murintha vanavilமு.மேத்தாவின் ‘நடந்த நாடகங்கள்’ வாசித்தவர்களுக்கு, பிறகு விக்ரமாதித்யனின் குட்டிக் குட்டிக் கவிதைகளை வாசித்து ருசித்தவர்களுக்கு வரப்ரசாதமாய் வசந்தகுமாரனின் கவிதைகள்.

முறிந்த வானவில் - கோ.வசந்தகுமாரனின் ஆறாவது படைப்பு. வசந்தகுமாரன் அதிக வரிகளில் நம்பிக்கை இல்லாதவர்; படிமம், குறியீடு, இருண்மை என பம்மாத்துகள் செய்வதில்லை; மிக நேரடியாக தனது செய்திகளை வாசகனின் மனதுக்கு நெருக்கமாகச் சென்று சொல்லிவிடுகிறார். அதனாலேயே நூலில் உள்ள கடவுள், காமம், காதல் என எதுகுறித்து எழுதினாலும் ரசித்து ருசிக்க முடிகிறது.

“மலரினும் மெல்லியது குறுங்கவிதை - வசந்தகுமாரன் அதன் செவ்வி தலைப்படுவார்” என பின்னட்டைக் குறிப்பில் இருக்கும் கவிஞர் இந்திரனின் சொற்றொடர் சூட்சுமம் நிறைந்தது - உண்மையானது.

வசந்தகுமாரனின் சில குறுங்கவிதைகளை இணைத்தால், ஒரு குறும்படமோ, ஒரு குறுநாவலோ ரசித்த திருப்தி வாசகனுக்குக் கிட்டும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. எடுத்துக்காட்டாக, ‘கடவுள்’ குறித்த கவிஞரின் சிந்தனைகளைத் தொடுத்திருக்கிறேன். நீங்களும் உணர்வீர்கள்.

கவிஞனுக்குக் கடவுள் நம்பிக்கை இருக்கவேண்டுமா என்பதெல்லாம் வாசகனுக்குத் தேவையில்லாத சங்கதி. ஆனால் கவிஞன் எழுப்பும் கேள்விகள் வாசகன் வழியாக சமூகத்திடம் கேட்கப்படுபவை.

வசந்தகுமாரன் எழுப்பும் முதல் கேள்வி: “கால் இடறும் கற்களில் எது கடவுள்? எது ஆயுதம்?” (பக்கம் 48). கடவுள் இக்கவிதையை வாசிக்க அதிர்ச்சியாகிறது; ஈரோட்டுக் கிழவனைப் போலவே இந்தக் கவிஞனும் கலகக்காரனோ.. என நினைக்கையிலே... அடுத்த கவிதை இப்படியாக

“சவ ஊர்வலமா?
சாமி உற்சவமா?
அவதானிப்பதற்குள்
கடந்து போய்விட்டது
பல்லக்கு” (பக்கம் 28)

அதிர்ச்சியில் உறைகிறார் கடவுள்.

அடப்பாவி... நானும் சவமும் ஒன்றா?... அந்தக் கிழவனே பரவாயில்லையே... நொந்து நூடுல்ஸ் ஆகும் கடவுளுக்கு வசந்தகுமாரனின் ஆலோசனை ஒன்று பேரதிர்ச்சியைத் தருகிறது.

“சிலைகளை விட்டுவிடு/கடவுளைத் திருடு”(ப.72).

இது மதவெறி பிடித்தவர்களுக்கான கவிஞரின் யோசனையாக இருந்தாலும்கூட கடவுள் அதிர்ந்திருப்பார்தானே! அந்த அதிர்வை கவிஞரும் உணர, கடவுளின் உரையாடல் துண்டு ஒன்றினை கவிதையாக்குகிறார்:

“என் கவிதைகளைப்
படித்துவிட்டுக்
கடவுள் சொன்னான்:
இப்படியெல்லாம்
எழுதுவாய் என்று
முன்பே தெரிந்திருந்தால்
உன்னைப்
படைத்திருக்கவேமாட்டேன்”
(பக்கம்:85).

அதெல்லாம் சரி! கடவுள் மேல் கவிஞனுக்கு என்ன கோபம்? தொகுப்பில் மறைந்திருக்கிறது அந்தச் செய்தி!

வசந்தகுமாரனின் ஆணிவேராக இருப்பது ஜென் தத்துவம். ஜென் அதிகமாகப் பேசாது; மவுனமே அதன் மொழி... ரொம்பவும் போனால் ஒற்றை வரி...(அ) சற்றே நெடிய வாக்கியம். இவையெல்லாம் காணக்கிடைப்பவை வசந்தகுமாரனின் கவிதைகள்!.

“மூடிய கை திறந்தேன்/அங்கே ஒன்றுமில்லை இருந்தது” (ப.37). ஏதோ ஒன்று இருந்தது-அது ஒன்றுமில்லை! சூன்யத்திலிருந்து தொடங்குகிறதல்லவா அனைத்துமே!.

‘ஜென்’னுக்கு அரசனும் ஆண்டியும் ஒன்றுதான். பதவியின் பாதங்களில் வீழ்ந்து வணங்குவதில்லை ஜென்!.

இன்னொரு கவிதையில் அசல் ஜென் தத்துவம்: “எரியாத விளக்குகளில்/சுடராக இருக்கிறது இருள்”(ப.106).

“பசித்த குஞ்சுகளுக்காக/நீர்கிழித்து இறையெடுத்த/மீன்கொத்தியின் அலகில்/சினைமீன்” எனும் காட்சியில் ஆழ அர்த்தம் பொதிந்த ஹைகூவின் தாக்கம்.

தற்சார்பு பேசி போலிப் பெருமிதங்களில் மிதப்பவர்களையும் அடையாளம் காட்டுகிறார் இப்படி:

“மதுவூற்றி நிரப்பாதீர்கள்/காலிக் கோப்பை தரும்/போதையே எனக்குப் போதும்”(ப.39).

கவிஞருக்குப் பெருமிதமும் உண்டு; ஏனாம்?

“அரசாங்கம் செய்யாததை/நான் செய்திருக்கிறேன்/வரிகளைக் குறைத்திருக்கிறேன்/கவிதைகளில்”-மிகச் சரி கவிஞரே...! ஆனால் வரிகளைக் குறைத்துவிட்டு வாழ்த்துரைகளைத் திகட்டத் திகட்ட கொடுத்திருப்பதையும் குறைத்திருக்கலாம்!

முறிந்தாலும் வானவில் அழகுதான்; ரசனைதான்!

- அன்பாதவன்