என்னவோ நடக்கிறது. சொல்லொணா வார்த்தைகளை எச்சில் கொண்டு விழுங்கினான் வள்ளுவன்.
"எதனால் இப்படி இருக்கிறது... என்ன ஆச்சு... சமாளிக்க முடியுமா.... இப்போ மணி என்ன..." உள்ளே ஓடிய அத்தனையும்... சுழலும் உடலுள் கட்டுப்படுத்த முடியவில்லை. எழுந்து நின்று இப்படி கைகள் கட்டிப் பேந்த பேந்த முழிப்பதெலாம் வள்ளுவன் அகராதியிலேயே கிடையாது. இன்று பதில் தெரிந்தும் வார்த்தை வரவில்லை. கண்கள் சிமிட்டவும் முடியாத மூச்சடைப்பு அவனுள் நிகழ்ந்து கொண்டிருந்தது.
"வள்ளுவா... உன்ட்ட தான் கேட்டுட்டுருக்கேன்..."
வாத்தியார் கை காட்டியதும் தெரியவில்லை. கண்ணாடியை கழட்டிக் கொண்டு வாக்கிய முடிவில் முறைத்துக் கொண்டிருப்பதும் தெரியவில்லை.
கீழே சம்மணமிட்டு அமர்ந்திருக்கும் சக மாணவர்களுக்குமே அது வியப்பு தான்.
"எந்த கேள்வி கேட்டாலும் டான் டான்னு பதில் சொல்லும் முந்திரி கொட்டை... இன்னைக்கு என்ன நின்னுக்கிட்டே தூங்கறானா..?"
கிசுகிசுப்புகளைத் தடி கொண்டு டேபிளில் அடித்து அமுத்தினார் வாத்தி.
சாதாரண கேள்வி... தொண்டையில் நிற்கும் பதில். மூச்சு விட்டால்... மானம் போகும். கால் விரல்களை சுருக்கி... எதையோ அடக்கிக் கொண்டிருந்தான் வள்ளுவன்.
காலம் பாவம் பார்த்திருக்கும். கினி கினி கினி கினி என ரீசஸ் பெல் அடிக்க... வகுப்பு அதுவாகவே கலைந்தது. ஆங்காரமாய் கலைந்தது.
8வது வரை ஆண்கள் "கழிவரைக்குத் தான்...போய்க் கொண்டிருந்தான். ஒன்பதாவது வந்த பிறகு ஏனோ அங்கு போகப் பிடிக்கவில்லை. அது ஒரு தொன்று தொட்டு வரும் வழக்கம் போலவே தான் அமைந்திருந்தது. ஒன்பதாவதுக்கு மேலிருக்கும் கூட்டம் பள்ளி காம்பவுண்ட் தாண்டி... மைதான உட்பக்கச் சுவரையொட்டி... என்று சந்து கிடைத்த இடத்தில் எல்லாம்... சர் சர்ரென நின்றபடியே... சீத்திருத்தம் செய்துக் கொண்டிருப்பர். 8வது வரை ட்ரவுசர் பசங்க. பள்ளி ரூல்ஸ் -ஐ மீறாதவர்கள். மீற தெரியாதவர்கள்.
"எங்க வள்ளுவனை..." என்று நண்பர்கள் தேட... பெல் அடித்த நொடியிலேயே காணாமல் போயிருந்தான்.
சார சாரயாய்... கூட்டம் கூட்டமாய் போய்க் கொண்டிருந்த கூட்டத்தில்... யார் யார் என்று யாருக்கும் தெரியாது. எல்லாம் சீருடையில்... சீக்கிரம் - மெல்ல என்பது மட்டும் தான் பிரிவு. ஒவ்வொரு வகுப்புக்கு முன்னும் இருக்கும் மரங்களில் இருந்து திடும்மென குதித்து வந்த குரங்குகள் போல தான்... திமு திமுவென வந்தும் போயும் இருந்தார்கள் மாணவ கண்மணிகள்.
நண்பர்களை... தெரிந்தவர்களை... தெரியாதவர்களை... தாண்டியபடியே நான் என்று ஒருவன் இல்லை என்பது போன்ற உடல் மொழியில் ஓடியும் நடந்தும் வாயைத் திறக்காமல் மூச்சை அளவாக விட்டபடியே கழிவரைக்குக்குள் நுழைந்தான் வள்ளுவன்.
பெரும்பாலும் கதவு திறந்து உள்ளே யாரும் செல்ல மாட்டார்கள். கழிப்பிட வராண்டா சுவர்... சுவரைச் சுற்றி இருக்கும் சிறு சிறு புதர்கள்... சுவருக்கு பக்க வாட்டில் இருக்கும் மரத்தடியில்... உள்ளே சிறுநீர் கழிப்பதற்கான நீளமாய் சரிந்து நிற்கும் சட்டகம் என்று முன்னும் பின்னும் முகம் சுழித்து தான் தினம் தினம் அரங்கேறும் அவசியம்.
இன்று வேறு வழி இல்லாமல் கதவைத் திறந்துக் கொண்டு உள்ளே செல்ல யோசித்த போது கதவைத் திறந்து கொண்டு உள்ளே செல்வதை யாரும் பார்த்து விடவும் கூடாது என்ற வயதுக்கே உண்டான படபடப்போடு நின்று சிறுநீர் கழிப்பவன் போன்ற பாவனையில்... சுற்றும் முற்றும் பார்த்தான்.
இருட்டிக் கொண்டு வந்த கண்களை சுருங்க குறுக்கிக் கொண்டான். எங்கிருந்து வியர்க்கிறது என்றே தெரியவில்லை. ஆனால் உடலில் எப்பக்கமும் வியர்வை. முதுகுத் தண்டில் எதுவோ அழுத்துகிறது.
உடல் நடுங்க... உள்ளே உரு தெரியாமல் சுழலும் புயலொன்றை கட்டுக்குள் வைத்தபடியே நகராத கால்களில் பலம் கொண்டு நிற்க... அதற்கு மேல் சமாளிக்க முடியவில்லை. கண்கள் சுழல... மீண்டும் வகுப்புக்கான பெல் அடிக்க... அருகே... முன் பின்னே நின்று கொண்டே சிறுநீர் கழித்த மாணவர்கள் வேக வேகமாய் நிறுத்தி விட்டு... படபடவென ஓட ஆரம்பிக்க... சரி... இது தான் சமயம் என்று கதவைத் திறந்து கொண்டு வேகமாய் உள்ளே போனான்.
போன மறு கணம் மூச்சு கனக்க... அப்படியே பதறியடித்து வெளியே வந்து குமட்டிக் கொண்டு நிற்கையில்... என்ன செய்வதென்றே தெரியவில்லை. உள்ளே சென்றால் இது தான் கதி என்று தெரியும்.
ஆனாலும்... இன்று கொஞ்சமாவது இடம் இருக்கும்.. சமாளித்து விடலாம் என்ற உந்துதல் வீணானது. இன்னமும் குமட்டல் நின்றபாடில்லை. உள்ளே உயிருள்ள மனிதன் ஒருபோதும் செல்லவே முடியாது.
வயிற்றுக்குள் உறுமும் சங்கடத்தை எதைக் கொண்டும் சரி செய்யவே முடியாது போல. நிற்கவும் முடியவில்லை. நகரவும் முடியவில்லை. உச்சந்தலை வேர்த்துக் கொட்டியதை... உடல் முழுக்க கனமாகி நிற்பதை உணர உணர பயம் சூழ்ந்து கொண்டது அவனுக்கு.
சிறுநீர் கழிக்கும் இடத்தைப் பார்த்தான். பரிதாபம் முதுகில் இருந்து தள்ளியது. தன்னைப் போல எவனோ ஒருவன் நேற்றோ முந்தா நேற்றோ இங்கே தத்தளித்திருக்கிறான். சாட்சியம் பூஞ்சையில் ஈக்கள் மொய்க்க அந்த நீள் சுவர் சொத்து சொத்தென சிறுநீரில் தேங்கி இருந்தது. இதற்கு மேல் இங்கு நிற்க முடியாது. திரும்பி பொதுவாக பள்ளியின் நடு மைதானத்தைப் பார்த்தான்.
ஆங்காங்கே சீருடைகளின் நகர்தலைக் காண முடிந்தது. ஓடியும் நடந்தும் எல்லாரும் அவரவர் வகுப்புக்குள் நுழைந்து கொண்டிருந்தார்கள். தானும் வகுப்புக்கு இப்போது செல்ல வேண்டுமே... அனிச்சை உந்தித் தள்ள... என்ன செய்வது. இன்னும் முக்கால் மணி நேரம் வகுப்புக்குள் அமர முடியுமா.
மதிய இடைவேளை வரை எதைக் கொண்டு அடக்க. அழுகை முட்டிக் கொண்டு வந்தது. சாரிடம் என்னவென்று சொல்வது. பசங்களுக்குத் தெரிஞ்சா கிண்டல் பண்ணுவானுங்களே. மரத்தின் பின்னே ஒரு மருண்ட நிழலை சுமக்க முடியாமல் வியர்த்து நின்றான். ஒவ்வொரு கட்டடமாக வகுப்புகளின் சத்தம் அடங்குவதை உணர முடிந்தது. நடக்கக் கூட முடியாது போல இருக்கிறது. உடலை இறுக்கிக் கொண்டு அங்கும் இங்கும் பார்த்தான்.
ஹெட்மாஸ்டர் வேறு ரவுண்ஸ் வந்து கொண்டிருக்கிறார்.
கடவுளே என்று கண்கள் பனிக்க... பலமாக தன்னை அடக்கினான். பற்கள் கடித்து கழுத்து நரம்பு புடைக்க... கால்களை மெல்ல ஊன்றியும் ஊன்றாமலும் அவர் வரும் திசைக்கு எதிர் திசையில் மரங்களை ஒட்டியே பதுங்கி பதுங்கி நடந்தான். ஊர்ந்தான் என்றும் சொல்லலாம்.
சரி.. மெயின் கேட் வழியாகவே வீட்டுக்குச் சென்று விட வேண்டியது தான். அப்படியே சென்றாலும்... வீட்டுக்கு 2 கிலோ மீட்டர் நடக்க வேண்டும். இந்த உலகமே... தன்னைத்தான் உற்று பார்ப்பதாகப் பட்டது. கண்களில் வழிந்த நீர் கன்னங்களை நடுக்கியது.
எதிரே வந்த கணக்கு வாத்தியார்... "ஏய்... பெல் அடிச்சு எவ்ளோ நேரம் ஆச்சு.. இன்னும் வெளிய சுத்திகிட்டு இருக்க.. போடா..." என்று குரலாலே கொலைச் செய்வார் போல. கத்தினார். சொற்களற்று திகைத்துப் பார்த்துக் கொண்டே படக்கென்று திரும்பி வேகமாய் ஆனால் படு கவனமாய் கால் விரல்களை இறுக்கி இறுக்கி அடிவயிற்றை இழுத்துப் பிடித்தபடியே... கண்ணீரைத் துடைக்கவும் மறந்த உணர்வற்ற நிலையில் மீண்டும் கழிவறை நோக்கியே நகர்ந்தான்.
ஒவ்வொரு வகுப்பில் இருந்தும் எல்லாரும் தன்னையே பார்ப்பது போலவும்... தன்னைப் பற்றி தான் பேசுகிறார்கள் போலவும்... மண்டைக்குள் கலக்கம் பொங்கி கொண்டிருந்தது. சூரியனின் வேக்காடு... அந்த மைதானம் முழுக்க கொள்ளி அள்ளி வீசிக் கொண்டிருந்தது. மூச்சடைத்தது போல உணர்ந்தான். சற்று நேரத்தில் மயங்கி விடவும் கூடும். மயங்கினாலும் பரவாயில்லை. மானம் போய் விட்டால்...
"என்ன சாப்பிட்டோம்... ஏன் இப்டி ஆச்சு..."
கீழே சிதறிக் கிடந்த காக்கை எச்சங்களை ஆசையோடு பார்த்தபடியே நடையைக் கூட்டினான்.
சுற்றிலும் வகுப்பு கட்டடங்கள் இருக்க... நடுவே ஒருவன் அங்கும் இங்கும் சுழன்றுக் கொண்டிருப்பதை பார்க்காமலா இருப்பார்கள். அவனே நினைத்துக் கொண்டான். வேறு வழி இல்லை. யாராவது கேட்டால் தலைவலி என்று சொல்லிக் கொள்ளலாம் - எப்படி என்றே தெரியாமல் எப்படியோ நகர்ந்து நகர்ந்து கழிவறை அருகே சென்று விட்டிருந்தான்.
எப்பக்கமும் திரும்பும் மனநிலை மறத்து போயிருந்தது. மதம் கொண்ட யானையைப் போல... சுவர் ஒட்டிய சந்தில் கை வைத்து கால் நுழைத்து... மூச்சு விடாமல் எகிறி வெளியே குதித்தான்.
பின்னால்... முள்ளுக்காடு. முள்ளுக்காடா அது... நல்ல காடு.
புதர் மறைவில் புதைந்து மறைந்தான்.
வானத்தின் இறுக்கத்தை களைத்துக் கொண்டிருந்து மேகம். இந்த உலகின் மிக பெரிய ஆசுவாசம் இது தான். போதும் போதும் என்றாகி இருந்தது எதுவோ. முகத்தில் வழிந்த வியர்வை குளிர்ந்திருந்தது.
எழுந்தான். உடலில் இப்போது தான் ஸ்திரம் வந்திருந்தது.
அங்கிருந்து அப்படியே கொஞ்ச தூரம் ஒற்றையடி பிடித்து நடந்தான். ஒரு பெரிய மரம். கீழே நிழலில் அமர்ந்தான். இப்போது தான் கவனித்தான். நிறைய முட்கள் அவனை பதம் பார்த்திருந்தது. ஆங்காங்கே வழியும் ரத்தத்தை கையாலேயே துடைத்துக் கொண்டான். அவன் மேல் மனித வாடை.
அழுகை தொண்டைக்குழிக்குள் முள்ளாய் அழுத்திக் கொண்டிருந்தது. நிழலும் வெயிலும் ஒரே நேரத்தில் சூழ்ந்திருக்க அந்த முள்ளுக்காடு... உலகின் இன்னொரு முகத்தோடு அமர்ந்திருப்பதை அதற்கான வாக்கியமற்ற பயத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான்.
அது அவனைக் காத்திருக்க செய்தது. அவன் காத்திருந்தான். சற்று நேரத்தில்... மதிய உணவுக்கான பெல் காதுகளில்... நீர் அள்ளி கொட்டியது. நிதானாமாய் முட்களில் கால் பட்டு விடாமல்... உடல் உரசாமல் நகர்ந்து நகர்ந்து சுவரொட்டி நின்று பார்த்து பக்குவமாய் சுவர் ஏறி உள்ளே குதித்தான். உடலில் புது தெம்பு வந்தது போல உணர்ந்தான்.
என்ன... ஒருத்தன் ஸ்கூலுக்கு பின்னாலருக்கும் காட்டுக்குள்ள இருந்து குதிக்கறான் என்பது போல வகுப்பை விட்டு பெல்லின் முதல் சில சத்தத்துக்கே வெளியே வந்து விட்ட சில மாணவர்கள் பார்க்க பார்க்க... போடா போடா என்பது போல... கூட்டத்தோடு கூட்டமாகக் கலந்தான்.
"டே வள்ளு... திடீர்னு எங்க கட் அடிச்சிட்டு போய்ட்ட... சுப்பு சார் கேட்டாரு... மதியம்... அடி உண்டுன்னு நினைக்கறேன்" என்ற நண்பன் டிபன் பாக்ஸை தூக்கிக் கொண்டு ஆல மரத்து பக்கம் ஓடிக் கொண்டிருந்தான். பசி கொண்ட புலிகளை ஒவ்வொரு மதியமும் உருவாக்கும்... அரசு பள்ளிக்கூடங்கள்.
"போங்கடா..." என்பது போன்ற அமைதி. சொல்லொணா வலி. இன்னமும் மிச்சம் இருந்தது. ஒரு மாதிரி அவமானமாக இருந்தது. நின்று திரும்பிக் கழிவறையைப் பார்த்தான். அருவருப்பு கூடிய முகத்தோடு... ச்சீ என்று அழுது விடும்.. ரகசியத்தை அவனால் சுமக்கவே முடியவில்லை. யார்கிட்ட என்னன்னு எப்படி சொல்றது. தன் மீதே ஏன் என்று தெரியாத வெறுப்பு வந்தது. எல்லாரும் சரியாதான் இருக்காங்க. நாம் மட்டும் தான் இப்டி என்ற தொடர்பற்ற பயம் அவனை சூழ்ந்தது.
அவன் தன் வகுப்பிற்குள் சென்று தன் பேக்கை எடுத்துக் கொண்டு யாரிடமும் எதுவும் பேசாமல்... வெளியே வந்தான். உள்ளே அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த சிலர்... "வள்ளு... என்னாச்சுடா... எங்க போன... இப்ப எங்க பைக்கட்டை தூக்கிட்டு போற" என்று கேட்டது எதுவும் காதில் விழவில்லை.
கேட்டை நோக்கி நடையைக் கூட்டினான். யாரையும் பார்க்க அவனுக்கு பிடிக்கவில்லை. வேகமாய் கேட்டை தாண்டி வெளியேறி நடக்க ஆரம்பித்தவன் கண்ணில் பள்ளி வெளிப்புற சுவற்றில் எழுதி இருந்த "நீரின்றி அமையாது உலகு" வாசகம் கண்ணில் பட்டது. பார்த்த வேகத்தில் படீர் என்று நின்றவன்... அதன் அருகே ஒரு ஆயுதம் போலக் கூர்ந்து சென்றான்.
பாக்கெட்டில் சொருகி இருந்த இங்க் பேனாவை திறந்து... அந்த " நீரின்றி அமையாது உலகு"க்கு அருகே "கக்கூசும்" என்று எழுதி விட்டு வேகமாய் வீட்டை நோக்கி நடந்தான். கொஞ்சம் சமாதானம் ஆனது போல இருந்தது என்னவோ.
- கவிஜி