"தம்பி எங்க டிக்கெட் ..."
"மணீகாரம்பாளையம்... ஒன்னு "
"இந்த குச்சி யாருது ... இதெல்லாம் பஸ்சுல ஏத்தக்கூடாதுனு தெரியாதா?"
"என்து… நா ... ஜவ்வுமிட்டாய் ... குச்சி ... ஸ்டாப் வந்து எடுத்துகிறேன்"
"உங்கள மாதிரி ஆட்களை பஸ்ல ஏத்தக்கூடாது, இந்த குச்சி ஒரு ஆள் இடத்தை அடைச்சுக்கும்.. தள்ளி நில்லு ..."
படிக்கட்டு ஓரத்தில், ஒருகையில் அந்த ஜவ்வு மிட்டாய் குச்சியை பிடித்திக் கொண்டிருந்த ரமேஷ், கர்நாடக மாநிலத்தை உள்ள ‘பீதர்’ என்ற மாவட்டத்தை சேர்ந்த ‘ உஜனி’ என்ற கிராமத்தை பூர்விகமாகக் கொண்டவன்.
ஜவ்வு மிட்டாய் செய்வது அவன் குல தொழில். தொழில் அபிவிருத்திக்காக ஈரோட்டுக்கு புலம் பெயர்ந்தான். திருமணம் ஆகி ஆறுமாதகாலம் ஆகி இருந்தது.
பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்தான். அவனது வலது கையும், வலது காலும் ஐம்பது சகவிகிதம் செயல்பாட்டை இழந்திருந்தது.
"எப்பா... ஜவ்வுமிட்டா... மணிகராம்பாளையம் வந்துருச்சு சீக்கிரம் இறங்கு..."
மெதுவாக பேருந்தை விட்டு இறங்கினான் ரமேஷ். தினமும் ஒவ்வொரு ஊராக செல்ல வேண்டிய அவசியம் ரமேஷுக்கு ஏற்பட்டது அதுவும் குக்கிராமங்களை தேர்ந்து பயணிப்பது வாடிக்கையாய் போனது. நகரத்தில் வீதிகள் மட்டும் தான் இருக்கிறது. குழந்தைகள் பெரும்பாலும் தொடுதிரையில் தங்களை தேடிக் கொண்டிருந்தன. இது போன்ற பஞ்சுமிட்டாய்களை யூடியூபில் பார்த்து ருசித்துக் கொள்கின்றன.
இடது கையில் மூங்கில் குச்சியை தூக்கி தோளில் சாய்த்துக் கொண்டு இடது காலை நன்றாக ஊன்றி வலது காலை விசுக்கி விசுக்கி நடந்தான். மூங்கில் குச்சியின் உச்சத்தில் இளம்சிவப்பு நிறத்தில் பாவாடை சட்டை அணிந்து ஜால்ராவை கையில் மாட்டியபடி சிரித்துக் கொண்டிருந்தது அந்த பார்பி பொம்மை.
பொம்மையின் கால்முடியும் இடத்தில் இணை வரியாக இளம்சிவப்பும், வெள்ளை நிரமுமாய் மூங்கில் குச்சியை சுற்றி சுற்றப்பட்டு இருந்தது ஜவ்வு மிட்டாய்.
இதழோரம் மெல்லியப் புன்னகையோடு சிறுவர்களைத் தேடி நடந்தான் ரமேஷ்.
"டேய் அங்க பாருடா ஒருத்தன் குச்சிலே பொம்மைய தூக்கிட்டு வாரான் வாங்கடா ரவுசு பண்ணுவோம் " என்று தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறார்கள் ரமேஷை சுற்றி வளைத்தனர்.
"இது பெயர் என்ன ..."
"இது ஜவ் மிட்டாய் ... வேண் மா"
மூங்கில் குச்சியை உயர்த்தி பொம்மையை சத்தம் எழுப்ப செய்தான்.
எல்லோரும் கொல் என்று சிரித்தனர். இனி ஒரு ஐந்தாண்டுகளில், இது போன்ற மிட்டாய் இருந்ததும், இதை வீதிகளுக்கு கொண்டு வந்தவர்களையும் இந்த உலகம் மறந்து போவது உறுதி.
"மாமா எனக்கு இந்த மிட்டாய் தருவியா? என்றது அந்த கூட்டத்தில் அரைக்கால் சட்டை போட்டிருந்த குழந்தை.
நடுங்கிய வலது கையில் மூங்கில் குச்சியில் இருந்த ஜவ்வுமிட்டாயை இழுத்தான் ரமேஷ். பெயருக்கு ஏற்றவாறு ஜவ்வாய் அவன் இழுவைக்கு இசைந்து கைகளில் அப்பிக் கொண்டது மிட்டாய். அதை ஒரு கைகடிகாரமாக மாற்றி அந்த குழந்தை கையில் மாட்டினான் ரமேஷ்.
"இருபது ரூபா..." என்று இருவிரலில் ஜாடை செய்தான்.
"இல்ல ..." கையை விரித்தபடி ஓடி ஒழிந்தது குழந்தை.
"எனக்கு ஒன்னு ... எனக்கு ஒன்னு ..."
"காசு வேணு ... கொண்டாங்க ... நான் இதுல பாம்பு, மயில் எல்லாம் பண்ணித் தரேன்."
பொம்மையையும், மிட்டாயையும் வெறித்து பார்த்துக் கொண்டிருந்த கூட்டம் வாங்கப் போவதில்லை என்பதை அறிந்த ரமேஷ் அங்கிருந்து மெதுவாக நகர்ந்தான். வெயிலின் சூடு தலையை கனத்தது. சட்டைப் பையில் இருந்த காசு அவன் திரும்ப பயணிப்பதற்கு சரியாக இருந்தது.
வீதி வீதியாய் அலைந்தான்... வெறித்துப் பார்த்தபடி நகர்ந்தார்கள் சிலர்.
இப்படிப்பட்ட சமூகத்தை இவன் என்ன செய்துவிட முடியும். சலிக்காமல் நடந்தது அவன் கால்கள்.
"ஏம்ப்பா இங்க வா ... ஜவ்வு மிட்டாய் எவ்வளவு ..."
"இருபது ..."
"ஒன்னு கொடு..."
சற்று ஆறுதலாய் அந்த குரல் ஒலித்தது.
அழகான வாத்து பொம்மை ஒன்றை ஈன்றது அவன் விரல்கள்.
ஜால்ரா ஒளியை எழுப்பிய படியே நகர்ந்தான். மத்திய வேளை வீதிகள் வெறிச்சோடிப் போயிருந்தது. ரோட்டோரத்தில் ஒரு தேனீர் கடை தென்பட்டது.
தேநீர் என்ற ஒன்று கண்டுபிடிக்காமல் இருந்திருந்தால் பசிக்கொடுமை இன்னும் தலைவிரிக் கோலம் கண்டிருக்கும். அவன் சட்டைப் பையில் இன்றைய வருமானம் இருபது ரூபாவாக அமர்ந்திருந்தது, அதை வெளியில் எடுத்துப் பார்த்தவாறு ... கடைக்கு வெளியில் போடப்பட்டிருந்த நாற்காலியில் தன் சுமையை ஓரமாக இறக்கி வைத்துவிட்டு பெருமூச்சுடன் அமர்ந்தான்.
கடையில் சற்று கூட்டம் அதிகமாக இருந்தது. சாலையை வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தான். அறுபது வயது முதியவர் சைக்கிள் ஒன்றில் விற்பனைக்குப் போகாமல் சிறிய கயிற்றில் ஊசலாடிக் கொண்டிருந்த பொம்மைகளும் , பலூன்களும் கொண்டு அல்லாடிக் கொண்டிருந்தார்.
தேநீர் கடையை வெறிக்கப் பார்த்தவாறு நின்றார். யாரும் கண்டு கொள்ளாமல் இருந்தனர். சக தொழிலாளியை புரிந்து கொண்ட ரமேஷ். ஓரத்தில் இறக்கி வைத்த சுமையை திரும்பவும் எடுத்து தோளில் வைத்தான். அவனிடம் இருந்த இருபது ரூபாயை அந்த முதியவரிடம் கொடுத்தான். முதியவர் முகம் மலர்ந்தது.
இதை அனைவரும் வேடிக்கை பார்த்தனர் மூங்கில் குச்சியின் உயரத்தில் இருந்த பொம்மை ஜால்ராவை தட்டி சிரித்துக் கொண்டது…
- சன்மது