வாங்கி வந்த நாளிலிருந்து
எப்படிக் கட்டினாலும் அவிழ்ந்தோடும் செவலைக்கு அப்படி அடிவிழும்
மூக்கணாங்கயிற்றை சொடுக்கிய வேகத்தில்
ஒழுகும் இரத்தத்தை
வலியோடு நக்கிட
அஃறிணை உயிர்களுக்கும் கண்ணீர் வருவது
சிறார்களுக்கு வேடிக்கை
குச்சிகள் பதிந்த தழும்பில் புண் தேடும் பழக்கதோஷ ஈக்கள்
ஓடுவதற்காக அடிபடவும்
அடி விழுமென ஓடுவதுமாய் பெரிய மாற்றமில்லை
அதன் வாழ்விலும்
பெருநகரப் பிழைப்பில்
விடுமுறைக்கு ஏங்கி
உறவுகளைப் பார்க்க
பயணப்படும்போது புரிகிறது
கயிறு பிய்ந்தோடும்
செவலை
வேறு மாடுகளை நுகர்வதெல்லாம்
பால்யத்தில் பிரிந்த சொந்தங்களை
வாசனை பிடிக்கும் உத்திதானென்று.

- ந.சிவநேசன்

Pin It