வேக வேகமாகக்
கடந்து போய்க்கொண்டிருக்கும்
ஒளிக்கீற்றுகளைத் துளைத்தெடுத்து
அந்தத் துளைக்குள்
புகுந்துகொள்ளும் பேரமைதிக்குள்
சலனமேதுமின்றி இடைவிடாது
மிதந்து போய்க்கொண்டிருந்த
ஒலிகளுக்கு நடுவே
சில நொடிகள்
என்னுடைய குரலும்
ஒன்றெனக் கடந்துபோனது..
இதற்கு முன்பு நான்
தொலைத்துவிட்டதாய்
நினைத்துக்கொண்டிருந்த
சில வார்த்தைகளுக்கு இப்போது
உருவம் கொடுத்துக்கொண்டிருக்கிறேன்..
வடிவங்களுள் மறைந்துகொண்டிருக்கும்
நினைவுகளைத்
தேடிக் கொண்டுவர மனமில்லை..
சுழியத்துக்குள் நிரம்பிக்கிடக்கும்
விதிகள் கடந்துவந்த வழிகள்
காட்டுச்சாலைப் பயணங்கள்..
தன்னைக் கடந்து போகும்
வெறுமைக்கு வழிவிட்டு
மிதந்து நகரும்
காட்சிப்பிழைகளின் சாயலில்
இன்னுமோர் உலகத்தை
உருவாக்கிக்கொள்ள
எத்தனித்த பொழுதுகளில்
நிச்சயமற்ற மௌனங்களை
சுமந்தலைந்துகொண்டிருந்த
முற்றுப்புள்ளி
தான் தொடங்கவேண்டிய இடத்தை
இன்னும் தேடிக்கொண்டிருக்கிறது..
இருளுக்குள் புதைந்துகொண்டிருக்கும்
முடிவிலிகளை
இன்னும் கொஞ்சம் போனால்
எட்டிப்பிடித்து விடக்கூடும் ..
மலைகளின் மேல் சுழன்று
மரங்களினூடே மோதிப்பிரியும்
குளிர்க்காற்றின் தீண்டலுக்கு
செவி கொடுத்த
காட்டுக்குயில் ஒன்றின்
சிறகசையும் ஒலியில் நான்
காலத்தைக் கணித்துக் கொள்வேன்..
முன்பெப்போதோ ஒரு ஓவியமென
வரைந்து வைத்திருந்த
இந்த மலைகளுக்கு அருகிலேயே
இலைகளின் நிறங்களைக்கொண்டு
இன்னும் ஒரு காடு செய்து கொள்வேன்..
அந்தக் காட்டுக்குள் முன்பு
பறவையாய்த் திரிந்ததொரு பிறவியில்
நான் கண்ட மனிதர்களின் சாயல்
எங்கேனும் தென்படுகிறதா..
தேடிக்கொண்டிருக்கிறேன்..
அடர்ந்த கனவுகளுக்கும்
கொஞ்சம் உருமாறியிருக்கும்
நிஜங்களுக்கும்
இடைப்பட்ட வெளியொன்றில்
கற்பனைக்கென்று
கொஞ்சம் இடம் மீதமிருந்தது..
கற்பனைகளைக்
காட்சிகள் செய்ய முனைந்தபோது
கனவுகளின் நிறங்கள் பூசி ,
நிஜங்கள் தன்
வடிவங்கொண்டதாய்த் தோன்றியது..
மாயக் காட்சிகளையும்
தூரிகையையும் இணைக்கும்
சின்னஞ்சிறு
கால அவகாசத்துக்குள்
சில வர்ண ஜாலங்கள்
நிகழ்ந்து முடிந்திருந்தது ..
- கிருத்திகா தாஸ்
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
வர்ண ஜாலங்கள்
- விவரங்கள்
- கிருத்திகா தாஸ்
- பிரிவு: கவிதைகள்