தொங்கிக்கினு இருந்த சட்டை ஜோபிக்குள்ளாற செல்லு ரொம்பநேரமா அடிச்சிக்கினு இருக்கும்போல. இத் தோட மூணுதடவ அடிச்சி அடிச்சி நின்னுப்போச்சு. இப்பல்லாம் சாவு மேட் டர் வர்ற செல்லு சத்தத்துலதான் புள்ளைங்க முழிக்குது. இன்னா சத்தம் வந்தா இன்னா. நம்மாளே எங்கே எந்தி ரிக்க முடியிது. நம்ம சிகிங்க ராத்திரி யானா டைட்டாக்கித்தான் அனுப்பி வைக்கிறாங்க. சிகி சூசை எவ்வளவு சாப் டாலும் ஸ்டடியா நிப்பான். குவாட்டரு தாண்டினா நமக்கு ஆகாது. நேத்துகூட குவாட்டரு, ஒரு கட்டிங் சாப்டதுதான் இதோ எந்திரிக்க முடியலை.

செல்லு இன்னொரு தடவ அடிச்சதும் டேய் மணி, அத்த எடுத்து இன்னானு கேளுன்னு அண்ணாத்த கத்துனாரு. நான் ஏஞ்சி எடுக்கறதுக்குள்ளோ அவரே எடுத்துப் பேசுனாரு. அண்ணாத்த பேசறதப் பாத்தாக்க சாவு மேட்டர்தான் போல. செல்லுல அண்ணாத்த பேசறப்போ ரொம்ப குரல் கொடுக்காது. குடித்தனக்காரங்க பாத்தா காண்டாய்டு வானுங்கனு அதுக்கு பயம். எங்க வூட்ல செல்லு இருக்கிற மேட்டரு குடித்தனக் காரங்களுக்குத் தெரியாது. செல்லு வாங்குன அன்னியிலிருந்து என்கிட்ட தான் இருக்கு. சுடுகாட்டுல பொணத்துக் கிட்ட வேலையாயிருக்கப்ப செல்லுல அண்ணாத்தயதான் கூப்டுவா னுங்க. வேலையை என்னப் பாக்கச் சொல்லிட்டு அண்ணான்டை போய்ப் பேசும். சாவுக்கு வந்தவனுங்க பொணத்துக்கு நடக்குற வேலையைப் பாக்கமாட்டா னுங்க. அண்ணாத்த செல்லுல பேசறதை ஜாடை காட்டி வெசமமா ஒருத்தனைப் பாத்து ஒருத்தன் சிரிச்சுப்பானுங்க.

இந்த செல்லுகூட சண்டைபோட்டு வாங் குனதுதான். எதுக்குடா அது? நம்ம பொழப்புக்கு ஆகுமா? இதெல்லாம் ஒத்துவராதுடா. ஒருமாசத்துக்கு பொணமே வுழுலேன்னு வைச்சுக்க. இதுக்கு யாரு பணத்தை அழுவுறது. சாவு சொல்றவன் வூட்டாண்ட வரமாட் டானா? போடா போக்கத்தவனேனு சொன்ன அண்ணாத்ததான் இப்ப செல்லுல பேசிக்கினுக்கீறார்.

இந்த வூட்டுக்கு வந்த புட்சில நாங்க இன்னா வேலை பண்றோம்னு எவனுக் கும் தெரியாது. வூட்டுக்காரருகூட சொல் லாதிங்க தேவையில்ல, சொன்னா என் கிட்டே சண்டைக்கு வருவானுங்க னு வூடு குடுத்தாரு. செல்லு வரதுக்கு மின் னாடி அப்பப்ப சாவு நூஸோட ஆளுங்க வரதும் போறதுமா இருக்கும். சாவு சொல்ல வந்த நல்லவன் ஒருத்தன் பத்த வைச்சுட்டுப் போயிட்டான். குடித்தனக் காரங்க ஒண்ணா சேந்துக்கினு அண்ணாத் தக்கிட்டே சண்டைக்கு வந்துட்டானுங்க. பூரா என்னமோ கவருமெண்டு சம்பளக் காரனுங்க மாதிரி. பூரா செருப்புத் தைக்கி றவன், ரிக்ஷா ஓட்டுறவன், கக்கூஸ் கழுவுறவனுங்க. அவங்க மத்தியில நாங்க இருக்கக்கூடாதாம். சாவு நூசுலதான் நெதமும் கண்ணு முழிக்கிறோம்னு கத்து னானுங்க. அண்ணாத்த கோபத்துல என் பசங்களுக்கு பீஸ் கட்ட வைச்சிக்கினு இருந்த துட்ட எடுத்து என்னான்ட தந்து பழைய செல்லா இருந்தா கூட போதும் இன்னிக்கே வாங்குடா ன்னாரு.

பழைய செல்லு மாரிகிட்டே இருக்கிறதா சூசைதான் சொன்னான். போய் கேட் டாக்க இல்லனு டபாய்ச்சான். சூசைதான் மாரியை டமாஸ் பண்ணி, கடையாண்ட இட்டுனு போயி, புல்லா அவனை டைட் டாக்கி, பீப் பிரியாணியெல்லாம் வாங்கிக் குடுத்து மஜா பண்ணி ஐந்நூறு ரூபா பாக் கெட்ல போட்டு சுட்டது இந்த செல்லு. வெயிட்டான பாடிங்க வுழுவறப்போ துட்டு கூட கிடைக்கும். நா பாடிங்க ளோட வெயிட்ட சொல்லல. எல்லாந் தான் பாடியானதும் வெயிட்டாயிடறமே. நா சொல்றது பீணி, பில்வா அதிகமா இருக்கிற பார்ட்டிங்க. அந்த மாதிரி நேரத்துல ஐந்நூறு ரூபா கார்டை போடச் சொல்லுவாரு அண்ணாத்த. செல்லு வந்ததிலிருந்து எல்லாம் இதுலதான். வூட்டாண்ட எவனும் வரதில்ல. சாவு வுழுந்த வூடுகள்ல இருந்து நம்பரை வாங்கியிருப்பா னுங்க போல. அண் ணாத்த செல்லுலேயே பூரா பேசிட்டு பொணம் வுழுந்த வூட்டாண்ட போயி எல்லாத்தையும் பேசிட்டு கட்டை, வறட்டி வாங்க என்ன அனுப்புவாரு. ரெண்டு மூணு பாடிங்க வுழுற அன்னிக்கு தான் எனக்கு தனி வேலை. மத்த நாள்ல எல்லாம் அண்ணாத்தகூட ஒத்தாசதான்.

அண்ணாத்த சொல்லி அனுப்புற சாவு வூட்டாண்ட போறப்ப மனசு பேஜாராயி டும். குறைவயசுல செத்துப்போன பொணத்தாண்ட பொண்டாட்டி, தவ்ளுண்டு புள்ளைங்களை வைச்சிக்கினு அழுவுறதைப் பாக்கறப்போ மெய்யா லுமா மனசு கஷ்டமாயிடும். அண்ணாத்த சொல்லி அனுப்புன துட்டைவிட கம்மியாச் சொல்லுவேன். எவனும் நம்ப மாட்டான். அண்ணாத்தகிட்டேயே பேசிக்கிறோம்னு சொல்லி அட்வான்சு மட்டும் குடுப்பானுங்க.

ராத்திரி சாப்ட போதை காத்தாலே வரைக் கும் நாறும். அதனாலேயே சாவு வூட்டு பார்ட்டிங்ககிட்ட தள்ளி நின்னுப் பேசு வேன். ஆனாலும் ஒண்ணு ரெண்டு கையிங்க உசாரா மோப்பம் பிடிச்சிட்டு அதை குசுகுசுன்னு சம்பந்தப்பட்ட பார்ட் டிங்க காதுல போடுவானுங்க. அவனுங்க ளும் ஏதோ வெசத்தைப் பாக்கிறதைப் போல நம்மளைப் பாப்பானுங்க. போதை அடிக்கிறவனுங்க பேசுனா பொய்யாத் தான் இருக்கும்னு எவனோ எய்தி வைச்சிருப்பான் போல. அதான் இப்படி.

இதோ இன்னிக்கிகூட அண்ணாத்த வேற ஒரு பாலுக்கு போயாவணும். நேத்தே வரேன்னு ஒத்துக்கின சமாச்சாரம். இன்னிக்கு காலைல செல்லுல வந்த சாவு மேட்டருக்கு என்னை அனுப்பிவைச் சாரு. மணி, பாரதியார் நகர்ல பெரியவரு ஒருத்தர் போயிட்டாராம். போயி இன் னானு கேட்டு டைமெல்லாம் பேசிக்கினு வா. ரேட்டெல்லாம் எதுவும் பேசிக்கினு நிக்காத. அட்வான்சு குடுத்தாக்க அதுல கட்டைக்கும், வறட்டிக்கும் சொல்லிட்டு வா. மூங்கில கஜா கடையில வாங்காத. போன தபா பெரியார்நகர் சாவுக்கு வச்சது தான் விலைன்னான். அன்பு கடையில பரவாயில்ல. அங்கியே வாங்கிக்கலாம். வாங்குன பொருளை எரிமேட்ல இறக் கிடு. ஒத்தாசைக்கு சூசையை இட்டுக் கினு போறேன்னு புல் டைட்ல போயி நிக்காத. எல்லாத்தையும் சாயங்காலமா வைச்சுக்கோ. சாவுவூட்டுக்கு போறப்பல் லாம் சொல்றேன். ஆனா நீ கேட்கற தில்ல. போதை இல்லாம இந்த தொழில் பாக்க முடியாதுன்னு வெட்டியானுக்கு தான் தெரியும். அவனுங்களுக்கு தெரியவே தெரியாது புரிஞ்சுதா!

அண்ணாத்தயும் சாப்டுவாரு. பொண மெல்லாம் எரிஞ்சி திருப்தியாவுற வரைக் கும், அங்கியே நாத்தத்துலேயே சகிச்சிக் கினு நின்னுட்டு வூட்டுக்குப் போறப்ப குவார்ட்டரு வாங்கி அண்டர்வேருக் குள்ள வுட்டுப்பாரு. புல் பாட்டிலு அடிச்ச வருதான். லிவரு வீங்குனதால பயத்துல இப்படி குவாட்டராயிடுச்சு. அண்ணாத்த குடிக்கிறத இன்னிக்கெல்லாம் பாத்துக் கீனே இருக்கலாம்.சாவுமேட்டர் முடிஞ்சி வூட்டுக்குள்ளாற வந்து குளிச்சி தலை துவட்டி அண்டர்வேரோட கீழ உக்காந்து டுவாரு. பாக்கெட்குள்ளாற இருந்து சிகரெட், தீப்பெட்டி, பாட்டிலு, ஊறுகா ஒன்னொன்னா வரும். கிளாஸ்ல ஊத்தி வானத்தாண்ட தூக்கிக்காட்டி என்னமோ வேண்டுவாரு. சரக்குனால ஒடம்புக்கு ஒன்னும் வந்துடக்கூடாதுனு வேண்டிக் கினு குடிப்பார் போல. சரக்குவுட்ட கை யோட புல்லா ஒரு கட்டு கட்டிட்டு அப்ப டியே கவுந்துடுவாரு. அத்தோடு காலைல தான் எந்திரிப்பாரு. அண்ணாத்த வழி அப்பிடி. நமக்கு வேலை நடக்குறப்பவே சாப்டணும். என் னிக்குமே சரக்கு வுடாம நான் எரிமேட்ல நின்னதுல்ல. பொணம் எரிய ஆரம்பிச்ச தும் அப்படி ஒரு நாத்தம் பொகையா கிளம்பும். அந்த பொகையில பத்து நிமிசம் நிக்க முடியாது. அதுவும் மூணு, நாலு நாள் கிடங்குல கிடந்த பொணத்தை எரிமேட்ல வைக்கிறப்ப அதுங்க புள்ளைங்க கூட கிட்டக்க வரா துங்க. மூக்கையும் வாயையும் மூடிக்கினு தூரத்துலேயே நிக்குங்க. எல்லாத்தையும் பண்ண பிறகுதான் கிட்டக்க கூப்பிடு வோம். இந்த நாத்தத்துலருந்து தப்பிக்கத் தான் இந்த போதை.நானாவது பரவால்ல. சூசை குடிச்சிக்கினே இருப்பான். அது ஒரு வெட்கங்கெட்ட நாயி. அவனுக்கும் ஒன்னும் இது பொழப்பில்லை. எங்க ஜமாவுல பைப்பில கஞ்சா வாசிக்கிறப்ப வந்து ஒட்டிக்கினவன் சூசை. அன்னிலி ருந்து என்கூட சாவு வேலைக்கு கூடமாட ஒத்தாசையா வருவான்.

சூசைக்கு காசெல்லாம் முக்கியமேஇல்ல. சுடுகாட்டு வேலைக்கு அவன் வரப்ப சரக்கு வாங்கித் தரணும் அவ்வளவுதான். பொணத்தோட நாத்தம் நம்மமேல வுழாம இருக்கணும்னா, இத்தோட நாத்தம் நமக்கு இருக்கணும்டான்னு சொல்லு வான் சூசை. சிகி சிகின்னு சிநேகிதன்களுக்கு பேர் வைச்சவனே அவன்தான். பொணம் எரிஞ்சதும், பீப்பிரியாணி ஒரு ஆப் போதும் சூசைக்கு.

பாரதியார் நகர்ல பெரியவரு பாடி யாண்ட போறப்ப சூசையை இட்டுக் கினுதான் போனேன். காலங்காத்தால போனதால பாடியாண்ட யாருமில்ல. ரெண்டு மூணுபேரு டீ சாப்ட்டுக்கினு இருந்தாங்க. எங்களப் பார்த்ததும் பெரியவரோட மவன் ஒடியாந்தான்.

ஐந்துமணிக்கு எடுக்கலாம்னு இருக் கோம். எரிக்கிறது தான் வழக்கம். உங்க அண்ணன்கிட்ட ஃபோன்ல பேசியாச்சி. அட்வான்ஸ் குடுத்த னுப்பச் சொன்னார் னு சொல்லிவிட்டு வூட்டுக்குள் போயி ஐநூறுரூபா தாளை எடுத்தாந்து என்னாண்டக் கொடுத்தான். அந்த நேரத்துல பெரிய மனுசங்க நாலஞ்சி பேரா வந்தாங்க, கட்சிக்காரங்க போல. பெரிய மாலையா பாடியாண்ட வச்சானுங்க. பெரியவரு மவன் அவன் பொண் டாட்டி எல்லாம் சேர்ந்து அழுவுச் சுங்க. நான் சூசைக்கிட்ட கண்ணக் காட்டிட்டு பாடியாண்டயிருந்து நவுந் தேன். பின்னாலேயே வந்த தடிமனான ஆளு ஒருத்தன் அவுங்க சொந்தக் காரன் போல. எத்தன மணிக்கு இங்க வருவிங்கனு ஜபருதையா கேட்டான் .

நாலுமணிக்குள்ளாற எல்லாம் ரெடி யாயிருக்கனும் சார். அப்பதான் கரீட்டா பாடியை அஞ்சிமணிக்குத் தூக்க முடியும். மூணுமணிக்கு பொருள வாங்க ஆளு அனுப்புனா சரியா இருக்கும். டெத்சீட்டு பத்திரமா வைச்சுக்கோ சாரு. கல்யாண வூட்ல தாலிமாதிரி சுடுகாட்டுல டெத்சீட்டு. இன்னா பொருள் வாங்கணும்னு மூணுமணிக்கு வரப்ப சொல்றேன்.

கேட்டுட்டிருந்த பெரியவரு வூட்டு சொந்தக்கார ஆளு, பொருளு என்ன வாங்கணும்னு எங்களுக்கு தெரியும் எங்க சாங்கியமே தனி. நாங்க தஞ்சா வூர் பக்கத்து ஆளுங்க. பாடை கட்டுற வேலையைக்கூட நாங்க அசலானுக்கு தரமாட்டம். இங்க எல்லாத்தயும் நீங்கதான் பண்றிங்க. எல்லாம் வித்தி யாசமாயிருக்கு. எத்தனை மணிக்கு வருவிங்கனு மட்டும் சொல்லிட்டு போங்க . சூசை என்னை மீறி பேசி னான். ரைட் ரைட். எல்லாத்தையும் நீயே பாத்துக்க. நாங்க இங்க மூணு மணிக்கு இருப்போம்னான்.

பேச்சை கட் பண்ணி சூசையை இட் டுக்கினு கிளம்பினேன். போற வழி யில வறட்டி, கட்டைக்கடைக்குப் பக்கத்துலயே டாஸ்மாக்கடை. சூசை அவன்கிட்ட இருந்த துட்டுல ஒரு ஆப் ஓல்டு மாங்க் வாங்கியாந்தான். வெறும் வவுத்துல கபகபன்னு எரிஞ் சுது. பக்கத்துல நாஷ்டாக்கடையில ஆளுக்கு அஞ்சு இட்லி, வடைகறி, ஆம்லட்னு உள்ள அமுக்குனதும் எரிச்சல் காணாமப் பூடுச்சி. அதுக்கப்புறம் சூசைதான் சொன்னான், இன்னும் கொஞ்சம் சாப்ட்லாமேன்னு. அப்பு றமா ஒரு புல்லு, ஒரு ஆப் சாப்டோம். அட்வான்சுல பாதி பூடுச்சி. பூரா காலியவுறதுக்கு மின்னாடி வறட்டி, கட்ட, மூங்கிலுக்காவது காசை உசார்ப்படுத்தணும்னு தோணுச்சி.

கட்ட கடைக்காரன் துட்டு இல்லன்னா நடையை கட்டுங்கனு கூச்சநாச்சம் இல்லாம சொல்லிட்டான். இதே கோலத்துல அண்ணாத்தயாண்ட போயி நின்னு கட்ட, வறட்டிக்கு காசு பத்தலன்னு சொன்னா காறிதான் முழி வாரு. சூசையை சொல்லி இன்னா. எம் புத்தி எப்பமே துட்டு கரைஞ்சிப் போன பிறகுதான் முழிச்சுக்குது. இன்னா பிரயோஜனம்? அண்ணாத்தய ரொம்பநாளா இப்படித்தான் இம்சை பண்ணிக்கினுகிறேன். அப்பப்ப இதே மாதிரிதான். அது திட்டிக்கினே காசை குடுக்கும்.

எம் புள்ளைங்களை கூட அதுதான் படிக்க வைக்கிது. எம் புள்ளைங்களும் அண்ணாத்தக்கிட்டதான் பெரியப்பா பெரியப்பான்னு ஒட்டிக்கினு இருக்குங்க.

அட்வான்ஸ் வாங்கப் போனவன் அலங்கோலமா போயி நின்னா யாருக் குமே கோபம் வரும். அண்ணாத்த யாண்ட வரமாட்டேன்னு சூசை யாண்ட கண்டிசனா சொல்லிட்டேன். சாவு வூட்டுல போயி கேட்டுப் பாப் போங்கிறது சூசையோட யோசனை. கொஞ்சம் சாப்டாலும் நம்மால முடி யல. சூசை எவ்வளோ சாப்டாலும் ஸ்டடியா நிப்பான். போன தபா வவுத்து வலி வந்து மைக்கேலு டாக்டர்கிட்ட போறப்ப, வவுத்தை அமுக்கிப் பாத்துட்டு ஈரலு புல்லா போயிடுச்சினு சொல்லிட்டாரு. பய முறுத்த சொல்றாருன்னு சூசை சொன் னான். இந்தாளுக்கு இன்னா தெரியும். அந்தாளு சம்சாரம்தான் ஒழுங்காப் படிச்ச டாக்டரு. இவன் டுப்ளிகேட்டு. போர்ட பாத்துருக்கியா மணி. இவன் பேருக்கு பின்னாடி வேற என்னமோ போட்டுருக்கும். என் கிட்ட மாரி ஒரு வாட்டி காட்டுனான் . சூசை சொன் னதை நம்ம சிகிங்க நாலஞ்சி பேர் கிட்ட விசாரிச்சா அவுங்களும் கரீட்டுதான்னு சொன்னாங்க.

சிகிங்க இப்படி சொன்னதால மைக் கேலு சொன்னத நா கண்டுக்கவே இல்ல. ஆனா இப்பல்லாம் அடிக்கடி வவுத்து வலி வரத பாத்தாக்க, நானே சீக்கிரமே பாடியாயிடுவேன்னு தோணுது. வவுத்து வலி இருக்கிறப்ப எல்லாம் போதைவுட்டா வலி காணாமப் பூடுது.

நானும் சூசையும் திரும்பி சாவு வூட் டான்ட வரப்ப நகர் ஆளுங்க, சொந்தக் காரங்கனு கூட்டமா இருந்துச்சு. நாங்க போதையில இருக்கிறது கண்டுக்குன தும் ஒருத்தனுக்குள்ள ஒருத்தன் கூடிக் கூடி பேசிக்கினான்ங்க. ஒருத்தன் என் காதுல வுழுறப்பாலேயே பேசுனான். இவன் எப்பவுமே இப்படித்தான். காசுக்கு தகராறு பண்ணுவான். சாவு எடுக்கற நேரத்துல வந்து தொல்லை குடுப்பான் . அதுஇதுன்னு என்னை சாடையா காட்டி அள்ளிவுட்டுக்கினு இருந்தான். என் காதுல அவன் பேசு னது இன்னானு வுழுந்துச்சி. சூசை காதுல வுழுந்துதுன்னா சண்டை வாங் காம வுடமாட்டான்.

எங்கள மறுபடி யும் பார்த்த எரிச்சலில் பெரியவரு மவன் என்னப்பா விஷயம்னு கேட்டான். கட்ட, விறகு, மூங்கில் வாங்க காசு பத்தலைன்னு பொறுமையாத்தான் சொன்னேன். எவ்வளவு காசு வாங்குனாலும் வேல முடிஞ்சதும் கழிச்சுக்கலாம்னு சொல்லிப் பாத்தேன். கூட்டம் வேடிக்கை பாக்குதேன்னு தெரிஞ்சும் அந்த ஆள் கத்துனான். ஏழுமணிக்கு ஐந்நூறு ரூபா வாங்கிட்டுப் போயி அதுக்குள்ளாற என்னய்யா செலவு? விறகும், மூங்கிலும் வாங்க முடியாதா அதுல?

அந்த ஆளு கத்துனதும் ஆளாளுக்கு சேர்ந்து கத்துனாங்க. காலையில எங் கிட்ட விவகாரம் பண்ண அவுங்க வூட்டு தடி ஆளும் சேர்ந்து கத்துனான். காசை குடுத்துக்குடுத்து கெடுத்துவச் சிருக்கிங்க, இவனுங்களை வைக்கிற இடத்துல வைக்கனும். இத்தனை காசு ஆகாதுய்யா எங்க ஊர்ல எல்லாம் .

சூசை அந்த ஆளுக்கு பதில் குடுக்க

ஓடுனான். நான் தடுத்தேன். ஒரே கச முசன்னு ஆயிப்போச்சி. இதுக்குள் ளாற நகர் ஆளு ஒருத்தன் செல்லுல பேச ஆரம்பிச்சான். என் செல்லுல சத்தம் வந்தது. எடுத்து இன்னா? யாரு பேசுறதுன்னு கேட்டேன். பதிலா என் பக்கத்துல இருக்கிற ஆளு பேசனுது கேட்டுது. செல்லுல பேசுன ஆளு என்னைப் பாத்து மொறச்சான். செல்லை தூக்கி பாக்கெட்குள்ள வச்சுக்கிட்டான். அண்ணாத்தக்கிட்ட பேசறதுக்கு செல் லுல பேசுனான் போல. செல்லு என்கிட்ட இருக்கிறத பாத்ததும் எரிச்சலாயி என்னையே மொறச்சிப் பாத்தான்.

இதுக்குள்ள எவனோ ஓடிப் போயி ஊர்த்தலைவரை இட்டாந்தான். அந் தாளு எங்கப்பா உங்க அண்ணாத்த, ஒவ்வொரு சாவுலயும் உன்னாலதான் பிரச்சனை. ரேட்டெல்லாம் நீ பேசாத. எல்லாம் உங்க அண்ணாத்தக்கிட்ட தான். சாயங்காலமாகூட இங்க செய்ற துக்கு அவருதான் வரணும்.கண்டிசனா நகர்ல சொன்னாங்கனு அண்ணாத்தக் கிட்ட சொல்லிடுனு அந்த ஆளு கிளம்பிப் போனான்.

சூசை என் கையைப்புடிச்சி தரதரன்னு இழுத்துக்கிட்டு எதிர் நகர்ல இருக்கிற சந்துபொந்துல நுழைஞ்சி நாலைந்து சிகிங்ககிட்ட காசை உசார் பண்ணி டாஸ்மாக்குல காலியான காசுக்கு ஈடா எடுத்தாந்தான். வறட்டியவும் கட்ட யும் மீன்பாடி வண்டில போட்டு எரி மேட்ல இறக்கிவைக்கச் சொல்லிட்டு பாடை கட்ட மூங்கிலுக்கு சொல்லிட்டு வூட்டாண்ட போறப்ப பகல் பன்னெண்டு ஆயிடுச்சி. அண் ணாத்தைக்கு இதுக்குள்ளாற எல்லா நூசும் போயிருக்கும் போல. நாங்க போதையில இருக்கிறத பாத்ததும் கத்துனாரு. வறட்டி, மூங்கில், கட்ட வாங்குனதுக்கு கணக்கு சொன்னப்ப கம்னு ஆயி டுச்சி. பின்ன எந்த காசுல குடிச்சிருப்பாங்கனு யோசிக்க ஆரம்பிச்சிடுச்சு.

சாவு வூட்டாண்ட போறப்ப என் கூட வந்தா போதும்னாரு. சாயங்காலமா சாவு எடுக்கறப்போ, காலைல எங்க கிட்ட சண்ட போட்ட அத்தன மூஞ்சி களும் இருந்துச்சு. பெரியவரு வூட்டு தடி ஆளு வூட்டாண்ட எறங்கியிருந்த மூங்கிலுல ஷோக்கா பாடை செஞ்சுக் கினு இருந்தான். காலைல செல்லுல என்கிட்ட பேசுன அந்தாளு அண்ணாத் தயாண்ட எதுக்கு சடை, இவனுங் களை அனுப்புற எப்ப பாத்தாலும் பிரச்னைதான். நீ என்ன சொல்றியோ, அதையே ரேட்டா பிக்ஸ் செய்து கொடுத்திடறோம் அசோசியேசன்ல கேட்டுச் சொல்லிடறேன் .

காலைல ஒரு பாலு. அதான் மணிய அனுப்பி வைச்சேன். இப்ப எல்லாத்த யும் நானே பாத்துக்கிறேன். அவனுங் களை வுடமாட்டேன். ரேட்டு விசயத் துல சாவு வுழுறப்போ பேசி முடிச்சிட ணும்னு சொல்றிங்க. அப்பு றமா காணாம பூடுறிங்கனு சொல்லிட்டு அண்ணாத்த சாவு வேலையில இறங்க ஆரம்பிச்சார். கூடமாட நானும் சூசை யும் பண்ற வேலைய அங்க இருக்கிற வனுங்க நோட்டம் வுட்டுக்கினு இருந்தானுங்க. ஒரு வழியா பாடி கிளம்பி எரிமேட்டுக்கு வந்துச்சு.

எரிமேட்ல பொணத்தை வைக்கிறப்ப கூட ஏடாகூடமான பேச்சுதான். வறட்டியில பொணத்த மூடுனப்ப அந்த தடிஆள் விறகே இல்லியான்னு கத்துனான். வைக்கிற வறட்டியாவது கேப் விடாம அடுக்குங்கப்பானு அவன் சொல்றப்ப, வறட்டி அடுக் கினு இருந்த சூசை அந்த ஆளை திரும்பி ஒரு மொறை, மொறைச்சதும் அந்த ஆளு கப்னு மூடிக்கினான்.

பானைய தூக்கிப் போட்டு உடைச் சிட்டு பெரியவரு மவன் போன நிமி சத்துல பூரா ஆளுங்களும் காணாமப் போனானுங்க. அண்ணாத்த என் னாண்ட கொஞ்சம் காசு குடுத்து சூசைக்கு பீப் பிரியாணியும், சரக்கும் வாங்கித் தரச் சொன்னாரு.

சரக்கு உள்ள போனதும் சூசை சாவு வூட்டாண்ட நடந்த மேட்டரையே திருப்பித் திருப்பி பேசினான்.அவனை சமாளிச்சு அவன் வூட்டாண்ட வுட் டுட்டு வரப்ப வழியில மாரியை பார்த் தேன். அவனும் புல்லா இருந்தான். அவன்கிட்ட கொஞ்சம் மிச்சம் இருந் துச்சு. அதிலயும் ஒரு கட்டிங் வுட்டுட்டு வூட்டுக்கு போறப்ப புள்ளைங்க எல்லாம் தூங்கிக்கினு இருந்துச்சுங்க. அப்பவும் அண்ணாத்த முழிச்சுக்கினு இருந்தாரு.

மணி இரண்டு பாடிங்க வுழுந்துடுச் சுன்னு நூசு வந்துச்சு. ஒண்ணு அம்பேத்கர் நகர்ல, இன்னொண்ணு எர்ணாவூர்ல. அம்பேத்கர் நகர்ல வுழுந்த பாடி சின்னப்பையனாம். ஆக்ஸிடன்ட்ல போயிட்டானாம். மார்ச்சோரில இருந்து இன்னிக்கு சாயங்காலமா எடுத்தாந்தாங்களாம். அதனால நாளைக்கு காலையிலேயே எடுக்கிறாங்களாம். காலையிலேயே நா போயிடுவேன். எரிமேட்ல இருக்கிற கட்டயும், வறட்டியும் போதுமில்ல?

இன்னும் இரண்டு பாடிக்கு சரியாயிருக்கும் அண்ணாத்த ..

அத்த வுடு, நீ பெரியவரோட பாலு மேட்டரை சூசையை வைச்சு முடிச் சுக்கோ. நானூறு சொல்லிருக்கேன். எச்சா கேக்காம குடுக்கறத வாங்கிக்கோ இன்னா புரியுதா ..

நாளைக்கும் சரக்கு வுடலாங்கிற சந்தோசத்தில போதை இன்னிக்கே ஜிவ்வுனு தூக்குச்சி. மீனு சாப்பாடு உள்ள போனதும் தூக்கம் வந்துச்சி. எப்படி தூங்கினேனு எனக்கே தெரி யலை. விடிஞ்சதும் சூசை வூட் டாண்ட போயி அவனை இட்டுக்கினு எரிமேடு வந்தேன். பெரியவரு நல்லா எரிஞ்சி சாம்பலாயிருந்தார். பத்து மணிக்கு பெரியவரு வூட்டு ஜனங்க வந்தாங்க. பெரியவரு பையன் அமை தியா சாம்பலாயிருந்த பெரியவரோட எலும்பையே பாத்துக்கினு இருந்தான். பெரியவர் வூட்டு தடி ஆள் என் னான்ட பேசினான். சாவு வூட்ல நீயும், உன் அண்ணாத்தையும் செஞ்ச சாங்கி யம் போதும். இங்க நா எல்லாத்தயும் பாத்துக்கிறேன். நா சொல்றதை நீ செஞ்சாப் போதும். ஆனா பேசுன காசை கரெக்டா வாங்கிக்கோ. அதுக்கு நான் கேரண்டி சரியாப்பா .

சொல்லிட்டு அந்த ஆள் எரிஞ்சி சாம் பலாயிருந்த பெரியவரோட எலும்பை பொறுக்க ஆரம்பிச்சான். அந்த ஒடம் போட அவனால குனிஞ்சி எடுக்க முடியில. சூசை எடுத்துக் கொடுக்க குனிஞ்சான். அந்த ஆளு தடுத்துட்டு சொன்னான். ராத்திரி இருந்திங்களா ஓடிட்டிங்கிளா. கொள்ளி வச்சுட்டு நாங்க அந்தாண்ட போனதும் இந்தப் பக்கமா பொறப் பட்டிங்க போலி ருக்கு. அதான் பெரியவரு வெந்தும் வேகாததுமா கிடக்காரு.

சூசை பதி லுக்கு ஆமாமா நாங்க கிளம்பிட்டோம். நீங்க எல்லாம் இங்கயே பாய் போட்டு படுத்து தூங்கு னிங்க. போ சார் வேலையப் பாத்துக் கிட்டு வெட்டியான் வேலையப் பத்தி இன்னா தெரியும் உனக்கு?

அந்த ஆளு சூசையோட கிண்டலைக் கண்டுக்காம பேசினான். ஆளுங்களை எரிக்க பூரா வறட்டியில்ல போட்டிருக் கிங்க பேருக்கு விறகு வைக்கிற எரி மேட்டை இப்பதான்யா முதமுதல்ல பாக்குறேன். மெட்ராசுல எல்லாமே காசுக்குதான். சூசை நெக்கலா கேட்டான். நீ எந்த ஊருன்ணா?

தஞ்சாவூரு. எங்க ஊர்ல வறட்டி போட்டீனா விடமாட்டோம். எல் லாம் முறைப்படிதான். விறகுதான் வைக்கணும் .

ஆமாமா டிவியிலே கூட காட்டு னாங்க. பொணம் எரிக்க தஞ்சாவூர்ல சந்தனக் கட்டதான்னு. பெரியவரு வூட்டு சொந்தக்காரங்க சிலரும், பேரப் புள்ளைங்களும் சூசை சொன்னதைக் கேட்டு அமுக்கமா சிரிச்சதை அந்த ஆளும் பாத்துட்டான் போல. பதி லுக்கு கோபமா கத்துனான்.

வெட்டியான் இந்தப் பேச்சு பேசுறது இந்த ஊர்லதான்யா. காசு வேணும்னா அந்த ஆளை வாயை முடிக்கிட்டு இருக்கச் சொல்லு கோபி னு பெரிய வரு மவனைப் பாத்து சொன்னான். மவன் என்னைப் பாத்து சைகையால சூசையை கம்முனு இருக்கச் சொல் லுன்னாரு. நானும் சூசையைப் பாத்து கம்னு இருக்கச் சொன்னேன்.

இதுக்குள்ளாற அந்த ஆளு எல்லா எலும்புகளையும் பொறுக்கியிருந் தான். சுடுகாட்டு எரிமேட்ல எந்த வேலையும் செய்யாம நின்னது அவ மானமா இருந்துச்சு. நம்ம இடத்துல இன்னொருத்தன் நாட்டாண்மை பண்றது புடிக்கவேயில்லை.

பொறுக்குன எலும்பை வைச்சி ஒரு உருவம் போல ஆக்குனான். அந்த ஆளு உருவத்துக்கு தலை, கை, காலு, உடம்பு எல்லாம் வைச்சான். அத்த செஞ்சு முடிச்சக் கையோட என்னை யும் சூசையையும் ஒரு பார்வை பார்த்துச் சொன்னான். என்ன தெரி யுமா இது. செத்தவரு ராஜாவாயிட் டார். நாங்க சத்ரபதி சிவாஜி ஆளுங்க. எங்க ஆளுங்களோட எலும்பைக்கூட ராஜமரியாதையா தான் அடக்கம் பண் ணணும். அதான் எங்க சாங்கியம். செத்த பெரியவரு இப்ப ஊர்வலமா போவப் போறாரு.

அப்படி சொல்லிட்டு அந்த ஆளு எடுத்தாந்த பையில இருக்கிற பொரு ளையெல்லாம் எரிமேட்ல வச்சி இன்னாஇன்னமோ செஞ்சான். அவன் சொல்றதை கூடவந்த ஜனங்க இன் னாத்துக்கு இதுன்னு ஒரு கேள்விகூட கேட்காம அப்படியே செஞ்சுதுங்க. பெரியவரோட பேரப்புள்ளைங்க மட் டும் ஒருத்தரையொருத்தர் பாத்து சிரிச் சிக்கினு இருந்துச்சுங்க. பெரியவ ரோட புள்ளைகூட அந்தாளு பண்றத பாத்து மனசுக்குள்ள சிரிச்சிருக்கும்.

அந்த ஆளு சொன்னபடி பேரப்புள் ளைங்க சுடுகாட்ல இருக்கிற குப்பைய பொறுக்கி எரிமேட்ல இருக்கிற வறட் டியை வச்சி ரெண்டு செங்கல்ல சைடுல வைச்சு அடுப்பு பண்ணுச் சுங்க. அதுல வைக்கச் சொல்லி ஒரு பாத்திரத்துல தண்ணி ஊத்திக் குடுத் தான். அதுல மாவைக் கொட்டச் சொல்லி ஒரு பொட்டலத்தைக் குடுத் தான். சூடு ஏறனதும் கிளறச் சொன்னான். எதுக்கு இந்த மாவு இன்னா பக்குவம்னு தெரியாமலேயே அந்த புள்ளைங்க அத்த கிளறிக்கினே இருந்துச்சுங்க.

மாவு கிண்டறது அந்த பக்கமா நடக் குற சொல்லோ, இவன் எரிமேட்ல பாயப் போட்டு உட்காந்துக்கிட்டு நீட்டு குச்சிகள்ல ஒரு காவித் துணியக் கட்டி சின்னச் சின்னதா ஒம்போது கொடி செஞ்சான். ஒம்போது கொடி யையும் பெரியவரோட எலும்பை வைச்சு செஞ்ச உருவத்துக்கு மின் னாடி மூணு மூணு கொடியா நட்டு னான். நட்டுன கொடியை சிவப்புக் கயித்தாலே நாலாபக்கத்துலயும் சுத்திக் கட்டுனான். இதுக்குள்ளாற அடுப்புல வெந்துக்கிட்டு இருந்த மாவை பதம் பாக்க ஓடினான். பசங்க கிளறதை வுட்டுட்டு பேசிக்கினு இருந்ததுக்கு கத்தினான். குடத்துல தண்ணி எடுத்துக்கினு வரச் சொன்னான்.

சூசை இதையாவது செஞ்சு தரலா மேன்னு குடத்தை எடுத்து தண்ணி புடிக்க ஓடினான். அந்த ஆளு சைகை யால தடுத்து, அவன் வூட்டு ஆளுங் களைவுட்டு எடுத்துட்டு வரச் சொன்னான்.

கிளறுன மாவை அப்படியே எடுத் தாரச் சொல்லி அத்த எடுத்து வடை மாதிரி தட்டி கட்டியிருந்த கொடியில வைச்சான். கேட்டா குடைன்னு சொல்வான் போல. மாவு கெட்டியா இல்லாததுனால தொப்தொப்னு கீழே விழுந்துச்சு. பையில இருக்கிற பொருளை எடுத்து வச்சி பூஜைக்கு ரெடி பண்றப்போ, சுவீட் பெட்டியை பாத்து கத்துனான். சுடுகாட்டு சாங்கி யத்துக்கு எவனாவது அரை கிலோ சுவீட் வாங்குவாங்களா? பூரா விவரம் இல்லாத ஆளுங்கப்பா .

இம்முறை சூசைக்கு பொறுக்கல. ஆமாமா, நீ ஏற்பாடு பண்ணிருக்கிற ஊர்வலத்துல தாத்தா பல்லக்குல உட்கார்ந்து ஊர்கோலம் போவப் போறாரு .

நிலைமையை மறந்து பெரியவரு புள்ளைங்க சிரிச்சுதுங்க. இப்படி ராவுடி பேச்சுதான்யா இங்க. நம்ம வூட்டு ஜனங்களே சரியில்லையே. கொள்ளிப்பானையை உடைச்ச கல்ல எவனாவது வீட்டுக்கு எடுத்துட்டு வருவானா. இங்க எடுத்துட்டு வராங்க. இவங்க இப்படி இருக்குற தாலதான் நீ இப்படி பேசறே .

பையிலிருந்த எல்லாப் பொருளையும் வைச்சி அந்த ஆளு பூஜை செஞ்சிட்டு நின்னுச்சுங்க. உருவமா செய்யப்பட்டி ருந்த பெரியவரோட எலும்பை எடுத்து பால் இருந்த பானைல போடச் சொன்னான். எல்லா காரியத் தையும் அவனே செஞ்சான். செஞ்சு முடிச்சு அவுங்க சுடுகாட்டைவுட்டு கிளம்பற நேரத்தல சூசை என்னய தனியாக் கூப்டான்.

சூசையை இன்னானு கேட்டேன். அவன் சொன்னது எனக்கு ஆச்சர்யமா இருந்துச்சு. எப்பவும் இவ்ளோ கேளு, அவ்ளோ கேளுன்னு சொல்றவன், இப்படி ஒரு யோசனை சொன்னதும். மெய்யாலுமாவே என்னால நம்பவே முடியல. அவன் சொன்னது மாதிரி முடிவை இன்னிக்கு எடுத்தாவணும். அதான் நம்ம தொழிலுக்கு மருவாதி, மானம் எல்லாம். சுடுகாட்டை விட்டு அந்த வூட்டு ஜனங்க கிளம்பிப் போறப்ப அந்த தடி ஆளு நானும், சூசையும் நின்ன இடத் தாண்ட வந்தான்.

நீ எந்த வேலையும் செய்லைங்கிறதுக் காக, உன்னோட கூலியை நான் குறைக்கல. அண் ணாத்தகிட்ட பேசுனபடி இந்தா நானூறு. திருப்திதானே?

சூசை சொன்னான், இல்ல வேலையே செய்யாம இன்னாத்துக்கு உன் துட்டு. இன்னிக்கு எரிமேட்ல எல்லாத்தையும் நீ தானே செஞ்ச. அது உனக்குத்தான் போய்ச் சேரணும். அந்த துட்டை நீயே வைச்சுக்கோ .

சூசை பேசுனதை அந்த ஆள் கண்டுக்கவேயில்ல. காசை எடுத்து பையில வுட்டுக்கினு எந்த கூச்ச நாச்ச முமில்லாம அந்த தடி ஆளு அவுங்க வுட்டு ஜனங்களோட கிளம்பிப் போனான்.

அண்ணாத்தகிட்ட எதை சொல்லி சமாளிக்கலாம்னு நான் யோசனை பண்றதை புரிஞ்சிக்கின சூசை என் னாண்ட வந்து தைரியம் சொன்னான். சாயங்காலத்துக்குள்ள சிகிங்க கையில பிராய்ஞ்சு அண்ணாத்தகிட்டே கணக்கு சொல்லலாம் நீ கவலைப் படாதே சிகின்னு சிரிச்சான்.

ரொம்ப சத்தமா ஒத்தஅடி மோளத் தோட அம்பேத்கார் நகர் பாடி வந்துட் டிருந்தது. அண்ணாத்த சாவு கும்பல்ல மின்னாடி வந்துக்கினு இருந்தார். கிட்ட வந்ததும் என்னப் பாத்து என்ன மணி, பாலு நல்லபடியா முடிஞ்சுதான்னார்.

அவரிடம் தலையாட்டிவிட்டு நானும், சூசையும் கட்டயையும், வறட்டியை எடுத்து வைக்க எரிமேட்டுக்கு வந்தோம்.

 

Pin It