ஒரு சிறிய அரைக்கோளத்தையும்
இரு பெருங்கோடுகளை குறுக்கேயும் வரைந்து
போகும் சிறுமியைப் பார்த்து சிரிக்கின்றன
மழைக்கு கவிழாத கப்பலும்
சூரியன் வெளிக்கிளம்பும் காலை ஆகாயமும்
போஸ்டரை வெறித்தபடி LSS42க்கு காத்திருப்பவள்
நீல வண்ண ஏரியின் ஒற்றைப் படகில்
தன்னைப் புணரும் கணவனின் கழுத்தை நறுக்கி தம்
கதாநாயகனின் முகம் பொருத்தி இயங்குகிறாள்
16-Cன் தாமதத்தில் பொறுமையிழக்கும் அவன்
பெயர் எழுதப்பட்ட கூரிய அம்பினை
காதலியின் இதயத்தில் சொருகி முடிக்கிறான் கல்வெட்டை
குறி நீவத் துவங்கும் முஷ்டி மைதுனக்காரனின்
உச்சத்துக்கு உதவுகிறாள் கக்கூசுச் சுவரில்
சித்திரத்தில் சிரிக்கும்
நண்பனின் மனைவி
வெளித் தொங்கும் குறி கண்டு
நாணமுறும் யுவதிக்கு குழந்தைமைச் சிரிப்பை பகிர்ந்து
வெற்றிலைக் கறைபடிந்த கரித்துண்டை
கையிலெடுக்கிறான் அவன்
பின்பு எழுதத் துவங்குகிறான் இவ்வுலகின்
ஆகப்பெரும்
ஒற்றைக் கேள்வியை தம் பைத்யமொழியில்
பதிலுரைக்க நாவெழும்பாமல்
துள்ளத் துடிக்க தற்கொலை செய்யப்படுகிறார்
நம் கடவுள்...
நான் உமது நண்பன் அல்ல
உம் எல்லா அசைவுகளிலும் நீங்காமல்
அதுவே நிரம்பி இருந்தது
உண்பது குறித்தும் உறங்குவது குறித்தும்
உடுத்தியலைவது குறித்தும்
மகிழ்வே அற்ற இவ்வாழ்வை எதிர்கொள்ளும்
சூத்திரம் குறித்தும் நாள்தோறும்
மஞ்சள் வர்ண Chart paper-ல் எழுதி வைத்தபோது
ஆயாசம் கொண்டலைந்தாள் உமது மனைவி
25செ.மீ. தொலைவில் புத்தகம் பிடித்து
மனனம் செய்து ஒப்புவிக்கையில்
சுருதி பிசகாமல் உச்சரிக்க காதுகளை திருகியபோது
மேலாக
நீங்கள் சாகும்வரை நுழையவே முடியாத அவர்கள்
உலகத்தின் சாவியைப் பிடுங்கியெறிந்த போதும்
உம் மீது ஆத்திரமுற்றார்கள் குழந்தைகள்
மாலை உரையாடலை சுவாரஸ்யப்படுத்துவதாய்
உம் ஒப்பாரியைப் பகிர வந்தீர் எம்மிடம்
ஆரஞ்ச் வோட்காவை லயித்துச் சுவைப்பதின்
உச்சத்தில் சஞ்சரித்தவன் முன்பு வாசிக்கத் துவங்கினீர்
குற்றப் பத்திரிக்கையை
உம் சொற்களால் கிளைக்கத் தொடங்கின
என் உடலெங்கும் குறுவாள்கள்
மிரண்டு அதைத் தடவி
வருடி முத்தமிட்டு
சமாதானப்படுத்தி
உடைத்தெறியத் துணிந்தீர், இயலவில்லை
பின்புதான்
ஆடை கிழித்து ஓடத்துவங்கினீர் தெருவில்
அப் பெருவிபத்து நிகழும் முன்பாக...