குளிர்பதன அறைகளிலே கூடிப் பேசக்
குறைந்திடுமோ கூடிவிட்ட புவியின் வெப்பம்
குளிர்பதன ஊர்திகளில் கூட்டத் தோடே
கொடைக்கானல் ஊட்டியெனச் சுற்றும் போதில்
அளவில்லாப் புகையாலே ஆகும் சூட்டை
ஆழ்மனத்தில் சற்றேனும் அளப்பார் உண்டோ?
கொளுத்துகின்ற வெயிலினிலே உழைப்போர் பாட்டைக்
குறைப்பதற்கே வழியேதுங் கண்டார் உண்டோ
காசுள்ளோர் சுற்றியெங்குங் களிக்கத் தானே
கணக்கில்லாத் தொலைவெல்லாங் கடக்குஞ் செலவாம் [செலவு = பயணம்]
மாசுநிறை சுற்றுலாவால் மாளாச் சூடே
மனம்போலத் திரிவதனால் மாயும் நாடே
காசில்லார் உயிர்பிழைக்கக் கடக்குந் தொலைவைக்
காண்கையிலே கண்களிலே கசியும் நீரே
நாசமாக்கி மகிழ்வோர்கள் நன்றாய் இருக்க
நலிந்தோர்கள் மடிவதுவே நாட்டின் சிறப்போ
உள்நாட்டில் சுற்றியது போதா தென்றே
உலவுதற்கே வெளிநாடு பறக்குஞ் செல்வர்
எள்ளளவுஞ் சூழலுக்கு இடுக்கண் செய்யா
ஏழைகளே அதனாலே இறப்பார் சூடால்
உள்ளத்தில் சற்றேனும் உறுத்தல் இன்றி
உலைக்களமாய் உலகத்தை உருக்குகின்றார்
அள்ளஅள்ளக் குறையாத செல்வத் தாலே
அவிப்பாரோ அளவில்லாப் புவியின் சூட்டை?
- அர.செல்வமணி