கீற்றில் தேட...

"எருக்கம் பூக்களைப் பாடுபவன்" - அகவி எழுதிய கவிதைகளை முன்வைத்து..

கவிதை என்பதோர் உணர்வு., மொழியின் வழியான வெளிப்பாடு! அஃது என்றும், எப்போதும் நம்மோடு வாழ்வதை உணரக் கூடும்.

தனிமனிதரின் அன்பு, காதல், ஏக்கம், எதிர்ப்பார்ப்பு, ஆசை, கோபம், துக்கம் ஆகியவற்றின் வெளிப்பாட்டோடு அம்மனிதன் சார்ந்த சமூக, அரசியல், பண்பாட்டு முத்திரையாக வழிப்படுவதில் கவிதைக்கோர் முக்கிய இடமுண்டு.

"அன்பின்

சமாதானத்தின்

ஆறுதலின்

அடையாளம்

மதத்தை விடவும்

மலர்களே முன் நிற்கின்றன.(ப.19)

agavi bookஎன்ற முன்னெடுப்போடு பூக்களுடன் புதியதோர் உரையாடலைத் தொடங்கியிருக்கிறார் கவிஞர் அகவி.

'அகவி -யின் நான்காவது கவிதைத் தொகுப்பான "எருக்கம் பூக்களைப் பாடுபவன்' புதிய நறுமணத்தோடு வாசகன் கரங்களில் பூத்திருக்கிறது.

"பேதமின்றி தேனெடுக்கும்

வண்ணத்துப்பூச்சி எருக்கம் பூவிலும்" என 2000 ம் ஆண்டில் வெளிவந்த "செம்பழுப்பாய்ச் சூரியன்" தொகுப்பில் அன்பாதவனும், எருக்கம் பூக்கள் குறித்து  கல்யாண்ஜி - யும் எழுதிய தொடர்ச்சியாய் இப்போது 'அகவி' எருக்கம் பூக்களைப் பாட வந்துள்ளார்.

 பூக்களைப் பாடுவது சங்கத் தமிழ் மரபு தான். கபிலரின் குறிஞ்சிப்பாட்டு 99 - மலர்களை வரிசைப் படுத்தியுள்ளதைத் தேர்ந்த வாசகன் அறிவான்.

'நூறு பூக்கள் மலரட்டும்' என மக்கள் தலைவர் மாவோ குறிப்பிட்டில் அழகியலோடு அரசியலும் உண்டு.

 அகவி, நூறு கவிதைகளில் 100 மலர்களை பேச வைத்துள்ளார். பூப்பேச்சு கேட்க புத்தகத்தை புரட்டினால் பக்கத்துக்கு பக்கம் மலர்களின் உரையாடல் கேட்கலாம்.

"பூக்களைப் பாடுவது

பேஷனில்லையிப்போது

வாருங்கள்

பட்டைகளைப் பாடுவோம்"

என்றழைத்தார் தமிழ்க்கவிஞர் சுகந்தி சுப்பிரமணியன்.

அகவி பூக்களைத் தான் பாடுகிறார். ஆனால் அதன் வாசத்தை அல்ல!

பூக்களின் இதழ்கள் வழியாக சமூக / அரசியல் / பொருளியல் / வாழ்வியல் கூறுகளை விவரித்து இருப்பது தமிழில் புதிது, சிறப்பு.

வாழ்வியல்:

துத்தி மிக முக்கியமான பணியைச் செய்கிறது. அதற்கான அகவியின் வரிகளிவை.

"ஐம்பது வயது வந்தாலே

வயிற்றுக்கும், நாக்கிற்கும்

ஒரு புத்துணர்வு ஒப்பந்தம்

போட்டு விடுதல் நல்லது.(ப.40)

மருதாணிப் பூவின் குற்றச்சாட்டிது,.

"நீ என்னைச் சூடிக்கொள்ளும்

எத்தனம் இன்றி

இலைகளை உருவுவதிலேயே

குறியாய் இருக்கிறாய் அன்பே". (ப.32)

கடலைப் பூவிலொருக் காட்சி:

"வேருக்கும் பூவுக்குமுள்ள இடைவெளியே

வாழ்ந்து முடிக்காத வாழ்வின்

சொச்சம்.(ப.38)

மல்லிகைக்கும் ஓர் ஓர்ப்படியாள் உண்டாமே!

"இட்டு நிரப்ப முடியாத

மனிதர்களின் மரணத்தை

இட்டு நிரப்ப எஞ்சியவர்கள்

இருந்து கொண்டு தானிருக்கிறார்கள்

மல்லிகைக்கு மாறான

காக்கட்டான் போல...(ப.50)

நிறம் மட்டுமே தாரமாகி விடாது கவிஞரே! மல்லிகைக்கு நிகர் மல்லிகை தான்!

'நீரழிந்த நிலத்தில்

தாமரை இல்லாமல் போவது

தேசத்தின் கவலையாய் ஆகவில்லை' (ப.68)

என்ற வரிகளில் குறியீடாய் ஒளிரும் அரசியல் பேருண்மையைப் பறை சாற்றுகிறது.

'அல்லியின் கனவில் சூரியன்

சூரியன் கனவில் அல்லி' (ப.74)

என்ற வரிகளில் முரணழகு வாசிக்கப் புதியது.

46ம் எண்ணில் ரோஜா குறித்த கவிதை நடைமுறை வாழ்வியலைப் பாடுவது. சமகால சந்தோஷ வாழ்வுக்கான வழிகாட்டியாகவும் கொள்ளலாம்.

அகவி தமிழில் இதுகாறூமில்லாப் புதுமையென பூக்களின் வழியாக உலக அரசியல் பேசுகிறார். யுத்தங்களுக்கு எதிரானக் குரலாக பூக்களை முன்னிருத்துகிறார்.

'கொடுங்கோலத்தின் இடிபாட்டில்

குலுங்கிச் சாகும் துயர ஆலத்தின்

துருக்கிக்கும், சிரியாவுக்கும்

அல்லாகு அக்பரென

வாழைப்பூ மட்டுந்தான்

வாய்மூடி வாய்மூடிக் குமுறும்' (ப.84)

டஃபோடில்லின்

ஓரவஞ்சம் பாருங்கள்

ஐரிஸ் மலரை வைத்தால் மட்டும்

கொல்லவே கொல்லாது' (ப.86)

பூவுக்கே பூவின்மேல் காதல் வருமோ?

"இணையவழி உள் நுழைந்து

வடகிழக்கு ஈக்வடார்

நாட்டு நெடுஞ்சாலையில்

நடைபயிற்சி போனேன்.

காலையில் இருந்த மரமொன்றில்

பூத்திருந்த பூ

குரங்கு மூஞ்சி வடிவ மாற்றம்

கொண்டதைப் பார்த்து

உடனே வீடு திரும்பி விட்டேன்

கண்ணாடியில் என் முகம் பார்க்க" (ப.88)

கவிஞரின் தற்பகடி ஒரு சுவை யெனில் முன்னோர் தரிசனம் எவருக்கும் இயல்பு தான்!

வாருங்கள் நாமும் தரிசிப்போம்!

'மனிதர்களின்

புன்னகையை மீட்டெடுக்க

புத்தன் வருவாரா?

புன்னாக மரப்பூக்களின்

நறுமணப் பரவலில்

ஈழவிடுதலையின் மூச்சுக்காற்றை

எந்தத் துப்பாக்கியாலும்

தடுக்க முடியாது" (ப.91)

என்ற வரியின் மூலம் அகவி, உலகக் கவிஞனாக உயர்வுப் பெறுவதை உணர முடிகிறது. கவிஞன் யுத்தத்தின் குரளல்ல...! ஆலிவ் இலைக் கொத்து!

நூலில் ஆங்காங்கே பூத்துள்ள புதுமைப் படிமங்கள் வாசக சுகமேன்பேன்!

'அப்போதெல்லாம் இருமருங்கு மரங்கள்

மேல் தூக்கிய கையால

கைகோர்த்து

நிழல் வழிச் சாலையா...

பாக்கப் பாக்க அழகு ...' (ப.126)

'நெருஞ்சிப் பூவின் கனிகளே

நட்சத்திர முட்கள்' (ப.123)

எனும் வரிகளை வாசித்தால் முள் வலியும் தெரியாது.

நுணாப் பூக்களைப் பாடவந்தவரின் பார்வையிது.

"அந்தப் பூக்கள் காய்களாகி

பழையக் காலத்து

மகளிர் கொண்டை

மாதிரி இருக்கும்' (ப.94)

அகவி -யின் புங்க மரப் பார்வை:

'சிரிப்பை அடக்கி அடக்கியே

தன் பற்களைத் தரையெல்லாம்

உதிர்த்து விட்டது புங்கன்' (ப.93)

பூக்களின் பல்வேறுத் தன்மைகளை மட்டுமன்று பயன்பாடுகளை (UTILITY) பட்டியலிட்டிருப்பது தமிழ்க் கவிதைப் பரப்புக்கு புதிது. சிறப்பான நோக்குக்காக பூக்களோடு அகவியை நாமும் பாராட்டலாம்.

நூலின் முக்கியக் கூறுகளாக இருப்பவை.

  • புதிய பின்புலம்
  • புதுமைப் பாடுபொருள்
  • நவீனக் கூறுகள்
  • தெறிப்பான அரசியல் விமர்சனம்
  • பூக்களின் வழியாக சமூக/ அரசியல்/ பொருளியல்/வாழ்வியல்/ பன்னாட்டு செய்திகள் என சுவைபலக் கலந்த சங்கதிகள் விவாதத்துக்கான படிகள்.
  • மிக புதுமையான படிமங்கள்
  • அழகியல் பார்வை

அதே நேரம், தூக்கலான உரைநடைத் தன்மை, சிலவற்றை கவிதையென, வாசகனை நம்ப வைக்க மிகுசிரமம் கொள்கிறது போலவே சொற்களின் படிக்கட்டா கவிதை வடிவம் என்ற கேள்வியும் எழுகிறது.

எப்படியிருப்பினும்,

            'காலை எழுந்தவுடன்

            பூ முகம் பார்த்தால்

            நாளை அழகாக்கும்'

என்ற வரிகளால் அனைவரையும் கவர்ந்து கவிதைக்குள் அழைப்பது தான் அகவி - யின் வெற்றி. வாகை சூடியிருக்கிறார்!

- அன்பாதவன், 4, அலமேலுபுரம், விழுப்புரம் - 605602