உலகளாவிய பிரச்சினையான சூழலியல் பிரச்சினைகள் குறித்து பசுமை அரசியல் தளத்தில் கவிஞர் கோ.கலியமூர்த்தி அவர்களால் எழுதப்பட்டுள்ள “கீழ் வானத்துக்கு தீ மூட்டும் எரி நட்சத்திரம்” என்ற தலைப்பில் அமைந்த கவிதைகள் வெளிப்படுத்தும் "பசுமை அரசியல்" பற்றி விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

தொகுப்பிலுள்ள கவிதைகள் தமிழ்நாட்டிலுள்ள சூழலியல் சார்ந்த பிரச்சனைகளை பசுமை அரசியலோடு அணுகியுள்ளது.

அணுஉலையும் சூழலியல் பிரச்சினையும்:

அணுஆயுதப் பயன்பாடு இரண்டாம் உலகப்போர் காலத்தில் ஏற்பட்டதாகும். பிறகு அதன் பயன்பாடு நிறுத்தப்பட்டது. பேரழிவுகள் தந்த அணு ஆயுதத்தை பல்வேறு உலக நாடுகள் எதிர்க்கின்றன. அதைப் போலவே அணுமின்சாரம் உற்பத்தி செய்யும் அணுமின்னுலையும் ஆபத்தானதே.

kaliyamoorthi bookஇதற்கு ஆகும் செலவும் சூழலியல் சீர்கேடும் அதிகம். இந்நிலையில் இத் திட்டம் தேவையில்லை என்ற கருத்தினை 'ஏன் கவிதை எழுதுகிறேன்' என்ற தலைப்பில் அமைந்த கவிதையில்

“நதிகளைப் பருகி

நிலங்களைப் புசித்து

அணுஉலை சிரிக்கும் எம்

விஷமூட்டப்பட்ட நிலத்தில்”

என்ற வரிகள் அணுமின் நிலையங்களில் அதிகமாக நீர் பயன்படுத்துவதனால் அதீத நீர் செலவும் அதிலிருந்து வெளிவரும் கழிவுகள் நதிகளை நஞ்சாக்குகிறது. மேலும் அணுக்கழிவுகளால் நிலங்கள் விஷமாக மாறுகின்றன என்பது உணர்த்துகின்றன.

“கவிதைகள் அல்ல உயிர்களே முக்கியம்” எனும் தலைப்பில் அமைந்த கவிதையில்

“இரவெல்லாம் கதறும் அலைகளின் துயரம்

கடலின் வலியைத்தான் பாடுகிறது

கரையில் முளைத்திருக்கும் அணுஉலைகள்

கடலின் இதயத்தின் புற்றுக்கட்டிகள்”

என்ற வரிகள் அணுஉலைகள் கடல்பகுதிக்கு அருகே கட்டப்பட்டுள்ள்ளன. அணுஉலைகளின் கழிவுகள் கடலில் கலக்கின்றன. இதனால் கடல் மாசுபடுகிறது. பெரும்பாலும் இவை பூமியை பாழ்படுத்தும் புற்றுக்கட்டிகள் போல கடலையும் சூழலையும் கொல்லும் என்கிறார்.

“அழகியல் கவிதைகளின் காலம் முடிந்துவிட்டது” எனும் தலைப்பில் அமைந்த கவிதை நேரடியாக பசுமை அரசியல் பேசுகின்றது

“திட்டங்களால் சட்டங்களால்

சதிகளால் மசோதாக்களால்

அணுஉலைகளால் நியூட்ரினோவால் மீத்தேனால்

சூறையாடப்படுகிறது எமது நிலம்

வேட்டையாடப்படுகிறார்கள் எம் மக்கள்

நீண்ட எம் நெய்தலின் நெடுங்கரை தோறும்      

                                                                            அன்றாடம்

செத்துக் கரையொதுங்கும் திமிங்கிலங்கள்

எதிர்காலம் குறித்த ஆருடம் சொல்கின்றன”

என்ற வரிகள் தமிழ்நாட்டின் சூழலியல் பிரச்சனைகளை கூறுகின்றன. பசுமை அரசியலின் முக்கியமான தன்மை இயற்கையும் மனிதமும் காக்கப்பட வேண்டும் என்பதாகும். ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது அந்நாட்டின் மக்களை அச்சுறுத்தாத திட்டங்களினால் உருவாக்கப்பட வேண்டும். அரசு, அதிகார மையங்களால் உருவாக்கப்பட்ட இத்திட்டங்கள் உயிர்களுக்குக் கேடானவை என்பதை அணுஉலைக் கழிவு, கடல் உயிரியான திமிங்கிலங்கள் இறப்பது கடல் இறப்பதற்கு சமம் ஆகும். ஏனெனில் திமிங்கிலங்கள் ஆழ் கடலில் வசிப்பவை. எனவே அணு நஞ்சானது அதிகளவில் பரவியுள்ளதை இது உணர்த்துகின்றது.

“துடிக்கூத்து” எனும் தலைப்பில் அமைந்த கவிதை

“ஒவ்வொருவராய் கொல்ல நீட்

ஒட்டுமொத்தமாய்க் கொல்ல

அணுக்கழிவு மேலாண்மை

மையம் நியூட்ரினோ ஆய்வகம்”

மற்றும்

கண்நீர்த்தீ எனும் தலைப்பில் அமைந்த கவிதை

“மேற்குத்தொடர்ச்சி மலைகளின் முகில்களும் வீழ்த்தப்படுமோ

விரைவில்

அணுவுலை அமைத்தது போதாதென்று

அணுக்கழிவுத் தேக்கமும் அமைத்து எமது

நிலத்தை வீழ்த்தும் பயங்கரவாதம்

இனத்தை வீழ்த்தும் சதியல்லவா”

என்ற கவிதை வரிகள் பன்மிய உயிர்ச் சூழல் விளங்குகின்ற மேற்குத் தொடர்ச்சி மலை ஆய்வு என்ற பேரில் அழிக்க நினைப்பதை விளக்குகின்றது.

நிலம், நீர், காற்று மாசுபாடு:

சூழலியலின் அடிப்படியான நிலம் (Lithosphere), நீர் (Hydrosphere), காற்று (Atmosphere) என்பவை உயிர்ச்சூழலுக்கு (Biosphere) அடிப்படையாக விளங்குபவை ஆகும். “சூழலைப் பேணுதல் என்பது உயிரினங்கள் வாழ்வதற்கு அவசியமான நீர், நிலம், காற்று இவற்றைப் பாதுகாப்பது. நீர் இல்லையென்றால் எவ்வுயிருக்கும் இவ்வுலகில் வாழ இயலாது. அதனால் நீரைக் காப்பது மிகமிக அவசியம்.” (ரேவதி, பல்லுயிர் ஓம்புதல், ப.68)

இவை மனித நடவடிக்கைகளால் சேதமுறும் போது வாழுமிடமாகிய பூமி சேதமுறுவதை “வெய்யில் மிகவும் கோபமாயிருக்கிறது” எனும் தலைப்பில் அமைந்த கவிதையில் நீர் வறட்சியினை

“இத்தனை நீர்நிலைகளைப் பருகித்தீர்த்தும்

தீராதிருக்கிறது கோடையின் தாகம்

கெஞ்சும் வாளியை வெறுமையாய்

திருப்பியனுப்புகிறது

கருணைதீர்ந்த கிணறு

.............................................................                

நீர்மை அனைத்தையும்

பறிகொடுத்துவிட்டு நிர்கதியாக நிற்கிறது பூமி”

என்ற வரிகள் புவி வெப்பமயமாதலை உணர்த்துகின்றன.

அதே கவிதையில்

“அலைகள் கதறும் நள்ளிரவில்

காற்று பெருமூச்சைப்போல் பற்றிஎரிகிறது

மேற்கு மலைகளின் மேகக்கூட்டம்

கார்பன் மோனாக்சைடால்

மலடாகிவிட்டது.”

என்ற வரிகள் காற்று மாசுபட்டினை உணர்த்துகின்றன

காலநிலை மாற்றத்தால் மழையானது பொய்த்துப் போனது. மழைக்காகக் காத்திருக்கும் பூமியைப்பற்றி ‘களைத்த நிலம்’ எனும் கவிதையில்

“கதிர்களை கருக்கிவிட்டுக்

கலைகளைச் செழிக்க வைக்கும்

வெறிகொண்ட கோடையின்

வேட்டைக் காடு நம் நிலம்

மேற்கு மலைத்தொடர்கள் மெல்லக் கருணைகொண்டு

ஊறுகிற மழைக்கும்

அனுப்புகிற காற்றுக்கும்

காத்திருக்கிறது நம்

களைத்த நிலம்”

(கீழ்வானத்துக்குத் தீமூட்டும் எரிநட்சத்திரம் ப.29)

என்ற வரிகள் உணர்த்துகின்றன.

மணல் கொள்ளை:

பசுமை அரசியலின் மையப்புள்ளியாக விளங்குவது மணல் கொள்ளையாகும். இன்று “உலகமயமாக்கலினால் தொழில் உற்பத்தி, வாணிபப் பெருக்கம், அங்காடி விரிவு, நுகர்வு அதிகரிப்பு, நாகரிக வளர்ச்சியின் மிகைமிஞ்சிய போக்கு, அயல்நாட்டு மோகம் ஆகியவை அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. எனவே சுற்றுப்புறச் சூழலில் உள்ள பொருட்கள் மிக அதிகளவில் பயன்படுத்தப்பட்டுச் சுரண்டப்பட்ட நிலையில் காணப்படுகின்றன.” (ராஜகுமாரி, மா, மூன்றாம் உலகப்போர் நாவலில் சூழலியல் விழுமியங்கள் ப.89)

இயற்கை வளங்களை சுயநலப் போக்கிற்காக பயன்படுத்தும் மக்களும், அரசுகளும், அரசாங்கங்கள் இருக்கும் வரை ஆற்று மணல் கொள்ளைகள் இருக்கும்.

“தண்ணீரையும் மட்டுமின்றி செழிப்பான வண்டலையும் மணலையும் ஆறுகள் அள்ளித் தருகின்றன. அளவுடன் பயன்படுத்தினால் தொடர்ந்து இந்த வளங்கள் நமக்குக் கிடைக்கும். ஆனால், தற்போது தண்ணீரும் மணலும் வணிகப்பொருளாகிவிட்டன. என்பதை (பழ.கோமதி நாயகம் ப.66)

“லாரிகளேறிப் பயணம் போன

நதியின் பிரேதம் என்ன ஆனது"

என்ற வரிகள் மணல் கொள்ளைப்பற்றியும், சூழலியல் சீர்கேட்டினையும் எடுத்துரைகின்றது.

 திட்டங்களும் வீழ்ச்சியும்:

வேளாண்மை நிலங்களில் எரிவாயுக் குழாய்களை பதிப்பதற்கு எதிர்ப்புகள் வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து வந்தது. இருந்தபோதும் தொடக்க நிலையில் அரசும் அதிகாரிகளும் உணவிடும் மக்களின் துயரினை அறியாத போது ஏற்பட்ட அவலத்தை

“கதறும் உழுகுடிகள் கண்ணெதிரே

பிரம்மாண்ட கெயில் குழாய்கள் வயல்களை வன்புணர்கையில்

மக்களின் அச்சத்தை கிஞ்சித்தும் மதியாமல்

பெட்ரோகெமிக்கல் மண்டலமாக மருதத்தை அறிவிக்கையில்

குளமிழந்த தவளையின் கதறலாகிறேன்

பாம்புகள் வெறி பிடித்தலைகின்றன”

மேலும் ஸ்டெர்லைட் ஆலையைப் பற்றி

முத்து நகரத்தின் கண்ணீர்த்துளி முத்தாகவில்லை எனும் கவிதையில்

“அதிகார வலிமைமுன் வாலாட்டி நிற்கும்

அடிமைவம்சத்தின் துப்பாக்கி குண்டுகளுக்கு

துரோகத்தின் வலிமை”

என்ற வரிகள் அதிகார மையங்கள் சூழலியலுக்கு எதிராக விளங்கும் தன்மையை உணர்த்துகின்றன.

துணைநூற்பட்டியல்    

1. ராஜகுமாரி. ம. “மூன்றாம் உலகப்போர் நாவலில் சூழலியல் விழுமியங்கள்” சர்வதேசத் தமிழ் ஆய்விதழ்,

2. ரேவதி. பல்லுயிர் ஓம்புதல். நியூ செஞ்சுரியின் உங்கள் நூலகம் மாத இதழ்

- ப.நவசக்திவேல், முனைவர் பட்ட ஆய்வாளர் (பகுதி நேரம்),

&

முனைவர் க.புவனேஸ்வரி, ஆய்வு நெறியாளர், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, தேசியக்கல்லூரி தன்னாட்சி, (பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றது), திருச்சிராப்பள்ளி - 620001