கூரை வீடு பிடிக்குமெனக் கேட்ட ஷிவனிதா
அதன் உச்சியில் எப்போதும் ஒரு சேவலை
நிற்கச் சொல்லி
வளைந்திருந்த வாலின் மீது வானவில்லை தீட்டுகிறாள்.
தென்னை ஓலைகளின்
பின்னலை
தன் ஒற்றை ஜடையை ஒத்ததென உள்ளங்கைகளில்
செல்ஃபி எடுத்து
ஒளித்துக் கொள்கிறாள்.
பனையோலை குடில்களை கொஞ்சிவரும் வரை
அவற்றை பத்திரமாக்கும் பொறுப்பு என்
சட்டைப் பையினுடையது.
ஒற்றை நிலவை
நட்சத்திரங்களாய் சிதறச்செய்யும்
கூரையின் ஓட்டைகளை அதிசயிப்பவள்
சூரியனை மட்டும்
மொழிபெயர்க்க வேண்டாமென
அவ்வப்போது கோபித்துக் கொள்கிறாள்.
அணில் விளையாடும் விட்டத்திலிருந்து
தவறி விழுமென
குருவிக் குஞ்சுகளுக்கான பிரார்த்தனைகளை
சுமந்தபடியே பள்ளி செல்பவள்
பருவத்துக்கு ஏற்றபடி மறக்காமல் வேண்டிக் கொள்வாள்..
மழையில் நனையாதிருக்க ஒரு கூரையையும்
கூரை எரியாதிருக்க ஒரு மழையையும்.
- ந.சிவநேசன்
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
பிரார்த்தனைகளின் காலம்
- விவரங்கள்
- ந.சிவநேசன்
- பிரிவு: கவிதைகள்