கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

பேரினவாத ஒடுக்குமுறைகளில் ஒன்றான, வெலிக்கடைச் சிறை படுகொலைச் சம்பவங்கள், தமிழர்களின் மீதான இனவெறித் தாக்குதல்கள், போராளி அமைப்புகளின் தொடர்பு, அரசப்படைகளின் கைது, சித்திரவதைப் படுத்துதல், சிறையிலிருந்து தப்புதல், காட்டிக்கொடுப்புகள், தண்டனைகள், சகோதரப் படுகொலைகள், சிறைவாழ்க்கை, பாலியல் வல்லுறவு, சமூகச்சிக்கல்கள், வர்க்கப் போராட்ட அரசியல், அரச - ஆதிக்கச் சக்திகளாகி மக்களைக் கொல்லும் இழிநிலை ஆகியன வெளிப்படுத்தும் நோக்கிலும், அவரது படைப்பாக்கத் திறன்களைப் பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து வெளிப்படுத்துவதும் இக்கட்டுரையின் ஆய்வுச் சுருக்கமாக அமைகிறது.

தமிழின் புனைவிலக்கிய உருவாக்க வரலாற்றில், நாவலின் வருகை இன்று புதிய பாய்ச்சலை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. கதை சொல்வதும் கதையைக் கேட்பதும் மானுட வரலாற்றில் முக்கிய ஒரு நிகழ்வு என்பதன் தொடர்ச்சியாகவே இவற்றை அவதானிக்கலாம். சமகாலத் தமிழ் நாவல்கள், இன்று கோட்பாடுகள் சார்ந்தும் மற்றும் ஈழம், சிங்கப்பூர், பிரான்சு, கனடா, ஜெர்மன், மலேசியா என அயலகம் சார்ந்தும், புகலிடம், புலம்பெயர் எழுத்து எனப் பல்வேறு பரிமாணங்களின் மானுடவாழ்வை அழகியல் நேர்த்தியோடு பேசுகின்றன.

நாவல்கள் நாம் படிக்கின்ற போது நமக்குள் ஏற்படுகின்ற சலனங்கள் அசாத்தியமானவை. இவை வாழ்வு குறித்து வேறுபட்ட புரிதல்களைத் தருவதோடு வாழ்வை ஆழப்படுத்தவும் அகலப்படுத்தவும் செய்கிறது. மனித மனங்களைப் பயன் படுத்தும், சமூக அக்கறையை ஏற்படுத்துவதும் கலையினை மிளிரச் செய்வதுமான வேலைகளையும் செய்கின்றன. ஆக தமிழில் சமகால நாவல் இலக்கியங்கள் உலகின் செல்நெறிக்கேற்ப பல்வேறு தளங்களில் தம்மை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன. இவற்றுள் சமகாலத்தில் ஈழத்திலிருந்து வெளிவருகின்ற நாவல்கள் ஈழத்துப் போர்க் குரலோடு, புகலிடக் குரல்களையும் சித்தரிப்பதாய் ஈழத்தமிழ் மக்களின் விளிம்புநிலை வாழ்வைப் பேசுகிறது.

shoba sakthi novel mவெலிக்கடைப் படுகொலை நிகழ்வு

பல்லாண்டுக் காலமாகப் பலரின் கவனத்தையும் தன்பால் ஈர்த்தும், சர்வதேச ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததுமான பிரதேசம் வன்னியாகும். அந்நிய ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டத்திலும், உள்நாட்டில் இடம் பெற்ற இன ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டத்திலும் இறுதிவரை பங்குகொண்டு வன்மம், குரோதம், வெறுப்புகளோடும் காட்சியளிப்பது இப்பிரதேசமே. ஈழத்தமிழின் போராட்டமும், அதற்கெதிரான சிங்களப் பேரினவாத இராணுவத்தின் அடக்கு முறையும் 1981 இல் தொடங்கி, 2009 முள்ளிவாய்க்கால் அழித்தொழிப்பு வரை நீண்ட வரலாற்றுப் பின்புல முடையன. அவ்வகையில் ஷோபாசக்தியின் ‘ம்’ நாவலில் காணப்படும் பேரினவாத ஒடுக்குமுறையின் விளைவுகளில் ஒன்றான, வெலிக்கடைப் படுகொலைச் சம்பவங்களையும், தமிழர்களின் மீதான இனவெறித் தக்குதல்களைச் சுட்டிக்காட்டும் அறிமுகக் கட்டுரையாக இக்கட்டுரை அமைகிறது.

தமிழீழ வரலாற்றில், 1950க்குப் பின்பான சூழலில், இயல்பான வாழ்க்கை முறை திரிந்து தமிழின அடக்குமுறை, அதனை எதிர்கொள்ளல் அல்லது போர் என்பதாக மாற்றம் பெற்றுவிடுகிறது. இந்தப் பின்னணியிலேதான் சமகால ஈழத்தமிழரின் நாவல்களின் தோற்றமும் பாடுபொருளும் அமைகிறது. அந்தோணிதாசன் என்ற இயற் பெயர் கொண்ட ஷோபாசக்தி, 1984 இல் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர். இயக்கம் தந்த கசப்பான அனுபவங்களால் 1986 இல் இயக்கத்திலிருந்து வெளியேறியவர். 1990களில் இந்திய ராணுவமும், விடுதலைப் புலிகளும் முட்டிக் கொண்ட சமயம் இலங்கை அரசு இவரைக் கைதுசெய்து சிறையில் அடைத்தது. இதன் பிரதியே ‘ம்’ நாவல்.

‘ம்’ நாவல் உண்மைச் சம்பவங்களும் புனைவும் கலந்த படைப்பு எனலாம். தனது மகளின் கர்ப்பத்திற்குக் காரணமான நேசகுமாரனின் கதையுடன் நாவல் தொடங்குகிறது. ஈழத்தில் போராளி அமைப்புகளுடன் தொடர்புபட்ட காரணங்களால் இலங்கை அரசப்படைகளினால் கைது செய்யப்பட்டு, சித்திரவதைப்படுதல், பின்னர் சிறையிலிருந்து தப்புதல், போராளிகளிடம் பிடிபடுதல் என்று தொடங்கிய கதை, இறுதியில் புகலிடத்தில் இன்னொரு இளைஞர் கூட்டத்தினரிடம் அகப்பட்டு சித்திரவதைப்படுதலோடு முற்றுப் பெறுகிறது.

இந்நாவலிலும் பேரினவாத ஒடுக்குமுறையின் விளைவுகளில் ஒன்றான வெலிக்கடைப் படுகொலைச் சம்பவங்களும், தமிழர்கள் மீதான இனவெறித் தாக்குதல்களும் விரிவாகப் பேசப்பட்டுள்ளன.

இதில் தொடக்க அம்சமே, நாவல் முழுக்க பரவியுள்ளது. நேசகுமாரன் இராணுவத்தினரிடம் கைது செய்யப்பட்டு சித்திரவதைப்படுதல், சிறிகாந்தமலர் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமாகக் கொல்லப்படுதல், கலைச்செல்வன் தப்பியோடும் சந்தர்ப்பத்தில் பெற்றோர் முன்பாகவே சுட்டுக்கொல்லப்படுதல், பிடித்து வைக்கப்பட்டிருந்த சக போராளிகள் இன்னோரு போராளி அமைப்பில் கூட்டாகக் கொலை செய்யப்படுதல் ஆகிய சம்பவத் திரட்டுக்கள் இந்நாவலில் பதிவாகியுள்ளன.

“விழாக் காலங்களில் தேவாலயத்தைச் சூழவும் தொங்கவிடப்படும் நிறங்கள் ஒளிரும் வெளிச்சக் கூடுகளைக் கடந்த நான்கு வருடங்களாகவே தமிழீழத்தின் சட்டம், ஒழுங்கு நீதி ஆகியன பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் சிறிலங்காவின் முப்படைகளிடமும் கையளிக்கப்பட்டதிலிருந்து சனங்கள் அவிந்து விட்டிருந்தார்கள். அந்தத்தீவைச் சதாகாலமும் சுற்றித்திரியும் கடற்படைப் படகுகள் பெரும் வெளிச்சங்களைக் கண்டால் தீவுக்குள் நுழையக்கூடும் என அவர்கள் அச்சமுற்றிருந்தார்கள். ஒரு தெந்தெட்டான வெளிச்சத்தில்தான் மெசியா இன்று பிறக்கப் போகிறாள்” (2005:14).

ஈழத்தின் அரசியலையும், மக்கள் சமூகத்தின் உள்ளார்ந்த உளவியற் கூறுகளையும் இருவேறு தன்மைகளாகப் பிரித்துப் பார்க்க முடியாது. இந்நாவல், ஆதிக்கத்துக்கெதிரான ஒரு போராட்டக் களத்தை முன்னிறுத்தி நிற்கவில்லை. மாறாக, ஆதிக்கத்தை தாங்கிக் கொள்ள முடியாத இயலாமையைப் பேசுகிறது. தான் உயிர் வாழ்வதற்காகத் தன் நண்பனை, எதிரியை, உறவுகளை இராணுவத்துக்குக் காட்டிக் கொடுத்து உயிர்வாழ முனையும் ஒருவனும் யார் தலை உருண்டாலென்ன தனது சுயநலத்துக்காக அனைத்தையும் வளைத்துப் போட முனையும் தந்தையும், தமிழ் மக்களின் வாழ்வியல், தனி ஈழம் ஒன்று உருவாகுமானால் அதில் சுதந்திரமானவொரு வாழ்வு கிடைக்கும் என்ற பெருவிருப்பால் மக்கள் தமது உடைமைகளை மட்டுமல்ல உடலையும் பங்களிக்கக் கூடச் செய்யும் அளவுக்குத் துணிந்த செயல்களை வியப்பாகக் காணுவதும், அதற்காகச் சிறை வாழ்க்கை, பாலியல் வல்லுறவு, சித்திரவதையென மனித வதைக்குள்ளாகும் சமூகச் சிக்கலை மக்கள் எதிர்கொண்டேயாக வேண்டிய அரசியற் பொருளாதாரச் சூழலை உருவாக்கிய கட்சி அரசியலையும் நலனையும் இதனூடாகத் தோற்றம் பெற்ற ஆயுதக் குழுக்களின் வளர்ச்சியானது, பல்வேறுபட்ட அரச ஆதிக்கச் சக்திகளாகி மக்களைக் கொல்லும் இழிநிலையைச் சொல்லக்கூடிய ஒரு படைப்பாகிறது ‘ம்.’

பேரினவாத ஒடுக்குமுறை

ஈழத்தமிழ் மக்களின் வதைகளைக் கற்பனைக்கெட்டாத வன்கொடுமைகளைச் செய்து முடித்த கொடூரங்கள் ஹிட்லரின் சர்வாதிகார ஆட்சி போலவே, இலங்கையில் சர்வாதிகாரத்தைப் பயன்படுத்திய அரசும், இராணுவமும் சிறையதிகாரிகளின் சர்வாதிகாரச் செயல்களும் இலங்கைத் தமிழ் மக்களின் மீது, கட்டவிழ்த்து விடப்பட்ட காட்டுமிராண்டிகளின் கண்மூடித்தனமான செயல்களைச் செய்தார்கள். இவர்களது பார்வையில், இலங்கை அரசின் ஆட்சி அதிகாரத்தின் தலைமைக்காக எதையும் செய்யத் துணிந்தவர்களாக, சிறையதிகாரிகள் தயார்படுத்தப் பட்டுள்ளார்கள். இங்கு மனிதத்துவம் மண்ணில் கொலையும் குற்றுயிருமாகக் கிடைக்கிறது. ‘ம்’அதை ஆழ்ந்த சோகத்தோடு சொல்ல முனைகிறது.

வெலிக்கடைச் சிறையில், வருத்தப்பட்டுச் சித்திரவதைகள் செய்து கொல்லப்பட்ட உயிர்களும், தாய் மண்ணிலேயே விலங்குகளைப் போல வேட்டையாடப்பட்ட உயிர்களும், தமிழ் பேசுவதால் மட்டும் தண்டனைக்கு உள்ளாகிக் கொல்லப்படுவதும் இந்தக் கொடுரங்களைக் கண்டு மனக்கொதிப்பு அடைந்த இளைய சமுதாயம், இனக்குழுக்களாக உருவம் பெற்று, இயக்கங்களாகப் பிரிந்து, தேசியப் பேரியக்கமாக இலங்கை மண்ணில், தன்னை நிலைநிறுத்திக் காட்டியது. இங்கு சிங்கள அரசும் விடுதலைப் புலிகள் இயக்கமும் முட்டி மோதிக்கொள்கின்றன. இந்த முரண்பாடுகள் தான் சிங்களப் பேரினவாத முதலாளித்துவத்துக்கும், சிறுபான்மை இனமாகக் கருதப்பட்ட ஈழத்தமிழ்ச் சமுதாயமானது, சிங்களவர்களுக்கு இணையாகத் தன்னைத் தகவமைத்துக் காட்டுவதும், தனிநாடு, தனிஈழம், தனிஆட்சி என்ற கொள்கை இலங்கை மக்களினங்களில் மிகப்பெரும் முரண்பாடாகத் தோற்றமுற்றன. இதுவே, இனப்படுகொலைச் செய்வதும் அதனூடாகத் தமிழ்மக்களை வருத்தும் இந்தக் கொடுமைகளுக்கு எதிராக, தமிழ்ச் சமூகத்தில் ஆயுதம் ஏந்திய குழுக்களாக வேறொரு வகையில் தோற்றம் பெறத் தொடங்கியது.

மனிதர்களைத் தினமும் வருத்துவதையும், அவர்களின் மனச் சிதைவுகளையும், தீராத சோகத்தையும், வேதனைகளையும், வடுக்களையும் சொல்வதற்கு ஷோபாசக்தி எடுதுக்கொண்ட களமாக, ‘ம்’ நாவல் இங்கு காட்சிப் படுத்தப் பட்டுள்ளது.

“நான் பதற்றத்துடன், எனது தொகுதியிலிருந்த மற்ற கைதிகளின் பெயர்களைக் கூவினேன். யாரும் எதையும் கேட்கும் நிதானிக்கும் சூழ்நிலையில் இல்லை. சீனா தன் நெற்றியை விரல்களால் கசக்கியவாறு விறுமனாக கால்களை அகல விரித்து நிற்கிறான். பக்கிரி கண்கள் குத்தி நிற்க, எங்கோயோ பார்க்கிறான். நான் மறுபடியும், ஜன்னலில் ஏறிப்பார்த்தபோது, B3 தொகுதியிலிருந்து கைதிகள் வெளியே பொதுக்கூடத்துக்கு இழுத்து வரப்பட்டு வெட்டப்படுகிறார்கள். சுரேஷ் மாஸ்டரின் தலையில் கண்டக் கோடாரி வெட்டு விழுகிறது. உதயசீலனும் சுதாகரனும் ஏற்கனவே கொல்லப்பட்டு, பொதுக்கூடத்துக்கு அவர்களின் உடல்கள் இழுத்து வரப்பட்டன. கொழும்பானை அவர் திமிரத்திமிர இழுத்து வந்து அவுடாவின் பிரேதத்தின் மீது தள்ளுகிறார். D3 தொகுதியிலிருந்து சிங்களக் கைதிகள் வெளியே ஓடி வந்தார்கள். அவர்களின் உடல்களிலிருந்தும் இரத்தம் வடிகிறது. மறுபடியும் உள்ளே ஓடுகிறார்கள். உள்ளேயிருப்பவர்கள் சிங்களக் கைதிகளை எதிர்த்துத் தாக்குகிறார்களா? இறுதியில் ஜெயவேவா கோசங்களுடன் ஆறு உடல்களை குற்றுயிரும் குலை உயிருமாக பொது மண்டபத்துக்கு இழுத்து வருகிறார்கள்”. (2005:81)

இந்நாவலில், 1983 ஜூலை 25-27 ஆம் தேதிகளில் இலங்கை அரசாங்கம் வெலிக்கடை சிறையில் நடத்திய கொலை ஆவணமாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்நாவலைப் படைத்துள்ளார். மற்றொரு புறத்தில், தமிழ்ப்போராளிகள் பற்றிய வீரம், தியாகம், இலட்சியம் போன்றவற்றையும் சித்தரிக்கின்றன. ‘ம்’ இலங்கைப் பேரினவாத அரசின் ஒடுக்குமுறையின் விளைவுகளில் ஒன்றான, வெலிக்கடைப் படுகொலைச் சம்பவங்களும், தமிழரின் மீதான இனவெறித் தாக்குதல்களும் விரிவாகப் பதிவாகியுள்ளன.

முடிவுரை

‘ம்’ நாவலூடாக விரிந்து வருகின்ற பாத்திரங்களோடு ஷோபாசக்தி அனுபவித்த, அறிந்தவை, பட்டவை, பார்த்தவை என்று தன் வாழ்வில் நிகழ்ந்த உண்மை நிகழ்வுகளை, தமது அனுபவங்களை நாவலில் குறியீடாக விரித்துக் கொள்கின்றன. மனிதவாழ்வு, அனுபவப்பட்ட வாழ்விலிருந்து தன்னை மீட்டுருவாக்கம் செய்து கொண்டே ஒருதிசை வழி நோக்கியவொரு பயணத்தைச் செய்கிறது. இதுவரை, ஈழத்தமிழர் அனுபவித்த துயரக் கொடுமையை, துன்பக் கொடுமையை வாழ்வியல் அழிவுகளை சமூகச்சிதறலை சமுதாயத்தின் உடைவைச் சொல்கின்ற ஒரு படைப்பாக அவர்கள் வாழ்ந்த - வாழும் வாழ்வை, அதன் நிசத் தன்மையோடு, குரூரம் படர்ந்த போர்க்கால வாழ்வை, தோழமையைத் துச்சமாகத் தரித்த கோழைத்தனத்தை, அதன் மொழியூடே மனித அழிவைச் சொல்லுகிறது ‘ம்.’ மனிதகோசமாகவும், போரின் களமாகவும் நம் கண்முன் விரிந்த படைப்பாகக் காட்சிப்படுத்துகிறது.

துணைமைச் சான்றுகள்

1.            அருளர் - லங்காராணி, வெளியீட்டுக்குழு - ஈழப்புரட்சி அமைப்பு (EROS) யாழ்ப்பாணம், 1978.

2.            உதயணன். எஸ்.ஏ - தெம்மாடுகள் - திருப்புமுனை வெளியீடு, மன்னார், 2009.

3.            கந்தையா முருகதாசன் - செங்கைஆழியான் நாவல்கள், இலக்கியப் பேரவை வெளியீடு,2006.

4.            சின்னத்துரை.மு - இலங்கைத் தமிழர்கள் வாழ்வில் சாதனைகளும் சோதனைகளும், குட்புக்ஸ் பப்ளிகெஷன், சென்னை,2014.

5.            யோகராசா.செ - ஈழத்துத் தமிழ் நாவல் வளமும் வளர்ச்சியும், குமரன் புத்தக நிலையம், கொழும்பு, 2010

6.            ஷோபாசக்தி - ‘ம்’ கருப்புப் பிரதிகள், சென்னை - 2005.

முனைவர் த.பாலுசாமி