நெடுந்தூரம் நீண்டு கிடந்த தண்டவாளத்தின் மீது பனிப்பொழிந்து கொண்டிருக்க சிவப்பு விளக்கு எச்சரிக்கைக்காக மின்மினிப் பூச்சி போல அதன் அருகில் இருந்த கம்பத்தில் பளிச்சிட்டிருந்தது.

டீக்கடைக்காரரின் ஆகப்பெரும் மனித நேயத்தில் மீந்துப் போன பாலைக் குடித்த மிதப்பில் பயணிகள் இருக்கையருகே ஆயாசமாக உறங்கிக் கொண்டிருந்தது ஒரு நாய்.

பாலக்காடிலிருந்து சென்னை செல்லும் அந்த ரயிலிற்காக இரவிலும் ஏகப்பட்ட கூட்டம்.

எல்லா வகையான மனிதர்களையும் பார்த்துப் பழகிய நாய்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இரவை கடத்திக் கொண்டிருந்தன. குணாவும் அவன் நண்பர்களும் இன்றைய பட்ஜெட்டின் கடைசி சிகரெட்டை முடிக்க ரயில் தன் வருகையை காற்றில் எதிரொளித்தது.

'டேய் நாகா கடைசி டெண்டு பெட்டிதா அன் ரிசர்வ், நானும் பிரகாஷும் ஒரு பெட்டியில ஏறிக்கிறோம். நீயும் விஜயும் ஒரு பெட்டியில் ஏறிக் கங்க. ஏதாவதுனா போன் பண்ணுங்க' என்றான் குணா.

'ஓகே ஓகே டா'

கனத்த சுமைகளுடன் ரயிலுக்காக பயணிகள் ஆயத்தமாக பயணிகளையும் ரயிலின் உரத்த ஒலியையும் கேட்டு கண்விழித்த நாய் தலையை உயர்த்தி நோட்டமிட்டு மீண்டும் உறக்கத்தில் ஆழ்ந்தது.

பேசினார் போலவே குணாவும் பிரகாசும் ஒரு பெட்டியிலும் விஜயும் நாகேந்திரனும் ஒரு பெட்டியிலும் ஏறிக் கொண்டனர்.

கூண்டுக்குள் அடைக்கப்பட்ட பிராய்லர் கோழி போல மக்கள் நெரிசல் சன்னல் கம்பிகளையும் அகன்று நுழைவு வாயில்களையும் நிறைத்துக் கொண்டு உள்ளேறும் காற்று மூச்சுக் காற்றோடு சூடேறிப் பரவ பேச்சொலிகளின் சலசலப்பும் அவ்வாறே உச்சத்தை தொட குணாவும் பிரகாசும் கழிவறையின் முன்னே காவலாளிகளைப் போல நின்றிருந்தனர்.
ஆவலோடு உறவுகளைத் தளுவ செல்பவர்கள் உலகை சுற்றும் பரவசச் சூழலில் நீந்துபவர்களென அந்த ரெயில் பெட்டியின் எண்ண அலைகள் பலவண்ண கனவுகளாக அலைபாய்ந்திருந்தது.

பெட்டியின் நடுமத்தியில் தங்கள் இருப்பை நிலைநாட்டிக் கொண்ட காதல் ஜோடி கூட்ட நெரிசலின் இயல்போடு தங்கள் நெருக்கத்தையும் அதிகமாகிக்கொண்டே ஆதி மொழியில் கண் கொண்டு தங்கள் காதலை பரிமாறிக் கொண்டிருந்தது.

அருகே இருந்த இருக்கையில் தங்களின் நினைவுகளை அசைபோட்டிருந்து தம்பதிகளின் குழந்தை தூங்கி வழிந்து தலை சாய்க்க விழிப்புத் தட்டியது.

'டேய் குணா, சபரி,கார்த்திக்ளாம் வர்ராங்களா'

'ஏண்டா நீ வேற... டேய், சபரி ஓட அம்மா டாக்டர், கார்த்தி ஓட அப்பா தாசில்தார் அவங்களுக்கெல்லாம் எப்படியோ ஏதாவது ஒரு வழியில் கிடைச்சிடும். நமக்கு அப்படியா'

'ஆமாம்.. மா நீ சொல்றதும் சரிதான், நாம அங்க போய் எங்க தங்கறது ரூம் புக் பண்ணிக்கலாமா???'

'ஏன் ஓலா புக் பண்ணி தரியா? அந்த அளவுக்கெல்லாம் போக முடியுமா'

'அப்ப மூடு ஸ்டேஷனில் இறங்கி அங்கேயே பப்ளிக் பாத்ரூம்ல குளிச்சுட்டு ஜம்முனு கையேந்தி பவன்ல சாப்பிட்டு கிளம்புறோம் சரியா' என்றான் பிரகாஸ்

'அடக்கருமமே இனி நீ ஏத்துக்கிட்டாலும் ஏத்துக்கலனாலும் இதான் நெஜம்.'

'சரி, நம்ம ரம்யா மேட்டர் என்ன ஆச்சு.'

'ரம்யாவ சுரேஸ் பார்த்துப்பான் நீ அங்க பாரு free show'

'அடேங்கப்பா பையன் ரொம்ப காஜி போல இந்த தடவு தடவறான் விட்டா இங்கேயே.....'

'ரொம்ப நேரம் பார்க்காத மானம் போயிடும்.'

'டேய் வா அந்த அண்ணன் படிக்கட்டிலிருந்து எந்திரிக்கிறார் கொஞ்ச நேரம் நாம உட்காரலாம் கால் வலிக்குது.'

'சரி. நாம கொடுத்து வெச்சது அவ்வளவுதான் எஞ்சாய்'

'இருவரும் அவ்விடத்தை விட்டு நகர்ந்து படிக்கட்டில் அமர ஒரு சொட்டை தலை மனிதர் காதல் ஜோடிகளின் அருகில் சென்று நின்றுகொண்டார்.'

ரயில் பெட்டி நிறைய வாசனைக் காற்று நிரம்பி வண்ணத்துப்பூச்சிகள் படபடக்க ஏ.ஆர்.ஆர்.ன் இசை வெள்ளமாய் பாய்ந்தோடும் நினைப்பில் கள்ளுண்ட வண்டு போல மதிமயங்கி கைகளால் காமத்தைக் கடத்திக் கொண்டிருந்த ஜோடிகளை ரசித்து நிறைந்த சொட்டைத் தலைகாரர் ஜிப்பை இறக்கியதை அதை அந்தப் பெண் கவனித்துவிட ஒரே வீச்சு
சப்த நாடியும் அடங்கியது போலானது அந்தப் பெட்டிக்குள்.

சொட்டை தலையில் குபீரென வெளிக் கொட்டியது வியர்வைத்துளிகள். ஆங்கிலம் கலந்த கெட்ட வார்த்தைகள் குதித்தோடின

என்ன பார்த்து அப்படி செய்யறாங்க பன்னி --- என அடுக்க அனைவரும் பொதுக் கடமையை செய்து சிறப்பு செய்ய கூனிக் குறுகிப்போனார் அந்த மனிதர் தொடர் மழை துளி போல வசவுகள் வந்து விழ கோபம் தீர திட்டியும் அடித்தும் கலைத்த அந்தப் பெண் முகத்தில் தீக்கங்குகள் சீர நின்ற அந்த இடம் மயானத்தின் கோர அமைதியை வலிய இழுத்துக் கொண்டது.

சில நிமிடங்களில் விசாரணை தோய்ந்து மெல்ல இயல்பு திரும்பியது. ஸ்டேஷன் நெருங்க நெருங்க அந்த மனிதர் வழியிலேயே குதித்து விடுவதைப் போல பதைபதைத்து பதட்டத்தோடு இருந்தார் சேலத்தில் வண்டி நிற்கவும் சடாரெனத் துள்ளி குதித்து ஓடி மறைந்தார்.

இன்னும் சிலர் அங்கே இறங்க காற்று கொஞ்சம் விலாசமாகி பரவியது. குணாவும், பிரகாசம் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு அந்தப் பெண்ணைப் பார்த்து விட்டு தலை குனிந்து கொண்டனர்.

தடக்...தடக்... என்று சத்தம் இரவின் மென்மையை கலைத்த போதுமே தூக்கம் அழையா விருந்தாளி போல பலரையும் போர்த்தியிருந்தது. இன்னும் சில நிமிடத்தில் விருதுநகர் ஸ்டேசன் வந்துவிடும். சில இருக்கைகள் காலியாகும் இலேசாக மல்லுக்கட்டினால் ஒரு சீட்டாவது கிடைக்கும்.

குணா ஒரு இருக்கையின் அருகே நின்று நோட்டமிட்டான் வாய்ப்பு இருப்பது போலிருந்தது. விருதுநகர் ஸ்டேஷனும் வர இரு சீட்டுக்களை பிடித்தனர் குணாவும் பிரகாஸும்

'டேய் வண்டி இங்க கால் மணி நேரம் நிற்கும் ஒரு டீ சாப்பிடலாமா என்றான் பிரகாஷ்.'

'சரி வா'

சைக்கிளில் கட்டப்பட்ட பாய்லரிலிருந்து தேநீர் திறந்து விடப்பட ஆவி படர்ந்து இரவின் குளுமையில் கலந்தது.

காய்ந்த தொண்டையில் இஞ்சி கலந்த தேனீர் உற்சாக போதையை ஏற்ற குணா பணத்தை எடுக்க பேன்ட் பாக்கெட்டில் கைவிட்டான்.

'மச்சா பணத்தை காணாம்டா'

'வெளாடாதடா'

'உங்கிட்ட சுத்தமா காசு இல்லையா'

'யெரநூருவா அக்கவுண்ட்ல இருக்குடா'

'ஆயிரம் வச்சிருந்தே அத வச்சி தான் நாளைத்த பிளானே'

'சரி, பதட்டப் படாதே' என பிரகாஸ் டீக்கு காசு கொடுக்க இருவரும் பெட்டிக்குள் சல்லடை போட்டனர்.

'தம்பி என்ன தேடுறீங்க'

'என் பாக்கெட்டில் ரெண்டு 500 ரூபாய் நோட்டு வச்சிருந்தேன் காணாம் பாத்திங்ளா'

'தம்பி நீங்க இறங்கி போனதுக்கப்புறம் இங்க உட்கார்ந்திருந்த ஒருத்தர் இறங்கினார். அந்த இடத்துல குனிஞ்சி என்னமோ எடுத்தார். என்னன்னு தெரியல.'

'கைல கட்டப்பை வச்சிருந்தாரே அவரா'

'ஆமா அவரே தா'

'சரி, விட்ரா இந்த நேரத்தில அவன எங்க போய் தேடுறது. பசங்க யாராவது பணம் அனுப்ப சொல்லலாம். பாத்துக்கலாம்டா'

'Free ய விடு' என சமாதானப்படுத்தினான்.

குணாவின் மூளைக்குள் சுறுசுறுவென எண்ணங்கள் ஓடி விளையாடின உழைப்பின்,வருமையின் துயரமான எண்ணங்கள்.

'ஒரு நிமிஷம் வெளியே வாடா'

'ஏன் டா'

'வா சொல்றேன்'

இருவரும் கீழே இறங்கிய சில நொடிப் பொழுதில் சங்கொலி முழங்கியது.

'டிரெயின் கிளம்புதுடா'

'போகட்டும் அவன பிடிச்சே ஆகனும்.'

'சரி வா பார்த்துக்கலாம்'

இருவரும் ஸ்டேசனுக்கு வெளியே ஏடி.எம்.மில் 200 எடுத்துக்கொண்டு நடக்க ஆட்டோக்கள் வரிசையாக அணிவகுத்து நின்றன.

'அண்ணா இப்ப யாராவது சவாரிக்கு வந்தாங்களா? கையில கட்டப்பையோட'

'ஆமாம்பா இப்பதான் போறான் பஸ் ஸ்டாண்ட் சவாரி.'

'அண்ணா உடனே வாங்கணா அவன பிடிக்கணும், பணத்த அடிச்சுட்டான்'

'உட்காருப்பா போலாம்' ஆட்டோக்காரர் முரட்டு வேகத்தில் பாய வாகனங்களில்லாத விருதுநகர் சாலை குளத்து நீரின் தேகத்தைப் போல சலனமற்று கிடந்தது. சூழலைப் புரிந்துகொண்டு ஆட்டோக்காரர் காற்றை சூடாக்கிப் பாய்ந்தார்.

சரியாக ஆட்டோ நிற்குமிடத்தினருகிலேயே பக்கவாட்டிலிருந்து நடந்து வந்துகொண்டிருந்தான் அவன்.

'தம்பி நீங்க போய் முதல்ல கேளுங்க ஏதாவது ராங் பண்ணான்ன பின்னாடியே நா வரேன்.'

'நீங்க இப்பத்தான ட்ரெயின்ல இருந்து இறங்கி வரீங்க.'

'ஆமா அதுக்கென்ன'

'பணம் மிஸ் ஆயிடுச்சு அதான் கேட்க வந்தோம்'

'பணமா எனக்கு தெரியாது நான் எடுக்கல'

'நீங்க தான் எடுத்ததாக ஒருத்தரு சொன்னாரு அதான் இவ்வளவு தூரம் வந்தோம்.'

'அங்க நான் மட்டும்தான் இருந்தனா'

'டேய் பணத்தை திருடிட்டு ஏமாத்தரயா' என ஆட்டோகாரர் கோபத்தோடு கை தூக்கி நிற்க

'என்ன என்ன ஆளுகள கூப்ட்டு மிரட்டரயா? நானும் இந்த ஊருகாரந்தான் பசங்க கூப்பிடட்டுமா...

'யார வேணா கூப்ட்ரா பார்க்கலாம்..' என அவன் சட்டையைப் பிடித்து குலுக்கி.

பரிசை பிடிங்கி இந்த தம்பி செக் பண்ணுங்க என குணாவிடம் நீட்ட அதில் ஒரு ஐநூறு ரூபாயும் மூன்று நூறு ரூபாய் நோட்டுக்களும் மீதி சில பத்து ரூபாய் நோட்டுகள் இருந்தன.

'அண்ணா நா ரெண்டு 500 வைத்திருந்தேன். அது இது இல்ல'

அவன் பாக்கெட் கட்டப்பை எல்லாம் சோதனையிட அந்த இரண்டு ஐநூறும் கிடைக்கவே இல்லை.

ஆட்டோக்காரரை மிரட்டிவிட்டு 'இருங்கடா நான் போய் என் ஆளுகள கூட்டிட்டு வரேன்' என போனை நோண்டிக் கொண்டே நடந்தான்.

'என்ன தம்பி இப்படியாகிப்போச்சு'

'இல்ல ணா இவன் மட்டும் தான் விருதுநகர்ல இறங்கினான் வேற யாருமே இறங்கல'

'ஒரு வேள உங்க கிட்ட சொன்னாரே அவரு எடுத்திருந்தா' என்றார் ஆட்டோக்காரர்.

'அப்படியே பழக்கடை ஓரமாக நிற்க உள்ளிருந்த பழக்கடைக்காரர் விபரத்தை கேட்டு இப்பதான் அவன் பழம் வாங்கிட்டு ஐநூறு ருபாய்க்கு சில்ர மாத்திட்டு போறான்' என்றார்.

ஆட்டோக்காரருக்கு வந்ததே கோபம் ஓடிச்சென்று குறுக்கில் ஒரு உதை பழங்களோடு சாலையில் விழுந்து உருண்டு மிரண்டு எழுந்து நின்றான்.

'டேய் வெண்ண மவனே அந்த கடைல பழம் வாங்கினயாமா'

'ஏது பணம்'

'அது என்னோட பணம்'

வெடுக்கென அவனுடைய பர்சை பிடுங்கி மொத்த பணத்தையும் குணாவின் கையில் கொடுத்தார்.

'வாங்க தம்பி போகலாம்' என ஆட்டோவை நோக்கித் திரும்ப வழியில் குறுக்கிட்டு தடுத்தான்

'என்னடா அடிச்சு புடுங்கிட்டு போறீங்க.. பணம் என்னோடது.'

குணாவுக்கு கோபம் கொப்பளித்து கன்னத்தில் பளீரென அறைய ஆட்டோ கார் அடுத்தடுத்து சமாதானப்படுத்தினார்.

'என்ன எல்லோரும் சேர்ந்து அடிக்கிறீங்களாடா... உங்க பணம்னா வாங்கடா போலீஸ் ஸ்டேஷன் போலாம்'

'டேய் அத நாங்க சொல்லணும் டா'

'அண்ணே அவனை வரச்சொல்லுங்க'

'போலாம் வாடா'

'சார், சார்,'

'யார்யா என்ன'

'இவங்க பணத்தை எடுத்துட்டு ஏமாத்துறான் சார்...'

'உள்ள வா' ஆட்டோகாரர் முன்னே நடக்க குணாவும்,பிரகாசும் பின்னே வர கடைசியாக அவன் தயங்கி தயங்கி நுழைந்தான்.

'என்னங்கடா என்ன பி்ரச்சன' போலிஸ்காரரின் பேச்சே எண்ணெயில் குளித்த சூடான பச்சை மிளகாயைப் போலிருந்தது.

'சார், இந்த பசங்க பணத்த'

'டேய் நீ ஆட்டோக்காரன் தான மூடிட்டு வெளியே போ' குதித்தெழுந்து லத்தியை ஓங்கியபடி குணாவினருகே வந்தார்.

'சார், என்னோட பணம் கீழ விழுந்துருச்சு அதை எடுத்துக்கிட்டு இவனோடதுனு சொல்றான் சார்,'

'எவ்வளவு டா'

'ஆயிரம் ருபாய் சார்,'

'இல்ல,சார் அது என்னோட பணம் தான்'

'ஆமா நீங்க ரெண்டு பேரும் எங்க போறீங்க உங்க பேரென்ன'

'சார், என் பெயர் குணா அவன் பேரு பிரகாஸ்'

'திண்டுக்கல் அண்ணா யுனிவர்சிட்டில படிக்கிறோம். இன்டர்வியூக்காக சென்னை போறோம்.'

'ஆயிர ஓவாய்க்காக நடு ராத்திரில ரெண்டு பேரும் தூக்கத்த கெடுக்கரீங்களேடா'

'சரி ரெண்டு பேரும் என்னோட பணம்னு சாமி மேல சத்தியம் பண்ணு' என சுவரில் மாட்டப்பட்டிருந்த லட்சுமி படத்தைக் நோக்கினார். குங்குமம் திந்நூரு பூசப்பட்டு சிறு குமிழ் விளக்கு அதன் முன் எரிந்துக் கொண்டிருந்தது.

வேகமாக சென்ற அவன் விளக்கின் மேலாக கையுயர்த்தி 'சாமி மேல சத்தியமா இது என் பணம். நா பொய் சொன்னா சாமி தண்டிக்கப்படும்' என்றான்.

'டேய் நீ போ'

'இது நான் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் சாமி மேல சத்தியம்' என்றான் குணா.

'டேய் நீ போ'

'சார், எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்ல'

'என்னடா திமிரா பேசுற' லத்தியால் லேசாக அவன் வயிற்றில் இடிக்க வயிற்றைப் பிடித்தபடி தள்ளி நின்றான்.

மீண்டும் மீண்டும் அதேபோல் இரண்டு தடவை சத்தியம் செய்து விளையாடிக் களைத்த தூக்க கலக்கத்தின் உச்சியில்

'போங்கடா வெளியே' என லத்தியை சுழற்றி குணாவின் காலில் விலாசிட அதிர்ஸ்டவசமாக லேசான வருடலோடு தப்பி அனைவரும் அங்கிருந்து வெளியேறினர்.

'டேய் இருஹ்கடா என் ஆளுக வரட்டும் உங்கள் என்ன பண்றேனு பாருங்க..'

'போடா வெங்காயம்'

'குணா அங்க பாரு பஸ் போகுது..'

விருதுநகர் பேருந்து நிலையத்தின் எல்லைக் கோட்டைத் தாண்ட எத்தனித்த பேருந்தை ஓடிப்பிடித்து ஏறிக்கொள்ள காலியான இருக்கைகள் அவர்களை வரவேற்றன.

'ஸ்வப்பா எப்படியோ ஒரு‌ வழியா பணம் கிடைச்சிருச்சு.'

'ஆமாடா' என நிம்மதிப் பெருமூச்சு விட்டான் குணா.

ஜன்னலோரம் வீசிய காற்று தூக்கத்தை மீட்டியது. நடந்ததையெல்லாம் விஜயிடம் கதைக்கத் தொடங்கினான் பிரகாஸ். மெல்ல சூரியவெளிச்சம் நகர் எங்கும் எதிரொலிக்கத் தொடங்கியது.

- அ.இம்ரான் ஹக்

Pin It