கொரோனா தனிமை சிவபெருமானை வாட்டி வதைத்தது. தன் பக்த கோடிகளைக் காண முடியாமல், அவர்களின் புலம்பல்களை, அல்ப கோரிக்கைகளை, மகிழ்ச்சிகளை, பெரும் துயரங்களைக் கேட்க முடியாமல் இருட்டு அறையில் முரட்டுத் தனமாய் அடைக்கப்பட்டு இருப்பது போன்ற அவருக்கு தோன்றியது.

பக்தர்கள் இருந்தாலாவது தனக்கு தட்டில் தட்சணைகளை அதிகமாக விழும் என்று படைக்கும் பட்சணங்களை நீண்ட நேரம் வைத்துக் கொண்டு வழியும் வியர்வை பூணூலை இழுத்து இழுத்து துடைத்துக் கொண்டு இருப்பான்.

விதவிதமான பட்சணங்களைப் பார்த்துப் பார்த்து சிவனுக்கு திருப்தி ஏற்பட்டு வயிறு நிறைந்தது போல் தோன்றி ஏப்பம் வரும்.

இப்பொழுது கொரோனா ஊரடங்கால் ஒத்த பிராமணன் வந்து படையல்களை கண் இமைக்கும் நேரம் காட்டி விட்டுச் சட்டென என்று எடுத்துக் கொண்டு ஓடி விடுகின்றார். அவரை யார் கேட்பது?

கேட்டாலே.. சமூக விரோதி என்று ஊடகங்களில் ஆட்சியாளர்களின் அடிவருடிகள் ஒப்பாரி வைப்பார்கள் என்று பயந்தார்.

இப்படியாக கொரோனா ஊரடங்கு சிவன் குடும்பத்தை வாட்டிக் கொண்டிருந்த பொழுது அந்த பிராமணன் ஒரு நாள் மாலை கருவறை பூட்ட வந்தார். உள்ளே வராமல், அங்கிருந்து மின்சார சுவிட்ச் போர்டில் செல் போனுக்கு சார்ஜ் போட்டபடி பப்ஜி கேம்மை நோண்டிக் கொண்டு இருப்பதை சிவன் கடுப்புடன் பார்த்துக் கொண்டு இருந்தார்.

கோயில் அருகே வரிசையாக இருந்த வீடுகளில் இருந்து கைகளைத் தட்டும் ஓசை கேட்டது. பின்பு அதுவே தட்டுகளை கரண்டியால் தட்டும் ஓசையாக மாறியது. சட்டென்று முகம் பிரகாசமாகி வேக வேக வேகமாக ஓடி வந்த பிராமணன், கருவறையில் இருந்த வெள்ளித் தட்டுகள் எடுத்தார்.

இரண்டு தட்டுகளை ஓங்கி ஓங்கி ஒன்றுடன் ஒன்று மோதி அறைந்தார்.

“கோ கொரோனா கோ.. கோ கோ.. கோ கொரோன்ன்னா கோ கோ..கோ..” என்று கத்த ஆரம்பித்தார்.

வெறி பிடித்தவர் போல் கையில் கிடைத்த பூசைத் தட்டுகளை, கரண்டிகளை எடுத்து விதவிதமான ஓசைகளை ஒங்கி ஓங்கி அடித்து எழுப்பினார். மூடிய கதவுக்குள் இந்த உலோகச் சத்தம் திரும்பத் திரும்ப ஒலித்து அந்த இடத்தை ஒசை ரணகளமாக மாற்றியது.

உலோகங்கள் உரசும் ஒலிகள் நாராசமாக பரவி சிவனையும், அவர் குடும்பத்தினரையும் கதிகலங்க வைத்தது. இறுதியில்..

“பாரத மாதாக் கி ஜே.. பாரத மாதாக் கி ஜே.. பாரத மாதாக் கி ஜே.. ”

என்று அந்த பூசாரி முழங்கி முடித்தார். கதவுகளை அடைத்து விட்டு கொரோனாவை விரட்டிய சாதனையைச் செய்தது போல் கம்பீரமாக திருவிளையாடல் மீனவனாக வரும் சிவாஜியாக போல் ஒரு ஸ்டைல் நடை நடந்தார்.

அடைத்துப் போன காதுகளை, மூடிய கண்களும் திறக்கச் சிவனுக்கு சிறிது நேரம் தேவைப்பட்டது. கண்களை திறந்தார். மூடிய கதவுகளுக்கு இடையே அவர் பார்வைச் சென்றது. அங்கே கண்டக் காட்சி அவரை அதிர வைத்தது.

ஆனைமுகன் அய்யன் வாதாபி கணேசன் காதுகளில் இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. சாதாரணக் காதுகளுக்கே இந்த ஓசை இரைச்சல் இரத்தத்தை வர வைக்கும். முறம் போன்ற காதுகளுக்கு கேட்கவா வேண்டும்!

அரை செல் உயிரியான கொரோனாக்கள் முதல் ஆறறிவு மனிதன் வரை படைத்த என் குடும்பத்திடமே பார்ப்பனீய லீலைகளை அரகேற்றம் இவர்களை என்ன செய்வது, பார்ப்பனீய லீலைகளை பகவான் லீலைகள் இரண்டாயிரம் ஆண்டுகளாக திரித்துக் கொண்டு இருக்கும் இவர்களிடம் இருந்து மக்களை எப்படி காப்பாற்றுவது என்று யோசனை செய்தார்.

தலைவலி வந்ததுதான் சிவனுக்கும் மிச்சமானது!

மீண்டும் ஒரு மாதத்திற்கு பிறகு 2.0 லாக்டவுனை அட்டகாசமாக அரங்கேற்றினார்கள்!

கோயில் கதவுகள் அனைத்தும் தொடர்ந்து அடைக்கப்பட்டு கிடந்தன. சிவபெருமானின் டெலிபதி நெட் ஒர்க் சிக்னல் சரியாகக் கிடைக்காததால் ஒரே இடத்தில் பார்வதி, வாதாபி விக்னேஷ் என்கிற கணேஷன், ஸ்கந்தன் என்ற குடும்பமாக வசித்தாலும் எவரிடம் தொடர்புக் கொண்டு பேச முடியவில்லை.

ஏக்கர் கணக்கில் பிரம்மாண்டமான வீடு கட்டினால் இந்த தனிமை கதிதான் ஏற்படும்.

கொரோனா தொற்றால் அனைத்து கோயில்களிலும் மூடப்பட்டதால் பால் அபிஷேகம், நெய் அபிஷேகம், ஜல நீராடல் குறைவாக, அரை குறையாகவே பக்தர்கள் இல்லாமல் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆட்சியாளர்களின் ஆணைக்கு இணங்க சிவபெருமான் அடிக்கடி தனிமையை ஏற்படுத்திக் கொண்டார். இது ஒருவகையில் சிவனுக்கு அனுகூலமாக இருந்தது. சடைமுடியில் பதுக்கி வைத்திருந்த கங்கையை அவிழ்த்து விட்டார்.

சிவனின் தலையில் இருந்து ஒர் அழகு தேவதை துள்ளி குதித்து நடனமாடியது. சிவன் பயந்தே போய் விட்டார். நமக்கே தெரியாமல் நமது சடா முடிக்குள் யாரோ இப்படி அழகு தேவதை ஒளிந்து கிடக்கிறாளே என்று அந்த பெண்ணை உற்று பார்த்தார்.

“அடடே ..நம்ம கங்கா..”

“நம்ம கங்காவேதான்..”

“ஆம் ..நாதா.. நானே தான்.. கங்கை… கொரோனா காலத்தில் புண்ணிய நதியாக பொலிவடைந்து விட்டேன்… பாவங்களை கரைக்கும் என்று அழுக்கையும், பிணங்களையும் நதியில் வீசுவது நின்று ஒரு மாதம் சென்று விட்டது.. பளிங்கு போல் நீர் சலசலத்து சுழி வலம் போட்டு ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கும்..”

“ஓ.. இதான் உன் அழகுக்கு காரணமோ…. பல ஆயிரம் கோடிகள் பணச் செலவு கணக்குகள் செய்ய முடியாததை கொரோனா செய்துக் காட்டி விட்டது… இனி கங்கா தேவி இல்லை… கொரோனா தேவி கொரோனா தேவி என்று அன்புடன் அழைக்க கடவது..” என்று ஜாலியாகக் கத்தினார்.

இத்துடன் நாம் நாகரிகம் கருதி தனிப்பட்ட அவர்களின் அந்தரங்கத்துக்குள் நுழையாமல் மேலே கதைக்குள் நகர்வோம்!

ஆலயக் கதவுகள் மூடி கிடந்தாலும், கடவுளுக்கு எப்படியும் தனது கோரிக்கைகள் கேட்கும் என்று வாசலில் நின்று சில பக்தர்கள் நெக்குருகி பிரார்த்தனை செய்தனர். ஆனால், அவை வெறும் முனகல்களாக தான் சிவனுக்கு கேட்டது.

ஊரடங்குகள் தொடர்ந்த இப்படியாக கடந்த அந்த நாட்களில், திடீரென்று ஒருநாள் ஆலய கதவுகள் திறந்தன.

கும்பலாக பலர் வந்தனர். தனக்குப் பூஜை செய்யும் அந்த பிராமணர்களில் ஒருவரும் காணவில்லையே என்ற கேள்வி சிவனை தொந்தரவு செய்தது. ஏன் இவர்கள் மட்டும் வருகிறார்கள்.

கற்பூரம், நெய், பால், பழம் வாசனைகளுக்கு மாறாக புதிய வாசனைகள் இங்கு பரவிக் கொண்டிருந்தது. வந்த புதியவர்கள் பினாயில் கரைக்கப்பட்ட நீரை தரை, சுவர் எங்கும் ஊற்றிக் கழுவி கொண்டிருந்தார்கள்! வெள்ளையும் சொள்ளையும் தொந்திகளுமாய் இருந்த சிலர் அவர்களை கடும் சொற்களை வீசி விரட்டி விரட்டி வேலை வாங்கிக் கொண்டிருந்தார்கள்.

சிவனே என்று அதை இந்த காதில் வாங்கி அந்தக் காதில் சிவன் விட்டுக் கொண்டிருந்தனர். உலகுகெல்லாம் படி அளிக்கும் கடவுள் துப்புரவு பணியாளர்களுக்கு இந்த கொரோனா காலத்தில் கூட படி அளிக்காமல் அம்பானிக்கும், அதானிக்கும் அல்லவா பணத்தை அள்ளிக் கொடுக்கிறது.

“நன்ன்னா… கர்ப்ப கிருகஸ் உள்ளேயும் போய் சுத்தம் பண்ணுங்கோ” என்று தூரத்தில் இருந்து ஒரு அதட்டல் குரல் கேட்கிறது.

“சாமி… யென் குடும்பத்தையும், அல்லாரையும் காப்பாத்துப்பா… கரோன்னாவோ… கிரன்னாவோ வராம காப்பாத்துப்பா..” என்று அந்த அய்யர் குரலை ஏற்று லிங்கம் இருந்த கருவறைக்குள் அந்த தூய்மை பணியாளர்கள் பட்டியல் சாதியினர், சூத்திரர்கள் முதன் முறையாக நுழைந்தனர்.

ஜெய் கொரோனா என்று அசரீரி எங்கிருந்தோ கேட்டது.

சாமி உறையும் கருவறை முழுவதும் கிருமி நாசினிகள் கொண்டு கழுவினர். பாலும் பழமும் கெட்டுப் போன தயிருடன் கலந்ததால் வீசிய கெட்ட துர்நாற்றத்தை மல்லிகை சென்ட் வாசனை கிருமி நாசினி துரத்தித் துரத்தி அடித்தது. அவர்கள் போகும் பொழுது மறக்காமல் சிவலிங்கத்தை தொட்டு கும்பிட்டு சென்றனர்.

தூய்மை பணியாளர்கள் தொட்டதால் சிவனுக்கு சாபம் விமோஷன் கிடைத்தது போல் இருந்தது. கொரோனா என்று பயமுறுத்திய கொண்டிருந்த பிராமண தோஷம் நீங்கி புத்துணர்வு சிவன் பெற்றார்.

மறு நாள்… மாற்று அறுவை சிகிச்சை செய்த அமைச்சர் கொரோனாவுக்கு பலி என்று பிரேகிங்நியுஸ் ஓடி ஓடிக் கொண்டிருந்தது.

“மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு, இதய நோயாளிகள், சர்க்கரை வியாதியர்கள், ஆஸ்துமா நோயாளிகள், முதியோர்களுக்கு எளிதில் கொரோனா வைரஸ் தொற்றும். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்த அமைச்சர் கொரோனா தொற்றால் மரணம்” என்று செல்போன் காணொளி செய்தியை பார்த்துக் கொண்டே கோயிலுக்குள் சென்றார் புதிய அய்யர்.

எதிலேயோ போய் முட்டிக் கொண்டு நின்று, “அப்பிஸ்ட்டு… அபிஸ்டு.. நந்தி மாதிரி குறுக்கே நிக்கிரே..” என்று நந்தியை பார்த்துக் கோபத்துடன் புலம்பினார்.

அப்பொழுது…

சங்கடங்கள்… பிணிகளைத் தீர்க்கும் விநாயகர்..” அச்..அச்.. அச்ச்ச்… அச்ச்ச்ச்…” என்று தொடர்ந்து தும்பிக்கொண்டு சங்கடத்துடன் நின்று கொண்டிருந்தார்.

அர்ச்சகர் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று அலறி அடித்து கொண்டு..

“ கோ.. கொரோனா… கோ கோ கொரானா…. கோக்க்கோ..”

என்று ஓடினார் ஓடிக்கொண்டே இருந்தார்.

சிறிது நேரத்திற்குள் சிவன் சன்னதி முன்பு நீலம், சிவப்பு சுழல் விளக்குகள் சுழல பெரும் ஒலிகளை எழுப்பி கொண்டு பல வாகனங்கள் வந்தன.

அர்ச்சகர் அதில் ஒன்றில் இருந்து குதித்தார். தொடர்ந்து விண்வெளி வீரர்கள் மாதிரி முழு வெளிர் நீல வண்ண உடைகளுடன் தூய்மை பணியாளர்கள் இறங்கினார்கள். கோயிலுக்குள் சென்று சிவன், பார்வதி, விநாயகர், ஸ்கந்தன் என்று முழு குடும்பத்தையும் வண்டிக்குள் ஏற்றினார்கள்.

ஸ்கந்தன் என்று அழைக்கப்படுகின்ற முருகன், “சின்ன பிள்ளைகளுக்கு கொரோனா வராது என்று சொல்கிறார்கள். என்னை ஏன் இழுத்துச் செல்கிறார்கள் என்று முணுமுணுத்துக் கொண்டே வண்டியில் ஏறினார். அவரது மயில் வாகனம் பின்னாலே அவருக்கு இணையாக பறந்து கொண்டிருந்தது.

உச்சிக் கோபுர விளக்கு தவிர அனைத்தும் அனைத்து இருட்டாக்கி விட்டு கோயில் நடை வாசல் மூடி பெரிய பூட்டாக அய்யர் பூட்டினார். குறுக்கும் நெடுக்குமாக பெரும் சங்கிலிகள் இணைந்து இன்னொரு பெரிய பூட்டை பூட்டி விட்டு வீட்டுக்கு புறப்பட்டார்.

அந்த நொடியில் குட்டி யானை ஒன்று வந்து நின்றது. அதிலிருந்து நீண்ட தகர பலகைகள் இறங்கின. காலை ஒளியில் கண் கூச்சல் எடுக்கும் அளவிற்கு அவைகள் மின்னின.

மூன்று கரைகள் வேட்டியைத் தூக்கிக் கட்டிக் கொண்டு பைக்கில் இருந்து இறங்கினார். கோவில் வாசலை மறைத்து அடிக்கப்பட்ட தகர பலகை அடிக்கப்பட்ட சவுக்கு கட்டையில் ஒரு அறிவிப்பு பலகையை மாட்டினார்.

“கொரோனா தொற்று இல்லம்… எச்சரிக்கை “ என்ற வாசகம் ஓம் நமச்சிவாய என்பதை விட பெரியதாக எழுதப்பட்டு இருந்தது..

“வீட்டிற்கு பதினைந்தாயிரம் கொடுக்குறாங்க சரி… இம்மா பெரிய கோயிலுக்கு அதே பணமா…” என்று மனதிற்குள் கணக்குப் போட்டுக் கிடந்த கரை வேட்டி அவரது அல்லக்கையிடம் ஆதாயத்துடன் சிரித்தது.

அன்று மாலை அனைத்து பத்திரிக்கைகளில் கொட்டை எழுத்துக்களில் தலைப்புச் செய்திகள், தொலைக்காட்சி பிரேகிங் செய்திகளாக கொழுந்து விட்டு பறந்தன.

கொரோனா தொற்றில் இருந்து கோயில்களை பாதுகாக்க கோவில்களை சுற்றி மதில் சுவர்கள் சிப்பம் கட்டித் தகரங்களை அடித்து பாதுகாப்பு” அரசின் மெகா திட்டத்திற்கு மக்கள் அமோக வரவேற்பு என்பதுதான் அது.

பத்திரிக்கைகளில் ஆறாவது பக்கத்தில் கடைசியில் குட்டிச் செய்திகள் பல நூறு கோடிகள் ஆலய பாதுகாப்பு டெண்டருக்கு அனியும், பானியும் போட்டி என்பது யார் கண்ணுக்கும் தெரியாமல் போனது ஆச்சரியம் இல்லை?

சிவன் குடும்பம் அடைக்கப்பட்டு இருந்த கொரோனா தடுப்பு முகாம் கல்லூரி சுமாராக நன்றாக இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். பக்த கோடிகளுடன் தங்கி இருப்பதை சிவன், பார்வதி, கந்தன் மகிழ்ச்சியாக உணர்ந்தனர்.

மருத்துவமனையில் இருந்த விநாயகர் சில நாட்களில் இந்த முகாமிற்கு அழைத்து வரப்பட்டார். அனைத்தும் நன்றாக தான் இயல்பாகவே போய் கொண்டிருந்தது.

ஒரு நாள் ஒரு பெருசு வலிய வந்து சிவனை பார்த்து விட்டுச் சென்றார். அதிலிருந்து அவர் முகம் சோர்ந்து குழம்பி போய் கிடக்கிறது. சிவனும், பார்வதியும் குசுகுசுவென்று ரகசியமாக தங்களுக்குள் கதைத்து கொண்டினர்.

நள்ளிரவு… கொரோனா முகாம் நிசப்தமாய் கிடத்தது. கந்தன் மீது பொத்தென்று ஒரு பெருச்சாளி விழுந்தது.

கந்தன் எழுந்துப் பார்த்தால் சிவனும், பார்வதியும், விநாயகரும் அடங்கிக் கொண்டு பெரும் சிரிப்பு சிரித்தனர்.

கந்தன் அவர்களை முறைத்துப் பார்த்தார்.

“சாந்தி.. ஓம் சாந்தி..”

“முக்கியமான விஷயமாகதான் உன்னை எழுப்பினோம்.. கொரோனா வராமல் தடுக்க, வந்தாலும் விரைவில் குணமாக்கும் சர்வலோக சஞ்சீவியான ஒரே ஒரு பழம் கிடைத்து இருக்கிறது… ஒரே ஒரு பழம்தான்! அதை முழுசா ஒருத்தர் சாப்பிட்டால் தான் அதன் பலன் கிடைக்குமாம்… தாய் தந்தையரான எங்களுக்கு வேண்டாம்.. வளரும் பிள்ளைகளான உங்களுக்கு தந்தால் நன்றாக இருக்கும்.. இருப்பது ஒன்று. எங்களுக்கோ இரு பிள்ளைகள்… யாருக்கு தருவது?” என்று கிசுகிசு குரலில் பார்வதி கந்தன் காதில் ஒதினார்.

“பெயரை மாற்றினார்கள் விட்டு கொடுத்தோம்… உருவத்தை மாற்றினார்கள் விட்டு கொடுத்தோம்… காதல் மனைவி இருக்க இன்னொரு பெண்ணை வலுக்கட்டாயமாக கட்டி வைத்தார்கள். இப்படி எவ்வளவோ விட்டுக் கொடுத்தோம்… இதையும் விட்டு கொடுக்கலாமா? “ என்ற கேள்வியுடன் கந்தன் அமைதியாக மூவரையும் பார்த்தார்.

“உங்க இருவருக்கும் போட்டி வைத்து அதில் வெற்றி பெறுபவருக்கு இந்த பழத்தை தர முடிவு செய்து உள்ளோம்..” என்றார் சிவன்.

மீண்டும் மொட்டை அடிக்கத் திட்டம் தீட்டுகிறார்களா இவர்கள் என்று முருகன் யோசனை செய்துக் கொண்டு இருந்தார்.

பழையபடி நம்மை ஏமாற்றப் பார்க்கிறார்கள் என்று சந்தேகத்துடன் கந்தன் அவர்களை பார்த்தார்.

“பழைய படியெல்லாம் ஏமாற்ற மாட்டோம்… உலகத்தை சுற்ற வேண்டாம்… பாரத புண்ணிய தேசத்தை சுற்றி வந்தால் போதும்… என்றார் சிவன்.

ஏதாவது திருவிளையாடல் என்கிற சூழ்ச்சி செய்கிறாரா என்று சில நொடிகள் விநாயகரையே உற்று கந்தன் பார்த்தார். தூரத்தில் மயில் அகவும் ஒலி கேட்டது.

இந்தியா முழுவதும் முருகன் பறந்து சுற்றி வந்தார். பக்த கோடிகள் பல லட்சக்கணக்கில் சாதாரண மக்கள் தங்கள் குழந்தைகள், சிறுவர்கள், கர்ப்பிணிகள், முதியோர்களுடன் தங்க நாற்கர சாலைகள், ரயில் தண்டவாளங்களில் நடந்துக் கொண்டிருந்தனர்.

முருகன் கண்கள் ரத்த கண்ணீர் வடித்தது.

பெருந்தெய்வ கருவறைக் கடவுள்கள், சிறு தெய்வங்கள், மசூதிகள், சர்ச்சுகள், தர்காக்கள் என்று அனைத்து கடவுள்களும் ‘சிவனே’ யென கதவடைப்பு களை சரி செய்ய முடியாமல் வெட்டியா பொழுதை போக்கி கொண்டிருந்தன.

இந்த துயர்களைப் பார்க்க சகிக்காமல் குறுக்கு வழிகளில், காடுகளில், பாய்ந்தோடும் ஆறுகளின் தெளிந்த நீர் பரப்புகளின் மீது மனித நடமாட்டங்கள் அற்று போன இடங்களில் மயில் பறந்தது.

இரண்டு நாட்களில் இந்தியாவை சுற்றி விட்டு வேக வேகமாக கொரோனா முகாமிற்கு முருகன் வந்து இறங்கினார்.

விநாயகனே அந்த கொரோனா தடுப்பு பழத்தை தின்றுவிட்டு கடைசி ஓட்டிக் கொண்டிருப்பதை துதிக்கையால் நக்கி வாயில் இழுத்து சுவைத்து விட்டு ஒரு நக்கல் தொனியில் முருகனை பார்த்தார்.

முருகனுக்கு வயிறு பற்றி எரிந்தது.

“நீயெல்லாம் ஒரு அப்பனா… குடும்பத் தலன்னு பீத்தி திரிகிற. செய்யறதெல்லாம் ஓர வஞ்சனை. நயஞ்சகம் .”

“அவசரப்படாதே முருகா… அனைத்தும் நன்மைக்கே.. அனைத்தும் நன்மைக்கே.. நேத்து நாரதர் போல் மத கலகங்களை, சாதி மோதல்களை மூட்டி, ரத்த களரிகளை ஏற்படுத்தி அதிகாரத்தை பிடித்த பாரத தலைவர் முகாமிற்கு பார்வையிட வந்தார்.. அவரிடம் விநாயகர் ஆலோசனை கேட்டான்”

“பாரத தேசத்தை சுற்றி வந்தால் கிடைக்கும் புண்ணியம் பிரம்மனை சுத்து வந்தால் கிடைக்கும்.” என்றார் அவர்.

“உங்களைச் சுற்றி வந்தால் கொரோனா பழம் கிடைக்குமா குருவே!” என்று காலில் விழாத குறையாகக் கெஞ்சினான்.

“ஓ நிச்சயம்.. பாரத மாதாக் கி ஜே.. பாரத மாதா கீய்ய்ய் ஜே என்று பிராமணனை சுத்து..“

“உங்கல சுத்தி வந்தால் கிடைக்குமா..”

“ஹா ஹா.. நிச்சயம் கிடைக்கும்… அப்படி யாராவது தர மறுத்தால் அவர்கள் தேச துரோகி, சமூக விரோதி என்று உள்ள தூக்கி வைத்து விட மாட்டேனா ஹீ..ஹீ..” என்று அகங்காரத்துடன் நச்சு அரவாமாய் சிரித்துக் கொண்டே சொன்னார்.

உடனே, அந்த பிராமணனை விநாயகர் மூன்று முறைகளை சுற்றிக் கொண்டே “பாரத மாதாகி ஜே.. பாரத மாதா கீ..ய்ய் ஜே ஜே ஜே ஜே” என்றான்.

“வேறு வழியின்றி பழத்தை தந்து விட்டேன் முருகா…. காக்கும் கடவுள் பெருமாள் அவதாரம் இராமனையே நாச வேலைகளில் பயன்படுத்திய கில்லாடிகள் அவர்களாயிற்றே..” என்று பதட்டத்துடன், அடுத்து என்ன நடக்குமோ என்று பயத்துடன் கூறினார் சிவன்.

முருகனுக்கும், விநாயகருக்கும் வாக்குவாதம் தொடங்கி வாய் தகராறு முற்றி அடிதடியில் போய் முடிந்தது!

கடுப்பான ஆனைமுகன் துதிக்கையால் ஒங்கி முருகன் மண்டையில் ஓங்கி ஒர் அடி அடித்தார். சில நாட்கள் அலைந்து திரிந்துக் கிடந்த முருகன் இதை எதிர்பார்க்கவில்லை. மயக்கமாகி கீழே சாய்ந்து விட்டார். பார்வதி தேவி பதறினாள்.

கொரோனா முகாமில் உள்ள அனைவரும் அங்கு கூடிவிட்டனர். ஏற்கனவே முகாம் பற்றிய கதைகள் எதிர்கட்சி ஊடகங்களில், சமூக ஊடகங்களில் நாறி கிடக்கின்றன. இந்தச் சண்டை வெளியே தெரிந்தால் என்னாவது என்று பதட்டத்துடன் போலீஸ் அதிகாரிகளை முகாம் பொறுப்பாளர் அழைத்தார்.

வீழ்ந்த முருகன் உடனே எழுந்து விட்டார். இளம் ரத்தம் கொதித்தது.

நடந்தது அனைத்தையும் போலீஸ் அதிகாரியிடம் கூறினார். சிவம், விநாயகர் ஆகிய இருவரையும் தமிழ்நாடு போலீஸ் கைது செய்தது. சிவனை சொந்த பிணையில் விடும் வழக்கில் பதிவு செய்து விட்டது.

ஆனால் விநாயகரை பிணையில் வர முடியாத வழக்கில் கைது செய்து பூந்தமல்லி சிறப்பு முகாம் சிறைக்கு அழைத்து சென்று அடைத்தது. புழல் சிறைக்கு இந்த பொடா சிறை முகாமில் வைத்து 15 நாட்களில் கொரோனா கண்காணிப்பு உட்படுத்தப்பட்ட பின்புதான் புழல் சிறைச்சாலைக்கு மாற்றுவார்கள்

அதற்குள் பாரத தேசம் முழுக்க இந்தச் செய்தி காட்டுத்தீயாய் பரப்பப்பட்டது.

“விநாயகர் கைது.. தேச விரோத சக்திகளின் சதி.. அந்நிய தேச மதகுருமார்கள் கைகூலிகள் மிஷினரிகளின் வேலை..”

பாவடைகள் சதி…

துலுக்கன் சதி

இப்படியாகச் செய்திகள் பரவலாக காட்டு தீயாய் ஊடகங்கள் பரப்பின. அப்படி பரப்ப செய்யப்பட்டு இருந்தது. இதற்கு மாறாக உண்மையாக நடந்த செய்திகள் குறைவாகவும் பரவின.

பண மோசடி வழக்கு குற்றவாளியான இங்கிலீஷ் ஊடகவியலாளர் போலவே விநாயகரும் செய்தார்.

ஆளும் கட்சி பெரிசுகள் விநாயகர் கைது நடவடிக்கையைக் கண்டித்தன.

தனித்தனியாக கண்டன அறிக்கைகள் பறந்தன.

இது தேச பக்தியா?

தனிமனித உரிமை எங்கே?

ஒப்பாரிகள், வாய்க் கூசாமல் பொய் பரப்பல்கள் தொடர்ந்தன.

உச்ச நீதிமன்றத்தில் விநாயகனுக்கு பிணை மனு தாக்கல் செய்யப்பட்டது. மறுநாளே அனைத்து வழக்குகளை பின் தள்ளி இந்த மனு முன்னால் வந்து நின்றது!

அர்னாப்பை விட விநாயகர் இளப்பமா என்ன?

அர்னாப்பையே விநாயகனும் பின்பற்றினார். காப்பி அடித்தார்!

உச்ச நீதிமன்ற நீதியரசர்கள், விநாயகர் - முருகன் வழக்குரைஞர்கள் நிசப்தமான அறையில் இருந்தார்.

“மை லார்ட்.. எனது கட்சிகாரர்.. மை லார்ட்… சுதந்திரத்திற்க்கான போராடும் மை லார்ட்.. தியாகிகளுக்கு உதவினார். மை லார்ட் மை லார்ட்.” என்றார் விநாயகர் வழக்குரைஞர் .

“மை லார்ட்.. என்னுடைய கட்சி காரர் மை லார்ட் முருகனும் தான் சுதந்திர தியாகிகளுக்கு உதவினார். வெற்றி வேல் வீர வேல் என்று ஆங்கிலேயனுக்கு எதிரான போரில் மருது சகோதரர்களுடன்…”

“மாண்புமிகு நீதிமன்றத்தின் நேரத்தை வீணாக்காதீர்கள்.. matter.. matter.. க்கு வாருங்கள்” என்று கோரஸ் பாடினர் உச்ச நீதிமன்ற நீதியரசர்கள்.

“நாங்கள் matter.. matter.. பற்றிதான் பேசுகிறோம்… அவர்கள்தான் matter.. யை பேசாதே.. காலவதியான மனுஸ்மிருதி கருத்துக்களை..” என்று முருகன் வழக்குரைஞர் ஆரம்பித்தார்.

விநாயகர் வழக்குரைஞர் எழுந்து நின்று..

“அப் சங்க்சன் மை லார்ட்..” என கத்தினார்

“இங்கிலீஸ் மீடியாக்காரன் வழக்கை முன் உதாரணமாகக் கொண்டு விநாயகருக்கு பிணை வழங்குகிறோம்… அதோடு முருகனையும், தமிழ்நாடு போலீசை உச்ச நீதிமன்றம் வன்மையாகக் கண்டிக்கிறோம்…

ஏதோ சொல்ல முருகன் வழக்கறிஞர் முயன்றார்

அவ்வளவுதான்.. அடுத்து வழக்குக்கு போவோம்..” என்று ‘வழக்கம்’ போல் வேலையைக் காட்டினர்.

உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் ஏதோ சொல்ல எழுந்து எழுந்து பார்த்துவிட்டு வெறுத்துப் போனார்.

விநாயகரை சிறையிலிருந்து வரவேற்று “பாரத் மாதாகி ஜே..” என்று ஒரு கும்பல் முழங்கிக் கொண்டிருக்கிறது.

“கந்தனுக்கு அரோகரா... கோர்ட்டாவது… மயிராவது. மயிராவது… கந்தனுக்கு அரோகரா... கோர்ட்டாவது… மயிராவது. மயிராவது...” என்று விதவிதமான முழக்கங்கள் முளைத்தன.

கொரோனா முகாமிலிருந்து சிவன் குடும்பம் வெளி வந்தது.

முருகன் அந்த குடும்பத்திற்கு மொட்டை அடித்து முழுக்கு போட்டு விட்டு கிளம்பினார்.

அதற்குள் விநாயகருடன் வந்த கும்பல் தனது அரசியல் வேலைக்காக

“வேல் வேல் வெற்றி வேல்..”

என்று முருகன் வேலை களவாடிக் கொண்டு பல கோடி ரூபாய் மதிப்பிலான ரத்தத்தில் புறப்பட்டது. கையறு நிலைக்கு முருகன் தள்ளப்பட்டார்.

சிவன் சிவனே என்று இந்த அரசியல் விளையாட்டை கண்டு தனது திருவிளையாடல் மறந்து போய் கிடந்தார்.

பார்வதி தேவிக்கு வளர்ந்த பாசத்தில், “ கந்தா எங்கும் போகாதா” என்றார்.

“நானா ஷ்கந்தன்… கந்தன் அல்ல நா முருகன். நான் தமிழ் கடவுள். .”

“காதல் மனைவி வள்ளியுடன் எம் தமிழ் மக்களுடன் வாழ்ந்து வந்த என்னிடம் காமத்தை, ஆசையை தூண்டி இரண்டாவது தெய்வயானையை கட்டி வைத்தார்கள்.. காதல் மனைவியை எம் திருத்தலங்களில் ஓரமாக ஒதுக்கி விட்டு தெய்வயானையை திட்டமிட்டு முதன்மையாக என்னுடன் இணைத்தீர்கள்.. காதலை லவ் ஜிகாத் என்று சட்டம் போட்டு நிரந்தரமாக வள்ளியிடம் இருந்து பிரிக்க திட்டம் போடுகிறீர்கள்… உங்கள் சூழ்ச்சிகளின் ஆழம் தெரியாமல் இருந்தேன்… இப்பொழுது புரிந்து விட்டது. எம் காதல் மனைவியை அழைத்து கொண்டு செல்கிறேன்.. உங்களுக்கும் எனக்கும் ஒத்து வராது..”

“என் வழி தனி வழி.. எம் மக்களும் தனி வழி..” என்று இடையில் வந்து தன்னை வைத்து சூழ்ச்சி சதி விளையாட்டுகளை ஆடி விட்டு விட்டு அதை திருவிளையாடல்கள் என்று திரித்து பிரச்சாரம் செய்ததை முருகன் உணர்ந்து கொண்டார்..

“இப்பொழுது கொரோனா வைத்து சுயநல சூழ்ச்சி ஆட்டங்களை ஆடுகிறார்கள்.. அதை கொரோனா திருவிளையாடல் என்று சொன்னாலும் சொல்வீர்கள்” என்று முணுமுணு வைத்தவாறே முருகன் தனது மரபில் இருந்து தண்டத்தை கையில் எடுத்தார்.

மயிலுடன் முருகன் குறிச்சி, முல்லை, மருதம், நெய்தல் திணை நிலங்களின் ஊடக பறந்து சென்று தம் மக்கள் உணர்வுடன் ஒன்று கலந்தார்! புதியதோர் உலகம் காண..!.

- கி.நடராசன்