சங்கப் பாடல்களின் கூறுகளை உள்வாங்கிய இக்காலக் கவிஞர்களின் கவிதைப்போக்கு அதன் பாடுபொருள் பற்றிய விரிவான பார்வையும், ஒப்பீடு சார்ந்து கவிதையின் வகைமைகள், பெண் எழுத்துக்களின் எல்லை, விமர்சனம் இவற்றின் ஊடான கருத்துக்களை முன்வைத்து இவ்வாய்வுக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
தமிழிலக்கியத்தின் நீண்ட நெடிய பரப்பில் சங்க இலக்கியம் முக்கியத்துவம் வாய்ந்த செவ்வியல் படைப்பாக அமைந்துள்ளது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பான படைப்பாக்கத்தில் பெண் படைப்பாளிகளின் பங்களிப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. ஆண் புலவர்களுக்கு இணையான புலமையோடும் படைப்பாற்றலோடும் பெண் புலவர்கள் படைப்புத் தளத்தில் தங்களின் முத்திரையைப் பதித்துள்ளனர். சங்க நூல்களில் சுமார் நாற்பது பெண் கவிஞர்கள் பாடல்கள் பாடியுள்ளனர். அவ்வை என்னும் பாடினி வீரார்ந்த கவிதை மொழியை பேசும் தன்மையை அறிய முடிகிறது. சங்கப் பெண் கவிஞர்களின் கவிதைகள் நேரடியான உணர்ச்சித் தளத்தில் ஆணுக்குப் பெண் நிகராக வெளிப்பட்ட மொழியை காண முடிகிறது. ஆனால், தொடர்ந்து உருவான தமிழ் இலக்கிய உருவாக்க மரபில் பெண் கவிஞர்கள் மரபு காணாமல் போய்விட்டது. இதற்கான காரணங்களை இருபத்தியோராம் நூற்றாண்டில் மீண்டும் உருப்பெற்றிருக்கும் வளமான பெண் கவிஞர்களின் கவிதைகளில் அறிய முடிகிறது. மேலும் சங்க காலத்திற்குப் பிறகு தற்காலத்தில் புதுக்கவிதைப் படைப்பு சார்ந்தே மிகுதியான பெண் படைப்பாளிகள் இயங்குகின்றனர் தமிழுக்கு அறிமுகமான இலக்கிய வகை உருவம், உள்ளடக்கம் சார்ந்து பல்வேறு பரிசோதனை முயற்சிகளை மேற்கொள்ள இடம் அளித்தது. இந்நிலையில் பெண்கள் தங்களின் விளிம்பு நிலை வாழ்க்கையை, இரண்டாம் பாலினமாகப் பார்க்கும் சமூக மதிப்பீடுகளை முன்வைத்து கவிதை தளத்தில் பெண் படைப்பாளிகள் இயங்கத் தொடங்கினர்.வகைமைகள்
இலக்கிய வகைகளை அகம், புறம் என்ற அடிப்படையில் இலக்கியத்தை வகைப்படுத்திக் காட்டுகிறது. பல்வேறு இலக்கிய வகைகள் அமைவதற்கு வடிவம், பாடுபொருள் முதலியன அடிப்படையாக அமைவது இலக்கிய வகைமையின் கோட்பாட்டு முறைகள் ஆகும். சங்க இலக்கியத்தில் முதல், கரு, உரி என்ற இம்மூன்றனுள் உரிப்பொருளே சிறப்பானது. ஏனெனில், முதற்பொருள் பயின்றுவராத, கருப்பொருள் காணப்படாத பாக்களைக் கூட காணலாம், ஆனால் உரிப்பொருளற்ற கவிதை ஒன்றையும் காண இயலாது. இதே தன்மையில் இக்கால கவிஞர்கள் கவிதையில் உரிப்பொருள் இடம்பெற்று இருப்பதை உணரலாம்.
அகவகைமை - கூறுகள்
- சங்க இலக்கியத்தில் அகத்திணை பற்றிய பொதுவான செய்திகளை அறியலாம்.
- அகம் சொல்லாய்வு, பொருளாய்வுகளைப் பற்றியும் அகத்திணைச் சிறப்புப் பற்றியும் தெறிந்து கொள்ளலாம்.
- சங்க அக இலக்கியங்கள் நாடகப் போக்கில் அமைந்துள்ள பாங்கையும் உளவியல் பாங்கையும் உள்ளுறை, உவமம், இறைச்சி போன்ற நுணுக்கத் திறன்களையும் விரிவாக அறியலாம்.
- அக இலக்கியங்களின் வளர்ச்சி பற்றியும் அதன் வழி தற்காலம் வரை அவை விரவியுள்ளதையும் மிக விரிவாக புரிந்து கொள்ள முடிகிறது.
புறவகைமை - கூறுகள்
- சங்க இலக்கியத்தில் புறப்பொருளில் அடங்கிய போரியல், அரசியல், சமூகவியல், சமயவியல், வாழ்வியல் ஆகியன பற்றி அறிந்து கொள்ளலாம்.
- புறப்பொருள் சிறப்பு - போர்க்குரிய காரணங்கள் - தலைமைக்குரிய தகுதி - வெற்றியையும் புகழையும் அரச குடியினர் விரும்பியமை ஆகியன பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
- அரசியல் நெறி - சமயம் - உலகியல் வாழ்வு.
- கொடை - அறவுணர்வு
சங்க காலம் - தற்காலம் - பாடுபொருள்
சங்க இலக்கிய காலத்தில் பெண்கள் ஆணின் உடைமையாகவே பார்க்கப்பட்டனர். பெண்களின் அழகே முன்னிருத்தப்பட்டு பாடல்கள் புனையப்பட்டன. இருப்பினும் சங்க இலக்கியத்தில் பெண்பாற் புலவர்களும் அகப்பொருள் பற்றிச் சுதந்திரமாகப் பாடியமை காண முடிகிறது. பின்னர் தோன்றிய பக்தி இலக்கிய காலத்தில் பல பெண்பாற் புலவர்கள் இறைவனைப் பாடி இருக்கின்றனர், ஔவையார், ஆண்டாள், காரைக்கால் அம்மையார் போன்றோர் குறிப்பிடத்தக்கவர். அக்கால பெண்பால் கவிகளின் பாடுபொருள் இயற்கை இறைபக்தி, நன்னெறி கூறுகள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டிருந்தது. சங்க காலத்தைப் போன்று பிற்காலத்தில் பெண்கள் சுதந்திரமாக தன் உள்ளத்தைப் பாடுவதை, அகப்பொருள் இலக்கியம் படைப்பதை ஏற்றுக்கொள்ளாத நிலையையே காண முடிகிறது. நவீன இலக்கிய காலத்தில் சமூகம், வாழ்வியல் நெறி, பெண்ணியம், காதல், இறைவழிபாடு என்று பல தளங்களிலும் பெண் கவிஞர்கள் கவிதை படைத்துள்ளார்கள்.
சங்க காலச் சமூகத்தில் பெண்கள் வீட்டு வேலை, கதிரறுத்தல், தினைப்புனம் காத்தல், போன்று குடும்பம் சார்ந்த தொழில்களில் மட்டுமே ஈடுபட்டநிலை இருந்தது. பெண்கள் பொருளீட்ட வெளியில் செல்லும் நிலை காணப்படவில்லை. சமூக வளர்ச்சியில் பங்கேற்றதையும் காண முடியவில்லை. தற்காலத்தில் பெண் சமூகம், வீட்டு வேலைகள், அலுவலக வேலைகள், குடும்பம் குழந்தைப்பேறு, வளர்ப்பு நிலை என்று பல நிலைகளில் தன்னை ஈடுபடுத்தி வருவதும், அதனோடு படைப்பு உலகில் கால் பதிப்பதும் பெரும் சவாலாக உள்ளது. பெண் தன் உள்ள உணர்வுகளை வெளியிடுவதற்கு சமூகம் அனுமதிப்பதில்லை. இயல்பான இத்தகைய செயல்பாடுகளை கருத்துக்களைப் பெண் தனக்குள்ளாகவே மிக இறுக்கமாகப் பொத்தி வைக்கச் சமூகம் கற்பிக்கிறது. பிறப்பினால் உண்டான உடல் ரீதியான வேறுபாடு தவிர்த்து பிறவற்றில் ஆணுக்கு இணையானவளே பெண், எனினும் பெண்ணுக்கான எல்லை வரையறைக்கு உட்பட்டதாக உள்ளது.
பெண் எழுத்துக்களில் ஏக்கம் எல்லை
பெண் என்ற பாலினம் இயற்கை கலாச்சாரம் சார்ந்த ஆணின் ஆளுகையின் கீழ் வாழ்தல் என்ற மரபுப் பார்வையை விடுத்து வாழ முயற்சி செய்ய வேண்டும். ஆணின் ஆதிக்கம் ஒரு கட்டமைப்பாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஆதிக்கப் பரப்பில் தனது வெளியைத் தீர்மானிக்க முடியாத பெண் ஆணின் அடக்குமுறைக்கு எதிராக கலகக்குரல் எழுப்புகிறாள்.
“கீரைக்காரி வந்தாள்
அம்மாவை கூப்பிடவும்
செய்தித்தாள் வந்தால்
அப்பாவிடம் கொடுக்கவும்
யாரும் சொல்லித் தராமலேயே
கற்றுக் கொள்கிறது குழந்தை” (அ வெண்ணிலா)
இன்றைய பாடப் புத்தகங்களிலும் குடும்பம் பற்றி வரும் பாடங்களில் ஆண் குரல்தான் பதிவாகியுள்ளது என்பதை கவிதை விவரிக்கிறது.
காமம் வெளிப்படுத்துதல் கூடாமை - தகர்த்தல்
மொழி, உடல், மனம் ஆகிய மூன்றும் தலைவன் பிரிவால் காமத்தின் விளைவால் படுகின்ற பாட்டைக் கூறும்போது பெண் மொழி பிறக்கிறது. ஆண் மொழியைப் புறக்கணித்து எழுதும் எழுத்துக்கள் பெண்மைக்கான அடையாளங்களை முற்றிலும் மாற்றுக் கோணத்தில் பார்க்கப்படுகிறது.
“கன்றும் உண்ணாது கலத்தினும் படாது
நல்லான் தீம்பால் நிலத்தும் உக்கா அங்” (குறுந் 27)
தலைவன் பிரிவைத் தாங்காது துயருறும் பெண் கூற்று நல்ல ஆவினது இனிய பால் ஒன்று கன்றுக்கு பயன்பட வேண்டும் பின் கரக்கும் கலத்தினில் விழ வேண்டும். இரண்டுமே இல்லாமல் மண்ணில் சிந்தினால் என்ன பயன்? அதைப்போல அல்குலில் நடந்த பசலையாகிய மணிநிற அழகு எனக்கும் பயன்படாமல் என் தலைவனுக்கும் இன்பம் பயக்காமல் பசலை படர்ந்து அந்த அழகினை உண்ணுதல் என்ன நியாயம்? என கேட்கிறார். பெண்கள் பேசக்கூடாதென்று என்று விலக்கப்பட்ட காமவுணர்வை வெளிப்படையாக எடுத்துரைக்கும் போது பெண்மொழி உருவாகிறது. ஆண் பெண்ணுக்கு வகுத்த வன்முறைச் சட்டத்தைத் தகர்த்துக் கொண்டு வெளிப்படுகிறது.
புதுக்கவிதை தோற்றத்தின் எழுச்சியாக சல்மா அவர்களின் தீராதது எனும் தலைப்பில் இதே தன்மையை உணர முடிகிறது.
“நேற்று விருப்பமொன்றில்
வெட்கம் நிரம்பியிருக்க
அதன் தகிப்புகளைப் புறக்கணித்துப்
பாதிவழியில் கைவிட்டு
இரவின் வர்ணத்தில்
என் தாபங்களைக்
கரைத்தபடி...
......................................................
சற்று முன்
கைவிடவோ கட்டுப்படுத்தவோ இயலாது
வெளிப்பட்ட என் ஏக்கங்களின் மீது
நாய் ஒன்று சிறுநீர் கழித்து போகிறது” (சல்மா பச்சை தேவதை 25)
தன் காமத்தின் தகிப்பை கவிதையின் வழியாக வெளிப்படுத்தியதோடு ஏக்கங்களாய் தொடரும் இரவில் நாய் ஒன்று சிறுநீர் கழித்துப்போகிறது, மேலும் பயனற்றை இவ்வுடலின் தாபங்களை எப்படி சுமப்பது என்ற ஒரு வினாவையும் வைத்துச் செல்கிறார்.
மௌனத்தின் அதிர்வுகள் - விமர்சனங்கள்
மௌனத்தின் உரத்த குரல் தனிக்கையையும் மீறலும், பெண் கவிஞர்கள் - பெண் மொழி என்கிற நிலையில் மேலைநாட்டில் பெண்ணியம் தோன்றி வளர்ந்த வரலாறு இந்தியாவில் பெண் விடுதலை இலக்கியங்களில், செயல்பாடுகள், பெண்மொழி உருவாக்கம் மற்றும் பயன்பாடு, பெண் கவிஞர்களின் கவிதைகளில் காணப்படும் பெண்மொழி ஆகியன புதுக்கவிதை வழியாக மிக பரவலாக பேசப்பட்டது. நவீன பெண் கவிஞர்கள் பெண்களின் உடல் பற்றியும் உடல் ரீதியான உணர்வுகள் பற்றியும் உடலின் பட்டுணர்வு பற்றியும் வெளிப்படையாக எழுதியது, ஆண் அதிகாரத்தின் வேர்களை அகற்றி விட்டது. அதனால் பெண் கவிஞர்கள் மீதான விமர்சனம் அவர்களின் கவிதைகளின் தரம் பற்றியதாகவோ அதன் கவித்துவம் பற்றியதாகவும் இல்லாமல் அவர்களைத் தனிப்பட்ட முறையில் தாக்கும் விமர்சனங்களாக உள்ளன.
கவிதையில் குறிப்பிடத் தகுந்தவராக இருப்பவர் எழுபதுகளில் எழுதிய இரா. மீனாட்சியாவார். வேறு சிலரும் அக்காலத்தில் எழுதினார்கள். எண்பதுகளில்தான் பெண் கவிஞர்கள் பலர் எழுத முன் வந்தனர். ஈழத்துப் பெண் கவிஞர்களின் தாக்கமும் தூண்டுகோலாய் அமைந்தது. பெண்களின் எழுத்து கருக்கொள்வதிலிருந்து உருக்கொள்வது வரை மனதளவிலும் குடும்பக் கட்டமைப்பிலும் ஏகப்பட்ட தடைகளையும், சிக்கல்களையும் சந்தித்து வெளிக் காட்டாத நிர்பந்தம், அதையும் மீறி எழும்போது பணியில் குடும்பம் இழுத்துப் போட்டுக் கொண்டு அசதியை மிச்சமாய் கொடுக்கிறது. கவிதை எழுதுவது பெண்களுக்கு கனவாகிப் போகிற சூழலையும் காண முடிகிறது.
கமலாதாசின் கவிதையொன்றை இங்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம்.
“உன்னை நான் காணும்வரை
கவிதை எழுதினேன், ஓவியம் தீட்டினேன்
தோழிகளுடன்
உலவி வந்தேன்
இப்போது நான் உன்னை காதலிக்கிறேன்
என் வாழ்க்கை ஒரு நாயைப் போல
ஒடுங்கி சுருண்டு கிடக்கிறது
உன்னில் மன நிறைவை கண்டு”
இக்கவிதை மூலம் பெண்களுக்கு எழுதவே நேரம் இல்லாத போது சுதந்திரமாக எழுதுவது எப்படி? என்ற ஏக்கத்தை முன்னிறுத்தி இக்கவிதை மௌனத்தின் அதிர்வுக்குள் அங்கலாய்க்கிறது.
பெண்மொழி - வெளி:
சங்க இலக்கியப் பாடல்களில் பிரிவுத் துயரைப் பாடக்கூடிய பாடல்களை மிகுதி தலைவரின் பிரிவை எண்ணி தலைவி வருந்தும் நிலையினை பல புலவர்கள் பாடியுள்ளனர். எனினும், பெண் புலவர்கள் இவ்வுணர்வை மிக காத்திரமாக புலப்படுத்தி உள்ளனர்.
“சேறும் சேறும் என்றலின், பண்டைத்தம்
மாயச் செலவாகச் செத்து மருங்கு அற்று
.................................................................
(குறுந்: 325)
நன்னாகையார் என்ற பெண் புலவர் பாடியுள்ள இப்பாடல் தலைவியின் பிரிவுத் துயரைப் புலப்படுத்துகிறது.
புதுக்கவிதை தளத்தில் இயங்கும் பெண் படைப்பாளியின் கவிதை
“சதுப்பு நிலக் குமிழிகள்
முலைகள்
ஒரு நிறைவேறாத காதலில்
துடைத்தகற்ற முடியாத
இரு கண்ணீர்த் துளிகளாய்த்
தேங்கித் தளும்புகின்றன.” (குட்டி ரேவதி - முலைகள் :13)
“ஆங்காங்கே அழுக்குச் சுவர்களும்
வாசலில் வெற்றிலைச் சுண்ணாம்பு
தடவிய தூண்களும்
பாசிப்படர்ந்த கிணற்றடியும்
சிவப்புப் பூ பூக்கும் அரளியும்.” (கனிமொழி - கருவறை வாசனை)
இதில் இளைஞன் தூண்கள், கிணற்றடி, அரளி மரம் ஆகியவை எந்த மற்றொன்றுடனோ அல்லது வேறு மனிதர் எவருடனோ உறவற்றிருக்கின்றன.
காமம் - தேடல் - இருப்பு
பெண் தன் உணர்வுகளை உடலைக் கொண்டாடப்பட வேண்டும். ஆண் மொழியால் வரையறுக்கப்பட்ட பெண் இருப்பை எதிர் அரசியலால் சிதைத்தல், பெண்மொழியைக் கையாளுதல், பெண்ணின் வாழ்வை, வெளியை, மொழியை, காதலை, காமத்தைக் கொண்டாடி பெண்ணின் பன்முகப்பாட்டை படைத்தல் என்பதே நவீன பெண் படைப்பாளிகள் மேற்கொண்டுள்ளனர்.
சங்க இலக்கியத்தில் பெண் தன் காம உணர்வை மிக உச்சமாய் கூறும் பாடல்கள் உள்ளன.
“முட்டுவேன் கொல்? தாக்குவேன் கொல்?
ஓரேன், யானும், ஓர் வெற்றி மேலிட்டு
.................................................................
(குறுந் - 28)
காம உணர்வினால் தான் பாடும் வேதனை அறியாத இவ்வூரிலுள்ள அனைவரும் உறங்கிவிட்டனர் என்று தனித்திருக்கும் தலைவி புலம்புவதாக இப்பாடல் அமைந்துள்ளது.
இதே நிலையை சுகிர்தராணி கவிதையில்
“இரவு
ஆடைகளைக் களைத்து விட்டு
நிர்வாணமாய் வீற்றிருக்கிறது
ஒரு மாயக்காரியின் புன்னகையைப்போல்
இம்முறையேனும்
வெட்கக் கனி புசித்த வாயால்
உன்னை அழைக்க முற்படும்போது
எங்கிருந்தோ வெளிப்படும் உன்கை
தாபம் மேலிட்ட ஸர்ப்பமாய்
முயக்கிச் சாய்க்கிறது என் புனைவுகளை
கடைசி நிகழ்வின்
விரகம் எரித்த தாம்பத்தியப் புகை
ஒருவழிப் பாதையில்
நுழைந்து நுழைந்து வெளியேறி
இளைப்பாறுகிறது.
என்னை இழுத்துப் போர்த்திய
இருளின் நிழலில்”.
( சுகிர்தராணி - இரவுமிருகம் - 26)
இதன் தொடர்ச்சியாக இருபத்தியோராம் நூற்றாண்டு கவிஞர்களின் கவிதை - நுட்பம்.
பிரியும் பொழுது எனும் தலைப்பில் சல்மா அவர்களின் கவிதை
“உன்னை விட்டுப் பிரியும் முன்பாகக்
காண நினைத்திருந்தேன் என்னுள்
வேட்கையின் விதை தூவி
என் வீட்டு முற்றத்தில் பதிகிற
மாலை உன்னிடத்திலும்
உன் வீட்டிலும் அப்படித்தான் விழுகிறதாவென”
ஒரு நற்றிணைப் பாடல்
“இசையும் இன்பமும் ஈதலும் மூன்றும்
இளங்குவளை நெகிழ்த்த கலங்கு அஞர் எள்ளி
நகுவது போல, மின்னி
ஆர்ப்பது போலும்இக் கார்ப்பெயர் குரலே”.
(நற்றி - 214)
தலைவன் பல மலைகளையும் கடந்து பொருளைக் கொண்டு வருவதற்காக விரைந்து பிரிந்தனர். அவர் பிரிவு தாங்காது என் தோள்கள் மெலிந்தன. இத்துன்பத்தைக் கண்ட மேகம் என்னைப் பரிகசிப்பது போல மின்னலிட்டு ஆரவாரித்து மழை பொழிகின்றது - இம்மழையின் ஒலியினைத் தலைவர், அவர் சென்றிருக்கும் நாட்டில் கேட்கமாட்டாரோ என்று தலைவி கூறுவதாக சங்க இலக்கியப் பாடல்களிலும் கவிதை நுட்பம் தெளிவாகிறது.
முடிவாக சில
- சங்க இலக்கிய பாடல்களில் பெண்பாற் புலவர்கள் உடல், மனம் சார்ந்த உணர்வுகளை வெளிப்படையாக எழுதும் காலமாக சங்க காலம் இருந்துள்ளது. ஆனாலும் பெண்பாற்புலவர்கள் சமூகம் சார்ந்த பார்வையில் பாடல்கள் எழுதப்பட்டதாக அறிய முடியவில்லை.
- இக்காலப் பெண் கவிஞர்கள் உடல், மனம், சமூகம், பொருளாதாரம், பெண்ணியம் என பல்வேறு தளங்களில் கவிதைகள் படைக்கின்றனர். மிக முக்கியமாக பெண் எதிர் கொள்ளும் சிக்கல், வலி, ஆதிக்க சமூகத்தில் இடர்களையும் அதற்கான தீர்வையும் முன்வைத்து கவிதைகள் படைக்கின்றனர்.
- தற்காலப் பெண் கவிஞர்களின் கவிதைகளில் சங்கப் பாடல்களில் இடம் பெற்ற பல்வேறு உடல் சார்ந்த ஏக்கம், தேவை, தீவிரம், இருண்மை நிலை போன்ற யதார்த்தமான பதிவுகளை சங்க மற்றும் இக்கால கட்டத்திலும் விவரிக்கப்பட்டுள்ளதை அறிய முடிகிறது. சங்க இலக்கியத்தின் தொடர்ச்சியும் அதன் சாரத்தை உள்வாங்கிய பல்வேறு கவிதைகள் இக்காலப் பெண் கவிஞர்களின் படைப்புகளில் இடம் பெற்றுள்ளதை அறிய முடிகிறது.
நெறித்துணை நூல்கள்:-
1. நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, அகநானூறு, பரிபாடல், கலித்தொகை, ஐங்குறுநூறு, மூலமும் உரையும் கோவிலூர் மடாலயப் பதிப்பு.
2. பெண்: மொழி - வெளி தமிழகப் பெண் கவிஞர்களின் கவிதைகள் குறித்த உரையாடல் - தொகுப்பு: ஏ.தீபா, சா. மரியரீகன், ர. குமார்.
3. ஆக்கமும் பெண்ணாலே: பெண் படைப்பாக்க ஆளுமைகளின் உரையாடல் -முனைவர் ஏ. ராஜலட்சுமி.
4. பச்சை தேவதை - சல்மா
5. ஒரு மாலையும் இன்னொரு மாலையும் - சல்மா
6. அகத்திணை - கனிமொழி
7. குறியியல் ஒரு சங்கப் பார்வை - முனைவர் மொ. இளம்பரிதி
8. முலைகள் - குட்டி ரேவதி
9. இரவு மிருகம் - சுகிர்தராணி
10. கருவறை வாசனை - கனிமொழி
11. மௌனத்தின் அதிர்வுகளும் மொழியும் - பெண் உலக தமிழராய்ச்சி நிறுவனம்.
- ப. நீலாவதி, முனைவர்பட்ட ஆய்வாளர்
மற்றும்
முனைவர். இரா.கௌரி, உதவிப் பேராசிரியர் தமிழாய்வுத்துறை, (அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றது) ஏ.வி.சி.கல்லூரி (தன்னாட்சி) மன்னம்பந்தல் - மயிலாடுதுறை.