வீதியில் மனித அலறல்
வீடு தாண்டிப் போகும்
என் கால்களைக்
கட்டிப்போடுகிறாய்
என் செவி அடைக்க
திரை இசையின்
சத்தம் நிறைக்கிறாய். 

கதவை முட்டி
உட்புகும்
இரத்தத்தின் வாடையை
செயற்கை நறுமணத்தால்
மட்டுப்படுத்தப் போராடுகிறாய். 

எந்நேரமும்
ஆடிப்பாடும் பெட்டியின் முன் - என்னைப்
பேசவிடாமல் கிடத்துகிறாய். 

துடிக்கும் இதயத்தில்
சொட்டு சொட்டாய்
ஊற்றுகிறாய்
சுயநலத்தின் போதையை. 

மெல்ல மெல்ல மாற்றுகிறாய்
என் காதுகளையும் கண்களையும்
சுவாசத்தையும்
என்னை
வேறாக மாற்றி
குதூகலிக்கிறாய்
நான்
சரியாகி விட்டதாய்
மகிழ்கிறாய். 

ஆனால்...
உனக்குத் தெரியாது
நீ
வாழ்க்கை நடத்துவது
மனம் செத்துப்போன
பிணத்தோடென்று.

Pin It