மறைக்கபட்ட திரிக்கப்பட்ட  வரலாற்றை மீட்டு மீளுருவாக்கம் செய்து முக்கிய நூலாக வெளிவந்துள்ளது, தோழர் முனைவர் இனியவனின் முயற்சியில் ‘பீமா கோரேகான்’ நூல்

iniyavan book on beema goreconமகர்கள் வாழும் பகுதியை மகர் ராஷ்ட்ரம் என அழைத்ததைத் திரித்து, மஹாராஷ்ட்ராவாக (பெரிய நிலப்பரப்பு) மகர்களை நான்கம் தரக் குடிமக்களாக ஒடுக்கினார்கள் .

பீமா என்பது நதியின் பெயர். கோரேகான் என்பது ஒரு கிராமத்தின் பெயர். இந்த இரண்டும் இணைந்தது தான் பீமாகோரேகான்.

பீமாகோரேகான் வெற்றி என்பது சத்ரபதி சிவாஜிக்குப் பிறகு, மராட்டியத்தை ஒரு நூற்றாண்டு ஆட்சி செய்த, பேஷ்வா என்ற சித்பவன பார்ப்பன மன்னர்களின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்த முக்கிய நிகழ்வு. அதனை நினைவூட்டும் வெற்றித் தூணை மையக்கருவாகக் கொண்டதே பீமா கோரேகான் ..

சத்ரபதி சிவாஜி பற்றவைத்த கலகத்தீ, மராட்டியம் முழுக்கப் பரவியது. அது தனக்கென ஒரு ஆட்சியை அமைத்துகொள்ளும் அளவுக்கு படைபலம், செல்வத்தை எல்லாம் பெற்றது. எனினும், சிவாஜி பிறப்பின் அடிப்படையில் ஆட்சியில் அமரும் தகுதியை இழக்கிறார். சிவாஜி நான்காம் வருணமான சூத்திரச்சாதியைச் சேர்ந்தவர்.

எனவே சிவாஜி சத்ரியனைப் போல் நாட்டை ஆள, முடிசூடுவதற்கு நயவஞ்சகத்துடன் பார்ப்பனர்கள் கடுமையாக எதிர்த்தார்கள்.

ஆனாலும் ஏராளமான பொன்பொருள், பசு, நிலம், அமைச்சர் பதவி ஆகியவைகளைப் பெற்றுக் கொண்டு, சூத்திர சிவாஜியாக இருந்தவரை  சூரியகுல சத்ரிய சிவாஜியாக ஒரு பார்ப்பனர் முடிசூட்டி வைத்தார்.

முடியாட்சி சிவாஜியிடம்.. அமைச்சரவை அதிகாரம் தேஷ்தா பார்ப்பனர்களிடம்..தேஷ்தா பார்ப்பனர்கள் சித்பவன் பார்ப்பனர்களை விட உயர்ந்தவர்கள்.

சிவாஜிக்குப் பிறகு அவர் மகன் சாம்பாஜி, பிறகு ராஜாராம், ராஜாராம் இறந்தபின் அவர் மனைவி தாராபாய் ஆட்சி செய்தபோது தாராபாயை எதிர்த்துச் சாகுமகராஜ் கலகம் செய்தார், ஆட்சியை இழந்தார் தாராபாய்.

தாராபாய்க்குத் துரோகம் இழைத்தது போல் சாகுமகராஜூக்கும் துரோகம் செய்து அடுத்து அரியணை ஏறியவர் பாலாஜி விஸ்வநாத்.

அவருக்குப் பின் முதலாம் பாஜிராவ் 20ஆண்டு ஆட்சி செய்தார்.

இந்த பாஜிராவ் ஆட்சியில்தான் மகர்கள் முற்றிலுமாக ரானுவ அரசு சேவையில் இருந்து வெளியேற்றபட்டனர், மேலும் தாழ்த்தபட்டவர்களாக அவர்களை அடையாளப் படுத்தும் விதமாக கைகளில் கருப்புக் கயிறு கட்டப்பட்டது.

சாலையில் நடக்கக்கூடாது, கழுத்தில் ஒரு பானை கட்டி அதில்தான் எச்சில் துப்புவேண்டும் என மகர் சமூகத்தினர் எண்ணற்ற கொடுமைகளுக்கு ஆட்பட்டனர்.

காலங்கள் மாறி, நாடுமுழுவதும் ஆங்கிலேயர் ஆதிக்கம் செலுத்தத் தலைப்பட்டனர். அங்கு நடந்த மராத்திய ஆங்கிலேயப் போரில் செய்து கொண்ட உடன்படிக்கையின்படி, திப்புசுல்தானுடன் நடந்த மைசூர் போரின்போது ஆங்கிலேயர்க்கு மராட்டியத்தின் மொத்தக் குதிரைப்படையும் கொடுத்தனுப்பியது பேஷ்வா அரசு. திப்புவை வீழ்த்திய ஆங்கிலேய அரசு அடுத்து, மராட்டிய பேஷ்வா அரசுக்கு முடிவுரை எழுதிய இடம்தான் பீமா கோரேகான்.

ஆங்கிலேயர்களை எதிர்த்து 20ஆயிரத்துக்கு மேற்றபட்ட படைகளுடன் யுத்த களத்திற்கு வந்தார் இரண்டாம் பாஜிராவ்.மெட்ராஸ் ரெஜிமென்டலில் இருந்து வந்த 800பேர் கொண்ட ஒரு சிறுபடை கோரேகான் கிராமத்தில் தங்குகிறது.

இரண்டு படைகளும் கோரேகானில் மோதின. பாஜிராவ் படை தோல்வியைச் சந்தித்தது. இந்த யுத்தத்தோடு பேஷ்வா ஆட்சி முடிவுக்கு வந்தது.

அந்த இடத்தில் ஆங்கிலேயர்களால் 65அடி உயரத்தில் நினைவுத்தூண் எழுப்பப் பட்டது. அந்த வெற்றியில் மகர் இன மக்களுக்கும் பெரும்பங்கு உண்டு.

ஆகவே 1927இல் மாமேதை அம்பேத்கர் கோரேகான் நிகழ்வில் கலந்துகொண்ட பின், அடுத்தடுத்த ஆண்டுகளில் லட்சக்கணக்கான மக்கள் கூடி மகர்களின் வெற்றியைக் கொண்டாடுவதும் ஒரு நம்பிக்கை நிகழ்வாக ஆயிற்று.

2014பிஜேபி மராட்டியத்தில் ஆட்சிக்கு வந்த பின், 2018இல் கோரேகானில் நடத்தபட்ட திட்டமிட்ட கலவரம், தூப்பாக்கிசூடு, சமூக செயற்பாட்டார்களைக் கைதுசெய்வது, நினைவுத் தூணைச் சுற்றி எப்போதும் ஆயுதங்களோடு நுற்றுக்கணக்கான மத்திய மாநிலக் காவலர்களை நிற்க வைப்பது ஆகியவை இன்றுவரை தொடர்கின்றன. தோழர் இனியவனின் இந்த பீமா கோரேகான் தொடக்கத்தில் நம்மை வியப்புடன் வாசிக்க வைத்தது. பின்பு கோரேகானில் நாமே வசிக்கும் மனநிலைக்கு எழுத்தாளர் நம்மைக் கொண்டுவந்துவிடுகிறார்

பீமா கோரேகானைச் சுற்றி நடந்த, நடக்கும் அனைத்துச் செய்திகளையும் வெறும் 140 பக்கங்களில், நூல் ஆசிரியர் இனியவன் செறிவாக நமக்குக் கொடுத்து இருக்கிறார். அவருக்கு நம் பாராட்டுகள்!

பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் ஆகியோரை நேசிக்கும் அனைவருமே கட்டாயமாகப் பீமா கோரேகான் நூலைப் படித்திடவேண்டும்.

ஆசிரியர் : முனைவர் மு.இனியவன்

வெளியீடு : அறிவாயுதம் பதிப்பகம்,

  1. சாஸ்திரி வீதி, எண் 4,கல்லூரிப்புதூர்,

      கோவை - 641 041.

தொடர்புக்கு: 98658 52212, 93842 99877

விலை   ரூ.120/-

Pin It