸ், டெஸ்டினேஷன் டிராவலர் ஆகிய ஆங்கில இதழ்களில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக எழுதி வருபவர்.

இச் சிறு அறிமுகத்துடன் நூலுக்குள் செல்லலாம். அதற்கு முன் சில வரலாற்றுச் செய்திகளையும் வரலாற்று மனிதர்களையும் அறிந்து கொள்வது நூல் வாசிப்பை எளிதாக்கும். இவ்வகையில் மாண்டேகு செம்ஸ் போர்ட் சீர்திருத்தம், ரௌலட் சட்டம், ஜாலியன்வாலாபாக் கொடூரம், இராணுவச்சட்டம்என்ற தலைப்புகளில் சில செய்திகள்இடம்பெறுகின்றன.

மாண்டேகு செம்ஸ் போர்ட் சீர்திருத்தம்

1905 இல் நிகழ்ந்த வங்கப்பிரிவினை சுதேசி இயக்கத்தையும் புரட்சிகர பயங்கரவாத இயக்கத்தையும் வளர்த்தெடுத்தது. இவ்விரு இயக்கங்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் வகையில் ஆங்கில அரசு சில அரசியல் சீர்திருத்தங்களை 1909இல் இந்தியாவில் அறிமுகம் செய்ய முடிவெடுத்தது.

இதற்கான பரிந்துரைகளை இங்கிலாந்தில் செயல்பட்டு வந்த இந்தியத் துறையின் செயலாளர் மார்லி என்பவரும் இந்தியாவின் வைசிராய் ஆக இருந்த மிண்டோ என்பவரும் இணைந்து உருவாக்கினர். இப் பரிந்துரை மிண்டோ மார்லி சீர்திருத்தம் என்றழைக்கப்பட்டது. இது இந்தியர்களுக்கு நிறைவளிக்காத நிலையில் இதன் தொடர்ச்சியாக மற்றொரு சட்டத்தை ஆங்கில அரசு உருவாக்கியது.

இந்தியாவின் வைசிராய் ஆக இருந்த செம்ஸ்போர்டு என்பவரும் இந்தியாவுக்கான தலைமைச் செயலாளராக இருந்த எட்வின் சாமுவேல் மாண்டேகு என்பவரும் இணைந்து இதை உருவாக்கியதால் மாண்டேகு செம்ஸ்போர்ட் சீர்திருத்தம் என்று இது அழைக்கப்பட்டது.

இந்திய மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றாத சட்டம் என்று இந்திய தேசியக் காங்கிரஸ் இதைக் கருதியதால் இச் சட்டம் குறித்து விவாதிக்க 1918 ஆகஸ்ட்29 இல் மும்பையில் கூடியது. இக்காலத்தில்தான் இந்திய அரசியலில் ஒரு தலைவராக, காந்தி உருவாகத் தொடங்கினார்.

இந்திய மக்களிடம் விடுதலையுணர்வு வளரத் தொடங்கியது. இதை ஒடுக்கும் வகையில் சிட்னி ரௌலட் என்ற ஆங்கில நீதிபதியின் வழிகாட்டலில்சட்ட வரைவை 1919 பிப்ரவரியில் மத்திய சட்டசபையில் முன்வைத்தது.

இது 1919 மார்ச் 18 இல் சட்டமாயிற்று. சர் சங்கரன் நாயர் ஒருவர்தான் இதற்கு எதிராக வாக்களித்தார். இச் சட்ட வரைவை உருவாக்கியநீதிபதியின் பெயரால்இது ரௌலட் சட்டம் என்றழைக்கப்பட்டது.

ரௌலட் சட்டம்

ரௌலட் சட்டமானது ஒரு புதிய குற்றவியல் சட்டமாக அறிமுகமாகி நடைமுறைக்கு வந்தது. இச் சட்டத்தின்படி நீதிமன்றத்தின் பிடியாணை இன்றி எந்த ஒரு இந்தியரையும் கைது செய்யலாம். நீதிமன்ற அனுமதி இன்றியே இரண்டாண்டுகள் சிறையில் அடைக்கலாம். அவர் வாழும் இடத்தை விட்டு வெளியேறி வேறு இடத்தில் வாழும்படி ஆணை பிறப்பிக்கலாம்.

இதை எதிர்த்து எந்த நீதிமன்றத்திலும் வழக்காட முடியாது. இங்கிலாந்து நாட்டில் நடைமுறையில் இருந்த ஹெப்பியஸ் கார்ப்ஸ் சட்டப்பாதுகாப்பு இந்தியருக்கு மறுக்கப் பட்டது. இச் சட்டம் குறித்து பிபின்சந்திரா (:428) பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார் :

“ஒரு திடீர்த் தாக்குதல் போல ரௌலட் சட்டம் வந்தது.இந்திய மக்களைப் பொறுத்தவரையில் ஜனநாயகத்தை விரிவுபடுத்தப் போவதாக வாக்குறுதி அளித்த அரசாங்கத்தின் செயல் ஒரு நகை முரணாகத் தோன்றியது.

பசியுடன் ரொட்டித் துண்டுக்காகக் காத்திருக்கும் மனிதனுக்கு கற்களை அளிப்பது போன்றது இது. ஜனநாயகத்தை வளர்ப்பதற்கு மாறாக சிவில் உரிமைகள் மேலும் கட்டுப்படுத்தப் பட்டன.நாட்டில் குற்றம் அதிகரித்தது. வலுவான கிளர்ச்சி வெடித்தது,”

ரௌலட் சட்டத்திற்கு எதிரான அறப்போராட்டத்தைக் காந்தி தொடங்கினார்.

தாம் நடத்தவுள்ள போராட்டமானது தென் ஆப்பிரிக்காவில் மேற்கொண்ட “சத்யாக்கிரகம்” என்ற பெயரிலான வன்முறையற்ற அறப்போராட்ட வழிசார்ந்தது என்று அவர் அறிவித்தார். இதுவே ஒத்துழையாமை இயக்கம் என்று குறிப்பிடப்பட்டது.

பஞ்சாப் நிகழ்வுகள்

மிகக் கொடூரமான வரலாற்று நிகழ்வான ஜாலியன்வாலாபாக் படுகொலைக்குச் சற்று முன்பாக நிகழ்ந்த நிகழ்வுகள் சிலவற்றை இந்நூலாசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர். இவை ஆங்கில அரசு அதிகாரிகளின் குரூரமான உணர்வை வெளிப்படுத்துவனவாய் உள்ளன.

ரௌலட் சட்ட எதிர்ப்பு இயக்கம் பஞ்சாப் மாநிலத்தில் தொடங்கியபோது, மருத்துவர் சத்தியபால் என்பவரும் செய்யதின் கிச்சிலு என்ற வழக்கறிஞரும்மக்கள் செல்வாக்குடைய காங்கிரஸ் இயக்கத் தலைவர்களாக விளங்கினர்.

பஞ்சாப் மக்களுக்கு ரௌலட் சட்ட எதிர்ப்புப் போராட்டம் குறித்து விளக்க உரை ஆற்றும்படி, காந்திக்கு மருத்துவர் சத்தியபால் அழைப்பு விடுத்தார். அவரும் அதை ஏற்றுக்கொண்டார். அவர் பஞ்சாபின் எல்லைக்குள் நுழைந்தவுடன்அவரைக் கைது செய்து திருப்பி அனுப்பினர்.

இச்செய்தியை அறிந்தவுடன் 1919 ஏப்ரல் 10ஆம் நாளன்று ஆயுதங்கள் எதுவும் இல்லாத 400 பேர் காந்தியை விடுவிக்க வேண்டி லாகூரில் ஊர்வலமாகச் சென்றனர். அவ்வாறு செல்லும் வழியில் எதிர்ப்பட்ட சில இராணுவ வீரர்கள் அவர்களைத் திரும்பிச் செல்லும்படிக் கூறினர். அவர்கள் அதை ஏற்க மறுக்கவே அவர்களில் சிலரைச் சுட்டுக்கொன்றனர்.

ஊர்வலம் சென்றவர்கள் பின்வாங்கி லாகூர் கேட் என்ற இடத்திற்குச் சென்றனர். ராம்பூஜ் தத் சௌத்திரிஎன்ற உள்ளூர்த் தலைவர், ஊர்வலமாக வந்தவர்களிடம் பேசுவதற்குத் தம்மை அனுமதிக்கும்படி காவல்துறையிடம் வேண்டினார்.

இரண்டு நிமிடங்கள் மட்டுமே அனுமதிப்பதாக, காவல்துறையின் கண்காணிப்பாளர் கூறினார். கூடுதல் நேரம் வழங்கும்படி அவர் விடுத்த வேண்டுகோள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இரண்டு நிமிடங்கள் கடந்த பின்னர் ஒரு சிலர் திரும்பிச் சென்றனர். காவலர்கள் மீண்டும் சுட மேலும் பலர் இறந்தனர் .

தேசிய உணர்வு வலுவடைந்து வருவதைக் கண்டு சினமடைந்த துணை ஆளுநர் ஓட்வியர், சத்தியபால், கிச்சலு ஆகிய இருவரையும் கைது செய்ய ஆணையிட்டான். அதன்படி இவ்விருவரும் கைது செய்யப்பட்டனர்.

இதைக் கேள்விப்பட்ட உள்ளூர் மக்கள் ஏறக்குறைய 50,000 பேர் ஒன்று திரண்டு, அவர்களை விடுவிக்க வேண்டி துணைக்கண்காணிப்பாளர் இல்லம் நோக்கிச் சென்றனர். செல்லும் வழியில் தொடர்வண்டி மேம்பாலம் ஒன்றைக் கடக்க வேண்டியிருந்தது.

அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த இராணுவ வீரர்கள் அதைத் தடுத்தபோது ஏற்பட்ட தள்ளுமுள்ளலில் படைவீரர்கள் பின்வாங்க நேரிட்டது. அவர்கள் மீது ஊர்வலத்தினர் கல்வீச்சில்ஈடுபட, எதிர்வினையாக அவர்கள் சுட, இருபது பேர் இறந்தனர். பலர் காயமுற்றனர்.

இதுவரை அமைதிகாத்த ஊர்வலத்தினரை துப்பாக்கிச்சூடு கொதித்தெழச் செய்தது. கொல்லப்பட்ட, காயமுற்ற தம் தோழர்களுக்காகப் பழிதீர்க்கும் செயலை மேற்கொள்ளலாயினர்.

இறந்தவர்களின் உடல்களையும், காயமுற்றோரின் உடல்களையும் சுமந்தவாறு கடைத்தெருவுக்கு ஊர்வலமாகச் சென்றனர். இக் காட்சி அங்கிருந்தோரைக் கொதித்தெழச் செய்தது. மிகக் குறுகிய கால அளவில் பெருங்கூட்டமாகத் திரண்டு துப்பாக்கிச்சூடு நிகழ்ந்த மேம்பாலத்திற்குச் சென்றனர். அவர்கள் சென்றபோது லத்திக் கம்புகள் மட்டுமேஅங்கு ஆயுதங்களாக இருந்தன.

அங்கு பொறுப்பில் இருந்த அதிகாரி வருத்தம் தெரிவித்தார். அத்துடன் காயமுற்றவர்களுக்கு உதவும் முயற்சிகளும் எடுக்கப்பட்டன. நோயாளிகளைச் சுமந்து செல்ல உதவும் தூக்குப் படுக்கைகள் (ஸ்டெரெச்சர்) மருத்துவமனையிலிருந்து கொண்டுவரப்பட்டன.

ஆனால் காவல்துறையின் துணைக் கண்காணிப்பாளரான புளோமர் அவற்றைத் திருப்பி அனுப்பியதுடன், மக்கள் தாங்களாகவே இதற்கு ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும் என்று கூறிவிட்டார்.

ஆங்கிலேயப் பெண்மருத்துவர் ஒருவர் இந்துக்கள், இஸ்லாமியர் மீதான துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்திக் கேலியாகப் பேசியதால் மக்களின் சினத்துக்கு ஆளானார். மருத்துவமனை ஊழியர்கள் அவரை, துணிவைக்கும் பேழை ஒன்றுக்குள் ஒளித்து வைத்து மக்களின் தாக்குதலில் இருந்து காப்பாற்றினர்.

பல்வேறு வங்கிகள், இரயில் நிலையம், வேறு சில கட்டிடங்கள் நெருப்புக்கிரையாயின. மூன்று ஆங்கில வங்கியாளர்கள், வேறு இரண்டு ஆங்கிலேயர்கள், பல அரசு ஊழியர்கள், குடிமக்கள் சிலர் கொல்லப்பட்டனர். மக்கள் கூட்டத்தால் தொடர்வண்டிப் பாதைகளும் தொலைபேசிக் கம்பிகளும் சேதப்படுத்தப்பட்டன.

இந் நிகழ்வுகளின் தொடர்ச்சியாக ஜாலியன்வாலாபாக் கொடூரம்அமிர்தசரஸ் நகரில் நடந்தேறியது. பஞ்சாபின் பல பகுதிகளில் வன்முறை நிகழ்ந்தபோதும் அமிர்தசரஸ் நகரம் அமைதியாகவே இருந்தது.

ஜாலியன்வாலாபாக் பொதுக்கூட்டம்

இந் நூலின் ஏழாவது இயலில் ஜாலியன்வாலாபாக் நிகழ்வுக்கு முன்னும் பின்னும் நடந்தவற்றை இந்நூலின் ஆசிரியர்கள் விரிவுபட எழுதியுள்ளனர். அதன் சுருக்கம் வருமாறு:

1919 ஏப்ரல், 12ஆவது நாளன்று, அமிர்தசரஸ் பகுதியின் காங்கிரஸ் இயக்கத் தலைவர்கள் அமிர்தசரஸ் நகரில் கூடினர். ஏப்ரல் 13ஆவது நாளன்று அந்நகரில் உள்ள ஜாலியன்வாலாபாக் திடலில் கண்டனப் பொதுக்கூட்டம்ஒன்று நடத்துவதாக முடிவெடுத்தனர். அன்று பஞ்சாபியரின் புத்தாண்டு பிறக்கும் நாள் என்பதால் அந்தநாள் தேர்வு செய்யப்பட்டது.

கூட்டம் நடக்கவிருந்த நாளின் காலையில் இராணுவச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இராணுவ அதிகாரியான ஜெனரல் டயர்காலை ஒன்பது மணியளவில் நகரின் தெருக்களில் சென்று அறிவிக்கையன்றைப் படித்தான்.

அப்போது அவனது கட்டுப்பாட்டில் 417 ஆங்கிலப் படைவீரர்களும் 739 இந்தியப் படைவீரர்களும் இருந்தனர். அத்துடன் அவனது பொறுப்பில் இரண்டு கவசவண்டிகளும், பல எந்திரத் துப்பாக்கிகளும் இருந்தன. அவன் படித்த அறிவிக்கை ஆங்கிலம், உருது, இந்தி, பஞ்சாபி ஆகிய நான்கு மொழிகளில் எழுதப்பட்டிருந்தது.அதன் சாரம் வருமாறு:

அமிர்தசரஸ் நகரவாசிகள், நடந்தோ, தமது சொந்த அல்லது வாடகை வாகனத்திலோ, அனுமதிச்சீட்டு இன்றி வீட்டை விட்டு வெளியேறக்கூடாது. அப்படி வெளியேறினால் சுடப்படுவார்கள். எந்தவகையான ஊர்வலங்களும் நடத்தக்கூடாது. நான்கு பேர் கூடுவதும், ஊர்வலமாகச் செல்வதும் சட்டத்திற்கு எதிரான கூட்டமாகக் கருதப்படும். அவ்வாறு கூடுவோர் வன்முறையாகவோ ஆயுதங்களைப் பயன்படுத்தியோ கலைக்கப்படுவர்.

இந்த அறிவிக்கைதெருக்களில் படிக்கப்பட்டபோது, காவல்துறையின் துணை ஆணையர், துணைக் கண்காணிப்பாளர், கண்காணிப்பாளர், அமிர்தசரஸ் வட்டாட்சியர், ஆகியோருடன் ஆங்கிலப் படைவீரர்களைக் கொண்ட படைப்பிரிவினரும் உடனிருந்தனர். மற்றொரு பக்கம் சிறுவனொருவன் தகரடப்பா ஒன்றைத் தட்டியவாறே ஜாலியன்வாலாபாக்கில் கூட்டமொன்று நடைபெறப்போவதாக, உரக்கக் கூறியவாறு ஓடிக்கொண்டிருந்தான்.

நண்பகல் தொடக்கத்திலேயே மக்கள் கூட்டத்தால், கூட்டம் நிகழவிருந்த திடல் நிரம்பிவிட்டது. சாதாரண உடையில் உள்ளூர்க் குற்றப்புலனாய்வுக் காவல்துறையினர் கூட்டத்துடன்கலந்து நடமாடிக்கொண்டிருந்தனர். இக்கூட்ட நிகழ்வு குறித்த செய்தி பகல்12-45 மணிக்கே டயருக்குத் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் அவனோ ஏனைய காவல்துறை அதிகாரிகளோ, சிவில் அதிகாரிகளோ கூடியிருந்த மக்களிடம் தடையுத்தரவு இருப்பது குறித்தோ கலைந்து செல்வது குறித்தோ எதுவும் கூறவில்லை.

பிற்பகலில், சீக்கியர்களும், இந்துக்களும்,இஸ்லாமியர்களும் ஆயிரக்கணக்கில் கூடிவிட்டனர். சீக்கியர்களின் பொற்கோவிலுக்குச் சென்றுவிட்டு பலர் ஜாலியன்வாலாபாக் திடல்வழியே வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

இவர்களைத் தவிர குதிரை மற்றும் கால்நடைச் சந்தைக்கு வந்த குடியானவர்களும் வணிகர்களும் நிறைந்திருந்தனர். நகரக் காவல்துறை சந்தையை இரண்டு மணிக்கு மூடியபின்னர் குடியானவர்கள் கூட்டமாக பொற்கோவிலுக்கும் கூட்டம் நிகழும் திடலுக்கும் வரத்தொடங்கினர்.

பிற்பகலின் தொடக்கத்தில் இருபதினாயிரத்திலிருந்து இருபத்தையாயிரம் வரையிலான மக்கள் திரள் ஜாலியன்வாலாபாக்கில் கூடியிருந்தது. இவர்களுள் சிறுவர்களும் கைக்குழந்தைகளும் அடங்கியிருந்தனர். இவர்களுள் எவரும் கம்புகளையோ எவ்வித ஆயுதங்களையோ கொண்டுவரவில்லை.

அவர்களில் பெரும்பாலோர் எவ்விதக் குழப்பமோ, தொல்லையோ மேற்கொள்ள அங்குக் கூடவில்லை. பஞ்சாபிப் புத்தாண்டைக் கொண்டாடவும், வாழ்த்துச் சொல்லவும், நண்பர்களைச் சந்திக்கவும் கூடியிருந்தனர்.

இரண்டுமணி கடந்த பின் விமானம் ஒன்றை அத்திடலுக்கு மேலே பறக்கச்செய்து, மக்கள் கூட்டத்தைக் கணித்தான். மருத்துவர் சத்தியபாலையும் கிச்சுலுவையும் கைது செய்ததுகுறித்து தன்னெதிர்ப்பை நான்கு மணியளவில் கூட்டம் வெளிப்படுத்தியது.

அவர்களை விடுவிக்கும்படி பஞ்சாபின் துணை ஆளுநருக்கோ இந்தியாவின் வைசிராய்க்கோ மனுக் கொடுக்கும்படி உரையாற்றியவர்கள் ஆலோசனை கூறினர்.

04-30 மணியளவில் இராணுவ அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகள் புடைசூழ டயர் நுழைந்தான். அவனுடன் வந்த படைப்பிரிவினர், அவர்களின் எண்ணிக்கை, தாங்கியிருந்த ஆயுதங்கள் குறித்த விவரங்களையும் நூலாசிரியர்கள் துல்லியமாகக் கொடுத்துள்ளனர். இதைப் படிக்கும்போது சராசரிக் குடிமக்கள் மீது படையெடுப்பு போன்று ஒரு தாக்குதல் நடத்த அவன் திட்டமிட்டிருந்தமை புலனாகிறது.

ஜாலியன்வாலாபாக் கொடூரம்

கூட்டம் நிகழ்ந்து கொண்டிருந்த திடலானதுஆறு அல்லது ஏழு ஏக்கர் நிலப்பகுதியில்பரந்திருந்தது. அதைச்சுற்றிலும் பத்தடி உயரத்தில் சுவர் இருந்தது.அதன் மைய நுழைவாயில் குறுகலாக இருந்தமையால் அதன்வழியாகவாகனங்கள் நுழைய முடியாது.

இவ்வாயிலைத் தவிர முறையான நுழைவாயில் எதுவும்இல்லை. இருப்பினும் நான்கு முனைகளிலும் குறுகலான திறப்பு இருந்தது. மழைக்காலத்தில் இத் திடலில் பயிர் செய்வார்கள். எஞ்சிய காலத்தில் கூட்டம் நிகழும் இடமாகவும், விளையாட்டுத் திடலாகவும் பயன்படுத்தப்படும்.

திடலின் நுழைவாயில் பகுதி சற்று மேடாக இருந்தது. மேடை போன்று உயரமாக இருந்த இப்பகுதியில் நின்று கொண்டு கூட்டத்தினரைப் பார்வையிட்டான். இரண்டு வரிசையாக அணிவகுத்து வந்த அய்ம்பது படைவீரர்களில் இருபத்தியைந்து பேர்கள் இடது புறமாகவும் இருபத்தியைந்து பேர்கள் வலது புறமாகவும், மேட்டுப்பகுதியில் நின்று கொண்டனர். இதன் மூலம் கூட்டத்தினர் விரைவாகத் தப்பிச் செல்ல முடியாதநிலையை டயர் உருவாக்கிவிட்டான்.

திடலில் இருந்த மக்கள் கூட்டம் கூண்டுக்குள் அடைக்கப்பட்ட விலங்கு போன்று தாங்கள் இருப்பதை அறியவில்லை. படைவீரர்கள் வந்தவுடன் கூட்டத்தினர் பின்னால் திரும்பிப் பார்த்தனர்.

கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த ஹான்ஸ் ராஜ், அமைதியாக இருக்கும்படியும், அப்பாவி மக்களைப் படைவீரர்கள் சுடமாட்டார்கள் என்று கூறியதுடன், கூட்டமானது அமைதியானது என்பதை உணர்த்தும் வகையில், வெள்ளைநிறக் கொடியுடன், படைவீரர்களை நோக்கி ஓடினார்.

ஆனால் ஏற்கெனவே திட்டமிட்டிருந்தபடி எவ்விதமுன் அறிவிப்புமின்றி சுடும்படி டயர் உத்தரவிட்டான். கட்டளைப்படி கூட்டத்தை நோக்கி நேரடியாகப் படைவீரர்கள் சுட்டனர். இது பத்து நிமிடங்கள் வரை நீடித்தது.

அவர்களுக்கு வழங்கப்பட்ட 1,650 சுற்றுக்களுக்கான குண்டுகள் தீர்ந்து போகும்வரை சுட்டனர். திடல் முழுவதும் பிணக்குவியலானது. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்த நிலையில் 200க்கும் 300க்கும் இடையிலான எண்ணிக்கையில் கூட்டத்தினர் இறந்திருக்கலாம் என்று டயர் பின்னர் குறிப்பிட்டான்.

ஆங்கில அரசு 379 பேர் இறந்ததாகப் பின்னர் அறிவித்தது. உண்மையில் ஆயிரம்பேருக்கு மேல் இறந்ததாகவும் ஆயிரத்தைந்நூறு பேருக்குமேல் காயமுற்றதாகவும் மதிப்பிடப்பட்டது

இறந்தோர் உடல்களையும் காயமுற்றோரையும் திடலிலேயே விட்டுவிட்டுத் தன் படைவீரர்களுடன்டயர் வெளியேறினான் (ஹண்டர் விசாரணை ஆணையத்தில் சாட்சியம் அளித்தபோது, காயமுற்றவர்களைக் கவனிப்பது தனது வேலையல்லஎன்று திமிருடன் கூறினான்).

ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருந்ததால் காயமுற்றவர்களில் பலர் இரவில் இறந்து போனார்கள்.

இராணுவச் சட்டம்

பஞ்சாப் மாநிலத்தில் மக்கள் எழுச்சியை ஒடுக்க விரும்பிய அம் மாநிலத்தின் துணை ஆளுநராக இருந்த ஓட்வியர், இராணுவச், சட்டத்தை நடைமுறைப் படுத்த அனுமதி வேண்டி இந்திய அரசுக்கு 1919ஏப்ரல் 12 ஆவது நாள் தந்தி அனுப்பினான்.

ஆட்சியாளர்களின் ஆணைக்கு எதிராக வெளிப்படையான கலகம் உருவாகும்போதுஇராணுவச் சட்டம் தேவை என்பது ஓட்வியரின் கருத்தாக இருந்தமையால் ஏப்ரல் 14 ஆவது நாள் அவனது வேண்டுகோள் ஏற்றுக் கொள்ளப்பட்டுசட்டமாக அறிவிக்கப்பட்டது. இச் சட்டம் 1919 ஜூன் 09 வரை நடைமுறையில் இருந்தது.

இச் சட்டம் நடைமுறைக்கு வந்தவுடன் பாரிஸ்டர்களும் வழக்கறிஞர்களும் கைது செய்யப்பட்டனர். கைது செய்வதற்கான ஆணையின்றியே கைது செய்யும் உரிமை காவல்துறையின் கண்காணிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டது.

கைதானவர்கள் கண்ணியக் குறைவாகவும் மூர்க்கத்தனமாகவும் நடத்தப்பட்டனர் (இதனை விரிவாக நூலாசிரியர்கள் எழுதியுள்ளனர்). ஏப்ரல் 19இல் இருந்து 25 வரை ஏழு நாட்கள் சில தெருக்களைக் கடந்து செல்லும் போது தரையில் ஊர்ந்து செல்லும்படி அமிர்தசரஸ் நகரவாசிகள்கட்டாயப்படுத்தப் பட்டனர்.

இத் தெருக்களில்ஷெர்வுட் என்ற ஆங்கிலப் பெண்மணி மக்கள் எழுச்சியில் அவமானப்படுத்தப்பட்டதே இதற்குக் காரணமாகக் கூறப்பட்டது. பார்வையற்றோரும் உடல்நலம் குன்றியோரும் மாற்றுத்திறனாளிகளும் கூட இக்கட்டளைக்குக் கீழ்ப்படிய வேண்டியிருந்தது.

அவசரகால மருத்துவ உதவி தேவைப்படுவோருக்கூட விதிவிலக்கு அளிக்கப்படவில்லை. கைகளும் முழங்கால்களும் வயிறும் தரையில் படும்படி ஊர்ந்து செல்வோர், தம் முழங்கால் மூட்டைத் தூக்கியோ, உடலை வளைத்தோ வலியைக் குறைக்க முயன்றால், காவல்துறையினர் உடனடியாகத் துப்பாக்கியின் பின்பகுதியால் முதுகில் குத்துவதுடன், புறப்பட்ட இடத்தில் இருந்தே மீண்டும் ஊர்ந்து வரச் செய்வர். (இது ஏற்படுத்திய பாதிப்புகள்தொடர்பாக சில எடுத்துக்காட்டுகள்நூலில் இடம்பெற்றுள்ளன )

தரையில்ஊர்ந்து செல்லும் தண்டனை உடலை வருத்துவதென்றால், பஞ்சாப் மக்களின் தன்மான உணர்வைச் சீண்டும்வகையில் “சலாம் உத்தரவு “(salam order) என்ற கட்டளை இராணுவச் சட்டம் நடைமுறையில் இருந்தபோது வெளியானது. அது வருமாறு:

குஜரன்வாலா மாவட்ட மக்கள்,பொதுவாக அரசு ஆணையர்களுக்கும், மாண்புமிகு அரசரின் குடிமை மற்றும் இராணுவ அதிகாரிகளுக்கும்மரியாதை கொடுப்பதில்லை என்று நாம் அறிகிறோம். இதனால் அரசின் மாண்பும் மரியாதையும் சீர்குலைகிறது.

எனவே இந்த மரியாதைக்குரிய அதிகாரிகளைச் சந்திக்கும் போதெல்லாம் இங்கேயுள்ள பணம் படைத்த இந்தியருக்குக் கொடுக்கும் அதே மரியாதையை இந்த அதிகாரிகளுக்கும் குஜரன்வாலா மாவட்ட மக்கள் அளிக்கவேண்டும் என்று நாம் ஆணையிடுகிறோம்.

குதிரை மீதோ அல்லது எந்தவொரு வாகனத்திலோ பயணித்தால்அதில் இருந்து இறங்க வேண்டும். குடையைக் கையில் வைத்திருந்தாலோ, அல்லது அதை விரித்துப் பிடித்திருந்தாலோ அதை இறக்கிவிட வேண்டும். அனைத்து மக்களும் தமது வலது கரத்தால் சலாம் (சல்யூட்) அடிக்க வேண்டும்

ஒப்பம்: எல்.டபுள்.ஒய்-கேம்பல்
பிரிகேடியர் ஜெனரல்
கமாண்டிங் அதிகாரி.
குஜ்ரவால்

இதுவரை பார்த்த செய்திகள் யாவும் இங்கிலாந்து நாட்டில் பரவலாக அறியப்படாதிருந்தது. இவ்வுண்மைகளை வெளிவரச் செய்து, பிரித்தானியப் பேரரசை உலுக்கிய ஒரு வழக்கை மையமாகக் கொண்டேஇங்கு அறிமுகம் செய்யப் போகும் நூல்உருவாகியுள்ளது. அது தொடர்பான செய்திகளை அடுத்த இதழில் காண்போம்.

தொடரும்...

- ஆ.சிவசுப்பிரமணியன்