கண்ணோர மச்சம்
புறங்கை தழும்பு நடுநெற்றி வடு
போதவில்லை என்றான்

கை காசு கடன் காசு
கொண்டுருவாக்கிய நூல்கள்
அவனுக்கு வெறும் பார்சல்

ஊரறிந்த பெர்சனாலிட்டி
அவனுக்கு நவுரு நவுரு தான்

வரிசையில் முகமற்று தான் நிற்க
கற்றிருக்கிறோம்
முதுகற்றும் பழக வேண்டும் போல

புகைப்படமும்
சடை நீண்ட நிஜ சிகையும்
ஒத்து போகவில்லை

அடையாளத்துக்கு அகப்படும்
புகைப்படங்கள்
அடையாளமின்மைக்கு உதவுவதில்லை

எத்தனை சொல்லியும் நம்பாத
அவன் கண்களில்
நகராத பொருளென எனது புனைப்பெயர்

செய்வதறியாது நின்று நெளிந்து
நான் யாரென்று சொல்ல
நானே யாரோவாகவும் ஆக வேண்டியிருந்தது

- கவிஜி

Pin It