அறிவிற் குறைந்த அழகு உயிர்களாம்
பறவைகள் விலங்குகள் பகருமோர் செய்தியாம்
துணையை அடையத் தூதுவர் இல்லை
பெண்இனந் தமக்கோ பெரிதாய் விடுதலை
வன்முறை அங்கே வாட்டுவதில்லை
என்றும் பெண்ணே ஏற்றம் அங்கே
பெண்ணைக் கவர ஆண்மிக விழைந்தால்
கண்கவர் அழகால் கவனம் ஈர்த்தும்
ஆடியும் பாடியும் அழகை விரித்தும்
காட்டும் வலுவால் கனிய வைத்தும்
பற்பல வித்தைகள் பாங்காய்ச் செய்தே
நற்றுணை ஈர்க்க நன்றாய் முயலும்
ஆறாம் அறிவை அடைந்த மாந்தரோ
பேறாய் வர்க்கம் பெரிதாய் வளர்த்தார்
பெண்இனந் தம்மைப் பேதைகள் என்பார்
பெண்கள் விடுதலை பெரிதும் மிதிப்பார்
அடிமைகள் போலே ஆக்கி மகிழ்வார்
அடங்கி வாழ்வதே அறிவாம் என்பார்
பெண்களுக் கெதிராய்ப் பெருகிய வன்முறை
எண்ணுதற்கியலா இடையறாக் கொடுமை
சாதியில் பெண்ணும் தாழ்ந்தவர் ஆயின்
ஏதுவாய் இழைப்பர் எண்ணிலாத் துன்பம்
விலங்கினும் கீழாய் வீழ்ந்த பண்பாம்
கலங்கிப் பெண்கள் கதறும் நிலையாம்
பெற்ற அறிவால் கற்றதும் எதுவோ
மற்ற உயிரினும் மாந்தர் கீழோ?

- அர.செல்வமணி

Pin It