இந்த உலகத்தில்
ஒரு கோடியே நூற்றியெட்டு
துயரங்கள் இருக்கின்றன.
வரலாறு, தத்துவம் மற்றும்
இலக்கியங்களால்
இன்னும் ஆயிரத்திற்கும் அதிகமான
துயரங்களை கண்டறிய முடியவில்லை.
உலகின் தலைசிறந்த ஓவியர்கள் வசமிருக்கும்
நூற்றிற்கும் அதிகமான வர்ணங்களால்
ஒரு கோடியே நூற்றியெட்டு
துயரங்களைத் தீட்ட இயலவில்லை.
பசி என்பது முதல் துயரமாக
பெரும்பான்மையோரால்
ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டது.
98-ம் துயரக்காரனான என்னை
1002-ம் துயரக்காரனொருவன் பரிகசிக்கையில்
எனக்கு சினம் மேலிடுகிறது.
ஒரு துயரமும் இன்னொரு துயரமும்
தமக்குள் சண்டை இட்டுக் கொள்வதையே
நாம் வரலாறு என்கிறோம்.

- இசை

Pin It