1
தமிழ் கவிதையின் பண்பில் இருபதாம் நூற்றாண்டில் பல பெருமாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. பத்தொன்பதாம் நூற்றாண்டில் வள்ளலாரின் ஆறாம் திருமுறையின் வழியே அவர் முன்வைத்த கவிதையாடல் என்பது சங்காலம் தொடங்கி அவருடைய காலம்வரை தொடர்ந்த கவிதையாக்கத்தை, வள்ளலார் உள்வயப்படுத்திக் கொண்டார். அந்த கூறுகள் அவரது பாடல்களின் உள்ளுறையாக்கத்தில் மற்றும் மொழிவெளிப்பாட்டுடன் இயைந்தும் வித்தியாசப்பட்டும் இருந்தது. வள்ளலாரின் ஆறாம் திருமுறையின் பிரதியாக்க நுட்பங்கள், இருபதாம் நூற்றாண்டின் தொடக்க கால கவிதையாக்கத்தை பாதித்தன. மேலும் பாரதியாரின் ''வசன கவிதை'' மொழியின் வடிவ பண்பு புதுக்கவிதையின் முன்னுந்துதலாக அமைந்தது. இதன்வழியே பார்த்தோமெனில் பாரதிதாசன் இருபதாம் நூற்றாண்டின் கவிதையில் தமிழின் சங்க மரபை முழுமையாக கிரகித்தவர் எனலாம். அவர் ஒரு புதிய இடையீட்டை செய்தவர். புதுக்கவிதை வடிவத்திற்கும் மரபு கவிதை கட்டமைப்பிற்கும் மத்தியில் அவரது எழுத்தாக்கங்கள் ஊடாடின. அதோடன்றி அவரது கால கவிதை பரப்பில் 'தமிழ்' என்ற சொல்லின் பொருண்மையை பன்மையாக்கத்திற்கு உட்படுத்தியவர். அவர் இம்மை வாழ்வின் கூறுகளையும், இயற்கையையும், தமிழையும் தனது கவிதையில் இழையோட செய்தவர். தமிழ் கவிதையின் பிரதியாக்க உத்திக்குள் தமிழை கவிதையின் மையத்திலும் அதன் ஓரங்களிலும் பொருண்மை படுத்தினார். அவர் காலத்திய தமிழர்களது அகவாழ்வையும் / புறவாழ்வையும் தனது கவிதையாடலின் மொழிக்குள் கையாண்டார். தமிழை இயற்கையின் அங்கமாகவும் அதன் வியாபகமாகவும் மாற்றினார்.
பாரதிதாசன் கவிதைகள் மரபு வடிவத்தில் எழுதப்பட்டிருந்தாலும், அதன் உள்ளார்ந்த வெளிப்பாடுகள் புதிய கவிதையாடல்களை கொண்டிருந்தன. புதுக்கவிதையின் வெளிப்பாட்டு முறைக்கான உந்துதல்கள் பாரதிதாசன் கவிதை வரிகளில் காணமுடியும். அவரது பல கவிதை படைப்புகளுக்கு மத்தியில் தனித்துவமானதாக ''அழகின் சிரிப்பு'' விளங்குகிறது. அதன் சிறப்பம்சம் என்பது அதன் காட்சி ரீதியான இயற்கை என்பது மட்டுமல்ல. அதன் பிரத்யேக பண்பு என்னவென்றால், அப்பிரதி தன்னுள் சங்க கவிதையின் காட்சி கூறுகளை மட்டுமே உள்ளடக்கி கொண்டிராமல், அதன் இம்மைவாழ்வின் அலகையும் அழகின் சிரிப்பில் ஒன்றிணைத்திருப்பது ஒருபுறமிருந்தாலும்; தமிழ் மறுமலர்ச்சியை கவிதையாக்க உத்தியாக பயன்படுத்தியுள்ளது. மேலும் அவரது 'சஞ்சீவி பர்வதத்தின் சாரல்' என்ற தொடக்க கால படைப்பில் காணப்பட்ட மொழிவயமான காட்சித் தன்மை பின்னாளில் அவரது 'அழகின் சிரிப்பு' கவிதை நூலில் விரிவடைந்து வெளிப்பட்டது. 'நிலப்பரப்பை' குறியீடாக மாற்றும் கவிதை உத்தி பாரதிதாசனின் பல கவிதைகளில் இழையோடுவதை நம்மால் காண முடியும். 'தமிழை' ஒரு கூட்டு நினைவாகவும் நினவிலியாகவும் அவரது கவிதைகளில் அமைகின்றன. தமிழை தனது ஆவியாகவும், 'வியப்பின் வைப்பே' எனவும் சொல்கிறார், '' ஆடற் றமிழேநீ என்றன் ஆவி'' (147) என்ற வரியில் ஆவி என்ற கூறுவதை பொதுவாக அ"சொல் 'உயிர்' என்று பொருள் கொள்கிறார்கள்.. அவ்வாறு உயிர்த்தன்மை"டைய 'தமிழ்' பாரதிதாசன் கவிதைகளில் தமிழர்களின் ''கூட்டு நினவிலி'' என்று கூறவும் இடமுண்டு. இயற்கையை பல்வேறு பரிமாணங்களில் எழுதும் போது ''தமிழ்'' என்பது ஒரு குறியீடாகக் கவிதையின் anterior ஆகச் செயலாற்றுகிறது. தமிழ் என்ற சொல் அவரது கவிதைகளின் இயற்கூறாக விளங்குகிறது. இது பாரதிதாசனின் கவிதையாக்கத்தின் நுண்ணிய வெளிப்பாடாகும்...
"வளர்பிறை போல்வ ளர்ந்த
தமிழரில் அறிஞர்கள் தங்கள்
உளத்தையும் உலகில் ஆழ்ந்த
வளத்தையும் எழுத்துச் சொல்லால்
விளக்கிடும் இயல்மு திர்ந்தும்
அளப்பிலா உவகை ஆடற்
றமிழே என்றன் ஆவி"
- அழகின் சிரிப்பு (147)
2
அழகின் சிரிப்பில் பாரதிதாசன் 'தமிழ்' என்ற குறியீட்டை மென்மேலும் தனது கவிதையாடலின் பரப்பில் நீட்சி கொள்ள செய்கிறார். தமிழ் குறித்த தனது கவிதைகளின் பொருண்மை வெளியை, அழகின் சிரிப்பு நூலின் 16ஆம் பகுதிக்கு தமிழ் என்று தலைப்பிட்டுள்ளார். அத்தலைப்பில் அடங்கியுள்ள கவிதைகளில், அதே தொகுப்பில் முந்தைய கவிதைகளின் வழியே கட்டமைக்கப்பட்ட சொல்லாடல்களின் வரையறையாக்கத்தை முழுமைப்படுத்துகிறார். அப்பகுதியில் தமிழின் தோற்றம் துவங்கி இசை கூத்தின் முனை / இயற்றமிழ் எழில் / தமிழர்க்கு தமிழ் உயிர் / சாகாத தமிழ் / கலைகள் தந்த தமிழ் / முன்னூலில் அயலார் நஞ்சம் / பகைக்கஞ்சாத் தமிழ் / வெற்றித் தமிழ் / படைத் தமிழ் என்று தலைப்பிடப்பட்டுள்ளன.
"புனல்சூழ்ந்து வடிந்து போன
நிலத்திலே புதிய நாளை
மனிதப்பைங் கூழ்மு ளைத்தே
வகுத்தது மனித வாழ்வை
இனியநற் றமிழே நீதான்
எழுப்பினை தமிழன் கண்ட
கனவு தான் இந்நாள் வையக்
கவிவாழ்வாய் மலர்ந்த தன்றோ" (144)
3
இயற்கையின் எண்ணிலியான அசைவுகளை பல்வேறு காட்சிகளாக பிரதியாக்கம் செய்திருக்கும் பாரதிதாசனின் ''அழகின் சிரிப்பு'' தமிழின் மொழிபிம்பத்தை அகவயப்படுத்தியுள்ளது நூலை வாசிக்கையில் விளங்கும். இயற்கை எனும் கட்டற்ற எழிலை மொழிவயப்படுத்தும் அதிநேர்த்தி வியப்பளிக்கக் கூடிய ஒன்றாக உள்ளது. அதிலும் சில இருண்மையான புலங்களை பேசும் இடங்களை சொல்வதெனில் ''இருள்'' பற்றி பாரதிதாசன் எழுதியுள்ள ''இருளே உன்சீர் ஓவியர் அறிந்தி ருப்பார்'' (120) எனும் வரிகளைக் குறிப்பிட வேண்டும். ''அழகின் சிரிப்பு'' பகுதி
13 இல் 'இருள்' என்ற பகுதியில் 'பிறப்பும் இறப்பும்' என்ற தலைப்பிலுள்ள கவிதை
"வானொடு நீபி றந்தாய்
மறுபடி கடலில் தோன்றும்
மீன்என உயிர்உ டல்கள்
விளைந்தன எவ்விடத்தும்
நீநிறை வுற்றாய் எங்கும்
பொருளுண்டேல் நிழலுண்டன்றோ
பானையில் இருப்பாய் பாலின்
அணுதோறும் பரந்தி ருப்பாய்" (119)
மேலே நான் குறிப்பிட்டுள்ள கவிதை ''வானொடு எனத் தொடங்கி அணுதோறும் பரந் திருப்பாய்'' என முடிகிறது. பாரதிதாசனின் கவிதைகளில், தமிழை பற்றியோ அல்லது ஒளி / இருள் ஆகியவைகளை பற்றி எழுதும்போதோ பெருவெளி துவங்கி நுண்ணியவற்றுள் பயணிப்பதை காண முடியும். இப்பண்பு அவரது கவிதைகளின் உட்சரடாக ஊடுபாவி செல்வதை காணலாம். இத்தகைய சிந்தனாமுறை அவருக்கு எங்கிருந்து வந்தது என ஆய்வு செய்வதென்பது கவிதையியல் பற்றி அறிய மிக உதவியாக இருக்கும். தமிழ் கவிதை மரபிலிருந்து இவரது கவிதைகள் இத்தன்மைகளை அடைந்திருக்கிறது. அதேபோல் சர்வவியாபகம் என்ற பொருண்மைக்குள் தமிழையும் / ஒளியையும் / இருளையும் மொழியின் தோற்றம் என்ற கருதுகோளுடன் இணைக்கிறார். இம்மூன்றிற்கிடையில் கவிதையாடலின் உட்பரப்பு கட்டமைக்கப்படுகிறது. அதில் தமிழ் ஒளி இருள் என்ற மூன்றும் மற்றொன்றின் விளிம்பில் இயங்குவதை உணரமுடியும். ஒற்றைப் பொருளில் பயன்படுத்தாமல், ஒன்றில் மற்றொன்றாகவும் வேறுவேறாகவும் மாறி கவிதையின் பொருண்மையைக் கூட்டுகிறது. அடிப்படையில் இந்த கவிதைகளின் அமைப்பின் ஆழத்தில் தமிழரின் இயற்கைசார் வாழ்வியலிலிருந்து சற்றும் அகலாத அதேசமயம் பாரதிதாசன் தன் காலத்தின் தமிழ் மறுமலர்ச்சி, ஒரு புதிய எல்லையை ''தமிழ்'' என்ற குறியீட்டின் வழியே அடைந்தது.
மேலும் தமிழின் நாதமார்ந்த தன்மை (sonority) என்பது இவரது அனைத்து கவிதைகளின் அடிநாதமாக விளங்குவது தமிழின் தனித்தன்மையாக உள்ளது. ''அழகின் சிரிப்பு'' இன் இப்பாடல் இவைகளை சொல்லுகிறது...
"பழந்தமிழ் மக்கள் அந்நாள்
பறவைகள் விலங்கு வண்டு
தழைமூங்கில் இசைத்த தைத்தாம்
தழுவியே இசைத்த தாலே
எழும்இசைத் தமிழே! இன்பம்
எய்தியே குதித் தாலே
விழியுண்ணப் பிறந்த கூத்து
தமிழே! என் வியப்பின் வைப்பே." (145)
- எஸ்.சண்முகம், எழுத்தாளர் விமர்சகர்